தல! sixers story-18



தாதா காட்டிய கருணை!

டிசம்பர் 23, 2004.வங்காள தேசத்துடனான ஒருநாள் தொடரில் முதன்முதலாகக் களமிறங்கிய தோனி, முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆனார். சர்வதேசப் போட்டியில் களமிறங்கிய முதல் பந்திலேயே மூன்றாவது அம்பயரின் முடிவுக்காகக் காத்திருந்து ஏமாற்றத்துக்கு உள்ளானார். அந்தப் போட்டியில் முட்டை போட்ட மற்றொரு வீரர் சவுரவ் கங்குலி.

முதலில் ஆடி 245 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா, தட்டுத் தடுமாறி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இரண்டாவது போட்டியிலும் தோனி சோபிக்கவில்லை.வெறும் 12 ரன்கள் மட்டும்தான் எடுத்தார்.230 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியும் அப்போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இத்தனைக்கும் அப்போது வங்கதேசம், கிரிக்கெட்டில் வளர்ந்துகொண்டிருந்த அணிதான்.கத்துக்குட்டியிடம் தோல்வி என்பது சகித்துக்கொள்ள முடியாத விஷயம்.மூன்றாவது போட்டியில் வென்றால்தான் தொடரை வெல்ல முடியும்.

வங்கதேசத்துடன்தானே ஆடுகிறோம் என்கிற மிதப்பில் இரண்டாவது போட்டியில் அப்போதைய முன்னணி வீரர்களான சச்சின், டிராவிட், ஹர்பஜன், இர்பான் பதான் ஆகிய வீரர்களுக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வு கொடுத்திருந்தார் கேப்டன் கங்குலி.

அந்தத் தெனாவட்டுக்குக் கொடுத்த விலைதான் தோல்வி.மூன்றாவது போட்டியில் முழு பலத்தோடு மோத இந்தியா முடிவெடுத்தது.
இந்தப் போட்டியில் தன் பலத்தையும் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் தோனி.

டிசம்பர் 27, 2004 அன்று டாக்கா மைதானத்தில் நடந்த போட்டி அது.இம்முறை இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக இருந்தார்கள்.
குறிப்பாக சேவாக். வங்காளதேச பந்து வீச்சாளர்களை நாலாப்புறமும் சிதறடித்தார்.

சேவாக், கங்குலி, டிராவிட், யுவராஜ் சிங் ஆகியோர் அரை சதம் எடுத்தார்கள்.குறிப்பாக கடைசியில் வந்த யுவராஜ் சிங், வெறும் 32 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.50வது ஓவரில்தான் யுவராஜ்சிங் அவுட் ஆனார்.தோனி களமிறங்கியபோது இரண்டே இரண்டு பந்துகள் பட்டுமே மிச்சமிருந்தன.
காலித் முகம்மது பந்து வீச்சாளர்.

தோனி, எதிர்கொண்ட முதல் பந்தையே தன்னுடைய தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட்டால் எதிர்கொண்டார்.உயரே பறந்தது பந்து.எல்லைக் கோட்டுக்கு அருகே இருந்த ஃபீல்டர் கேட்ச்சுக்காக வானத்தைப் பார்க்க, அவரது தலைக்கு மேல் பறந்து சிக்ஸர் ஆனது.
சர்வதேசப் போட்டிகளில் தோனி அடித்த முதல் சிக்ஸர் அதுதான்.

இந்தியா, 348 ரன்கள் அடித்து தன் முத்திரையைப் பதித்தது.அடுத்து ஆடிய வங்கதேசம் சீரான இடைவெளிகளில் தன் விக்கெட்டை இழந்து
கொண்டே வந்தது.ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங் என்று ஓப்பனர்கள் இருவரையுமே பெவிலியனுக்கு அனுப்பினார் விக்கெட் கீப்பர் தோனி.

மேலும் இரண்டு கேட்ச், ஒரு ஸ்டம்பிங் என்று அந்தப் போட்டியில் தோனியால் வங்கதேசம் இழந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை ஐந்து.
ஆக, இந்தியாவுக்கு ஒரு திறமையான விக்கெட் கீப்பர் அமைந்து விட்டார். போனஸாக ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸரும் அடிக்கிறார் என்று தேர்வுக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

எனினும் தொடர்ந்து அணியில் இடம்பெறுவது என்பதற்கு போராடத்தான் வேண்டியிருந்தது. ஏற்கனவே அணியில் செட்டில் ஆகியிருந்த தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாகத்தான் இவரை வங்கதேசப் போட்டித் தொடருக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.

இருவரில் ஒருவருக்குத்தான் தொடர்வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற நிலை.2000ம் ஆண்டுதான் ஜார்க்கண்ட் மாநிலம், பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு உருவானது.பீகார், ஜார்க்கண்ட் இரு மாநிலங்களுக்கும் விளையாடிய வீரர்கள் ஒரு சிலரே.அதில் தோனியும் ஒருவர்.பங்களாதேஷ் தொடருக்குப் பிறகு அவருக்கு ஜார்க்கண்ட் அணியிலும் விளையாடக்கூடிய வாய்ப்பு அமையவில்லை.

இந்திய அணிக்கு கேப்டனாக மகத்தான சாதனைகள் செய்தவர், சொந்த மாநில அணிக்காக தலைமையே தாங்கியதில்லை என்பதுதான் நகைமுரண்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியா, தினேஷ் கார்த்திக்கா என்று தேர்வுக்குழுவினர் குழம்பினர்.தோனியால் அதிரடியாக ஆட முடிகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு அவர் சரி.

ஆனால் -டெஸ்ட் போட்டிகளில் அனுபவமுள்ள தினேஷ் கார்த்திக்கே சரிப்பட்டு வருவார் என்று கருதினார்கள்.அதற்கேற்ப அடுத்து பாகிஸ்தானோடு நடந்த டெஸ்ட் சீரிஸில் ஓர் இன்னிங்ஸில் கார்த்திக் 93 ரன்கள் எடுத்தார். அப்போட்டியில் 195 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.இருப்பினும் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கு தோனியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொச்சியில் நடந்த முதல் போட்டியில் அவரால் 3 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.அப்போட்டியில் இந்தியாவே வென்றது என்றாலும், விசாகப்பட்டினத்தில் நடக்கவிருந்த அடுத்த போட்டியில் அவரைச் சேர்த்துக் கொள்வார்களா என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது.

அவர் விளையாடிய முதல் நாலு போட்டிகளிலுமே சொல்லிக் கொள்ளும்படியான பேட்டிங் அமையவில்லை. ஒரு போட்டியில் மட்டுமே விக்கெட் கீப்பிங்கில் ஜொலித்தார்.

கேப்டன் சவுரவ் கங்குலி மட்டுமே தோனியின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரையும் ஆரம்பக்கட்டத்தில் இதே போன்ற நம்பிக்கை வைத்துதான் வளர்த்தெடுத்தார் கங்குலி.

போட்டிக்கு முந்தைய நாள், ஹோட்டல் அறையில் வைத்து தோனியிடம் பேசினார் கங்குலி.“நீ மிகவும் பின்தங்கிய மாநிலத்தில் இருந்து விளையாட வந்திருக்கிறாய். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து பீகார் போன்ற மாநிலத்தில் இருந்து, இந்திய அணியில் விளையாடுமளவுக்கு வளர்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய் என்று எனக்குத் தெரியும்.

உன்னை அணியில் சேர்த்துக்கொள்ள கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. எதிர்ப்புகளை மீறித்தான் உன்னை அடுத்த போட்டியில் விளையாட வைக்க
முடிவெடுத்திருக்கிறேன்.உன்னைத் தக்கவைத்துக் கொள்வதோடு, என் முடிவும் சரிதானென்று களத்தில் நிரூபிப்பாய் என்று நம்புகிறேன்...”
கங்குலியின் மனம் திறந்த பேச்சு, தோனியின் கண்களைக் குளமாக்கியது.“தாதா, நான் நாளைக்கு விளையாடப் போறது எனக்காக மட்டுமல்ல. உங்களுக்காகவும்தான்!” என்றார் தோனி.

(அடித்து ஆடுவோம்)

 - யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்