வூட்டுல உண்டா வில்லத்தனம்?
ஆரம்பம் தொட்டு இன்று வரை சினிமாவில் எத்தனையோ மாற்றங்கள். வில்லன் பாத்திரத்தைக் கொடூரமாகச் சித்தரிப்பது மட்டும் இன்னும் மாறவே இல்லை. விரட்டும் பார்வையும் மிரட்டும் உருவமுமாக அங்க அசைவுகளிலும் வார்த்தைகளிலும் ரசிகர்களை நடுங்க வைக்க 'ரூம் போட்டு’ யோசிப்பார்களோ என்னவோ? ‘கேமராவுக்கு முன்னாலதான் அப்படி... மனைவிக்காக விட்டுக்கொடுத்துப்போற கேரக்டருங்க நாங்க’, ‘அந்தக் கொடுமைய ஏன் கேட்குறீங்க... நிஜ வாழ்க்கையில நான் ஏதாவது தப்பு செய்தா என் மனைவி அடி பிச்சு எடுத்துடுவா!’ என வில்லன் நடிகர்களின் முரட்டுக்குரல்களை அடக்கி வாசிக்க வைத்த அந்தக் கேள்வி...‘‘வீட்டுக்கார அம்மாகிட்ட உங்க வில்லத்தனம் எடுபடுமா?’’
சுத்தமா எடுபடாது. சினிமாவிலயும் நிஜத்திலேயும் என் இமேஜ் வேற வேற. அவங்க எப்ப சாப்பிடச் சொல்றாங்களோ அப்பதான் சாப்பிடுவேன். டீ எப்ப கிடைக்குதோ, அதுவரை பொறுத்திருப்பேன். சண்டையே எனக்குப் பிடிக்காது. வீட்டுல சண்டை போட்டா நிஜத்துல அடி விழுமே! அந்த வலிகளை எல்லாம் யார்கிட்டேயும் சொல்லாம உள்ளுக்குள்ளேயே அடக்கி வச்சிருக்கேன். வம்பு வளர்த்தோம்னா சிக்கல் நமக்குத்தானே? மீறி சண்டை வந்துட்டா அடி விழப்போறதுக்கு முன்னால அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுடுவேன். நாய், பூனை எல்லாம் பயப்படும் தெரியுமா... அப்படித்தான் நானும் வீட்டுல!
சினிமாவில மிரட்டுற மாதிரி வீட்டுல அரட்ட முடியாது. சாப்பாடு நல்லாயில்லாட்டிக்கூட சண்டை போடுவேன்... புருஷன் பொண்டாட்டினா சண்டை வரத்தானே செய்யும்? ஸ்டார்ட் பண்றது என்னவோ நான்தான். ஆனா, முடிச்சு வைக்கிறது அவ. என்னை அடி பிச்சுப்புடுவா... இதை வெளிப்படையா சொல்றதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அடுத்தவன் பொண்டாட்டிகிட்டேயா சண்டை போட முடியும்? எம்பொண்டாட்டி கிட்டத்தானே அடி வாங்குறேன். மத்தவன்கிட்ட அடிவாங்குறதைவிட இது ஒண்ணும் கேவலம் இல்ல. குடும்பம்னா இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். ம்ஹூம்... இது ஜாலி கேள்வி இல்ல, என்னை உசுப்பேத்தி விடுற வேள்வி!
சினிமாவில் நடிக்கிற மாதிரி நிஜத்திலும் இருக்க முடியுமா என்ன? என் மனைவி என்னை கண்ணும் கருத்துமா பார்த்துப்பாங்க. அவங்க கோபப்படும்போது நான் விட்டுக்கொடுத்துப் போவேன். நான் டென்ஷனா இருக்கும்போது அவங்க பொறுமையா இருப்பாங்க. என் மனைவி அதிகமா படம் பார்க்க மாட்டாங்க. நான் நடிச்ச படங்களையே டிவியில ஒளிபரப்பும்போதுதான் பார்ப்பாங்க. அதுல ஒரு சில படங்களைப் பார்த்துட்டு, ‘என்னங்க... இவ்வளவு கொடூரமா எடுத்துருக்காங்க’ன்னு டைரக்டரைத்தான் குறை சொல்லுவாங்களே தவிர, என்னை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அதனால வீட்டுல நான் ஹீரோ!
கேமரா முன்னாலதான் அப்படி. நிஜத்துல நான் நடக்கும்போது கீழே எறும்பு ஊர்ந்தாக்கூட மிதிக்காம போயிடுற கேரக்டர். அப்படி இருக்கும்போது மனைவியை கஷ்டப்படுத்துவேனா என்ன? அனுசரிச்சுப் போயிடுவேங்க. அன்புன்னு ஒண்ணு இருந்தா பிரச்னைக்கே இடமிருக்காது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட மனைவியை அனுசரிச்சுப்போறதுதானே குடும்பத்துக்கு நல்லது! அய்யோ... நிஜத்திலயும் வில்லனா இருந்தா அப்புறம் அவனுக்கு எதுக்கு மனைவியும் குடும்பமும்?
விறைப்பாவும் முறைப்பாவும் நாங்க நடிக்கிறதே அவங்கள நல்லபடியா வாழ வைக்கத்தானே! இதேபோலவே ஹீரோக்கள் எல்லாரும் அவங்க மனைவியோட எப்பவும் டூயட் பாடிட்டே இருப்பாங்கன்னும் நினைக்காதீங்க. குடும்பம்னு இருந்தா சின்னச்சின்ன சண்டைகள் இருக்கத்தான் செய்யும். ஆனா, அதையே மனசுக்குள்ள வச்சிருந்தாதான் பிரச்னை. குடும்பத்தோட இலக்கணமே விட்டுக் கொடுத்துப்போறதுதான். அந்தக் குணம் என்கிட்ட நிறையவே இருக்கு. என் மனைவியிடமும்தான்!
இதுவரை வீட்டுல சண்டையே போட்டதில்ல. வீட்டுக்காரம்மாவுக்கு தண்ணியடிச்சுக் கொடுக்குறதுல இருந்து பல வேலைகளையும் செய்து கொடுப்பேன். இது பயத்துனால இல்லங்க... அவங்க கஷ்டப்படும்போது நாம சும்மா உட்கார்ந்திருந்தா நல்லாவா இருக்கும்? ஷூட்டிங்ல அடிகிடி பட்டு வரும்போது அவங்கதான் மருந்து தடவி விடுவாங்க. எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கிறதால பிரச்னைகள் வர்றது ரொம்ப கம்மி. எப்போதாவது அவங்க என்னை கோபப்படுத்தினா நானே வெளியில எழுந்து போயிடுவேன்!
|