ராசிபலன்



மேஷம்

சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறாருங்க, உங்களுக்கு சாதகமா இருக்கற சுக்கிரன். கணவன் - மனைவிக்குள்ள கருத்து வேறுபாடு இருக்காதுங்க. பிள்ளைங்க பெருமையையும், சந்தோஷத்தையும் தருவாங்க. 11, 12 ரெண்டு நாள்லேயும் சந்திராஷ்டமம் நடக்குதுங்க; அதனால எந்த அவசர முடிவையும் எடுக்க வேண்டாங்க. உள்காய்ச்சலால வாய் கசக்கும். வியாபாரத்துல போட்டியாளர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பீங்க. உத்யோகத்துல சக ஊழியர்களோட வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கும். குலதெய்வக் கோயிலுக்குப் போய் வாங்க; குறையின்றி வாழ்வீங்க.


ரிஷபம்
 
ஏற்கனவே இழுபறியான விஷயங்கள்லாம் இப்ப டக், டக்குனு முடிவுக்கு வருதா, அதுக்கு லாப வீட்ல குரு நிற்கறதுதாங்க காரணம். குடும்பத்தில் கலகலப்பு சூழுமுங்க. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதரியுடனான மனத்தாங்கல் நீங்கிடும். பசியின்மை, வயிற்று வலின்னு உபாதை வருமுங்க. 13, 14, 15ந் தேதி நண்பகல்வரை சந்திராஷ்டமம் நடக்கறதால கோபம், டென்ஷன் அதிகமாகும். மனசை இறை வழிபாட்டிற்குத் திருப்புங்க. வியாபாரத்துல பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்துல பாராட்டு பெறுவீங்க. அன்னை காளிகாம்பாளை வணங்குங்க; கவலைகள் கரையும்.


மிதுனம்

உங்களுக்கு எதிராகப் பேசின உறவினரெல்லாம், மனந்திருந்தி அடங்கிடுவாங்க. உங்க திட்டங்களுக்குக் குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்குமுங்க. கையில் பணம் புரளுமுங்க. உடன் பிறந்தோரின் துணையோடு சில விஷயங்களை முடிப்பீங்க. சுக்கிரன் சாதகமாக இருக்கறதால நவீன மின்னணு, மின்சாதனங்கள், புது வாகனம் வாங்குவீங்க. 15ந் தேதி நண்பகல் முதல் 17ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடக்குதுங்க; வீண் விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்க. வியாபாரத்துல திடீர் லாபம் உண்டு. உத்யோகத்துல வேலைச்சுமை குறையும். மகான் ரமணரை வணங்குங்க; மகத்தான திருப்பம் நிகழும்.


கடகம்

ரொம்ப நாளா வாங்க நினைச்சிருந்த பொருட்களை இப்ப வாங்குவீங்க. அதுக்குத் தேவையான பணம் வருமுங்க. குடும்பத்துல சுபநிகழ்ச்சிகள் மனநிறைவாக நடக்குமுங்க. பிள்ளைங்க உங்க யோசனைகளைக் கேட்டு நடந்துப்பாங்க. புதன் சாதகமான வீடுகள்ல போறதால, சகோதர, சகோதரிகள் உறுதுணையா இருப்பாங்க. கைவலி, இடுப்பு வலின்னு உபாதை வருமுங்க. விடுபட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்றிடுவீங்க. பயணங்களால ஆதாயமுண்டு. வியாபாரத்துல பழைய பாக்கிகள் வசூலாகிடும். உத்யோகத்துல உயரதிகாரி பாராட்டுவாருங்க. ஆஞ்சநேயரை வணங்குங்க; ஆனந்தம் குறையாது.


சிம்மம்

கேது வலுவா இருக்கறதால, வெளிவட்டாரத்துல உங்க மதிப்பு கூடுமுங்க. குடும்பத்துல இருந்த சின்னச் சின்ன குழப்பங்கள் எல்லாம் விலகி, இனி மகிழ்ச்சி பொங்குமுங்க. பிள்ளைகளால பெருமையடைவீங்க. வாகனப் பழுதை சரி பண்ணிக்கோங்க; விபத்தைத் தவிர்க்கலாம். வேலைப்பளுவால் முதுகுத்தண்டு வலிக்கும். கண்ணை பரிசோதிச்சுக்கோங்க. வியாபாரத்துல லாபம் அதிகரிக்குமுங்க. உத்யோகத்துல சக ஊழியர்களை அரவணைச்சுக்கிட்டுப் போனீங்கன்னா, சில சாதனைகளைப் புரிய முடியுமுங்க. சிவபெருமானை வணங்குங்க; சிறப்பாக வாழ்வீங்க.


கன்னி

சுக்கிரன் சாதகமா இருக்கறதால புதுப் பொலிவோடு காணப்படுவீங்க. சுபநிழ்ச்சிகளால வீடு களைகட்டுமுங்க. கடன் சுமைகளைக் குறைக்க புதுத் திட்டங்கள் தீட்டுவீங்க. சகோதரிக்கு உங்களோட முயற்சியால திருமணம் ஏற்பாடாகுமுங்க. அரசு அதிகாரிகளோட நட்பும், அதனால சில நேர்வழி அரசாங்க சலுகைகளும் கிடைக்கும். வலது தோள்பட்டையில வலி தெரியுதுங்க; சளித்தொந்தரவும் இருக்கும். வியாபாரத்துல பாக்கிகளைப் போராடி வசூலிப்பீங்க. உத்யோகத்துல மேலதிகாரி பாராட்டுவாருங்க. முருகப்பெருமானை வணங்குங்க; அகத்திலும், புறத்திலும் அழகு கூடும்.


துலாம்

ஆடம்பரச் செலவுகளைக் குறைச்சு சேமிக்கத் தொடங்குவீங்க. குடும்பத்துல அமைதி நிலவுமுங்க. பிள்ளைங்க பெருமை தேடித் தருவாங்க. செவ்வாய் வலுவா இருக்கறதால வெளிவட்டாரத்துல மதிக்கப்படுவீங்க. தாயாரின் உடல்நலம் தேறுவதால அவருக்கான மருத்துவச் செலவு குறையுமுங்க. வியாபாரத்துல போட்டிகளை, புது உத்தியால சமாளிப்பீங்க. வேலையாட்கள் பொறுப்பா செயல்படுவாங்க. உத்யோகத்துல மேலதிகாரிக்கு நெருக்கமாவீங்க. அலர்ஜி, சருமத்தில் அரிப்புன்னு கோளாறு வருமுங்க. அங்காள பரமேஸ்வரியை வணங்குங்க; அனைத்துமே நன்மையாகும்.


விருச்சிகம்

புதன் சாதகமான வீடுகள்ல போறதால, வெளிப்படையாகப் பேசி வேலைகளை எளிதா முடிப்பீங்க. குடும்பத்தில் அமைதி நிலவுமுங்க. புதிய முயற்சிகள்ல ஆர்வம் உருவாகுமுங்க. மனத்தாங்கலை ஏற்படுத்திய பிள்ளைகள் இனி பொறுப்பாக நடந்துப்பாங்க. தாயார் உடலநலம் சீராகும். உடன்பிறந்தவங்க ஒத்தாசையா இருப்பாங்க. மூட்டுவலி, வயிற்றுவலின்னு கொஞ்சம் அவதிப்படுவீங்க. வியாபாரத்துல தொல்லை தந்துக்கிட்டிருந்த வேலையாட்களை மாற்றுவீங்க. உத்யோகத்துல மேலதிகாரி ஆதரவா இருப்பாருங்க. மகான் ஷீரடி சாயிபாபாவை வணங்குங்க; புது பாதை தெரியும்.


தனுசு

சூரியன் சாதகமாக இருக்காருங்க; அதனால, தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த சில வேலைகள் ஆதாயமான முடிவுக்கு வரும். குடும்பத்துல குழப்பம் இருக்காதுங்க. மகளுக்கு மனதுக்கேற்றபடி திருமணம் ஏற்பாடாகும். மூத்த சகோதரர் சரியான நேரத்துல உதவுவாருங்க. சொத்து விற்பதிலிருந்த முடக்கம் நீங்கிடுமுங்க; வேற யாரும் பாத்யதை கோரமாட்டாங்க. பழைய வாகனத்தை மாற்றி, புது வாகனம் வாங்குவீங்க. வியாபாரத்துல புது முதலீடுகளைச் செய்வீங்க; பழைய சரக்குகளையும் விற்றிடுவீங்க. உத்யோகத்துல போராட்ட நிலை மாறி சுமுகமாகும். சுவாசக் கோளாறு, ரத்த அழுத்த பிரச்னைன்னு வரும். நந்தி பகவானை வணங்குங்க; நன்மைகள் அணிவகுக்கும்.


மகரம்

புதன் வலுவான வீடுகள்ல சஞ்சாரம் செய்யறதால, மனசில் இருந்துவந்த குழப்பங்கள் விலகி, தெளிவு பிறக்குமுங்க. கையில் தேவையான அளவு பணப்புழக்கம் இருக்குமுங்க. அதனால செலவை சமாளிச்சுடுவீங்க. கூடப்பிறந்தவங்க உங்க சூழ்நிலையை அனுசரித்து உதவுவாங்க. குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீங்க. பிள்ளைகளோட வருங்காலத்துக்காக சேமிப்பீங்க. புண்ணியதலங்களுக்குப் போய்வருவீங்க. தலைசுற்றல், வயிற்றுக் கோளாறுன்னு வருமுங்க. வியாபாரத்துல விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வீங்க. உத்யோகத்துல திறமையை நிரூபிச்சு மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீங்க. தட்சணாமூர்த்தியை வணங்குங்க; தகுதிகள் உயரும்.


கும்பம்

எதிர்பார்த்த இடத்துலேர்ந்து எதிர்பார்த்த உதவிகள், அதிக முயற்சி செய்யாமலேயே கிடைக்குமுங்க. குடும்பத்தாருடன் கலகலப்பாகப் பேசி மகிழ்வீங்க; அவங்களோட உல்லாசப் பயணமும் மேற்கொள்வீங்க. அதேசமயம், ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப் பாருங்க. சுக்கிரன் சாதகமாக இருக்கறதால வெளிவட்டாரத் தொடர்பும் ஆதாயங்களும் அதிகரிக்கும். பொது அமைப்புக்குத் தலைமை ஏற்பீங்க. ரத்த அழுத்தத்தால் தலைசுற்றல், மலச்சிக்கல்னு வரும். வியாபாரத்துல மறைமுகப் போட்டிகள் மறைந்தே போயிடுமுங்க. உத்யோகத்துல குறை சொன்ன உயரதிகாரி, உங்க விசுவாசத்தைப் புரிஞ்சுக்கிட்டு பாராட்டுவார். அய்யனாரை வணங்குங்க; அற்புத வாழ்வு    அமையும்.


மீனம்

புதுப் பொலிவு, மிடுக்கால பிறரைக் கவர்வீங்க. கணவன் - மனைவிக்குள் இருந்த அனாவசிய சந்தேகங்கள் விலகி, அன்யோன்யம் அதிகரிக்குமுங்க. புதன் சாதகமாக இருந்து, பிரபலங்களை நீங்க சந்திக்க வைக்கறாருங்க. இதனால இப்ப மட்டுமில்லாம, எதிர்காலத்துலயும் பல நன்மைகள் காத்திருக்குங்க. அந்த நட்பை முறையாகப் பயன்படுத்திக்கறது உங்க கையிலதாங்க இருக்கு. வியாபாரத்துல புது கொள்முதலுக்கு இடத்தைத் தயார் பண்ணி வெச்சுக்கோங்க. உத்யோகத்துல மேலதிகாரியோட இருந்த மனஸ்தாபங்கள் விலகிடும். மூட்டுவலி, முழங்கால் வலின்னு கொஞ்சம் உபாதை இருக்கும். ராமரை வணங்குங்க; அவதிகள் அணுகாது.