தடைகளைக் கடந்து உயரே பறக்கலாம்!



மனதில் திடம் இருந்தால் எவ்வளவு பெரிய வீழ்ச்சியையும் உடைத்து உயரே பறக்கலாம் என்ற நம்பிக்கையைத் தரும் மலையாளப்படம்
‘உயரே’. அதே நேரத்தில் காதலின் பெயரால் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையையும் ஆழமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம்.

விமானியாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வருகிறாள் பல்லவி. அவளுக்கு எல்லாமே அப்பாதான். பள்ளியில் சீனியரான கோவிந்த் என்பவனின் நட்பு கிடைக்க, அவளின் வாழ்க்கையே மாறுகிறது. எதிர்பாராத விதமாக ஹாஸ்டலில் நடந்த ஒரு சம்பவத்தால் பெருத்த அவமானத்துக்குள்ளாகிறாள். அந்தச் சம்பவத்துக்காக அவளுடன் படிக்கும் மாணவிகள் உட்பட எல்லோரும் பல்லவியைக் கேலி செய்கிறார்கள்.

இந்தச் சூழலில் அவளுக்கு உறுதுணையாக இருந்து ஆறுதலளிக்கிறான் கோவிந்த். அதனால் பல்லவிக்கு கோவிந்த் மீது நட்பைத் தாண்டிய  ஈர்ப்பு. அது நாளடைவில் காதலாக மலர்கிறது.பல்லவியின் காதல் விஷயம் தந்தைக்குத் தெரிய வர, அவரும் அதை ஏற்றுக்கொள்கிறார். தாழ்வு மனப்பான்மையுடைய கோவிந்தோ பல்லவியைத் தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறான். அதனால் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறான். கொஞ்சம் கூட பல்லவியை அவன் சுதந்திரமாக விடுவதில்லை. இருந்தாலும் பல்லவி அவனை எதுவும் சொல்வதில்லை.

நாட்கள் நகர்கிறது. பல்லவி விமானி பயிற்சிக்காக வெளியூருக்குச் செல்கிறாள். அங்கே புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். குறிப்பாக விஷால். அவன் ஏர்லைன்ஸ் சேவைக்கு ஆட்களை நியமிக்கும் தொழில் அதிபரின் மகன். தந்தையின் நிறுவனத்தில் முக்கிய பதவியிலும் இருப்பவன்.

ஒரு நாள் விமானி பயிற்சி பெறும் நண்பர்களுடன் விருந்துக்குச் செல்கிறாள் பல்லவி. அப்போது அவளை போனில் அழைத்துக்கொண்டே இருக்கிறான் கோவிந்த். பல்லவி போனை எடுப்பதில்லை. கோபமடையும் கோவிந்த், பல்லவி இருக்கும் இடத்தைத் தேடி வந்து விடுகிறான். அவளை நண்பர்கள் முன் அவமானப்படுத்துகிறான். பொறுத்துக்கொள்கிறாள் பல்லவி.

தன்னைவிட்டு வேறு யாருடனோ போய்விடுவாளோ என்று சந்தேகிக்கும் கோவிந்த், சரியாகத் திட்டமிட்டு பல்லவியின் முகத்தில் ஆசிட்டை அடித்துவிடுகிறான். பல்லவியின் முகத்தில் ஒரு பக்கம் முற்றிலும் சிதைந்துவிடுகிறது. அந்த முகத்துடன் விமானியாவது கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. இப்படியான சூழலில் பல்லவி வீட்டோடு முடங்கிப்போனாளா அல்லது தனது கனவை நிறைவேற்றினாளா என்பதே இன்ஸ்பிரேஷன் திரைக்கதை.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் பல்லவியாகவே வாழ்ந்த பார்வதி. பொசஸிவ் காதலன் கோவிந்தாக ஆசிப் அலி பர்ஃபெக்ட். எங்கேயும் பிசகாமல், சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறது பாபி - சஞ்சயின் திரைக்கதை. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கும் இப்படத்தின் இயக்குநர் மனு அசோகன்.