ராசி கோயில்கள்



மகரமும், கும்பமும் சனியை அதிபதியாகக் கொண்ட ராசிகளாகும். இதில் மகர ராசியை சர ராசி எனவும், கும்ப ராசியை ஸ்திர ராசி எனவும் அழைப்பர். மகர ராசியில் பிறந்தவர்கள் சர வெடியைப் போல வெடிப்பார்கள். ஆனால் கும்பத்தில் பிறந்தவர்கள், கொதித்து சட்டென்று அடங்குவார்கள். ‘மகரத்தார் நகரத்தை ஆள்வர்’ என்பது பழமொழி. அதுபோல உங்களில் பெரும்பாலானோருக்கு நல்ல நிர்வாகத்திறன் இருக்கும். கை தூக்கினால் அடிப்பீர்கள். கை கூப்பினால் கட்டிக் கொள்வீர்கள். இதுதான் மகரத்தாரின் அடிப்படை பாலிஸி. சனி எப்போதும் நீதிமான்.

முடிந்த வரையில் பேசிப் பார்ப்பீர்கள். அநியாயவாதி ஒத்துக்கொள்ளவில்லை எனில் தண்டிக்கத் தயங்கவே மாட்டீர்கள். மகரம் என்பது கடல் வீடு. கடலலை எப்படி அடுத்தடுத்து வந்து முட்டுமோ, அதுபோல உங்களின் மனதிற்குள் புதிய எண்ணங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். எப்போதுமே, ‘புது ஐடியா இருந்தா சொல்லுங்க’ என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். இதனால் எளிதில் சோர்வுற மாட்டீர்கள். வாழ்வின் அதலபாதாளத்திற்குப் போனாலும் மறுபடியும் எழுந்து விடுவீர்கள்.

சனி இரக்க சுபாவத்தை அதிகம் கொடுக்கும் கிரகம். அதனால் மனிதநேயத்தோடு செயல்பட விரும்புவீர்கள். அதனாலேயே உங்களைப் பார்த்தவுடனேயே, உங்களிடம் எல்லா குறைகளையும் சொல்ல வேண்டுமென்று பலரும் விரும்புவார்கள். நீங்களும், ‘‘பரவாயில்லை, எதுவாயிருந்தாலும் சொல்லுங்க’’ என்று எத்தனை ரகசியமாக இருந்தாலும் கேட்டுக் கொள்வீர்கள். ‘பிறக்கும்போது என்ன கொண்டுவந்தோம்; போகும்போது என்ன கொண்டு போகப்போறோம்’ எனும் கொள்கை வயதேற வயதேற பலப்படும். வாழ்வின் நிலையாமையைக் குறித்து அதிகம் பேசுவீர்கள்; உணர்வீர்கள். அதனாலேயே நாலுபேருக்கு கொடுத்து உதவுவீர்கள்.

சாம்பாரிலிருந்து சாட்டிலைட் வரை அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். எதுவும் தெரியாததுபோல இருப்பீர்கள். உங்கள் முறை என வரும்போது மட்டுமே விஸ்வரூபம் காட்டுவீர்கள். பொதுவாகவே வேலையிலோ, நிர்வாகத்திலோ கொஞ்சிக் கொண்டிருக்க மாட்டீர்கள். செயற்கைத்தனமாகப் பேசுவது பிடிக்காது.  வீட்டிற்குத் தேவையான எல்லாவற்றையும் மொத்தமாக வாங்கிச் செல்வீர்கள். சில்லறையாக எதுவும் வாங்குவது பிடிக்காது. ஒரு கிலோ, ரெண்டு கிலோ... என்றெல்லாம் எதையுமே வாங்க மாட்டீர்கள்.

அறுசுவை சொட்டச் சொட்ட இருந்தாலும் தனியாக உண்பது பிடிக்காது. பயணித்துக் கொண்டே உண்பது மிகவும் பிடிக்கும். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனும் வாக்கியம் உங்களுக்குப் பிடிக்கும். ரகசியங்களைத் தேக்கி வைக்கத் தெரியாது; எங்கேயாவது ஒரு இடத்தில் எல்லாவற்றையும் கொட்டுவீர்கள். கம்பீரமும் கருணையும் ஒருசேர உங்களிடத்தில் கலந்திருக்கும். உங்கள் குடும்பத்திலேயே உங்களை முரட்டுக் குழந்தை என்றெல்லாம் கொஞ்சுவார்கள். ‘நம்மள நம்பி இருக்கறவங்க எல்லாருக்கும் எல்லாம் சேரணும்’ என்றெல்லாம் லட்சியத்தோடு இருப்பீர்கள். உங்களின் உள்ளுணர்வு எப்போதும் சரியாக இருக்கும். அதுபோல பெரிய மனிதர்களின் திரைமறைவு வேலைகள் உங்களுக்கு உடனே தெரியும். உடனே எதையும் ஒத்துக்கொள்ளாத சந்தேகப் பார்வை இருக்கும்.

இரண்டாம் இடமான தனாதிபதியாக கும்பச் சனி வருகிறது. இதனால் கட்டுக்கட்டாக பணத்தை வைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், திடீரென்று செலவுக்கு காசு எங்கே என தேடுவீர்கள். ஏற்ற இறக்கங்கள் பணத்தைப் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். கஷ்டப்பட்டு வருகிறவர்களுக்கு காசு வேண்டுமெனில் தூக்கிக் கொடுத்து விடுவீர்கள். வாக்கு ஸ்தானாதிபதியாக சனி வருவதால் நாலு வார்த்தை பேசினாலும் நறுக்குத் தெறித்தாற்போலப் பேசுவீர்கள். ‘தெரியாம சொல்லிட்டேன்’ என்பதெல்லாம் உங்களிடம் இருக்காது. மூன்றாம் இடத்திற்கு அதிபதியாக மீன குரு இருப்பதால் இளைய சகோதரர் உங்களைவிட பொறுப்பாக இருப்பார். முயற்சி ஸ்தானமாக மூன்றாமிடம் வருவதாலும் எப்போதும் கடுமையான முயற்சி இருக்கும். பெரிய பெரிய வி.ஐ.பிக்களைச் சந்திப்பீர்கள்.

நான்காம் இடத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், தாய்மேல் அதீதமான அன்பு இருக்கும். ஆனால், படிப்பு, உத்யோகம் என்று ஏதேனும் காரணத்தால் தாயைப் பிரிவீர்கள். உங்களில் பலருக்கு தாயன்பு சிறிய வயதிலேயே இல்லாமலும் போகும். தாயை இழக்கவும் நேரிடலாம். அது உங்கள் சொந்த ஜாதகத்தைப் பொறுத்தது. மேலே சொன்னது கொஞ்சம் பொதுவானது. வாகனத்திற்குரியவராகவும் செவ்வாய் வருவதால் வாகனங்களின் மீது தீராக் காதல் இருக்கும். லேட்டஸ்ட் மாடல் என்ன என்று போய்ப் பார்த்துவிட்டு வந்தால்தான் திருப்தி ஏற்படும்.

உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக ரிஷபச் சுக்கிரன் வருகிறார். எல்லாமே பிள்ளைகளுக்காக என்று வாழ்வீர்கள். நம்பர் ஒன் கல்வி நிறுவனத்தில் படிக்க வைப்பீர்கள். பிள்ளைகளின் குறும்புகளைத் தடுக்காது ரசிப்பீர்கள். அதேபோல தாய்வழி உறவினர்கள் எப்போதும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். அடுத்து ஆறாம் வீட்டுக்கு அதிபதியாகவும், ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாகவும் புதன் வருகிறார். ஆறாம் வீடு எதிரி ஸ்தானத்தைக் குறிக்கிறது. இதற்கு புதன் அதிபதியாக வருகிறார். அவமானங்களைத் தாங்கிக் கொண்டு பெரிய ஆளாக வருவீர்கள். எதிரியால் நன்மைகள் அதிகமிருக்கும். எதிரியின் தூண்டுதலால்தான் நீங்கள் முன்னேறுவீர்கள் என்றும் சொல்லலாம்.

யாராவது ஒரு எதிரி இருந்தால்தான் நீங்கள் பரபரப்பாக வேலை பார்ப்பீர்கள். வழக்கு மூலமாகவும், பிரச்னைகள் மூலமாகவும் உங்களுக்கு சம்பாத்தியம் இருக்கும். போனில் ராங் கால் வரும்போது அவர்கள் நண்பர்களாகவும் மாறுவார்கள். நரம்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், வயிற்றுப் பிரச்னைகள், மூட்டு வலி, வலது உள்ளங்காலில் வலி போன்றவை வந்து நீங்கும்.

ஏழுக்குரியவராக வாழ்க்கைத் துணைவரைப் பற்றிச் சொல்லும் இடத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். வாழ்க்கைத் துணைவர் கலை ரசனைகளோடு திகழ்வார். நிதானம் மிக்கவராகவும், உங்களைவிட யோசித்துச் செயல்படுபவராகவும் இருப்பார். உங்களின் சில வேகமான செயல்பாடுகளை விவேகமாக சமாளிப்பார். வாக்கு சாதுர்யம் அதிகம் இருக்கும். ‘எப்படிச் சொன்னால் நீங்கள் கேட்பீர்கள்’ என புரிந்து அதற்கேற்ப அவர் பேசுவார். எட்டுக்குரியவராக சூரியன் வருகிறார். திடீர் பயணங்கள் அதிகமாக இருக்கும். எதையும் திட்டமிட்டால் உங்களுக்கு சரியாக வராது. திடீர் செயல்கள் வெற்றியளிக்கும். உங்களின் ஒன்பதாம் இடத்திற்கும் புதன் வருவதால் அப்பாவை நேசித்தாலும் எப்போதும் ஒரு உரசல்போக்கு இருந்துகொண்டுதான் இருக்கும்.

பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மத்திம வயதுக்குப் பிறகு சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். நிறையப்பேர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். பணமும் புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ அங்குதான் வேலை பார்ப்பீர்கள். உயர் பதவியில் அமருவீர்கள். சுக்கிரனால் கலைத் துறையோடு எப்போதும் நெருங்கி இருப்பீர்கள். எப்படியேனும் கலைத்துறை அங்கீகாரத்தைப் பெற முயற்சிப்பீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள்.

பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால் மூத்த சகோதரரோடு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். எப்போதுமே கொஞ்சம் விலகித்தான் இருப்பீர்கள். ஆனாலும், அவருக்கு நிறைய உதவுவீர்கள். உங்களால்தான் அவர் அதிக பயனை அடைவார். ‘‘தம்பி எல்லாத்தையும் பார்த்துப்பான்’’ என்று சொல்லும் அளவுக்கு உயர்வீர்கள். அதேசமயம் பங்குதாரர்களோடு தொழில் செய்யும்போது, ‘பேச்சு பேச்சாக இருக்க வேண்டும். பேப்பரில் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்க வேண்டும்’ என்று தீர்மானமாக இருங்கள். கூட்டுத் தொழிலில் வீடு, மனை என்று வரும்போது இன்னும் கவனம் அதிகம் தேவை.

பன்னிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு வருகிறார். இதனால் உங்களின் செலவு எதுவாக இருந்தாலும் அது ஆன்மிகத்திற்காக இருப்பது நல்லது. கோசாலை என்கிற பசு மடம் கட்டுதலோ, பசு மடங்களுக்கு உதவுவதோ நல்லது. அன்னதானம் செய்தல், சாதுக்களை அழைத்து உபசரித்தல் போன்றவற்றை விரும்பிச் செய்வீர்கள். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் ஏதேனும் கோயில்களுக்கோ, மகான்களின் ஜீவ சமாதிகளுக்கோ சென்று வந்தால் எளிதாகத் தீர்த்து விடுவீர்கள். குரு வழிபாடு எப்போதும் உங்களுக்கு ஏற்றது.

பூரண சனி பகவானின் ஆதிக்கத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், உங்களுக்கு திருமால் மீது மாறாத பக்தியிருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனி பகவான் விளங்கினாலும், பெருமாளை வழிபடுவதை மிகவும் விரும்புவீர்கள். அதுமட்டுமல்லாது, கடல் என்பது சனி பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்டது. மகரத்தையே மகர ஆழி & அதாவது மகரக் கடல் & என அழைப்பார்கள். உங்களில் சிலர் கடலைப் பார்த்துப் பேசுவீர்கள். அது ஒரு உயிருள்ள ஜீவன் என்பது போன்று கவித்துவமாக சொல்வீர்கள். பாற்கடல் பரந்தாமனான மகாவிஷ்ணு சயனக்கோலத்தில் கிடந்து சகல பிரபஞ்சத்தையும் ஆள்கிறான். அவன் கிடப்பதே கடல்தான். எனவே சயனக் கோலத்தில் மகாவிஷ்ணு அரங்கனாக சேவை சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவையாகும். அதிலும் திருக்கடல் மல்லை என அழைக்கப்படும் மாமல்லபுரம் கோயில் இன்னும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

புண்டரீக முனிவர் தாமரை புஷ்பங்களைக் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட கோலத்தை வழிபட பக்தியால் தவித்தார். ஒரு கூடை நிறைய பூக்களைப் பறித்து வைத்து கிழக்கு நோக்கிச் செல்கையில், பெருமாள் ஒரு முதியவராக வேடங்கொண்டு இவரிடம் வந்து, ‘ஏதேனும் ஆகாரம் கொடுங்கள்’ என்று கேட்டார். முனிவரும் இதோ வருகிறேன் என உணவு கொண்டுவரச் சென்றார். திரும்ப வந்து பார்க்கும்போது எல்லா பூக்களையும் சூடிக் கொண்டு ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதித்தார். இவ்வாறு சயனத் திருக்கோலத்தில் காட்சி தந்தமையால் ஸ்தலசயனப் பெருமாள் என்கிற திருநாமம் உண்டாயிற்று.

கடலும், பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளும் அருளும் இந்தத் தலத்தை தரிசிக்கும்போது நிச்சயம் உங்களுக்குள் நல்ல மாற்றம் உண்டாகும். பொதுவாகவே சயனக் கோலத்தில் பாற்கடல் பெருமாளாக தரிசனம் தரும் ஆலயங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும். ஸ்தலசயனப் பெருமாளை தரிசியுங்கள். கடலளவு அவனின் கருணையைப் பெற்றிடுங்கள்.
 
அடுத்த வாரம் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4ம் பாதங்களில் பிறந்த அன்பர்களுக்காக...

- முனைவர் கே.பி.வித்யாதரன்