இயக்குநர் சி.பி.கோலப்பனின் பயணம்...
கலைஞர் கதை வசனம் எழுதிய படங்களின் உதவி இயக்குநர்...
அறிவாலயம் திறப்புவிழாவில் ஸ்டாலின் தலைமையில் நடந்த சைக்கிள் பேரணியை ஷூட் செய்தவர்...
கனிமொழியை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர்...
ஒரே இயக்குநரின் 56 படங்களுக்கு கோ-டைரக்டர்...
ரஜினி படத்தின் வசனகர்த்தா...
விஜயகாந்த் படத்தின் தயாரிப்பாளர்...
என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கலைஞர் கருணாநிதி ஐயா இருந்திருக்காங்க. ரொம்ப பெரிய கொடுப்பினை. அவர் வசனம் எழுதின படங்களில் இணை இயக்குநரா இருந்திருக்கேன்.
 ‘புதிய பராசக்தி’ இயக்கும்போது அவர் கைப்பட எனக்கு கடிதமும் எழுதி அனுப்பியிருக்கார். என் திருமணம், என் மகன், மகளுக்கு பெயர் சூட்டல், நான் இயக்கிய, தயாரித்த படங்களின் பூஜைனு அத்தனை நிகழ்வுகளும் அவரோட நல்லாசியுடன் நடந்திருக்கு...’’ நெகிழ்ந்து மகிழ்கிறார் இயக்குநர் சி.பி.கோலப்பன்.  கலைஞர் வசனம் எழுதிய ‘வீரன் வேலுத்தம்பி’, ‘பாசக் கிளிகள்’, ‘மண்ணின் மைந்தன்’ உட்பட பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் இவர். தவிர இராமநாராயணன் இயக்கிய 129 படங்களில் 56 படங்களின் கோ-டைரக்டர். விஜயகாந்தின் ‘தென்பாண்டிச் சீமையிலே’, சில்க் ஸ்மிதாவின் ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’ என பல படங்களைத் தயாரித்து இயக்கியவர்.
 ‘‘நானும் கேமராமேன் என்.கே.விஸ்வநாதனும் நண்பர்கள். ஒருமுறை அவரோட பேசிட்டிருக்கும்போது, ஒரு படம் இயக்கலாம்னு தோணுச்சு. அதான் விஜயகாந்த் நடிச்ச ‘தென்பாண்டிச் சீமையிலே’. படத் தயாரிப்பு கம்பெனிக்கு ‘உழைப்பாளர் ஃபிலிம்ஸ்’னு பெயர் வச்சு அந்தப் படத்தை இயக்கி தயாரிச்சு, யூனிட்ல இருக்கறவங்களுக்கு லாபத்துல பங்கு கொடுக்க விரும்பினேன். விஜயகாந்த் நடிப்பில், கே.பாக்யராஜ் இசையமைக்க வித்தியாசமான கூட்டணி உருவாச்சு. ஏவிஎம்ல பூஜை.
 அதே நாள்ல ஏவிஎம்ல ராமராஜன் பட பூஜையும் இருந்தது. அந்தப் பூஜைக்கு ஜெயலலிதா வரப்போறாங்கனு தெரிஞ்சதும் ஷாக் ஆகிட்டேன். கூட்டம் மொத்தமும் ராமராஜன் படத்து மேலதானே போகும்னு யோசிச்சேன். முதன்முதல்ல டைரக்ட் பண்ற விஷயம் வெளி உலகத்துக்குத் தெரியாமயே போயிடுமேனு பயந்தேன்.
உடனே முரசொலி செல்வம் சாரை பார்த்தேன். ‘என் படத்துக்கு தலைவர் தலைமை தாங்கணும்’னு கேட்டேன். கலைஞர் அவர்களும் என் பட பூஜைக்கு வந்திருந்து தலைமை தாங்கி, என்னை வாழ்த்தினார். அன்னிக்கு ஏவிஎம்ல ஒரு பக்கம் கலைஞர், இன்னொரு பக்கம் ஜெயலலிதா வருகைனு ஜெகஜோதியா இருந்துச்சு. ஈவ்னிங் பேப்பர்ஸ்ல திரையுலக திருவிழாக்கள்னுதான் ஹெட் லைன்ஸ். மறக்க முடியாத அனுபவம்.
‘தென்பாண்டிச் சீமையிலே’ தீபாவளி ரிலீஸ். அன்னிக்கு ரஜினியின் ‘கொடி பறக்குது’ படமும் வெளியாச்சு. ஆனா, எங்க படம் நூறு நாள் ஓடுச்சு. அப்புறம் ‘புதிய பராசக்தி’யை இயக்கினேன். அதுல ‘மனிதர்களே ஒரு புரட்சிப் புயல் வருது...’ பாடல் மூலம் கனிமொழி பாடலாசிரியரா அறிமுகமானாங்க.
கலைஞர் வசனம் எழுதின ‘வீரன் வேலுத்தம்பி’யில் ஒர்க் பண்ணினேன். ராதாகிருஷ்ணன் ரோட்டுல இருக்கற ஒரு ஹோட்டல்ல படத்தோட கதை விவாதம் நடந்தது. படத்துக்கு திரைக்கதை வசனம் கலைஞர். அதனால அவர், எங்க டைரக்டர், நான்... இப்படி நாங்க மூணு பேரும் அங்க ஸ்டோரி டிஸ்கஷன்ல இருப்போம்.
காலைல ஒன்பது மணிக்கு டிஸ்கஷன்னா, ஐயா கரெக்ட்டா வந்துடுவார். சிலசமயம் வசனங்களை எப்படி பேசணும்னு கூட பேசி டேப்ரெக்கார்டர்ல ஒலிப்பதிவு செய்து கொடுப்பார். சினிமா, இலக்கியம்னா அவருக்கு அவ்வளவு பிரியம். அந்த டைம்லதான் எனக்கு கல்யாணம் நிச்சயமாச்சு. அப்ப நான் வெறும் அசிஸ்டென்ட் டைரக்டர்தான். என் கல்யாணம் ஏதோ சிம்பிளா நடக்கும்னு நினைச்சிருந்தேன். ஆனா, நானே எதிர்பாராத விதமா, தாம்தூம்னு அமைஞ்சது.
கல்யாணத்துக்கு கலைஞரை இன்வைட் பண்ணும் போதுகூட, சாதாரணமாதான் சொன்னேன். அவருக்கு தட்டுல பழங்களோட பத்திரிகை வச்சு சம்பிரதாய முறைப்படி எல்லாம் கூப்பிடலை.மறுநாள் காலைல கருமாரி யம்மன் கோயில்ல கல்யாணம். மாலை பாம்குரோவ்ல ரிசப்ஷன். மலேசியா வாசுதேவன் கச்சேரி. ஈவ்னிங் ஹோட்டலே பரபரப்பாகுது. கலைஞர் வர்றார்... அவருக்குப் பின்னாடியே அமிர்தம் சார், முரசொலி செல்வம் சார்னு அத்தனை பேரும் வந்திருந்து வாழ்த்தினாங்க.
ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் கல்யாணத்துக்கு திரையுலகமே திரண்டு வந்திருந்து வாழ்த்தின அதிர்ஷ்டம் எனக்குதான் அமைஞ்சது...’’ கண்கள் மின்ன தழுதழுக்கும் கோலப்பன், பாடலாசிரியராகும் ஆசையில்தான் சென்னைக்கே வந்தாராம்.
‘‘பூர்வீகம் கோவை. ஊர்ல கண்ணதாசனுடைய புத்தகங்கள் நிறைய படிப்பேன். அதனால எப்படியாவது அவர்கிட்ட உதவியாளரா சேர்ந்திடணும்... பாடலாசிரியராகணும்னு ஆசைப்பட்டு கண்ணதாசனைப் பத்தி பக்கம் பக்கமா கவிதைகள் எழுதி சென்னைக்கு எடுத்துட்டு வந்தேன். நேரா அவர் வீட்டுக்கே போயி அவரைப் பத்தி எழுதின கவிதைகளைக் கொடுத்தேன். அதையெல்லாம் படிச்சுட்டு, ‘நின்று நீடூழி வாழ்க’னு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்.
‘இல்லீங்க ஐயா, உங்ககிட்ட உதவியாளரா ஆகலாம்னு சென்னைக்கு வந்தேன்’னு சொன்னேன். ‘பத்துநாள் கழிச்சு கவிதா ஹோட்டல்ல என்னை வந்து பாருங்க’ன்னார். பதிலை உடனடியா சொல்லாம இழுத்தடிக்கறாரேனு கொஞ்சம் கோபம். நேரா கோடம்பாக்கம் வந்து, ‘இளமைக் கோலம்’ படத்துல அதோட இயக்குநர் என். வெங்கடேஷ்கிட்ட வேலைக்கு சேர்ந்துட்டேன். அந்த டைம்லதான் என் நண்பர் சங்கரன் மூலமா ‘தேனாம்பேட்டை 92சி’ல தங்க இடம் கிடைச்சது. கே.பாக்யராஜ், கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம், சங்கிலி முருகன், ஆர்.
சுந்தர்ராஜன், பார்த்திபன், கறுப்பு சுப்பையா, வெள்ளை சுப்பையானு பலருக்கும் அடைக்கலம் கொடுத்த இடம் அது. அப்பேர்ப்பட்ட இடத்துல தங்கியிருக்கேன்!அங்கிருந்தப்பதான், ‘ஆண்பாவம்’ பாண்டியராஜனோட மாமனார் இயக்குநர் அவினாசி மணியோட அறிமுகம் கிடைச்சது. அவர் இயக்கிய ‘வேடனைத் தேடிய மான்’ல உதவியாளரா ஒர்க் பண்ணினேன். அப்புறம் கோகுலகிருஷ்ணா இயக்கின ‘ஆனந்தக் கும்மி’யில் வேலை பார்த்தேன்.
இளையராஜா தயாரிச்ச படம் அது. இளையராஜா முதன்முதல்ல மும்பைல ரிக்கார்டிங் செய்த படமும் அதான். அதுலதான் பேபி ஷாலினியும், அவர் அண்ணன் ரிச்சர்டும் நடிகர்களா அறிமுகமானாங்க. அதன்பிறகு நானும் கோகுலகிருஷ்ணாவும் இணைந்து ‘பாடும் வானம்பாடி’ படத்துக்கு வசனம் எழுதினோம். அது நூறுநாள் போச்சு. பிறகு எங்க கூட்டணி ஆர்.வி.உதயகுமார், பாசில்னு பயணப்பட்டு ‘எஜமான்’ வரை சேர்ந்து எழுதினோம்.
‘கண்டேன் சீதை’ படத்துக்கு காமெடி ட்ராக் எழுதியிருந்தேன். அதுலதான் விவேக்குக்கு முதன் முதலா ‘சின்னக்கலைவாணர்’ பட்டம் கொடுத்தேன்...’’ என தகவல்களைக் கொட்டியவரின் பேச்சு, தனது குருநாதர் இராமநாராயணன் பக்கம் திரும்பியது.‘‘சங்கிலிமுருகன் ‘கரிமேடு கருவாயன்’ தயாரிச்சார். நானும் கோகுல கிருஷ்ணாவும் ஸ்கிரிப்ட் எழுதினோம். இராமநாராயணன் சார்தான் டைரக்ட் பண்ணினார். அவருக்கு என் ஒர்க் பிடிச்சுப் போச்சு. ‘கோலப்பன் என் கூடவே இருக்கட்டும்’னு இராமநாராயணன் சார் விரும்பினார்.
அன்னிக்கு அவரோட ஆரம்பிச்ச பயணம், அவரோட கடைசி படம் ‘ஆர்யா சூர்யா’ வரை தொடர்ந்தது. அவர் இயக்கின 56 படங்களுக்கு கோ டைரக்டரா ஒர்க் பண்ணினேன். இந்தியன் இண்டஸ்ட்ரீல இந்த மாதிரி அதிக படங்கள்ல கோ டைரக்டரா ஒர்க் பண்ணினவர்னு ஏவிஎம் குரூப்ல லட்சுமி நாராயணனை சொல்வாங்க. அவருக்கு அடுத்த இடத்துல என்னையும் சொல்றாங்க. இது சந்தோஷமான விஷயம்.
இராமநாராயணன் சார் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார். சில நேரங்கள்ல என் கற்பனைக்கு ஏற்ப ஷூட் செஞ்சுட்டு வந்தாலும், பாராட்டுவார். ‘ஏன் அப்படி பண்ணினே’னு கேட்க மாட்டார். அவரோட டீம்ல என்னை ‘ப்ளானிங் மாஸ்டர்’னு தான் கூப்பிடுவாங்க.1989ல கலைஞர் முதலமைச்சர் ஆனார். அப்ப இராமநாராயணன் சார் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஆகிட்டார்.
பாக்யராஜ், மோகன், ராதிகாவை வச்சு ‘கொங்கு நாட்டு ராசா’னு ஒரு படம் இயக்கி, தயாரிக்க விரும்பினேன். வசனம், மணிவண்ணன். என் படத்தோட ஷூட் ஏவிஎம்ல போச்சு. அன்னிக்கு கலைஞர் என்னைக் கூப்பிட்டார். உடனே போனேன். ‘என்னய்யா உனக்கு அரஸ்ட் வாரன்ட் வந்திருக்கு’னு கேட்டார்!முழிச்சேன். ‘நீ ஒரு படம் தயாரிச்சு, பணம் கொடுக்கலைனு கோவைக்காரர் ஒருத்தர் அரஸ்ட் வாரன்டு கொடுக்க வச்சிருக்கார்’னார்.
அப்பதான், எப்பவோ ‘கதாபாத்திரம்’னு ஒரு படம் தயாரிக்கும்போது ஒருத்தர் பிரச்னை பண்ணி கோவைல அவர் புகார் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அந்தப் புகார் இப்ப கலைஞர் ஐயா கைக்கு வந்திருக்கு.என் மேல இருந்த பிரியத்தால யாருக்கும் எந்த சங்கடமும் நஷ்டமும் வராதபடி என்னைக் காப்பாத்தினார். நெகிழ்ந்துட்டேன்.
என் பையனுக்கு சித்து செல்வமணினும், என் மகளுக்கு பூங்குயில்னும் பெயர் வைச்சது கலைஞர் ஐயாதான். என் மகள் பெயரையே புரொடக்ஷன் கம்பெனிக்கும் வச்சேன். ‘பூங்குயில் புரொடக்ஷன்’. அதுலதான் ‘பசி’ துரைக்காக ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’வை தயாரிச்சேன். அந்தப் படத்தால சில லட்சங்கள் நஷ்டம்.
அதோட ரிலீஸுக்கு முதல் நாள் பெரிய பணநெருக்கடியில் சிக்கினப்ப, எங்க டைரக்டர்தான் எனக்கு சப்போர்ட் பண்ணினார். அதெல்லாம் மறக்கவே முடியாது! கேரியர்ல சின்ன தேக்கம் ஆச்சு. எங்க டைரக்டர் எனக்கு கை கொடுத்தார். அப்புறம் அவரோடவே இருந்துட்டேன். இராமநாராயணன் சார் இயக்கத்துல விஜயகாந்த் நடிச்ச ‘மக்கள் ஆணையிட்டால்’ ஷூட் போறப்பதான், திமுகவின் தலைமைக் கழகமான ‘அறிவாலயம்’ திறக்கப்பட்டது!அப்ப, பிரமாண்டமான சைக்கிள் பேரணி நடந்தது. அதுல தளபதி ஸ்டாலின் சைக்கிளில் ஊர் வலமா வந்தார். எங்க டைரக்டர் அதை ஷூட் பண்ணணும்னு விரும்பினார். நானும் ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதனும் போய் ஷூட் பண்ணினோம்.
‘மக்கள் ஆணையிட்டால்’ படத்துக்கு கலைஞர் ஐயாதான் திரைக்கதை, வசனம். தவிர, ‘ஆற அமர யோசிச்சு பாரு... அடுத்த தலைமுறையை கொஞ்சம் சிந்திச்சுப் பாரு...’னு ஒரு பாட்டும் எழுதியிருப்பார். எங்க டைரக்டரும் நானும் அந்த சைக்கிள் பேரணியை இந்த பாட்டுக்கு விஷுவலா கொண்டு வந்தோம். இந்தப் பட ஷூட் அப்ப கலைஞர் ஐயா ஏதோ சில காரணங்களால கைது செய்யப்பட்டார். டயலாக் பேப்பரை வாங்க சிறைக்கு போவேன். தனக்கு அங்க சாப்பிட கொடுக்கப்படுற கொண்டக் கடலையை எனக்கும் கொஞ்சம் கொடுப்பார்.
திண்டுக்கல்ல நடந்த திமுக மாநாட்டுல கலைஞரோட வாழ்க்கை வரலாற்றை நாடகமாக போட்டேன். திருச்சி மாநாட்டின் போது, சரத்குமாரும், வைகோவும் கட்சியை விட்டு போகப் போறாங்கனு சின்ன பரபரப்பு ஏற்பட்டுச்சு. அந்த டைமில் என் நண்பரான பாக்யராஜ் திமுகவில் இணைந்தால் நல்லா இருக்குமேனு நினைச்சேன். அதை அமிர்தம் சார்கிட்டேயும் சொன்னேன்.
பாக்யராஜும் திமுகவில் இணைந்தார். தேர்தல்ல பிரசாரமும் செய்தார். அப்ப அவரோடு எல்லா தொகுதிகளுக்கும் நானும் போனேன். கலைஞர் ஐயா தலைமைல திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைச்சது...’’ என மலரும் நினைவுகளில் மூழ்கியவருக்கு இப்போது படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை. ‘‘இப்ப இண்டஸ்ட்ரீ எப்படி இருக்குனு எல்லாருக்குமே தெரியும். 1980ல ‘வேடனைத் தேடிய மான்’ல ஒர்க் பண்ணும் போது, அதுல லதா, தீபா, பிரமிளா, ரவிச்சந்திரன், வி.கே.ராமசாமி, சுருளிராஜன்னு அவ்வளவு பேரும் நடிச்சாங்க. அதோட ஃபர்ஸ்ட் காப்பிக்கு மொத்தமே அஞ்சு லட்சம்தான் செலவாச்சு. இன்னிக்கு ஐம்பது கோடி இருந்தாலும் அப்படி ஸ்டார் காஸ்ட் போட்டு எடுத்திட முடியாது. மறுபடியும் அப்படியொரு சூழல் வந்தா கண்டிப்பா படம் தயாரிப்பேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் கோலப்பன்.
|