அணையா அடுப்பு-18



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்...

பஞ்சங்களின் நூற்றாண்டு என்று 19ம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம்.பொதுவாகவே பஞ்சம் என்பது மழைப்பொழிவு குறைந்து வறட்சியின் காரணமாக ஏற்படுவது.ஆனால் -இந்தியாவில் 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, வறட்சி மட்டுமே பஞ்சத்துக்குக் காரணமாக அமைந்துவிடவில்லை.
இந்த மண்ணை அந்நியர்கள் சுரண்டியதும் பல லட்சம் பேர் பசியால் உயிர் துறக்க காரணமானது.தானிய விளைச்சல் குறைந்து உள்நாட்டில் இருந்தவர்களுக்கே போதுமான உணவு இல்லாத சூழல்.

பிரிட்டிஷ் அரசாங்கமோ, இங்கிருந்து வழக்கமாக செய்துவந்த தானிய ஏற்றுமதியின் அளவை சற்றுகூட குறைத்துக்கொள்ளவில்லை.சொல்லப்போனால் மேலும் அதிகமாகவே சுரண்டத் தொடங்கியது.அச்சூழலை விளக்க இத்தொடரின் முதல் அத்தியாயத்தில் எழுதப்பட்ட சில வரிகளை இங்கே மீண்டும் சொல்வது பொருத்தமாக இருக்கும்.“உலகம் தோன்றிய காலத்திலிருந்தே தமிழ் நிலம் கண்டறியாதது வறுமை, பசி, பட்டினி.

மண் பிடிக்கும் பேராசையின் விளைவாக நிகழ்ந்த போர்களால், நானிலத்துக்கே உணவளித்துக் கொண்டிருந்த வேளாண்குடி மக்களுக்கு விதவிதமாக வரிகள் போடப்பட்டன.உழுதவன் கணக்குப் பார்த்தான். உழக்குதான் மிஞ்சியது.சொந்த நிலத்தில் விதைத்து, உழுது, அறுவடை செய்ய அந்நிய நாட்டுக்கு நிலவரி கட்டிக் கொண்டிருந்தான்.யதேச்சாதிகாரமாக நமக்கு விதிக்கப்பட்ட வரிகள், வேளாண்மையை முடமாக்கியது.
எவருக்கும் சேமிக்கும் வாய்ப்பில்லை.

இங்கிருந்த கந்துவட்டி கனவான்கள் கொழித்தனர்.19ம் நூற்றாண்டை பஞ்ச நூற்றாண்டு என்றே கூடச் சொல்லலாம். நூற்றாண்டு தொடங்கியதுமே அடுத்தடுத்து பஞ்சங்கள். மொத்தம் ஏழு பஞ்சங்கள்.பதினைந்து லட்சம் பேர் பசிக்கொடுமையால் மாண்டார்கள். நூற்றாண்டின் பிற்பகுதி இன்னும் மோசம்.1851ல் தொடங்கி 1900 வரையிலான காலக்கட்டங்களில் மட்டுமே இருபத்திநான்கு பஞ்சங்கள். இதன் காரணமாக மட்டுமே இரண்டு கோடிப் பேர் இறந்தார்கள்.

ஒருவேளைக் கஞ்சிக்கே வக்கில்லாமல் போனது உலகுக்கே சோறு போட்ட மாநிலம்...”
இத்தகைய ஒரு சூழலில்தான் வள்ளலாரின் தேவை, தமிழ் மண்ணுக்கு ஏற்பட்டது.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய உள்ளம் அல்லவா?
பசித்த வயிறைக் காணும்போதெல்லாம் அவருக்கு உள்ளமும், உடம்பும் எரிகிறது என்று
சொல்லியிருக்கிறார்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன்; பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்’
- என்றும் எழுதியிருக்கிறார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும் பஞ்சத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில்தான் வள்ளலார் இருந்தார்.
1876ம் ஆண்டு தொடங்கி 1878ம் ஆண்டு வரையிலான காலக்கட்டம் படுமோசமானது. தெருவெங்கும் பசிக்கொடுமையால் பிணங்கள் விழுந்த காலம். அந்தக் கொடுமையைக் காண நேரக்கூடாது என்பதாலோ என்னவோ, அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே வள்ளலார் இயற்கையோடு இணைந்து விட்டார்.

பசிக்கொடுமையை ஒழிக்க அவர் களமிறங்கிய காலம் என்பது பெரும் பஞ்சத்துக்கு முன்னோடியாக அமைந்த பஞ்சத்துக்கான அறிகுறிகளின் போதே. அதையே தாங்க முடியாதவர், பெரும்பஞ்சத்தைக் கண்டிருந்தால் எப்படி மனம் பதைத்திருப்பார்?
எனவேதான் -அன்னதானம் என்பதை இயக்கமாகவே கட்டமைத்தார்.

“நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்கு பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்...’’ என்கிறார் வள்ளலார்.
ஒரு கட்டத்தில் ஜீவகாருண்யம் என்பதே அன்னதானம் என்றும் குறிப்பிடுகிறார்.ஏழைகள் தவிர்த்து, வேறெவருக்கெல்லாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்று விரிவாக வரையறுத்திருக்கிறார்.

* பசியினால் தேகம் பாழாகும் தருணத்தில் உள்ளவர்களுக்கு.

* பசியினால் நிலைதடுமாறி உடல் உறுப்புகள் அழியும் தருணத்தில் உள்ளவர்களுக்கு.

* பசியினால் மயக்கம் அடைபவர்களுக்கு.

* பசியினால் களைத்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரைக் கேட்கத் துணியாமல் கடவுளை நினைத்து நினைத்து நெருப்பில் படுத்து நித்திரை செய்யத் தொடங்குவாரைப் போல், அடிவயிற்றில் கொடிய பசி வைத்துப் படுக்கத் தொடங்குகின்ற விவேகிகளுக்கு.

* பகற்போதும் போய்விட்டது. பசியும் வருத்துகின்றது. வேறிடங்களில் போக வெட்கம், வாய்திறந்து கேட்க மானம் வலிக்கின்றது. வயிறு எரிகின்றது. உயிரை விடுவதற்கும் உபாயம் தெரியவில்லை. இவ்வுடம்பை ஏன் எடுத்தோம் என்று மனமும் முகமும் சோர்ந்து, சொல்வதற்கு நாவெழாமல் உற்பாத சொப்பனம் கண்ட ஊமைபோல் என்று மனம் மருகுகின்ற மானிகளாகிய ஜீவர்களுக்கு.

… ஆகியோருக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றுவித்தல் அவசியம் என்கிறார் வள்ளலார்.மனிதர்களுக்கு மட்டுமல்ல. மிருகங்கள், ஊர்வன, பறப்பன மற்றும் தாவரங்களுக்கும் பசியுண்டு. அவற்றின் பசியையும் போக்க வேண்டும் என்று வள்ளலாரின் கருணை, மனிதகுலத்தையும் தாண்டி விரிவடைகிறது.

தன்னுடைய காலம் தாண்டியும் அன்னதான இயக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும், அதற்கு ஒரு ஸ்தாபனம் அமைத்தல் வேண்டுமென திட்டமிட்டார்.சன்மார்க்க சங்கத்தை நிறுவி, இரண்டு ஆண்டுகள் ஆன பிறகு, மக்களின் பசிக்கொடுமையைப் போக்கும் தர்மச்சாலை ஒன்றையும் அமைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

அதுவரை கருங்குழி கிராமத்திலிருந்தே இயங்கிக் கொண்டிருந்தவர், இதற்காக வடலூருக்கு இடம்பெயர வேண்டியிருந்தது.வள்ளலார், வடலூருக்கு வருவதற்காக அங்கிருந்த மக்கள் நாற்பது பேர் கையொப்பமிட்டும், ரேகை பதிவிட்டும் தங்களுக்கு சொந்தமான எண்பது காணி நிலத்தை தர்மச்சாலைக்காக வள்ளலாரிடம் கையளித்தார்கள்.

‘சமரச வேத தருமச்சாலை’ என்கிற பெயரில் 23-05-1867ல் வள்ளலார் ஏற்றிவைத்த அடுப்பு எரியத் தொடங்கியது. பல கோடிப் பேரின் பசி தீர்த்த அந்த அடுப்பு, இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. உலகின் கடைசி பசித்தவன் இருக்கும் வரையிலும் அந்த அடுப்பு எரிந்துகொண்டுதான் இருக்கும்.

(அடுப்பு எரியும்)
 
- தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்