பல்கலைக்கழகத்துக்கு பாதிச் சொத்து



‘‘எனது கட்சிக்காரர் தங்கள் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ‘நான் இறந்து விட்டால், என் சொத்தில் பாதி நான் படித்த கல்வி நிறுவனத்துக்கு (தங்களது) போய்ச்சேர வேண்டும்’ என்பது அவரது உயில். இப்போது அவர் மரணமடைந்து விட்ட நிலையில், உயில்படி நடவடிக்கை எடுக்க, தங்களை இப்போது தொடர்பு கொள்கிறேன்...’’ சென்னை பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு வந்த இந்த மெயிலைப் பார்த்ததும் நம்ப முடியவில்லை. துணைவேந்தர் திருவாசகம் தனிக்கவனம் செலுத்தி ஃபாலோ செய்ததில், ஆச்சர்யம், சோகம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி!

‘‘இத்தனை கோடி, இவ்வளவு டாலர் பரிசு கிடைச்சிருக்குன்னு சொல்லி, அதுக்கு இவ்வளவு வரி கட்டுங்க... அப்பத்தான் பணத்தை டிரான்ஸ்பர் பண்ணமுடியும்னு வர்ற மோசடி மெயில்கள் இப்ப நிறைய. அதனால, ஆரம்பத்தில இதை முழுசா நம்பமுடியலை. மெயில்ல குறிப்பிட்டிருந்த சில தகவல்கள் சரியா இருந்ததால தொடர்பு கொண்டோம். சென்னை பல்கலைக்கழகத்துக்கு மட்டுமில்ல... வேறு எந்தப் பல்கலைக்கழகத்துக்குமே இப்படியொரு மாணவர் கிடைச்சிருக்க மாட்டார்’’ என திருவாசகம் குறிப்பிடுகிற அந்த மாணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிந்த ராஜசேகர் ஷாம். அறுபதுகளில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் படித்தவர். திருவாசகத்திடம் பேசியதிலிருந்து...

‘‘கடல் கடந்து போய் வெளிநாட்டுல செட்டில் ஆன ஒருத்தர், தான் படிச்ச இடத்தை மறக்காம வச்சிருக்கார்ங்கிறதே எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். எத்தனை பேருக்கு படிச்ச பள்ளிக்கூடமோ, கல்லூரியோ இன்னும் ஞாபகத்துல இருக்கும் சொல்லுங்க? கிட்டத்தட்ட 50 வருஷங்களைக் கடந்தும் ராஜசேகர் ஞாபகம் வச்சிருந்திருக்கார். இத்தனைக்கும் அவர் படிச்ச ரெக்கார்டுகளைத் தவிர, அவர் எந்த ஊர்ங்கிற தகவல்கூட எங்ககிட்ட இல்லை. இப்ப அந்தத் தகவல்களைத் திரட்டிட்டு இருக்கோம்’’ என்கிற திருவாசகம், ‘‘ஆனால் 68 வயதில் ராஜசேகர் தற்கொலை செய்துகொண்டதுதான் தாங்கமுடியாத சோகம்’’ என்கிறார். ஆம், உயிரை செயற்கையாக மாய்த்துக் கொண்டிருக்கிறார் ராஜசேகர்...

‘‘அமெரிக்கா போனபிறகு உடன் வேலைசெய்த லூசில்லாங்கிற பெண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கார். அவங்களுக்கு குழந்தை இருந்ததாங்கிற தகவல் சரியா தெரியலை. உறவுக்காரங்க போக்குவரத்தும் இல்லைன்னுதான் தெரியுது. அப்படியிருக்கும்போதுதான் லூசில்லாவுக்கு புற்றுநோய்னு தெரிய வந்திருக்கு. என்ன செலவானாலும் பரவால்லன்னு, காப்பாத்த கடுமையாப் போராடியிருக்கார் ஷாம். எதுவும் பலன் கொடுக்காம கடைசியா அந்தம்மா இறந்துட்டாங்க. அதுக்குப் பிந்தைய வாழ்க்கையைத்தான் அர்த்தமில்லாததா நினைச்சிருக்கார் ராஜசேகர். அப்பவே உயில் ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டார்னு சொல்றாங்க. சம்பாதிச்சு சேர்த்து வச்சதுல பாதியை அமெரிக்காவுல உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கும், மீதியை சென்னை பல்கலைக்கழகத்துக்குமாக எழுதி வச்சிருக்கார். அதைக் கொண்டு சேர்க்கறதுக்கான எல்லா வேலைகளையும் பக்காவா முடிச்சு வச்சிட்டு, ஒரு நைட்டுல அவரே உயிரை மாய்ச்சிருக்கார்’’ என்கிறார் திருவாசகம்.

ராஜசேகரின் பாதிச் சொத்தாக ரூ.18 கோடி கிடைத்திருக்கிறது சென்னை பல்கலைக்கழகத்துக்கு. அமெரிக்கச் சட்டப்படி, அதில் பாதியை அரசுக்கு வரியாகக் கட்டிவிட வேண்டுமாம். ‘லாப நோக்கில்லாமல் மக்களுக்கு கல்வி வழங்கும் ஒரு நிறுவனம் இது’ என்று தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார்கள் பல்கலைக்கழகத் தரப்பில். நீண்ட விசாரணைக்குப் பிறகு அதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிகாரிகள், பணத்தை முழுதாக எடுத்துச்செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.

‘‘வளர்ந்திட்டிருக்கிற நிலையில பல்கலைக்கழகத்துக்கு பல தேவைகளுக்காக நிறைய நிதி தேவைப்படுது. அப்படியொரு சூழல்ல இப்படியொரு தொகை கிடைச்சது, எங்களுக்கெல்லாம் பெரிய சந்தோஷம். இந்தப் பணத்தை மாணவர்கள் நலனுக்காக செலவழிக்கணும்னு உயில்ல சொல்லியிருக்கார் ஷாம். இன்னிக்கு நிலையில எங்க மாணவர்களுக்கு விடுதிகள்தான் தேவையானதா இருக்கு. காசோலை வந்த அன்றே வேலைகளை ஆரம்பிச்சிட்டோம். தரமணியில பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்துல அஞ்சு விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டியாச்சு. அதுல வெளிநாட்டு மாணவர்கள் தங்கிப் படிக்கப் போற விடுதிக்குப் பேரு, ‘ராஜசேகர் ஷாம் அரங்கம்’!’’ - நெகிழ்கிறார் திருவாசகம்.

- அய்யனார் ராஜன்