நான்...ஸ்டில்ஸ் ரவி



நான் யார்..? ஒரு சாதாரண மனிதன். அவ்வளவுதான்.  அப்பாவுக்குத்தான் திருவாரூர். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அப்பா பெயர் ஜி.வெங்கட்ராமன். அவரும் ஸ்டில் போட்டோகிராஃபர்தான். ‘திருநீலகண்டன்’, ‘சிங்கப்பூர் சீமான்’ என மூன்று நான்கு படங்களுக்கு அவரும் ஸ்டில் போட்டோகிராஃபராக வேலை செய்திருக்கிறார். அம்மா பெயர் சகுந்தலா. ரொம்ப சின்ன வயதாக இருக்கும்போதே இறந்துட்டாங்க. என் அப்பா இப்போதுதான் மரணமடைந்தார்.

கூடப் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், ரெண்டு சகோதரர்கள். ராஜு, வாசு, பவானி, ஜெயா, லக்ஷ்மி. நான் இங்கே கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10வது வரை படிச்சேன். பிறகு நியூ காலேஜில் பியூசி சேர்ந்தேன். அந்தப் படிப்பில் சேர்ந்ததே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேரத்தான். அங்க பியூசியில் கெமிஸ்ட்ரி பாஸாகி இருக்கணும்னு சொல்லி இருந்தாங்க. அதற்காக பியூசி.

ஆனா, படிப்புல ஆர்வம் இல்ல. தவிர ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பலர் அப்ப வேலையில்லாம சுத்திட்டிருந்தாங்க. எங்க நாமும் அப்படி ஆகிடுவோமோனு ஒரு பயம். அதனால படிப்பை பாதிலயே நிறுத்திட்டு அப்பா வழியை தேர்ந்தெடுத்தேன். அப்பாவின் ஆபீஸ்மேல புகழ்பெற்ற போட்டோகிராஃபர் சுபாஷ் சுந்தரம் ஆபீஸ் இருந்தது. பெரும்பாலும் அங்கதான் இருப்பேன். நிறைய பத்திரிகையாளர்களும் சினிமாக்காரர்களும் சுபாஷ் சார் ஸ்டூடியோ - ஆபீசுக்கு - வருவாங்க. அவங்க எல்லாரும் டீ, மசால் வடை சாப்பிடும்போது எனக்கும் வாங்கித் தருவாங்க.
தொடர்ந்து சும்மாவே வடை, டீ சாப்பிடறோமேனு அங்க எடுத்த போட்டோஸின் ஃபிலிமைக் கழுவி பிரிண்ட் போடும் வேலையை நானா செய்ய ஆரம்பிச்சேன்.

அப்பா ஃபங்ஷன் போட்டோகிராஃபர். இதுல எனக்கு பெருசா ஆர்வம் வரல. தவிர அப்பா தினமும் ரூ.200 கிடைச்சா போதும்னு இருந்தார். சுபாஷ் சார் ஆபீசுல - ஸ்டூடியோவுல - பத்திரிகை, சினிமா ஃபோட்டோஸ் பிரிண்டிங் போடப்படும். இது எனக்குப் பிடிச்சிருந்தது. அவரையே குருவா ஏற்று என் பயணத்தை ஆரம்பிச்சேன்.  அவர் பகுதி நேர பத்திரிகை போட்டோகிராஃபர். அவருக்கு உதவியா போக ஆரம்பிச்சேன்.ஆனா, இதுக்கு முன்னாடியே கேமராவை கைல எடுத்துட்டேன். அப்பா சினிமால ஸ்டில் போட்டோகிராஃபரா இருந்ததால அவர் கூட போனப்ப முதல் முறையா கேமரா என் கைக்கு வந்தது.

ஒரு நடராஜர் சிலையை போட்டோ எடுக்கச் சொன்னார். அப்பாவுடன் இருந்தப்ப இந்த மாதிரி சின்னச் சின்ன போட்டோஸ் எடுத்து பயிற்சி பெற்றிருந்தேன். அதனால சுபாஷ் சார் கூட போனப்ப புரொபஷனல் போட்டோஸை எடுக்கற திறமை வளர ஆரம்பிச்சது. சினிமா பத்திரிகைகளுக்கு சுபாஷ் சார் கூட சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சேன்.

அப்படி போனப்ப நான்  எடுத்த படங்கள் வித்தி யாசமா இருக்கறதா சொல்லி நிறைய நடிகர், நடிகைகள் என் பெயரை பரிந்துரைக்கத் தொடங்கினாங்க. நடிகர் சிவகுமார், நடிகை பிரியா மூலமா கிடைச்ச படம்தான் ‘பைரவி’. நான் வேலை செய்த முதல் படம் அதுதான். இதுக்கு முன்னாடி ‘அன்னக்கிளி’ செல்வராஜ் என்னிடம் கேட்காம என் பெயரை ‘காமதேனு’ படத்துல ‘ஸ்டில்ஸ்’ ரவினு அழைப்பிதழ்ல போட்டிருந்தார். இந்த அழைப்பிதழையும் சுபாஷ் சார் ஆபீசுக்கு வந்து என் கைல கொடுத்தார். இன்ப அதிர்ச்சி.

அதுல இருந்து ரவி ஆக இருந்தவன், ‘ஸ்டில்ஸ்’ ரவி ஆனேன். ‘காமதேனு’ல அஞ்சு ஹீரோக்கள். அதுல இளையராஜா தம்பியும் ஒருவர். ஐந்தாறு நாட்கள் ஷூட் நடந்தது. சில காரணங்களால அந்தப் படம் தொடரலை. பிறகுதான் ‘பைரவி’. அதுக்குப் பிறகு எண்ணற்ற படங்கள். பெயர், புகழ்னு வர ஆரம்பிச்சது.இப்பவும் பலர் போட்டோகிராஃபி வகுப்புகள் எடுக்கச் சொல்லி கேட்கறாங்க.

ஆனா, இன்னமும் நான் கத்துக்கிட்டுதான் இருக்கேன். அதனால வகுப்புகள் எடுக்கும் ஆர்வம் எனக்கு வரவே இல்ல. போட்டோகிராஃபி ஒரு கடல் மாதிரி. விளம்பர போட்டோஷூட், புராடக்ட் போட்டோஷூட், நிகழ்ச்சிகளுக்கான போட்டோஷூட், மாடலிங் போட்டோஷூட், வைல்டு லைஃப் போட்டோஷூட்னு இதுல பல வகைகள். எனக்குப் பிடிச்சது பத்திரிகை போட்டோகிராஃபி.

என் கைல வந்த முதல் கேமரா யாஷிகா மேக். அதுலயே ரோலிங் பிளக்ஸ், மாமியா கேமராக்கள். அப்புறம் நடிகர் சிவ
குமார் எனக்கு 35எம்எம் கேமரா ஒன்றை ஜப்பான்ல இருந்து வாங்கிக் கொடுத்தார். அதன் பெயர் அஷாய் பென்டெக். பல வருஷங்கள் என் கூடவே இருந்த கேமரா அது. சினிமாத் துறை எனக்கு ஓர் இடத்துல போட்டோ எடுக்கறப்ப என்னவெல்லாம் கத்துக்கணும்னு சொல்லிக் கொடுத்தது; கொடுக்குது.

ஒருமுறை எம்ஜிஆர் ஐயாவுடைய படத்துக்காக நானும் என் குருநாதர் சுபாஷ் சாரும் லொகேஷனை எடுத்துட்டு இருந்தோம். அப்ப தூரமா அந்த ஏரியாவைச் சேர்ந்த ஒருத்தர் பாக்ஸ் கேமரா வச்சு எம்ஜிஆரை புகைப்படம் எடுத்துட்டிருந்தார். இதைப்பார்த்த எம்ஜிஆர் அவரை அழைத்து அந்த மொத்த பிலிம் பாக்ஸையும் ஓபன் பண்ணிவிட்டார். ‘கேட்காமல் எப்பவும் யாரையும் எடுக்காதே’னு சொன்னார். இது எனக்கு மிகப்பெரிய பாடமா இருந்தது.

நடிகர்களைப் பொறுத்தவரை அவங்க அறியாம நாம போட்டோ எடுக்கவே கூடாது. அவங்களுக்கு இமேஜ் முக்கியம். தங்களுடைய மைனஸ் வெளிப்படக் கூடாதுனு நட்சத்திரங்கள் கவனம் எடுத்துக்கறது சரிதானே? இதனாலயே என் ஸ்டில்ஸ்ல எந்த நடிகர் நடிகையின் மைனஸையும் வெளிப்படுத்த மாட்டேன்.

‘இதயவீணை’ படத்துக்காக திரும்பவும் எம்ஜிஆருடன் வேலை செய்தோம். அப்ப சில படங்களை என் குருநாதர் என்னை எடுக்கச் சொன்னார்.
நான் எடுக்கறப்ப ‘கேமராவை மேல தூக்கு’னு எம்ஜிஆர் சொல்லிட்டே இருந்தார். எதுக்காகனு புரிஞ்சப்ப ஆச்சர்யமா இருந்தது. வயது காரணமா சில சதைகள் அவருக்கு கேமராவை கீழ இருந்து எடுத்தா தெரியும். அதனால்தான் தூக்கி எடுக்கும்படி சொன்னார். இதுவும் நான் கத்துக்கிட்ட பாடத்துல ஒண்ணு.
அப்ப சினிமா ஷூட்டிங்குல எடுத்த போட்டோஸை ஆல்பமா போடும் பழக்கம் இருந்தது. அந்த ஆல்பத்தின் சைஸை பிரமாண்டமா முதன்முதல்ல போட்டது நான்தான். சினிமா ஃப்ரேம்ல வருவோமா இல்லையானு தெரியாத குரூப் டான்ஸர்ஸ் எல்லாம் ஆல்பத்துல பதிவாகி இருப்பாங்க! அதைப் பார்த்துட்டு ‘எங்களை இதுவரை யாரும் போட்டோ எடுத்ததில்ல’னு பலர் என் கையைப் பிடிச்சு அழுதிருக்காங்க.

அதேபோல புகைப்படங்கள் எடுக்கறப்ப பேக்லைட் வைச்சு முதன் முதல்ல போட்டோஸ் எடுத்தது நான்தான். அந்த டிரெண்ட் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அதுல இருந்து செல்லமா என்னை ‘பேக்லைட்’ ரவினு கூப்பிடத் தொடங்கினாங்க.எப்பவும் நாம எடுக்கற படம், பத்தோடு பதினொன்றா இருக்கக் கூடாதுனு கவனமா இருப்பேன். யார் என் வேலைல குறுக்கிட்டாலும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துடுவேன்.

அப்படித்தான் எனக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் ஒருமுறை க்ளாஷ் ஆச்சு. ஒரு முறை வேலை நிமித்தமா அவர் ஏதோ சொல்ல... எனக்கு கோபம் வந்து அங்கிருந்து உடனே கிளம்பிட்டேன். அப்புறம் ரஜினியே என்னைக் கூப்பிட்டு சமாதானப்படுத்தினார். என் மனைவிகிட்ட நான் எப்படி கோபப்பட்டேன்னு நடிச்சுக் காட்டி கலகலப்பூட்டினார்! எந்த கேமரா புழக்கத்துக்கு வந்தாலும் முதல்ல ரஜினி வாங்குவார். அடுத்து நான் வாங்குவேன். இளையராஜாவுக்கும் எனக்குமான பந்தம் பெரிய கதை. போட்டோவுக்காக இளையராஜாவை அவ்வளவு சுலபத்துல சிரிக்க வைக்க முடியாது.

ஒருமுறை ‘நீங்க சிரிச்சாதான் என் கேமரா கிளிக் செய்யும்’னு நான் சொன்னதும் தன்னை மீறி ஒரு செகண்ட் சிரிச்சார். அதை சட்டுனு பதிவு செய்தேன். இப்ப வரை அந்த போட்டோதான் கூகுள்ல டிரெண்டுல இருக்கு. இளையராஜா சகோதரர்கள் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கச்சேரி செய்த காலங்கள்ல இருந்தே அவங்க கூட பயணப்படறேன். இளையராஜா சினிமால ஃபேமஸ் ஆனதும் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு கேமரா வாங்கி எனக்குக் கொடுத்தார். அந்தக் காலத்துல ஒரு லட்சம் என்பது மிகப்பெரிய தொகை. ‘உன்னால எப்ப முடியுமோ அப்ப இந்தப் பணத்தைக் கொடு’னு பெருந்தன்மையா சொன்னார்!

சில்க் ஸ்மிதாவையும் என்னால மறக்கவே முடியாது. அவங்களை விதவிதமா வித்தியாசமா அதிகம் போட்டோ எடுத்தது நானாதான் இருப்பேன். என் மேல அவங்களுக்கு அவ்வளவு மதிப்பு, மரியாதை இருந்தது. என் அம்மாவுக்குப் பிறகு வீட்ல இருந்து சுடுகாடு வரை நான் நடந்து போனது சில்க் ஸ்மிதாவின் இறுதி ஊர்வலத்துலதான்.

இதுக்கு இடைல தயாரிப்பாளராகி மோகனை வைச்சு ஒரு படம் எடுத்தேன். தயாரிப்புத் துறை எனக்கு செட் ஆகலை. அதோடு அதை விட்டுட்டேன்.

‘முரட்டுக்காளை’ படத்துல இன்னொரு ஹீரோயினா நடிச்ச சுமலதாவின் அக்கா ரோஹிணிதான் என் மனைவி. பத்திரிகை போட்டோகிராஃபரா சுமலதா வீட்டுக்குப் போனப்ப அவங்க அக்கா பழக்கமானார். அவர் அம்மாவுக்கும் என்மேல நம்பிக்கை, ப்ரியம். வீட்ல எனக்கு பெண் பார்ப்பது தெரிந்து ‘என் பெண்கள்ல யாரை ரவிக்கு பிடிக்குதோ அவங்களையே அவருக்கு கட்டித் தரேன்’னு சொன்னாங்க.

எனக்கு ரோஹிணியை பிடிச்சிருந்தது. என்மேல அவங்களுக்கு அவ்வளவு அன்பு. எங்க அன்புக்கு அடையாளமா ஸ்ருதி பிறந்தா. நல்லா படிக்க வைச்சு துபாய்ல இருக்கற கார்த்திக்குக்கு கட்டி வைச்சோம். இப்ப மாப்பிள்ளையும் மகளும் சந்தோஷமா துபாய்ல இருக்காங்க.

நடிகை அபிலாஷா நீச்சல் குளத்துல இருந்து எழுந்திருக்கும்போது அவங்க தலைமுடில இருந்து நீர் விழுகிற போட்டோவை எடுத்தேன். இப்ப வரை அது பேசும் பொருளா இருக்கு.

என்னைப் பொறுத்தவரை நாம யாருனு நமக்கே புரிய வைப்பது புகைப்படங்கள்தான். அப்படிப்பட்ட புகைப்படத்துறையை புரொஃபஷனா எடுக்கும் இளைஞர்கள் அதை ஆத்மார்த்தமா ஈடுபாட்டோடு செய்தா கண்டிப்பா பெயரும் புகழும் எடுக்கலாம். இதை மட்டுமே சொல்லிக்க விரும்பறேன்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்