வன்முறை + பழி = 6 கதைகள்!



சில படங்களுக்கு மட்டுமே தலைப்பும் கதையும் நூறு சதவீதம் பொருந்திப்போகும். அப்படி தலைப்பைப் போலவே காட்டுத்தனமான ஒரு படம், ‘வைல்டு டேல்ஸ்’.

மனிதனுக்குள் இருக்கும் வன்முறையையும் பழிவாங்கல் உணர்வையும் பேசும் வெவ்வேறான ஆறு கதைகளின் தொகுப்புதான் இந்தப் படம்.
பறந்துகொண்டிருக்கும் விமானத்துக்குள் முதல் கதை ஆரம்பிக்கிறது. அருகருகே அமர்ந்திருக்கும் இரண்டு பயணிகளில் ஒருவர் இசை விமர்சகர். இன்னொருவர் மாடலிங் செய்யும் பெண்.

இருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு உரையாடும்போது பாஸ்டர்நாக் என்ற பெயர் அடிபடுகிறது. அது அந்த மாடலிங் பெண்ணின் முன்னாள் காதலனின் பெயர். இசை விமர்சகருக்கும் அவனை நன்கு தெரியும். அவர்கள் பாஸ்டர்நாக்கைப் பற்றி மோசமாக பேசும்போது இன்னொரு பயணி எழுந்து அவன் என்னுடைய மாணவன் என்கிறார். அவருக்கும் பாஸ்டர்நாக் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை.

இதைக் கேட்கும் இன்னொரு பயணி ‘‘எனக்கும் பாஸ்டர்நாக்கை நன்றாகத் தெரியும். அவன் ரொம்பவே மோசமானவன்...’’ என்று சொல்ல விமானமே பரபரப்பாகிறது. இங்கே யாருக்கெல்லாம் பாஸ்டர்நாக்கை தெரியும் என்று ஒருவர் கேட்க, பயணிகள் எல்லோருமே கை தூக்குகின்றனர். அவர்களுக்கு இலவசமாக விமான டிக்கெட் மற்றும் ஒரே நேரத்தில் பயணத்தையும் ஏற்பாடு செய்தவன் பாஸ்டர்நாக்.

அங்கிருந்த பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்ணால் பாதிக்கப்பட்டவன் அவன். அவர்களைப் பழிவாங்கவே இந்த மாஸ்டர்பிளான்.
பாஸ்டர்நாக்கின் திட்டம் தெரியவர, பயணிகள் அனைவரும் பீதியடைகின்றனர். அப்போது பதற்றமாகும் விமானப் பணிப்பெண் இந்த விமானத்தின் கேபின் சீஃப்தான் பாஸ்டர்நாக், அவர் காக்பிட்டைப் பூட்டிவிட்டார் என்று கதறுகிறார்.

நடுவானில் விமானம் தாறுமாறாக ஓட, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொருவரும் பாஸ்டர்நாக்கிடம் மன்னிப்புக் கேட்கின்றனர்.
‘‘உன்னிடம் அதிக கட்டணம் வசூலித்துவிட்டேன். உன் நிலைக்குப் பெற்றோர்தான் காரணம்...’’ என்று மனநல மருத்துவர் ஒருவர் கேபினைத் தட்டி மன்னிப்புக் கேட்க, விமானம் ஒரு வீட்டை நோக்கிப் பாய்கிறது.

அந்த வீட்டின் முன் ஹாயாக பாஸ்டர்நாக்கின் பெற்றோர்அமர்ந்திருக்கின்றனர். விமானத்தின் இறக்கைகள் அவர்கள் மீது மோதுவதோடு முதல் கதை முடிகிறது. அடுத்த ஐந்து கதைகளும் இதைப் போலவே தாறுமாறானவை.ஸ்பானிஷ் மொழியாக இருந்தாலும் எல்லோரையும் ஈர்க்கும் படமாக அதிரடி காட்டுகிறது. அர்ஜென்டினாவின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

2015ம் வருடம் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படத்தின் இயக்குநர் டேமியன் சிஃப்ரான். இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் பார்க்க கிடைக்கிறது.