ஈரம் இருக்கு... வீரம் இருக்கு! இயக்குநர் விருமாண்டி பளிச்!



‘’நான் நடிகர் பெரிய கருப்புத் தேவரோட பையன். வாழ்க்கையின் அடித்தட்டு மக்களை ரத்தமும் சதையுமா பார்த்து வளர்ந்தவன். ஒருவேளை சாப்பாட்டுல இருக்கிற உழைப்போட அருமை தெரியும். சக மனுஷங்க படுகிற பாடு தெரியும். என்னுடைய ‘க/பெ ரணசிங்கம்’ படம் எமோஷனல் படம்தான். நாம் வெளியே பார்க்க சந்தோஷமா தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள கஷ்டங்களை அடக்கிவெச்சுட்டு திரிவோம்.

அது மாதிரியே நமக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அன்றாடம் நடக்கிற பிரச்னைகள், சீற்றங்கள், அதற்கான போராட்டம்னு இதுல அழகான வாழ்க்கை இருக்கு. அதற்காக போராடுகிற ஒரு பெண், அவளுக்குத் துணையாக கணவன்னு பெரிய வேகமெடுத்துப் போகும் கதை. யதார்த்தமாகவும் கமர்ஷியலாகவும் எமோஷனலாகவும் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கேன். நமக்கு பக்கத்தில் நடக்கிற விஷயங்களைப் பார்த்து கோபம் பொங்கும்.
இதில் தைரியமாக வெளிப்படுகிற பெண்ணையும் ஆணையும் உருவகப்படுத்தியிருக்கேன். அத்தனை ஆவேசங்களையும் மீறி இதில் ஓர் அருமையான வாழ்க்கை இருக்கு. நாம் வாழ்ந்து பார்த்த, இன்னும் நிறையப் பேர் வாழ்ந்துகிட்டிருக்கிற அசல் வாழ்க்கையே இது...’’
அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

படத்தோட வடிவமைப்பு, சேதுபதி, ஐஸ்வர்யாவின் கோபம்... அந்த தலைப்பு கூட நன்றாக இருக்கிறது...ரொம்ப நன்றி. ‘அறம்’ படத்துக்காக ராமநாதபுரம் பக்கம் போயிருந்தேன். அந்த ஊரையும் மக்களையும் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நாமதான் ஒரே நாள்ல மக்கள் மனசப் புரிஞ்சி பழகுற கிராமத்து ஆளுதானே. அதனால அவங்ககிட்ட பேசிப்பார்த்தா கதையா கொட்டுது.

அங்கே நடந்த ஒரு நிஜமான சம்பவம்தான் படமாகியிருக்கு. இந்தக் கதைக்குள்ள கூட இன்னொரு கதையிருக்கு. டைரக்டர் தாஸ் ராமசாமிகிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். ‘பிரமாதமா இருக்கு அண்ணே’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ராத்திரி ‘அறம்’ தயாரிப்பாளர் ராஜேஷ் சார் போன் பண்ணி ‘விருமாண்டி, நல்ல கதை ஒண்ணு உங்ககிட்ட இருக்காம். எனக்குச் சொல்ல மாட்டீங்களா’ன்னு கேட்டார்.

அடுத்த நாளே ஓடிப் போய் கதை சொன்னேன். சொல்லி முடிச்ச உடனே படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. ஒரு நல்ல கதாநாயகனையும், கதாநாயகியையும் கொடுத்து படத்தை உடனே ஆரம்பித்து வைத்ததெல்லாம் பெரிய கொடுப்பினை. வசனம் எழுதின நண்பன் சண்முகத்தையும், அடையாளம் காட்டிய தாஸ் அண்ணனையும், வாய்ப்பு தந்த ராஜேஷ் சாரையும், கனவுக்கு உருவம் கொடுத்த சேதுபதி, ஐஸ்வர்யாவையும் காலத்துக்கும் மறக்க இயலாது.

சேதுபதி இந்தப்படத்தில் வந்ததெப்படி?
இந்தப்படத்தை முதலில் சிறிய பட்ஜெட் படமாகத்தான் செய்யணும் என்பது கணக்காக இருந்தது. நடிகர் தேர்வுகள் ஆலோசனை நடக்கும்போதே இதில் விஜய் சேதுபதி இருந்தால் எப்படி இருக்கும்னு பேச்சு வந்ததும் அதிர்ச்சி ஆகிட்டேன். அவர் பெரிய நடிகர். இந்தப்படத்துக்கு கிடைப்பாரான்னு நினைச்சேன். நெருங்கிப் பார்த்து கதையச் சொன்னபிறகு கேட்டுட்டு என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

‘கதையில ஈரம் இருக்கு, வீரம் இருக்கு. மண்ணப்பத்தியும் மனுஷனைப் பத்தியும் வருது. நான் கண்டிப்பா பண்றேன்’னு சொன்னார்.
அவர் மிகச் சிறந்த நடிகர் என்பதெல்லாம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், அருமையான மனிதர். எல்லார் வாழ்க்கையின் மீதும் அக்கறை கொள்கிற மனசு. எங்கப்பா பெரியகருப்புத் தேவர் மேல் அலாதி மரியாதை வெச்சிருக்கார்.

நல்லா பேசி என் பதட்டத்தைக் குறைத்தார். அலைபேசியில் அவர் பெயரை ஹீரோன்னுதான் பதிஞ்சு வெச்சிருக்கேன். கேரக்டராகவே மாறிவிடுகிற மேஜிக் அவர்கிட்ட இருக்கு. அசலான தோற்றமும் இதுவரை காட்டாத நடிப்பும் விஜய் சேதுபதி சாருக்கு அக்மார்க் ஸ்பெஷல்.

ஐஸ்வர்யா ராஜேஷ் வேற இருக்காங்க...
ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் சேதுபதிக்கும் நடிப்புல போட்டியே நடக்கும். அவ்வளவு கவனமா விட்டுக் கொடுக்காமல் ரெண்டு பேரும் நடிச்சிருக்காங்க.
ஸ்பாட்டுக்கு வந்திட்டா ஒரு வார்த்தைகூட யார்கிட்டயும் வீண் பேச்சு கிடையாது. எல்லா காட்சிகளையும் உடனே நடிச்சு முடிச்சுக்கொடுத்திடுவாங்க. படத்தோட எந்த மூடும் மாறிவிடாதபடிக்கு ரொம்ப ஜாக்கிரதையா இருப்பாங்க.

சவாலான எந்தக் கேரக்டரையும் இந்தப் பொண்ணுகிட்டே நம்பி தைரியமாக கொடுக்கலாம். இந்த ரெண்டு பேரோட நடிப்பைப் பத்தியும் தனியா உட்கார்ந்து பேசுகிற அளவுக்கு விஷயம் இருக்கு.பாடல்கள் நன்றாக இருக்கிறது...வைரமுத்துவின் வரிகளுக்கு ஜிப்ரான் அரிய வகை இசையோடு பாடல்களைக் கொடுத்தார். ரங்கராஜ் பாண்டே, ‘பூ’ ராமு, வேல ராமமூர்த்தி ஆகியோர் அருமையான கேரக்டரில் பொருந்திவிட்டார்கள்.

ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி இதில் அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் அண்ணனுக்கு என் அன்பைச் சொல்லித் தீராது. என் மனதில் இருந்ததை, சொல்லத் தவறியதைக்கூட சேர்த்தே எடுத்துக் கொடுத்தார். என் வேலைப்பளுவை அவர் தோளுக்கு மாற்றிக்கொண்ட
மனிதர். வாழ்க்கையில் அன்றாட ஜீவிதத்துக்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிற அத்தனை தமிழ் மக்களுக்கும் இந்தப்படம் சமர்ப்பணம்.
உங்கள் தந்தை மறைந்த பெரிய கருப்புத்தேவரின் கனவுகள் நிறைவேறியதா?

அப்பா தேவி நாடக சபாவில் முத்துராமன், மனோரமா காலத்தில் இருந்தார். பெருங்குரலெடுத்து உச்சஸ்தாயியில் அருமையாகப் பாடுவார். அவரோடு கவுண்டமணி, சுருளிராஜன் கூட இருந்தார்கள். அப்பாவின் உற்ற நண்பர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.

நான் பிறந்தபோது எங்கள் குடும்பம் வறுமையின் உச்சத்தில் இருந்தது. அதை சொல்லி மாளாது. எழுதியும் தீராது. நான் அப்பா வழியில் நடிக்கத்தான் வந்தேன். அப்பாதான் என்னை டைரக்‌ஷன் கத்துக்கோன்னு மடைமாத்திவிட்டார்.  

அப்பாவுக்கு சொந்தமாகப் பாடி நடிக்கத்தான் ஆசை. அதை ‘பூ’ படத்தில் இயக்குநர் சசி ‘சிவகாசி நதியே...’ எனப் பாடவைத்து நியாயம் செய்தார்.
மானசீகமாக அவர் பாடிய பாடல்கள் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டேயிருக்கும். கட்டபொம்மன் நாடகத்தில் ஜாக்ஸன் துரையாக அப்பா ஆங்கிலம் பேசி நடித்தார். ‘உசிலம்பட்டிக்காரனாக இருந்தாலும் ஆங்கிலத்தில் பேசி பிரமாதப்படுத்தி விட்டாய்’னு தந்தை பெரியார் மேடையிலேயே பாராட்டியிருக்கிறார்.

‘காகிதப்பூ’ நாடகத்தில் அப்பா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதில் ராஜாத்தி அம்மா அவர்கள் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
என்னை, அண்ணன் வாகை சந்திரசேகர் ஒரு தம்பி மாதிரி அப்பாவின் நினைவாகப் பார்த்துக் கொள்கிறார். அப்பாவின் வழிகாட்டலில்தான் எனது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது என மனப்பூர்வமாக நம்புகிறேன்!

நா.கதிர்வேலன்