உயிரோடு நான் இருப்பேன்...



தட்டென்று எதுவோ கார் கண்ணாடியில் மோதியது. முன் கண்ணாடி முழுவதும் ரத்தம். விபா நிலைகுலைந்து போனாள். கார் பலமாய்க் குலுங்கி நின்றது.

அடர்த்தியான இருட்டில் வெலவெலத்துப் போய் உட்கார்ந்திருந்தாள். நேரம் இரவு பத்து மணி இருக்கும். செல்போன் திரையைத் தொட்டதும் மெல்லிய வெளிச்சம் கிடைத்தது. தினமும் அவள் ஆபீசிலிருந்து வீடு செல்லும் வழிதான். இந்த இடம் கொஞ்சம் அத்துவானக் காடு போல இருக்கும். மனிதர்களைப் பார்ப்பது அரிது. தூர தூரமாக மரங்களுக்கிடையே புதைந்திருக்கும் காட்டேஜ் வீடுகள்.

கண்ணாடியில் வழியும் ரத்தத்தைப் பார்த்து விபாவின் பதட்டம் இன்னும் அதிகரித்தது. சட்டென்று காரை விட்டு இறங்கி செல்போன் வெளிச்சத்தில் அதை உற்றுப் பார்த்தாள். காரில் அடிபட்டு விலுக் விலுக் என்று கடைசி மூச்சுக்காகத் துடித்துக் கொண்டிருந்த அது மனிதப் பிறவி அல்ல. ஒரு மான் குட்டி.

விபாவுக்கு அப்பாடா என்றிருந்தது. மூச்சு கொஞ்சம் ஆசுவாசம் ஆனது. ‘கவனம்! மான்கள் குறுக்கிடும் இடம்!’ என்ற அறிவிப்புப் பலகையை இதுநாள் வரை ஒரு பொருட்டாகவே கருதியதில்லை. பதற்றம் மெல்லத் தணிந்த பிறகுதான் டிசம்பர் மாதத்து குளிரில் நின்று கொண்டிருப்பது உறைத்தது. விரல் நுனிகள் மரத்துப் போக வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்தாள்.

ஓடிப்போய்க் காருக்குள் ஏறிக்கொண்டாள். நின்றுபோன எஞ்சினை உயிர்ப்பித்து ஹீட்டரை ஆன் செய்ய முயன்றாள். காட்டுப் பூனையின் அனத்தல் போல கரகரவென்ற சத்தம்தான் வந்ததே ஒழிய கார் ஸ்டார்ட் ஆகவில்லை.பதற்றத்துடன் மறுபடியும் கீழே இறங்கிப் பார்த்தாள். இப்போது துடிப்புகள் அடங்கிப் போய் மான் செத்திருந்தது.

காடு. கடும் குளிர். ஸ்டார்ட் ஆகாத கார். காரின் முன்னால் செத்துக் கிடக்கும் சுமார் 100 பவுண்ட் எடையுள்ள மான். அப்படியே கார் ஸ்டார்ட் ஆனாலும் இந்த மானின் பிரேதத்தை அப்புறப்படுத்தாமல், காரின் முன் கண்ணாடியில் கொட்டிக் கிடக்கும் ரத்தத்தைக் கழுவாமல் இங்கிருந்து நகர முடியாது.சற்று முன் ஏற்பட்ட ஆசுவாசம் மெல்ல மறைந்தது. மறுபடியும் இருதயத்தில் தடக்தடக்.இவ்வளவு நேரம் ஆபீஸில் இருந்திருக்கக்கூடாது. எப்போதும் போல் சீக்கிரமே கிளம்பி இருக்க வேண்டும்.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் வேலை பார்க்கிறாள் விபா. பொதுவாக டி.சி.யில் வேலை பார்ப்பவர்கள் சுமார் முப்பது நாற்பது மைல் தொலைவில் உள்ள மேரிலாந்து அல்லது வர்ஜினியாவில் குடியிருப்பார்கள். விபாவும் நாற்பது மைல் பயணம் செய்துதான் வீடு போய்ச் சேர வேண்டும். போகிற வழியில் பெரிய பெரிய வில்லாக்கள், மேன்சன்கள், ஃபார்ம் ஹவுஸ்கள், காடுகள் எல்லாமே உண்டு.

சற்றுமுன் ஆபீஸில் இருக்கும்போது இந்தியாவில் இருக்கும் அவள் தங்கையிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் சொன்ன விஷயம்தான் மெதுவாக அச்சத்தை தூண்டிவிட ஆரம்பித்திருந்தது.அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் இரவு ஏழரை மணி ஆகும் போது இந்தியாவில் விடிந்துவிடும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தங்கை உஷா போனில் கூப்பிட்டுவிடுவாள். பொதுவாக விபாவுக்கு அது இரவு உணவு சமைக்கிற நேரம். சமையல் முடிகிற வரை பேசிக்கொண்டே அன்றைய அமெரிக்க அனுபவம் முழுவதையும் தங்கையிடம் சொல்லி முடித்து விடுவாள்.

இன்றைக்கும் உஷா போன் பண்ணியதும், “என்ன சமைக்கிறே?” என்றுதான் கேட்டாள்.
“இல்லடி. இன்னும் ஆபீஸ்லதான் இருக்கேன்...” என்றதும் எதிர்முனையில் ஓர் ஆச்சரிய மவுனம்.
“அங்கே ராத்திரி எட்டு மணி ஆகப்போகுதில்லே? இன்னும் ஆபீஸ்ல என்ன பண்ற?”

“நாலு நாள் லீவ்ல போறேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒரு ஹில் ஸ்டேஷன்ல கேம்ப்பிங் பண்ண பிளான் பண்ணி இருக்கோம். அதனால நான் செய்ய வேண்டிய முக்கியமான ஒர்க் எல்லாம் முடிச்சு வெச்சிட்டுத்தான் கிளம்பணும். எப்படியும் ஒன்பதரைக்கு மேல ஆயிடும்...”
“கூட யார் இருக்கா?”

“ஒருத்தரும் இல்ல. மொத்த ஆபீஸ்ல நான் மட்டும் தனியா இருக்கேன்...”
“பயமா இல்லையா?”“என்ன பயம்?”“ஒரு பொண்ணு நேரங்கெட்ட நேரத்துல ஆபீஸ்ல தனியா இருக்கிறது பயமா இல்லையா?”
“இது அமெரிக்காடி. உதவின்னு கூப்பிட்டா போலீஸ் உடனே வருவாங்க. இங்க ராத்திரில பெண்கள் ஊர் விட்டு ஊர்… ஏன் ஸ்டேட் விட்டு ஸ்டேட் கூட தனியா கார் ஓட்டிட்டுப் போறாங்க. ஒண்ணும் பயம் இல்லடி...”

“இல்ல அக்கா. பொதுவா நாம அப்படித்தான் நினைக்கிறோம். ஆனா, எந்த நிமிஷம் யாருக்கு என்ன நடக்கும்னு யாராலும் சொல்ல முடியாது. இதை நான் சொல்லல. பிரியங்கா ரெட்டியோட தங்கை சொல்லி இருக்கா...”
“பிரியங்கா ரெட்டியா? யாரது?”

“நேத்திலிருந்து இங்கே இதுதான் பேச்சு. ஹைதராபாத்ல ஒரு வெட்ரினரி டாக்டர் பொண்ணு. ரேப் செஞ்சு கொலை பண்ணிட்டாங்க. ஆபீசை விட்டுக் கொஞ்சம் லேட்டா கிளம்பி இருக்கா. அவளோட டூவீலரை பஞ்ச்சர் ஆக்கிட்டு நாலு ரவுடிப் பசங்க உதவறதா சொல்லி அவளை ஏமாத்தி, பலாத்காரம் பண்ணி, எரிச்சிக் கொன்னுட்டாங்க. சாகறதுக்கு கொஞ்சம் முன்னாடி கூட எனக்கு பயமா இருக்குடின்னு தங்கச்சி கிட்டே ஃபோன்ல பேசியிருக்கா. டிவில ஆடியோ போட்டாங்க. கேட்டா நொறுங்கிப் போயிடுவே...”

விபா அந்த செய்தியை ஆபீஸ் கம்ப்யூட்டரில் பிரவுஸ் பண்ணிப் பார்த்துவிட்டு, கொஞ்சம் கலங்கித்தான் போனாள்: “கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, இது அமெரிக்கா. இன்னும் இங்கே அவ்வளவு மோசமாகலை. ஓரளவு பாதுகாப்பு இருக்கு...”“கவனமா இரு அக்கா. மிருகங்களுக்கு எந்த நாடு என்ன சட்டம் என்கிற கவலையெல்லாம் இல்லை. நம்ம பாதுகாப்பை நாமதான் பார்த்துக்கணும். நடந்ததுக்கு அப்புறம் யோசிச்சு பிரயோஜனமில்லை...”
ஃபோனில் பேசிய நினைவுகளை சட்டென்று உதறிக்கொண்டு கும்மிருட்டான நிகழ்காலத்துக்கு வந்தாள்.

அந்த வெட்ரினரி டாக்டர் ப்ரியங்கா ரெட்டியைப் போலவே நானும் பணி முடிந்து தாமதமாகக் கிளம்பி இப்போது நடுவழியில் மாட்டிக்கொண்டேன். ஜீரோ டிகிரி கடும் குளிர் வேறு. இந்த மான் குட்டியை எப்படி அப்புறப்படுத்துவது? விண்ட் ஷீல்டை மறைத்து வழியும் ரத்தக் கறையை எப்படித் துடைப்பது? காரை எப்படி ஸ்டார்ட் செய்வது?

வானிட்டி பேகைக் கிளறி Roadside assistance நம்பரைத் தேடி எடுத்துக் கூப்பிட முயன்றாள். வருடாவருடம் இதற்கு 100 டாலர் வேறு கட்டிக் கொண்டிருக்கிறாள். அவர்கள் வந்து காரை ஸ்டார்ட் செய்ய உதவுவார்கள் அல்லது எங்கே போக வேண்டுமோ கட்டி இழுத்துக்கொண்டு போய் விட்டுவிடுவார்கள்.

மொபைல் பிரவுசர் ஒரு கேலக்ஸியைப் போலச் சுற்றிக் கொண்டே இருந்தது. எதுவும் லோட் ஆகவில்லை. போன் சிக்னல், டேட்டா சிக்னல் இரண்டுமே சுத்தமாக இல்லை. யாருக்கும் போன் செய்ய முடியாது. குறுஞ்செய்தி அனுப்ப முடியாது.கார் ஏதேனும் இந்த வழியாகப் போனால் நிறுத்தி உதவி கேட்டுப் பார்க்கலாம். அப்படிப் போகிறவன் நல்லவனாக இருக்க வேண்டுமே! அமெரிக்கா சட்டத்துக்கு பயப்படும் தேசம் என்றாலும், அகால வேளையில் ஆளரவமற்ற இடத்தில் பாதுகாப்புணர்வு ஏற்படுமா? இங்கேயும் எத்தனை குற்றங்கள் தினம் தினம் நடக்கின்றன..?

இப்போதைக்கு மனிதர்களை விட இந்த குளிர்தான் மிகப்பெரிய எதிரியாக இருக்கும் போலிருக்கிறது. இன்னும் அரைமணி நேரம் இப்படியே இருந்தால் உடல் நீர் வற்றி, மரக்கட்டையைப் போல விறைத்துப்போய் ஹைபோதேர்மியாவில் இறந்து போக வாய்ப்பு உள்ளது.

எதிர்மறை எண்ணங்களைத் தொலைத்துவிட்டு நம்பிக்கையை வளர்க்க விரும்பினாள். கார் கண்ணாடிக்கு அப்பால் இருந்த இருட்டான பள்ளத்தாக்கில் வெளிச்சம் ஏதாவது தெரிகிறதா என்று தேடினாள். காடு மாதிரி இருந்த மரங்களுக்கு நடுவே புதைந்துள்ள வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் விளக்கு எரிந்தால் அங்கே போய் உதவி கேட்கலாமா? அந்த எண்ணம் தோன்றிய அந்த விநாடியே நோ என்று இன்னொரு மனம்
மறுப்பு தெரிவித்தது.

இந்த நாட்டில் வேளை கெட்ட வேளையில் அடுத்த வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைய முடியாது. சுய பாதுகாப்புக்காக துப்பாக்கி எடுத்துச் சுட்டுக் கொல்வதை சட்டம் அனுமதிக்கிறது. அது மாதிரி நிகழ்ச்சிகள் சர்வசாதாரணமாக நடந்திருக்கின்றன.இன்டர்நெட் இல்லாமல் நொண்டி அடித்துக்கொண்டிருந்த போனையே கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது கறுப்பாய் ஒரு நிழல் தன் மேல் படர்வதை உணர்ந்து சட்டென்று திரும்பிப் பார்த்தாள் விபா. குப்பென வியர்த்தது. ஒரு பெரிய உருவம் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தது.விபாவின் உடல் நடுங்க ஆரம்பித்ததுஅந்த உருவம் டார்ச் ஒளியை அவள் மேல் பாய்ச்சியது. கண்கள் கூச நிமிர்ந்தாள். வெள்ளமாய்க் கொட்டிய டார்ச் வெளிச்சத்தில் ஒன்றும் தெரியவில்லை.  முக்காடு போட்ட ஆஜானுபாகுவான ஓர் ஆள். டொக் டொக்கென்று கண்ணாடி ஜன்னலில் தட்டினான்.

விபாவுக்கு சற்றுமுன் தங்கை உஷா குறிப்பிட்ட அந்தப் பெண் பிரியங்கா ரெட்டி நினைவுக்கு வந்தாள். அதே மாதிரி ஆபீஸில் இருந்து லேட்டாகக் கிளம்பி, அதே மாதிரி தங்கையுடன் கடைசியாகப் பேசி... இல்லை, இது அமெரிக்கா. அவ்வளவு பயப்படத் தேவையில்லை.தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு, தைரியப்படுத்திக்கொண்டு ஜன்னல் கண்ணாடியை மெல்ல இறக்கினாள்.

“ஏதாவது உதவி வேண்டுமா?” என்றான் அவன். குரலில் சிநேகம் இருந்ததாகத்தான் தோன்றியது. “அதோ அந்தப் பள்ளத்தாக்கில் உள்ள வீட்டில்தான் நான் வசிக்கிறேன். விபத்து சத்தம் கேட்டுத்தான் வந்தேன்...”“மான் குறுக்கே வந்து விழுந்து அடிபட்டுருச்சு. கார் வேற ஸ்டார்ட் ஆகல...” அவனுடன் பேசுவதற்காக கண்ணாடி ஜன்னலைக் கொஞ்சமாய் இறக்கியதால் உள்ளே திடுமென நுழைந்த குளிர் அரக்கன் அவளை சில்லென்று தாக்கியது.
“நான் காரை ஸ்டார்ட் பண்ண முயற்சி செய்யவா?”

விபா கவலையோடு யோசித்தாள். ஆபத்தை வலிய உள்ளே வரவழைத்து உட்கார வைக்கிறோமோ? போன மாதம் சிக்காகோ யுனிவர்சிட்டியில் மருத்துவம் படிக்கும் இந்தியப் பெண்ணை ஒருவன் காருக்குள் வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்த செய்தியும் கூட இப்போது ஞாபகத்துக்கு வந்தது. இது மட்டும் உத்தம தேசம் இல்லை.

இருட்டுக்குள் வெண்ணிறப் பற்கள் தெரிய அவன் சிரித்தான்: “உனக்கு இப்ப வேற வழி இல்ல. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா இந்த குளிரில் விறைச்சு செத்துப் போயிடுவே. இந்த நேரத்தில், குளிர் காலத்தில் இந்தப் பகுதியில் சுத்தமா ஆள் நடமாட்டம் இருக்காது. உன்னோட அதிர்ஷ்டம், சத்தம் கேட்டு நான் வந்திருக்கேன்...”

(அடுத்த இதழில் முடியும்)

அஜித்

உணவை ருசித்து, ஆனால் அளவாகச் சாப்பிடுவார். நண்பர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் அவர்களுக்கு நளபாகம் செய்வதெல்லாம் அஜித்தான். கூடவே நண்பர்களின் வீட்டு உறுப்பினர்களுக்கும் கொடுத்து அனுப்புவார்.

விஜய்

நகைகளின் மீது ஈர்ப்பே கிடையாது. முன்பு ஒரு நெளி மோதிரம் விரலில் மிளிரும். இப்போது அதுகூட இல்லை. கையில் மட்டும் இயேசுவின் புகழ்பாடும் சிலுவை கொண்ட ப்ரேஸ்லெட் அணிந்திருக்கிறார்.

சூர்யா

தங்கை பிருந்தா மீது அலாதி பிரியம். அவுட்டோர் போய் திரும்பினால் கொஞ்ச நேரத்தில் தங்கை வீட்டுக்கு விசிட் அடித்து விடுவார் சூர்யா.

விக்ரம்

ஷூட்டிங்கிற்காக அவுட்டோர் போகும்போது அந்தந்த ஏரியாவில் உள்ள ரசிகர்களைச் சந்திக்கப் போய்விடுவார். விக்ரமின் திடீர் வருகையில் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போவார்கள்.

சத்யராஜ்குமார்