ஆளில்லா கேட்டில் அத்தனை விபத்து...



தடுமாறும் ரயில்வேக்கு தடுக்க வழிகாட்டும் இளைஞர்! நூறு கோடி மக்களை இணைக்கிற மிகப்பிரமாண்டமான இந்திய ரயில்வேயில் இன்னமும் புரிபடாத புதிர், ஆளில்லா லெவல் கிராசிங் விபத்துகள்தான். 74 சதவிகித விபத்துகள் ஆளில்லா ரயில்வே கேட்டில்தான் நடப்பதாகச் சொல்கிறது ரயில்வே அறிக்கை. இதைத் தடுப்பதற்கான எளிய கருவியை உருவாக்கியிருக்கிறார் கேரள இளைஞர்.‘‘சமீபத்துலகூட என் சொந்த ஊர் ஆலப்புழையில ஒரு வெளிநாட்டுத் தம்பதி ஆளில்லா கேட்டுல அடிபட்டு இறந்தாங்க... நான் கண்டுபிடிச்ச கருவியை ஒரு சோதனை முயற்சி செய்திருந்தாக்கூட இந்த விபத்தைத் தடுத்திருக்கலாம். ம்ஹும்.. ரயில்வே முன்வரலை’’ என ஆதங்கப்படும் கிரீஷன், எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியர்.

‘‘ரயில் பாதை கடக்கும் ஒரு குக்கிராமத்துல ஆளில்லா லெவல் கிராசிங்குக்கு பக்கத்திலதான் எங்க வீடு. ஆடு, மாடுகளோடு, ஆளுங்களும் அந்த இடத்துல அடிபட்டுச் சாகறது வழக்கம். ‘ரயில் அடிச்சா, அதுபாட்டுக்குப் போயிடும்... யாரும் கேக்க முடியாது’ன்னெல்லாம் சொல்லக் கேட்டிருக்கேன். விபரம் தெரிய ஆரம்பிச்சதும், இது பத்தி நிறைய யோசிச்சேன். விபத்துச் செய்திகளையெல்லாம் திரட்டி, தடுக்க என்ன செய்யலாம்னு நினைப்பேன். இந்த எண்ணம்தான் எலக்ட்ரானிக்ஸ் படிக்க வச்சது.

படிக்கும்போதே மூணு கருவிகளை உருவாக்கினேன். எதுவும் திருப்தி தரலை. அதையெல்லாம் தூக்கிக் கடாசிட்டு நாலாவதா இப்ப ஒரு கருவியைக் கண்டுபிடிச்சிருக்கேன். இது நிச்சயமா பலன் தரும். ரயில்வேக்குக் கடிதம் எழுதி தகவல் தெரிவிச்சேன். ஏதாவது நல்ல தகவல் வரும்னு நான் எதிர்பார்த்திட்டிருந்த காலத்துலயே மூணு ஆளில்லா கேட் விபத்து, அதுவும் எங்க ஏரியாலயே நடந்திடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு நான் ரயில்வேக்கு அனுப்புன தபால் அப்படியே எனக்கு திரும்பி வந்திடுச்சு. வேறென்ன சொல்றது...’’ & பேச்சில் தொனிக்கும் ஏமாற்றத்தின் நிழலை மறைத்து தொடர்கிறார் கிரீஷன்..

‘‘என்னோட கருவி சென்சார் மற்றும் தண்டவாளத்தில் ரயில் சக்கரம் எழுப்பும் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும். ஆளில்லா கேட்டுகள்ல பொருத்தப்பட்டிருக்கும் இந்தக் கருவிகள் ஒண்ணுக்கொண்ணு இணைக்கப்பட்டிருக்கும். இவற்றை இயக்கறது பக்கத்து ஸ்டேஷன்கள்ல உள்ள ஸ்டேஷன் மாஸ்டர்கள்தான். ஸ்டேஷன்ல ரயில் புறப்படும்போது, அவர் ஒரு பட்டனை அழுத்தினா போதும். உடனே அந்த ஸ்டேஷனுக்கும் அடுத்த ஸ்டேஷனுக்கும் இடையில இருக்கிற எல்லா ஆளில்லா கேட்டுகளும் தானாவே மூடிக்கொள்ளும். ரயில் கடந்து 500 மீட்டர் தூரம் போன பிறகு ஒவ்வொரு கேட்டும் தானாகவே திறக்கும்.

நானே தனியா ட்ராக் போட்டு இதைப் பரிசோதிச்சுப் பார்த்துட்டேன். அதிகபட்சம் ரெண்டாயிரம் கூட செலவாகாத இப்படியொரு கருவியை அமைக்க ரயில்வே கேட்டுக்கிட்டா, தொழில்நுட்பத்தையே தரத் தயாரா இருக்கேன்’’ என்கிறார் கிரீஷன். கிரீஷனின் கருவி குறித்து தென்னக ரயில்வேயில் கேட்டபோது, ‘அவர் எந்த மண்டலத்துல இதுபத்திச் சொன்னார்னு தெரியலை. ரயில்வே அமைச்சகம் அல்லது ரயில்வே போர்டுக்கு தகவல் அனுப்பினால் நிச்சயமா நடவடிக்கை இருக்கும்’ என்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள 35,363 லெவல் கிராசிங்குகளில் பாதிக்கு மேல் ஆளில்லா கேட்டுகள்தான். அவசரமும் அலட்சியமும்தான் இந்த இடங்களில் உயிர்ப்பலிக்குக் காரணங்களாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன. கிரீசனும் அவசரம்தான் காட்டுகிறார், அடுத்த விபத்தையாவது தடுத்து விடவேண்டும் என்கிற அவசரம்!

- அய்யனார் ராஜன்