ஷேரில் சம்பாதிக்க சிம்பிளான வழிகாட்டி உங்களுக்கு ஒரு பசு மாடு வேண்டும். என்ன செய்வீர்கள்? தமிழ்நாட்டிலேயே பெரிய மாட்டுச் சந்தை எங்கே நடக்கிறது என்று தேடிப் போய் வாங்குவீர்களா... அங்குதான் அதிகமாக மாடுகள் விற்கப்படும், வாங்கப்படும்! அதனால், அங்கே போனால் தேர்ந்தெடுத்து வாங்குவது சுலபமாக இருக்கும் என்று அந்தச் சந்தையைத் தேடிச் செல்வீர்களா..?
இதென்ன தேவையில்லாத வேலை... எந்தச் சந்தையாக இருந்தால் என்ன... நமக்குத் தேவை ஒரே ஒரு மாடு... அதுவும் வழக்கத்தைவிட கூடுதலாக ஒரு லிட்டர் பால் கறக்கும் மாடு. அதை வாங்குவதற்கு அதிகமாக மாடுகள் புழங்கும் சந்தைக்குப் போகவேண்டுமா என்ன? எந்தச் சந்தையாக இருந்தால் நமக்கென்ன... இந்த மாடு கூடுதலாகக் கறக்குமா என்று கேட்டு கண்ணை மூடிக் கொண்டு வாங்கிவிட வேண்டியதுதானே!
எதற்கு இந்த மாடு கதை என்கிறீர்களா... கொஞ்சம் பொறுங்கள்! அந்த மாட்டைக் கொண்டு வந்து பங்குச் சந்தைக்குள் கட்டிவிடுகிறேன்.
சந்தை எப்படி இருந்தால் நமக்கென்ன... நம்முடைய தேவை கொஞ்சம் போட்டால் கூடுதலாக லாபம் தரக்கூடிய பங்குகள். சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நல்ல சிறப்பான செயல்பாட்டைத் தரக்கூடிய பங்குகளாகத் தேர்வு செய்து முதலீடு செய்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம். கறவை மாட்டைப் போல கூடுதலாக ஒரு லிட்டர் கறந்து கொண்டே இருக்கும். கவலைப்படவேண்டியதே இல்லை.
‘கதையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், எந்தப் பங்குகளை வாங்குவது என்று சொல்லக்கூடாதா...’ &இதுதானே உங்கள் கேள்வி. சொல்லலாம். ஆனால், அதைவிட எந்த அடிப்படையில் பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டால், பிறகு யார் தயவும் இல்லாமல் நீங்களே பங்குகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதானே சரியாக இருக்கும்.
பங்குகளைத் தேர்வு செய்வதற்குச் சில அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன. முதலாவது, புதிய நிறுவனங்களைத் தவிர்த்துவிடுங்கள். நாமும் புதியவர்களாக இருந்துகொண்டு நிறுவனமும் புதிதாக இருந்தால் ரிஸ்க் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அந்த ரிஸ்க் நமக்குத் தேவையில்லை. நீண்டகாலமாக சந்தையில் புழக்கத்தில் இருக்கும் நிறுவனமாகப் பார்த்துத் தேர்வு செய்யுங்கள். அத்தகைய நிறுவனங்கள் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து ஸ்டெடியாக நடைபோடும். அதனால், நமக்கு ரிஸ்க் கிடையாது. சந்தை ஏறும்போது இந்த நிறுவனங்கள் தாறுமாறாக ஏறுவதுமில்லை. சந்தை சரியும்போது இவை தடாலடியாகச் சரிவதும் இல்லை.
அடுத்து, சிறிய நிறுவனங்களாகப் பார்த்துத் தேர்வு செய்யுங்கள். அப்போதுதான் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப முதலீடு செய்யமுடியும். முதலீட்டுத் தொகை கொஞ்சமாக இருந்தாலும் நம்மால் திருப்திகரமாக முதலீடு செய்யமுடியும். சந்தை சரிந்தாலும் நம்முடைய மூலதனம் பெரிய அளவில் பாதிப்படையாது. ஆரம்ப கட்டத்தில் முதலீட்டுக்கு மோசமில்லாமல் இருந்தால்தான் உற்சாகமாகச் செயல்படமுடியும்.
மூன்றாவதாக, நாட்டு நடப்பைக் கவனித்து அதைச் சார்ந்துள்ள நிறுவனங்களாகப் பார்த்து முதலீடு செய்யவேண்டும். சில சமயம், அந்த வகை முதலீட்டில் கொஞ்சம் அதிகமாகப் போடவேண்டியிருக்கும். ஆனால், நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். இன்றைய சூழ்நிலையில் கட்டுமானத் துறை, பெட்ரோலியத் துறை, பவர் துறை போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது நிச்சயம் லாபம் தரக்கூடியது.
நான்காவதாக, குழும நிறுவனமா என்பதைப் பார்த்து முதலீடு செய்யலாம். அதாவது ஒரு நிறுவனம் பலவிதமான தொழில்களில் ஈடுபடும். ஒரு தொழிலில் தொய்வு ஏற்பட்டாலும் இன்னொரு தொழிலில் ஏற்றம் பெற்று நிறுவனம் லாபகரமாகச் செயல்படும். நம்முடைய முதலீடும் தப்பிவிடும்.
இதுவே, ஒரே தொழிலில் ஈடுபடும் நிறுவனமாக இருந்தால், அந்தத் தொழில் பாதிப்புக்கு உள்ளானால் நம் முதலீடும் சிக்கிக் கொண்டுவிடும். அந்த ரிஸ்க்கை எடுப்பதற்கு சந்தையில் புழங்கி கொஞ்சம் அனுபவம் வேண்டும். அதை சம்பாதிக்கும்வரையில் பாதுகாப்பான முதலீட்டில் ஈடுபடுவதுதான் நல்லது.
அடுத்ததாக, நிறுவனங்களின் செயல்பாட்டை வைத்து முதலீடு செய்யலாமா கூடாதா என்பதை முடிவு செய்யலாம். என்னதான் பெரிய நிறுவனமாக இருந்தாலும் சில நேரங்களில் நிறுவனத்தின் செயல்பாடு கொஞ்சம் சரியில்லாத நிலைக்குப் போய்விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய முதலீட்டைக் கொண்டுபோய் அதில் போட்டு மாட்டிக் கொண்டுவிடக் கூடாது.
பருவநிலை காரணமாகச் சில நேரங்களில் சில நிறுவனங்களைத் தவிர்க்க வேண்டியதாக இருக்கும். உதாரணமாக சர்க்கரை தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அரைக்கும் காலம், விற்பனைக் காலம் என்று சில கால மாற்றங்கள் இருக்கும். இதில் அரைக்கும் காலத்தில் விலை குறைவாக இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு முதலீடு செய்யவேண்டும்.
இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள். இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு முடிவை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சந்தை ஏறுகிறதே என்று பொதுவாகப் பார்த்துவிட்டு அதை நோக்கி ஓடுவதோ அல்லது சந்தை சரிவில் இருக்கும் நேரத்தில் பதறித் தெறித்து ஓடுவதோ தவறான செயல். ‘சரி, சந்தையில் புழங்கும் பங்குகளில் எவை எவற்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு என்ன அடிப்படையான விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுத்துவிட்டீர்கள். சந்தை இப்போது இருக்கும் நிலையில் இந்த அடிப்படைகள் செல்லுபடியாகுமா...
சந்தை உச்சத்தில் இருக்கும்போது வெறுமே வேடிக்கைதான் பார்க்க வேண்டுமா... அப்போது கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கிறதா...’ - இதுதானே உங்கள் கேள்வி? சின்ன ஹோம் வொர்க்... சந்தை ஏறிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் எந்த நிறுவனங்களெல்லாம் அதிரடியாக ஏறியிருக்கின்றன என்று கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை வைத்து அடுத்த அலசலைப் போடலாம். எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள...காத்திருங்கள்... சொல்கிறேன்!
- சி.முருகேஷ்பாபு