எனக்கு நானே வில்லன்



‘ட்விட்டரு’ம் கையுமாக இருக்கும் ஹீரோக்களில் ஜீவாவும் ஒருவர். பழகிய நபர்களிடத்திலெல்லாம், ‘‘நீங்க ட்விட்டர்ல இருக்கீங்களா..?’’ என்று மறக்காமல் கேட்டு, அதன் பயன்களையும் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். கிட்டத்தட்ட ட்விட்டரின் பிராண்ட் அம்பாஸடர் போல் செயல்
படும் அவரை அதிலிருந்து மீட்க, ‘‘கம்ப்யூட்டர்லயே பேசிக்கிட்டிருந்தா எப்படி, கொஞ்சம் நேர்லயும் பேசுங்க..!’’ என்று இழுக்க வேண்டியிருந்தது.

‘‘நீங்க நினைக்கிற மாதிரி இதிலேயே பொழுதைக் கழிக்க நேரம் இல்லை. கிடைக்கிற நேரத்தை வேஸ்ட் பண்ணாம நண்பர்கள்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன்...’’ என்றவர் இன்றைக்கு பிஸியான கோலிவுட் ஹீரோக்களில் ஒருவர் என்பதை மறுப்பதற்கில்லை. ‘சிங்கம் புலி’, ‘ரௌத்திரம்’, ‘கோ’, ‘வந்தான் வென்றான்’ என்று சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் அவரைப் பிடிப்பதென்றால், அஃப்கோர்ஸ்... ட்விட்டர்தான் ஒரே வழி..! இதில் ‘சிங்கம் புலி’ தீபாவளிக்கு வெளியாக ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

‘‘இது எனக்கு 13வது படம். படத்துக்குப் படம் என்னையே நான் ஜெயிக்கிற அளவுக்கு முன்னேறிக்கிட்டிருக்கேன்ங்கிறது ஆரோக்கியமான விஷயம்தான். அதுவும் ஒரே ஜம்ப்பா போகாம படிப்படியா ஏறிக்கிட்டிருக்கேன். அப்படிப் பார்க்கப்போனா  ‘சிங்கம் புலி’ என்னை அடுத்த கட்டத்துக்குக் கூட்டிப் போகும் படம். ஏன்னா இதுவரை வில்லனா நடிச்சு ஹீரோவானவங்க லிஸ்ட்ல, ஹீரோவா நடிச்சு வில்லனானவங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அந்த லிஸ்ட்ல நான் இடம்பிடிக்கிறேன்.

‘சிங்கமும் நானே, புலியும் நானே’ங்கிற கதையா எனக்கு நானே வில்லன். ஸோ, ஹீரோவும் நான்தான்னு புரியுதில்லையா..? ஆனா கெட்டப்பெல்லாம் பெரிசா மாத்திக்கலை. அப்படி ஆளே தெரியாம மாத்தறதுக்கு இன்னொரு நடிகரே நடிச்சுடலாம். பார்வைக்கு ஒரே மாதிரி தெரிஞ்சாலும், நடவடிக்கைகள்ல நிச்சயம் மாறுதல் இருக்கும். ஒரு ரீல் விட்டுட்டு லேட்டா படத்துக்கு வந்து பார்த்தாலும் எது யார்னு ஈஸியா பார்த்தவுடனே கண்டுபிடிக்கிற அளவிலதான் கேரக்டரைசேஷன் இருக்கும். ஒருத்தன் சிரிக்க வைக்கிற கேரக்டருள்ள லாயர். இன்னொருத்தன் முரட்டு மீனவன். அதனால ரெண்டு பேரோட பாடி லாங்குவேஜ், பழக்கவழக்கங்கள்னு எல்லாத்திலும் மாறுதல் காண்பிச்சிருக்கேன்.

இசையமைப்பாளர் மணிசர்மா, பாடல்கள் நா.முத்துக்குமார், விவேகா, கிராஃபிக்ஸ் வெங்கின்னு டெக்னிக்கலா பலமான டீம் இது. என் படங்கள்ல, முழுக்க கமர்ஷியல் ஹீரோவா என்னை அடையாளப்படுத்தப் போற படம் இது. ஆக்ஷன் காட்சிகள் எப்படி சீட் நுனிக்கு உங்களைத் தள்ளுமோ, அதே போல காமெடிலயும் நீங்க சீட் நுனிக்கு வந்தாகணும். என்கூட சந்தானம் காமெடில கலக்கியிருக்கார். மனசைத் தொட்டுச் சொல்லணும்னா, ‘கோ’ குறுக்கே வராம இருந்திருந்தா நான் நடிச்சதிலேயே அதிக செலவு செய்த பிரமாண்டமான படம் இது...’’

‘‘தமிழ்ல ‘சிங்கம்’ வந்துடுச்சு, தெலுங்கில ‘புலி’ வந்துருச்சு. இது என்ன பில்டப்... ‘சிங்கம் புலி’ன்னு?’’ ‘‘இது அதுக்கெல்லாம் முன்னாலேயே வச்ச டைட்டில் பாஸ்... இந்தக் கதையை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சொன்னப்பவே அதுக்கும் முன்னால வச்ச இந்த டைட்டிலைச் சொன்னார் டைரக்டர் சாய்ரமணி. வீரியமுள்ள ரெண்டு பேர் மோதிக்கிறாங்க. அவங்க கேரக்டர்படி பார்த்தா ஒருத்தன் ராமாயணத்தில வர்ற ராமன், இன்னொருத்தன் மகாபாரதத்தில வர்ற துரியோதனன்ங்கிறதுதான் அவர் சொன்ன லைன். வேணும்னா ‘ராமன் துரியோதனன்’னு வச்சிருக்கலாம். அப்படி வச்சிருந்தா, இதென்ன புராணப்படமான்னு கேப்பீங்க.

சட்டுன்னு புரியற மாதிரி ‘சிங்கம் புலி’ன்னு வச்சோம். மத்தபடி பில்டப்பெல்லாம் நம்மகிட்ட எப்பவுமே கிடையாது. இருக்கிறதிலயே சின்ன ‘ஈ’யா கூட வந்தவன் நான்..!’’ ‘‘ஹீரோயின் திவ்யா ஸ்பந்தனாவாமே..? அப்ப நிறைய அனுபவப்பட்டிருப்பீங்க..?’’ ‘‘எல்லாரும் ஏன் இப்படியே சொல்றீங்க..? எங்களுக்கு எந்த பிரச்னையும் கொடுக்கலை திவ்யா. ஒரு லொகேஷன்ல மூணாவது மாடிலதான் டிரஸ் சேஞ்ஜ் பண்ற ரூம் இருந்தது. டிரஸ் மாத்தணும்னா மாடிக்குப்போய் நிமிஷத்தில மாத்திட்டு வந்துட்டாங்க. கால்கொதிக்கிற மஸ்கட் வெயில்ல நின்னு டூயட்டெல்லாம் பாடி ஆடி நடிச்சுக்கொடுத்தாங்க. அதில சந்தோஷப்பட்ட டைரக்டர் சாய்ரமணி, அடுத்த என் மூணு படத்தில நீதான் ஹீரோயின்னு சொல்லிட்டார். இன்னொரு ஹீரோயினா சௌந்தர்யா இருக்காங்க...’’

‘‘ஓகே... பேசறேன்...’’ என்று நாம் கிளம்பியபோது, ‘‘நான் போன்ல கிடைக்கலேன்னா twitter.com/actorjiiva வந்துடுங்க. நிறைய பேசலாம்...’’ என்றார் ஜீவா.  ட்விங்கிள் ட்விங்கிள் ட்விட்டர் ஸ்டார்..!

- வேணுஜி