ரோபோ ரஜினி உருவானது எப்படி? சிலிர்க்க வைக்கும் சி.ஜி.



‘‘உலகத்தரத்தில் சினிமாக்களை உருவாக்கும் முயற்சி இந்தியாவில் தொடங்கிவிட்டது. அந்த வகையில் உருவான முதல்படம் இது’’ - ‘எந்திரனி’ன் இந்தி வடிவமான ‘ரோபா’வைப் பார்த்தவுடன், இயக்குனர் ஷங்கரைக் கட்டிப்பிடித்தபடி நடிகர் அமீர்கான் சொன்ன உணர்ச்சிகர வார்த்தைகள் இவை.
தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டின் எல்லையைத் தாண்டியுள்ள எந்திரனை ‘உலகத்தரத்தில் ஒரு இந்திய சினிமா’ என்று கொண்டாடுகிறது திரையுலகம். இந்திய சினிமா மேங்கிங்கை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியுள்ள இந்தப்படத்தை அங்கம் அங்கமாக அழகு செய்வதற்காக, மூன்று வருடங்களாக தூக்கம் தொலைத்தவர்களில் ஸ்ரீனிவாஸ் மோகனும் ஒருவர்!

எந்திரனின் முக்கிய அம்சமாக சிலாகிக்கப்படும், உலகின் உச்சபட்ச தொழில்நுட்பத்தால் ஆன ‘கிராபிக்ஸ்’ மற்றும் ‘விஷுவல் எபெக்ட்ஸ்’ பணிகளை ஒருங்கிணைத்த நிர்வாகிதான் ஸ்ரீனிவாஸ். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ‘இந்தியன் ஆர்ட்டிஸ்ட் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்’ நிறுவனத்தின் சி.இ.ஓ. ‘சிவாஜி’, ‘மேஜிக் மேஜிக்’ படங்களின் சி.ஜி. பணிகளுக்காக இருமுறை தேசிய விருது பெற்ற ஸ்ரீனிவாஸ், மிக எளிமையாகப் பேசுகிறார்.

‘‘பொதுவா எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் எல்லை தாண்டின ஒரு கனவு இருக்கும். சில ஹாலிவுட் படங்களைப் பாக்கிறப்போ எனக்கும், ‘இந்தியாவுல இதைத்தாண்டி ஒரு படம் பண்ணணும்’னு கனவு வரும். ஆனா, அதுக்குத் தகுந்த ஸ்கிரிப்ட், அந்த ஸ்கிரிப்ட்டுக்கு உயிர் குடுக்கிற ஒரு புரட்யூசர் கிடைக்கணுமே? மனசை அதட்டி அந்தக் கனவை அமுக்கி வச்சிடுவேன். ஷங்கர் சார் எந்திரன் ஸ்டோரியை சொல்லச்சொல்ல திரும்பவும் அந்தக்கனவு மனசை முட்டிக்கிட்டு வெளியில வந்திடுச்சு. ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் சார் புரட்யூசர்னு தெரிஞ்சதும் மனசு நிறைஞ்சுபோச்சு. படபடன்னு வேலையில இறங்கிட்டோம்.

ஷூட்டிங் தொடங்கறதுக்கு ஒண்ணரை வருஷம் முன்னாடியே ஷங்கர் சார், ராண்டி சார், எடிட்டர் ஆண்டனி சார், நான் நாலுபேரும் களத்துல எறங்கியாச்சு. ஷங்கர் சார் சொன்ன ஸ்கிரிப்ட்டை வச்சு 3டியில முழுமையான அனிமேஷன் படத்தை வடிவமைச்சுட்டோம். எடிட்டிங், டப்பிங் வரைக்கும் முடிச்சாச்சு. ஒரு சீனுன்னா அதுக்கு 10 ஆப்ஷன். எது பெஸ்ட்டோ அதை ஸ்பாட்ல முடிவு பண்ணலாம். அந்த அனிமேஷனை காமிச்சு, ‘இதுதான் சீன், இங்கதான் கேமரா இருக்கும்’னு சொல்ற அளவுக்கு தயாரா ஷூட்டிங் போனோம்.

விரல்ல இருந்து புல்லட் வர்றது, ரயில் மேல ஓடுறதெல்லாம் அப்படி வடிவமைச்சுத்தான் ஷூட் பண்ணினோம். இந்த ‘ப்ரீ-விஷுவலைசேஷன்’ ஹாலிவுட் ஸ்டைல். இந்தியாவுக்குப் புதுசு. ஸ்கிரிப்ட் பத்தி நல்லா புரிஞ்சுக்க இது உபயோகமா இருந்துச்சு. அதனாலதான் படத்துல எல்லாரோட பங்களிப்பும் 100 சதவிகிதம் இருக்கு’’ என்கிற இவருக்குச் சொந்த ஊர் விஜயவாடா.  சிறுவயதிலேயே அப்பா இறந்துவிட, அம்மாவின் அரவணைப்பும் 20 வயதில் முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே சகோதரியும் திருமணமாகி சென்றுவிட, அதன்பிறகு எல்லாமே நண்பர்கள்தானாம்.

‘‘டிராயிங்ல ஆர்வம் உண்டு. பிளஸ் 2 முடிச்சவுடனே கம்ப்யூட்டர் கத்துக்கிட்டேன். அனிமேஷன் கத்துக்கிறதுக்காக சென்னை வந்தேன். இந்தியன் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரிச்ச ஒரு விளம்பரப்படத்துக்கு ஒர்க் பண்றதுக்காக நான் படிச்ச நிறுவனத்தில இருந்து என்னை அனுப்பி வச்சாங்க. என் ஆர்வத்தைப் பாத்து இங்கேயே இருங்கன்னு சொல்லிட்டாங்க... ஒரு அனிமேட்டரா வந்த நான் இன்னைக்கு சி.இ.ஓ’’ - அவரது வார்த்தைகளுக்குப் பின்னால் உழைப்பு பளிச்சிடுகிறது.

‘‘விஷுவல் எஃபெக்ட்ங்கிறது படத்தோட ஓவர்ஆல் ஓர்க். ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி ஸ்டோரிபோர்ட் தயாரிக்கிறது, கான்செப்ட் டிசைன் பண்றது, செட் டிசைனிங்... ஷூட்டிங் முடிஞ்சதும் சீனை லேயரா பிரிச்சு மேட்ச் பண்றதுன்னு டைரக்டர், கேமராமேன், ஆர்ட் டைரக்டர், மேக்கப்மேன் எல்லார் கூடவும் உட்கார்ந்து செய்ய வேண்டிய வேலை. ‘எந்திரன்’ல உலகத்தோட பல பகுதிகள்ல இருந்து தொழில்நுட்பத்தை வாங்கியிருக்கோம்.

‘அனிமேட்ரானிக்ஸ்’ நமக்கு ரொம்பப் புதுசு. முகபாவனைகளோட பொம்மைகளை இயக்குற நுட்பம். அதாவது, பொம்மலாட்டத்தோட எலெக்ட்ரானிக்ஸ் வடிவம். ஆங்கிலத்தில ‘பிசிக்கல் பப்பெட்ஸ்’னு எளிமையா சொல்வாங்க. இதுல அமெரிக்காவின் ஸ்டான்விஸ்டன் ஸ்டூடியோ உலகத்தில நம்பர் 1. ‘ஜூராசிக் பார்க்’ தொடங்கி, ‘அவதார்’ வரை டாப்மோஸ்ட் ஃபிலிம்ஸ் அவங்க பண்ணினதுதான். அவங்களோட தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தோம்.
அடுத்து ‘டூம்லைட் ஸ்டேஜ் டெக்னாலஜி’. இதுவும் இந்தியா பார்க்காதது.

இதுவரை ‘சூப்பர்மேன்’, ‘பெஞ்சமின் பட்டன்’, ‘அவதார்’னு மூணு படங்கள்லதான் பயன்படுத்தியிருக்காங்க. முகத்துக்கான ஸ்பெஷல் ஸ்கேனிங் அது. ரஜினி சாரோட முகத்தை ஸ்கேன் பண்ண இந்த தொழில்நுட்பத்தை யூஸ் பண்ணினோம். ஏகப்பட்ட எல்இடி லைட்ஸ். ஒவ்வொரு லைட்டா ஆன் ஆகி போட்டோக்கள் எடுக்கும். எல்லா லைட் ஆங்கிள்லயும் நமக்கு ஃபேஸ் டீடெயில்ஸ் கிடைச்சிடும். அந்த சிஸ்டத்தை கண்டுபிடிச்சவரே இங்கே வந்து ஆபரேட் பண்ணினார். தொழில்நுட்பம்தான் வெளிநாட்டில இருந்து கொண்டு வந்ததே ஒழிய மூளையெல்லாம் நம்மோடதுதான்’’ என்று சிலாகிக்கும் ஸ்ரீனிவாஸ், ஹாலிவுட்டிலும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

‘‘எந்திரன் ஒரு ‘எமோஷனல் சயின்ஸ் ஃபிக்ஷன்’ ஃபிலிம். இப்படி எமோஷனலான ஒரு படத்தை நம்மால மட்டும்தான் எடுக்க முடியும். அதுவும் இந்த மாதிரி ஒரு புரட்யூசர், இந்த மாதிரி ஒரு டைரக்டர்தான் எடுக்க முடியும். ஹாலிவுட்ல செய்யற அதேமாதிரி, 100 சதவிகிதம் பெஸ்ட்டா முடிச்சிருக்கோம். அதுதான் சக்சஸ். என் கேரியர்ல இது ஒரு மிராக்கிள் எக்ஸ்பீரியன்ஸ்’’ என்று சிலிர்க்கிறார் ஸ்ரீனிவாஸ்.

- வெ.நீலகண்டன்