அலர்ட் ரிப்போர்ட்-ஆப்பு வைக்கும் லோன் app!



ஆசைத்தம்பி மதுரைக்காரர். திருமணம் ஆகாத இளைஞர். ஒரு டிராவல் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அவரின் தந்தைக்கு சமீபத்தில் ஒரு போன் கால் வந்தது. ‘உங்கள் மகன் எங்களிடம் ஐம்பதாயிரம் கடன் வாங்கிவிட்டு தவணை கட்டாமல் ஏமாற்றிவருகிறார்.
ஏனென்று கேட்கமாட்டீர்களா?’ என்கிறது அந்த அழைப்பு. சிறிது நேரத்தில் குமாரின் சகோதரிக்கும் அவரின் கணவருக்கும் இதேபோல் போன் மிரட்டல் விடுக்கப்படுகிறது. வாங்கிய கடனை அடைக்காவிடில் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டு கிறார்கள். ஆசைத்தம்பியின் குடும்பத்தாருக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவரிடம் விசாரித்தால்தான் தெரிகிறது. இதன் பின்னால் இருப்பது, லோன் app என்னும் நவீன கந்துவட்டி கும்பல். கொரோனாவால் லாக்டவுன் அறிவிக்கப்படும் முன் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு என்று அவசரமாக ஐம்பதாயிரம் வாங்குகிறார் ஆசைத்தம்பி. பிறகு இரண்டு தவணைகள் முறையாகச் செலுத்துகிறார். கொரோனா லாக்டவுனால் தொழில் முழுமையாக முடங்கிவிட, வாங்கிய கடனை முறையாகச் செலுத்த இயலாமல் போய்விடுகிறது.

கடன் வாங்கியவர்கள் தூங்கினாலும் கடனும் வட்டியும் தூங்குமா? நேரடியாக மிரட்டலைத் தொடங்கிவிட்டது கடன் கொடுத்த லோன் app நிறுவனம்.

சமீபத்தில் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற இருபத்து மூன்று வயது ஐடி ஊழியர் லோன் app மூலம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் மீடியாவில் அதிரடித்தது.அது என்ன லோன் app? தேடத் தொடங்கினோம். கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் பகீர் ரகம்.

ஒரு காலத்தில் கடன் வேண்டும் என்றால் ஒருவர் வங்கிகளைத்தான் நாடவேண்டும். அவர்கள் ஒருவரின் சொத்து மதிப்பையும் வருமான அளவையும் கணக்கிட்டு விரலுக்குத் தகுந்த வீக்கமாக கடனைத் தருவார்கள். இதைத் தவிர என்.பி.எஃப்.சி என்னும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் அடமானக் கடன்களைத் தந்துவந்தன. இதற்கெல்லாம் வழியில்லா தவர்கள் கந்துவட்டிக்காரர்களிடம் போய் சிக்கினார்கள். கொஞ்சம் பேர் சொந்தங்களிடமும் நண்பர்களிடமும் போய் கடன் வாங்கி அவமானப்படு வார்கள். இப்படி இலங்கை வேந்தன் நெஞ்சம் போல் கலங்கி நிற்கும் கடன்பட்டார்களுக்கு என வந்திருக்கும் நவீன தூண்டில்தான் லோன் appகள்.

வங்கிகளில் கடன் வாங்குவது என்பது ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்களைக்கொண்ட ஒரு நடைமுறை. அவர்கள் கேட்கும் ஆவணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் விண்ணப்பித்துவிட்டு வந்தால், பல நாட்கள் கழித்து, சமயங்களில் பல மாதங்கள் காத்திருப்புக்குப் பின் கடன் கிடைக்கும்.

லோன் appகளில் இந்த நடைமுறைச் சிக்கல்கள் இல்லை என்பது ஒரு பெரிய வசதி. தங்கியிருக்கும் விலாசத்துக்கான ஆதாரம், அடையாள ஆதாரம், வருமான ஆதாரம், போட்டோ போன்றவற்றை appபிலேயே அனுப்பிவிட்டால், ஒரே நாளில் ஒரு சில மணி நேரங்களில் வேண்டிய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

அவசரத்துக்கு கடன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று லோன் appகளைத்தான் நாடுகிறார்கள்.எளிய பத்தாயிரம், பதினைந்தாயிரம் கடன்கள் முதல் ஐந்து லட்சம் ரூபாய் கடன்கள் வரை லோன் appகளில் வாங்கிக்கொள்ள இயலும். சில நிறுவனங்கள் அதற்கு மேலும் தரத் தயாராகவே இருக்கின்றன.

பே டே கடன்கள் என்று சொல்லப்படும் கடன்கள்தான் இந்த லோன் app மூலமாக அதிகமாக வாங்கப்படுகிறது என்கிறது ஓர் அறிக்கை. அதாவது, சம்பளத் தேதியன்று திருப்பித் தருகிறேன் என்று சொல்லி வாங்கப்படும் கடன்கள். காசோலை அல்லது ப்ரோநோட் அடிப்படையில் வழங்கப்படும் இந்த சிறிய கடன்களுக்கு அடமானம் எதுவும் இல்லை என்றாலும் அதிகபட்ச வட்டித் தொகை வசூலிக்கப்படும்.

இந்த நவீன லோன் appகள் மூலமாகக் கடன் வாங்குவது உலக அளவில் ஆசிய பசிபிக் பகுதிகளில்தான் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக, இந்தியாவில் இப்படியான கடன்கள் பற்றி துல்லியமான டேட்டா இல்லாவிட்டாலும் நாம் ஆசிய அளவில் இதற்கு மிகப் பெரிய சந்தையாக இருக்கிறோம். இந்தியாவில் மட்டும் சுமார் 484 லோன் appகள் விதவிதமாக இருக்கின்றன. இதில் தொழில் நேர்த்திகொண்ட appகளும் அடக்கம். டுபாக்கூர் appகளும் அடக்கம்.

கந்துவட்டி அடாவடிகளுக்கு சற்றும் குறைவில்லாதவை இவை. ஒருவர் தன் கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு அல்லது ஸ்மார்ட் போனில் உள்ள ப்ளேஸ்டோரில் போனால் எளிதாகத் தரவிறக்கி இதற்கான படிவங்களைப் பெற்று சில மணி நேரத்தில் கடன் வாங்கிவிட இயலும்.

ஆனால், நல்ல லோன் app நிறுவனங்களில் வாங்குவது உசிதம். இல்லாவிடில் மோசமாய் அவமானப்பட வேண்டியதிருக்கும். சில லோன் app நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் மொபைல் போனை ஹேக் செய்து அதில் இருக்கும் தகவல்களைத் திருடி வைத்துக்கொண்டு, அதை வைத்து மிரட்டுவதாகக்கூட அதிர்ச்சி செய்திகள் வருகின்றன.

உங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தும் தன்மையை முறையாக ஆராயாமல், அவசர அவசரமாக நீங்கள் கேட்டதும் பணம் தரத் தயாராக இருப்பதாகச் சொல்லும், கடன் வாங்கச் சொல்லி உங்களை நச்சரிக்கும், மிகக் குறைந்த ப்ராசசிங் கட்டணம் என்று வலைவிரிக்கும், அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களோ, முறையான விலாசமோ இல்லாத லோன் appகளிடம் கடன் வாங்க முயலாதீர்கள்.

ஒன்று அவை போலியாக இருக்கக் கூடும். உங்கள் போனை ஹேக் செய்து வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை ஆட்டையைப் போடுவது முதல், தகவல்களைத் திருடி ப்ளாக்மெயில் செய்வது வரை பலவகையான திருட்டு வேலைகளைக்கூட இவர்கள் செய்யக்கூடும். சிலர் ப்ராசசிங் கட்டணம் வாங்கிவிட்டு தலைமறைவாகிவிடுவார்கள்.

இந்தியாவில் மணிடேப், பே சென்ஸ், தானி, இந்தியா லெண்ட்ஸ், நிரா, கேஷ் இ, கேப்பிடல் ஃபர்ஸ்ட் உட்பட பல்வேறு லோன் appகள் இருக்கின்றன. இந்த லோன் appகள் பற்றிய தகவல்களில் முக்கியமானது இந்தியாவில் இயங்கும் லோன் appகளில் பல சீனாவிலிருந்து இயக்கப்படுகின்றன என்பதுதான்.

சில லோன் appகள் சி,பி.ஐ., ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் பெயரைச் சொல்லி மிரட்டி சில வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டித் தொகை அல்லது அபராதம் போன்றவற்றை வசூலிக்கின்றன என்ற புகாரும் எழுகிறது.

சைபர் புல்லிங் எனப்படும் பொதுவெளியில் அவப்பெயரை உருவாக்குவதுதான் இந்த நிறுவனங்களின் முக்கியமான டெக்னிக் என்கிறார்கள். ‘எங்களிடம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என முப்பது பேரின் தொடர்பு எண்கள் உள்ளது. அவர்களிடம் நாங்கள் உங்களின் நேர்மையின்மை பற்றி சொல்லப் போகிறோம்’ என்று ஒரு லோன் app நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கு செய்தியனுப்பி மிரட்டியதும் நடந்திருக்கிறது.

எனவே, யார் கடன் கொடுக்கிறோம் வாருங்கள் என்று சொன்னாலும் உடனே அடித்துப் பிடித்துப் போய் நிற்க வேண்டாம். பணத் தேவை அனைவருக்கும் உள்ளதுதான். மானமும் மரியாதையும் சுயகெளரவமும், எல்லாவற்றைவிட உயிரும் மிக முக்கியமானது. எனவே, இந்த நவீன கந்துவட்டிக்காரர்களிடம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இளங்கோ கிருஷ்ணன்