குடி DRUGS சிகரெட்...என கெடுத்த உடலை இன்று மீட்டிருக்கிறேன்! MILIND SOMAN புதிய அவதாரம்!



மிலிந்த் சோமன் தெரியுமா என்று 80களில் பிறந்த பெண்களைக் கேட்டுப்பாருங்கள். வெட்கமும் மகிழ்ச்சியும் குறுகுறுப்புமாய் பழைய நினைவுகளில் மூழ்கி, விழி விரிய அவரைப் பற்றிப் பேசுவார்கள். 90களில் இந்தியாவை கலங்கடித்த ‘மேட் இன் இந்தியா’ என்ற அலிஷா சினாயின் ஆல்பத்தில், இளவரசியின் கனவில் வரும் ராஜகுமாரன் மிலிந்த் சோமன்தான்!

அந்தப் பாடல் மூலம் அன்றைய இந்தியாவின் இளம்பெண்களது தூக்கத்தையும் சேர்த்தே கெடுத்தார் மிலிந்த் சோமன். மாடலிங் என்ற துறை இந்தியாவில் மெல்ல வளர்ந்து கொண்டிருந்த நாட்களில் உலகப் புகழ்பெற்ற சூப்பர் மாடலாகக் கலக்கிக் கொண்டிருந்த சோமன், பின்னர் பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்தார். கட்டான உடல்வாகு கொண்ட ஆணழகன் பாத்திரங்களில் அசத்தினார்.
இதெல்லாம் பழைய எஸ்டிடி. இப்போது எதற்கு என்கிறீர்களா?

சோமன் இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். யெஸ்! தலைப்பில் உள்ள மேட்டரேதான். மாடலிங், சினிமா என கலக்கிக் கொண்டிருந்த சோமன் இப்போது ஸ்போர்ட்ஸ் சாம்பியன். நீச்சல், விளையாட்டு என்று சிறுவயது முதலே உடலை வலுவாக்கும் விஷயங்களில் ஆர்வமாக இருந்த சோமன், நடிகரான பின் அதற்கெல்லாம் இடைவெளி விட்டிருந்தார். பிறகு, தனது 38வது வயதில் மாரத்தான் ஓடத் தொடங்கிய கதையை சுவாரஸ்யமாக இப்போது பகிர்ந்திருக்கிறார்.

ரூபா பய் என்பவர் மிலிந்த் சோமன் பற்றி ‘மேட் இன் இந்தியா’ என்ற பெயரில் ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில்தான் தன்னுடைய இந்த ஸ்போர்ட்ஸ் காதல் பற்றியும் மாரத்தான் பற்றியும் மனம் திறந்திருக்கிறார் சோமன்.

இனி அவரின் சொற்களிலேயே இதனைக் கேளுங்கள்…

மும்பையின் பரபரப்பான விடிகாலை அது. அரபிக் கடலை சூரியன் பொன்னாக்கியபடி உதித்துக் கொண்டிருந்தது. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் பழங்கால ஆங்கிலேயர் கட்டடத்தின் மணிக்கூண்டில் மணி 6:40. என் வாழ்வின் மிக முக்கியமான போட்டி ஒன்று இன்னமும் ஐந்து நிமிடங்களில் தொடங்கப்போகிறது.

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட வேண்டும் என்பது என் எட்டு வயதில் மனதில் உதித்த கனவுகளில் ஒன்று. ஆனால், அதை முயன்றதே இல்லை. நடப்பதையும் ஓடுவதையும் சிறு வயதிலிருந்தே தவிர்த்தே வந்திருக்கிறேன். இதோ இப்போதுதான் என் 43வது வயதில் ஒரு முழுமையான மாரத்தான் ஓடப்போகிறேன். நான் இந்த இடத்துக்கு வந்து சேர 35 வருடங்கள் ஆகியிருக்கின்றன.

ஓட்டப் பயிற்சிதான் கிடையாதே தவிர இளமையில் நீச்சல் எனக்கு மிக விருப்பமான விஷயம். புவியீர்ப்பு விசையைவிட்டு நழுவிச் செல்லும் அந்த விளையாட்டு எனக்கு அளவில்லாத ஆனந்தத்தைக் கொடுத்தது. அதனால் அதில் திளைத்தேன். ஆனால், அப்போதுகூட வார்ம் அப் செய்வதற்காக, நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சிகளைத் தவிர்த்திருக்கிறேன். தேசிய நீச்சல் சாம்பியன், சூப்பர் மாடல், பாலிவுட், டிவி நடிகர் என என்னென்னவோ புதுப் புது அவதாரங்கள் எடுத்த போதும் ஓட்டப் பயிற்சி மட்டும் மேற்கொள்ளவே இல்லை.

2003ம் ஆண்டில் ஒருநாள் அம்மாவுடன் வீட்டில் இருந்தபடி செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு செய்தி என்னை உடனடியாகக் கவர்ந்தது. ப்ரோகேம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் ஸ்போர்ட்ஸ் உலகில் பிரபலமானது. அது, அப்போது நியூயார்க், லண்டன், பாஸ்டன் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து இந்தியாவின் பெரிய நகரங்களிலும் ஒரு மாரத்தான் போட்டியைத் தொடங்கலாம் என்ற திட்டத்தில் இருந்தது.
அது அப்போது ஸ்டேண்டர்ட் சாட்டர்டு மும்பை மாரத்தான் (SCMM) எனப்பட்டது. இப்போது அதை டாட்டா வாங்கிய பிறகு டாட்டா மும்பை மாரத்தான் எனப்படுகிறது.

அந்த நிறுவனம் ஒவ்வொரு ஜனவரி மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மும்பையில் ஒரு மாரத்தான் நடத்த முடிவு செய்திருந்தது. அதன் விளம்பரம்தான் நான் செய்தித் தாளில் பார்த்தது. ஒரு பழைய நினைவை, ஆசையை அது கிளறிவிட்டது போல் தோன்றியது. என் வாழ்வு இப்போது திருப்தியாகவே போகிறது. ஆனால், ஏதும் சுவாரஸ்யம் வேண்டுமே என நினைத்தேன். அது ஏன் இந்த மாரத்தான் மூலம் கிடைக்கக் கூடாது என்று தோன்றியது. நான் அதில் கலந்துகொள்வதென முடிவெடுத்தேன்.

தொடக்கத்தில் அரை மாரத்தானை முடிப்பது என்று முடிவெடுத்தேன். என் உடலை நம்பினேன். முறையான பயிற்சி, சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்து ஆகியவை வேண்டும் என்று நினைத்தேன். ஏற்கெனவே நீச்சல் பயிற்சி இருந்ததால் இந்தத் தேவைக்கு ஏற்ப உடலை வளைப்பதில் தேர்ச்சி கொண்டேன். நான் என் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஓடுவதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டியதுதான் அவசியம்.

நான் முழுமையாக மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றேன். என் சினிமா பணிகளுக்கு இடையேதான் இதை மேற்கொண்டேன். அந்த நேரத்தில் ‘ஜுர்ம்’ என்ற இந்தி த்ரில்லர் படம் ஒன்றில் நடிப்பதற்காக மலேசியாவில் இருந்தேன். படத்தில் பாபி தியோல் நாயகன். லாரா தத்தா, குல் பனாக் இருவரும் நாயகிகள்.

நான் மாரத்தானில் சேரவும் குல்லும் என்னுடன் இணைந்துகொண்டு பெயர் கொடுத்தார். எனவே, நாங்கள் இருவருமாய் பயிற்சி பெற்றோம்.
என் மனம் நான் நினைத்ததைவிடவும் வேகமாகவே பயிற்சிக்கு ஒத்துழைத்தது. நேரமே படுக்கைக்குச் செல்வது, அதிகாலையில் எழுவது, நிறைய தண்ணீர் பருகுவது, சரியான விகிதத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் உண்பது என ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் ஒழுங்குக்குள் நுழைந்தேன்.
தினசரி 10 கி.மீ என்ற இலக்கோடு ட்ரெட் மில்லில் ஓடினேன். இரு வாரங்களுக்குப் பிறகு தெருவில் இறங்கி ஓடத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் சர்வ சாதாரணமாக 15 கி.மீ ஓடும் அளவுக்கு முன்னேறினேன்.

மாரத்தான் ஓட விரும்புபவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். 21 கி.மீ பந்தயத்தில் ஓட வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் தினசரி 21 கி.மீ ஓடக் கூடாது. 15 - 17 கி.மீ மட்டுமே ஓடிப் பயிற்சி பெற வேண்டும். இப்படி ஓடினால்தான் பந்தய தினத்தில் ஓடுவதற்கான ஆற்றலை உடலும் மனமும் தக்கவைத்திருக்கும்.

அந்த முக்கியமான நாளில் நாம் இலக்கை நிறைவுசெய்ய வேண்டும் என்ற ஆவேசத்தில் அட்ரினலின் வெள்ளமாய் பெருகும். அதைக் கொண்டு பேராற்றலுடன் ஓடி ஜனத்திரளை வென்றெடுக்கலாம்.அந்த 2004ம் ஆண்டின் மும்பை மாரத்தான் நாள் மிகுந்த ஒளியோடு என் நெஞ்சில் உள்ளது.
சராசரியான வேகத்தில் 21 கி.மீ தொலைவை இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்களில் ஓடினேன். என்னை நானே பாராட்டிக்கொண்ட தருணம் அது.
ஆனால், அது அத்தனை எளிமையான விஷயமாகவும் இருக்கவில்லை. என்னதான் பயிற்சி எடுத்திருந்தாலும் என் உடலும் மனமும் கொஞ்சம் சோர்வடையவும் செய்தன.

கிட்டத்தட்ட 15 வருடங்களாக பெரிய உடற்பயிற்சிகள் எதையும் மேற்கொள்ளாதவன். தவிர ஒரு நடிகனுக்கேயான ஆல்கஹால், ட்ரக், சிகரெட் போன்ற லாகிரி வஸ்துகளில் தொடங்கி சர்க்கரை நிரம்பிய தேநீர், உறக்கமற்ற இரவுகள், பார்ட்டிகள் வரை உடலை எப்படி எல்லாம் கெடுக்க முடியுமோ அப்படி எல்லாம் கெடுத்து வேறு வைத்திருந்தேன்.

ஆனால், இத்தனைக்கும் பிறகு என் உடல் என்னுடன் இருந்தது. என் சொல் கேட்டது. என்னை சாம்பியனாக்கியது எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த ஜனவரி 2004ல் நான் புதிதாய் பிறந்தேன். அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் SCMM நடத்திய மாரத்தான் போட்டியில் பாதி மாரத்தான் ஓடுவேன். நான் ஓடும் நேரமும் ஒரு மணி நேரம் 39 நிமிடங்களாகக் குறைந்தது.

நான் இதனை தொண்ணூறு நிமிடங்களாக மேலும் குறைக்க எண்ணினேன். அதுதான் இயலவில்லை. அப்போதுதான் என்டிடிவி ஒரு ஐடியாவுடன் வந்தார்கள். ‘மாரத்தான் ஓடுவது எப்படி?’ என்பதுதான் அது. அது மிகவும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியானது. அதன் கடைசி எபி
சோடில் நான் 42 கி.மீ ஓட வேண்டும் என்பதுதான் அந்த ரியாலிட்டி ஷோவின் ஐடியா. அந்த சவாலில் துணிந்து இறங்கினேன்.

அந்த SCMM போட்டியில் 36,000 பேர் கலந்துகொண்டார்கள். அதில் சுமார் 2,000 பேர் முழு மாரத்தான் ஓடுபவர்கள். சிலர் அரை மாரத்தான், சிலர் ஆறு கி.மீ மட்டும். இதைத் தவிர மூத்த குடிமக்களுக்கான சிறிய சுற்றுகள், உடல் ஊனமுற்றோருக்கான குட்டி ஓட்டங்கள் ஆகியவையும் அதில் இருந்தன. அன்றுதான் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்து சுமார் 150 பேர் அகால மரணமடைந்தார்கள். அந்தத் துயரத்தை இன்று நாம் 26/11 என்ற எளிய சொல்லால் குறிப்பிடுகிறோம்.

அன்று நான் உயிரைக் கொடுத்து ஓடினேன். மொத்தமாக அவ்வளவு தூரம் ஓடுவதற்குள் நிஜமாகவே மிகவும் சிரமப்பட்டேன். என் நுரையீரல் கதறியது. என் கால்கள் கெஞ்சின. என் இதயம் துடிதுடித்தது. என் உடல் வியர்வையாய் பெருகியது. ஆனால், மனம் மட்டும் விட்டுவிடாதே என்று சொல்லிக் கொண்டிருந்தது. நான் செல்ல வேண்டிய தொலைவோ இன்னமும் நிறைய இருந்தது. ஒருகட்டத்தில் என் மனம் உடலுக்கு அடிபணிந்தது.
அன்று நான் 30 கி.மீ ஓடினேன்!

ஆமாம்! இது நெகடிவ் கிளைமேக்ஸ்தான். இன்னமும் 12 கி.மீட்டர்கள் மிச்சம் இருக்கின்றன. ஆனால், 30 கி.மீ ஓடிய எனக்கு அதைக் கடக்க இன்னமும் எத்தனை நாட்களாகப் போகிறது? விரைவில் அதை கடப்பேன்!

இளங்கோ கிருஷ்ணன்