அணையா அடுப்பு -28
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் எங்கே?
நகர சந்தடிதான் வள்ளலாரை சென்னையை விட்டு தள்ளிப் போகச் சொன்னது.கருங்குழியில் அவர் எதிர்பார்த்த அமைதி கிடைத்ததால் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அங்கே வசித்தார். பின்னரே தருமச்சாலை நிறுவி வடலூருக்கு இடம்பெயர்ந்தார்.அன்னதானம், கல்விச்சேவை உள்ளிட்ட செயல்பாடுகளால் நாளடைவில் வடலூருக்கு அன்பர்கள் ஏராளமாக வரத் தொடங்கினார்கள்.ஒரு புறம் மகிழ்ச்சிதான் என்றாலும், மறுபுறம் வள்ளலாருக்கு தனிப்பட்ட முறையில் அமைதியிழப்பு ஏற்பட்டது.எப்போதுமே ஏதோ ஒருவரை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.
தருமச்சாலை நிர்வாகம் தொடர்பாகவோ அல்லது வள்ளலாரை நேரிடையாக சந்தித்து அவரிடம் ஆசிபெற விரும்பும் அன்பர்கள் தொடர்பாகவோ எப்போதுமே அவர் தன்னுடைய தனிப்பட்ட நேரத்தை மற்றவர்களுக்காக செலவிட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
இத்தகைய சூழலில்தான் ஏப்ரல் மாதம், 1870ம் ஆண்டு திடீரென வடலூரில் வள்ளலாரைக் காணவில்லை.அவரைச் சந்திக்க தினந்தோறும் வரும் நூற்றுக்கணக்கான அன்பர்கள் பரிதவித்துப் போனார்கள்.
“வள்ளலார் பெருமகனார் எங்கே?” என்று மக்கள் கேட்ட கேள்விக்கு தருமச்சாலை நிர்வாகிகளிடமே கூட முறையான பதில் இல்லை. ஏனெனில், அவர்களுக்குத் தெரியாத விடைக்கு அவர்கள் எப்படி பதிலளிக்க முடியும்?வள்ளலாரின் தலை மாணாக்கரான தொழுவூர் வேலாயுதம் முதலியார், தருமச்சாலை நிர்வாகி களில் ஒருவரான ஆனந்தநாத சண்முக சரணாலய சுவாமிகளுக்கு எழுதிய கடிதத்தில், “நம் பெருமானார் இப்போது எவ்விடத்தில் எழுந்தருளி இருக்கிறார்?” என்று கேட்டிருக்கிறார்.
வள்ளலாரின் மனசாட்சியாகக் கருதப்பட்ட தொழுவூராருக்கேகூட விவரம் தெரியவில்லை என்பது இக்கடிதம் மூலம் வெளிப்படுகிறது. அக்காலக்கட்டத்தில் தருமச்சாலையிலேயேகூட வள்ளலார், திடீர் திடீரென மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து விடுவார் என்று கூறுவார்கள்.இது ஞானதேகத்தின் பண்பு என்று ஆன்மீகரீதியாக பிற்பாடு தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் பிரம்ம சமாஜத்தாருக்கு விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
காற்றாலே புவியாலே ககனமதனாலே கனலாலே புனலாலே கதிராதியாலே கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே கோளாலே பிறவியற்றுங் கொடுஞ் செயல்களாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய்யளிக்க வேண்டும் என்றேன்; விரைந்தளித்தான் எனக்கே
- என்று வள்ளலார் பாடுவது, அவர் ஞானதேகம் பெற்றதற்கான சாட்சியாகவே கொள்ளப்படுகிறது. ஞானதேகம் கொண்டவர்கள் தோன்றியும், தோன்றாமலும் இருக்க முடியும் என்கிறார்கள். வெகுமக்களுக்கு புரியும்படியாக சொல்ல வேண்டுமானால் மாயாவித்தன்மை எனலாம். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்தே அவரை வடலூருக்குத் தெற்கே சற்றுத் தொலைவில் மேட்டுக்குப்பம் என்கிற இடத்தில் காண முடிந்தது.
அமைதி தேடி சில காலம் மற்றவர் பார்வைக்குப் படாமல் அஞ்ஞாத வாசம் செய்தவர், மேட்டுக் குப்பத்திலேயே வசிக்கத் தொடங்கினார். அந்நாளில் மேட்டுக்குப்பத்தில் வைணவப் பெரியவர்கள் வந்து தங்கும் மாளிகை ஒன்று இருந்தது.அதை மேட்டுக்குப்பம் திருமாளிகை என்பார்கள்.நீண்ட காலமாக வைணவப் பெரியார்கள் யாரும் வராத நிலையில் மேட்டுக்குப்பம் திருமாளிகை களையிழந்து கிடந்தது.
மேட்டுக்குப்பத்தில் வள்ள லாரைப் பார்த்த மக்கள், “பெருமகனார் திருமாளிகையில் தங்கியிருக்க வேண்டும்...” என்று வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது அன்புக்கு இரங்கி அங்கேயே தங்கத் தொடங்கினார் வள்ளலார்.
இவர் அங்கே தங்கத் தொடங்கியதற்குப் பிறகு அம்மாளிகை ‘சித்தி வளாகம்’ என்று அழைக்கப்படத் தொடங்கியது.வள்ளலார்தான் இப்பெயரையும் சூட்டினார். சித்தியென்றால் வீடுபேறு என்று பொருள்.எனவே -வள்ளலார், தன்னுடைய கடைசிக் காலத்தை முன்பே கணித்திருந்தார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.மேட்டுக்குப்பத்தில், தான் வெளிப்பட்டபின் தருமச்சாலையை நிர்வகித்துக் கொண்டிருந்த நிர்வாகிகளுக்கு கடிதம் மூலமாக தன்னுடைய இருப்பைத் தெரியப்படுத்தி இருக்கிறார்.
‘ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பியிருங்கள். என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னும் கொஞ்சம் தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள். மிகவும் சமீபத்தில் நானே வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். சாலையை லகுவாய் நடத்துங்கள்...’- என்று அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார்.நிர்வாகிகளில் ஒருவரான புதுவை சதாசிவ செட்டியாருக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
தருமச்சாலை நிர்வாகிகள் நிறைய பேருக்கு தனித்தனியாக இதே கடிதத்தை வள்ளலார் அனுப்பியிருக்க வாய்ப்புண்டு.இக்கடிதத்தின் மூலம்தான் வள்ளலார், மேட்டுக் குப்பம் சித்தி வளாகத்தில் இருக்கிறார் என்கிற தகவல் தருமச்சாலை அன்பர்களுக்குத் தெரிய வருகிறது.உடனே சிலர் அவரை நேரில் காண விரைகிறார்கள்.ஆனால் -இக்கடிதத்தை எழுதி வடலூருக்கு அனுப்பியதுமே, வள்ளலார் சித்தி வளாகத்தில் இருந்த தன்னுடைய அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாராம்.வள்ளலாரைக் காணச் சென்றவர்களுக்கு அவரது தரிசனம் கிடைக்கவில்லை.
கடிதத்தில் குறிப்பிட்டவாறே சில நாட்கள் கழித்தே வெளியே வந்தார்.இவ்வாறாக அச்சமயத்தில் அடிக்கடி மறைவதும், தோன்றுவதுமாக இருந்திருக்கிறார் என்று தொழுவூர் வேலாயுதம் முதலியார் சொல்லியிருக்கிறார்.ஞானதேகம் பெற்றிருப்பதை உறுதி செய்துகொள்வதற்கான பயிற்சியாக அதைச் செய்தாரோ என்று தோன்றுகிறது.
சித்தி வளாகத்தையே தன்னுடைய உறைவிடமாக அவர் மாற்றிக் கொண்டாலும், அவ்வப்போது தருமச்சாலை நிர்வாகம் பற்றிய உத்தரவுகளை கடிதம் வாயிலாகவே அன்பர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.அக்காலக்கட்டத்தில் அவர், சித்தி வளாகத்தில் அவ்வப்போது கடுமையான தவம் ஒன்றையும் மேற்கொண்டார் என்கிறார்கள்.அந்த அருந்தவத்தின் பெயர் -பிரமதண்டிகாயோகம்.
(அடுப்பு எரியும்)
தமிழ்மொழி
ஓவியம்: ஸ்யாம்
|