ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 15

அந்த இடத்திலேயே ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் மடிந்தார் என்றுதான் அதுவரை நடந்ததை எல்லாம் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த  ஹிரண்ய வர்மர் நினைத்தார்.கனல் கக்கும் கண்களுடன் வாளை உயர்த்தியபடி சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி நெருங்கியதை யார்  கண்டாலும் அப்படிப்பட்ட முடிவுக்குத்தான் வருவார்கள்.ஆனால், உயர்த்திய வாளை ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் மார்பிலோ தலையிலோ  சிவகாமி இறக்கவில்லை. மாறாக, அவரது பின்னால் நின்றபடி தன் வாளின் நுனியை அவர் கழுத்தில் பதித்தாள். கணத்துக்கும் குறைவான  நேரம் கரிகாலனின் நயனங்களைச் சந்தித்தாள்.

அதில் வெளிப்பட்ட செய்தி கரிகாலனுக்கு நன்றாகவே புரிந்தது. ‘கடந்த காலங்களில் எடுத்ததற்கெல்லாம் எதிராளியை வெட்ட  முற்பட்டதுபோல் இம்முறை செய்யமாட்டேன். என்னைத் தடுத்து நிறுத்தும் பணியையும் உங்களுக்கு வழங்க மாட்டேன்...’‘‘ஆண்களுக்கு இன்பம் அளிக்க மட்டுமே பெண்கள் படைக்கப்படவில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என  நினைக்கிறேன்...’’ ஸ்ரீ ராமபுண்ய வல்லபரிடம் நிதானமாகச் சொன்னாள் சிவகாமி. ‘‘ஒட்டுமொத்தமாக பெண்களைத் தரக்குறைவாக நீங்கள்  பேசியதாகத் தென்பட்டாலும் அது முழுக்க முழுக்க என்னைக் குறி வைத்தது என்பது பிறக்கவிருக்கும் சிசுவுக்கும் தெரியும். என்றாலும்  உங்களை மரியாதையாக அழைக்கவும் நடத்தவுமே விரும்புகிறேன்!

வயது மட்டுமே அதற்குக் காரணமல்ல. ஒரு தேசத்தின் அமைச்சர் பொறுப்பில் நீங்கள் இருப்பதே பிரதான காரணம். நீங்கள் வகிக்கும்  பதவிக்கு உரிய மரியாதையை அளிக்கவேண்டியது பல்லவ மன்னரின் மகளாக நடத்தப்படும் இந்தப் ‘பெண்ணின்’ கடமை. அதிலிருந்து  நழுவுவது பல்லவ நாட்டையே அவமதிப்பதற்குச் சமம். ஒருபோதும் அப்படிப்பட்ட செயலில் இறங்க மாட்டேன்...’’அழுத்தம்திருத்தமாகச்  சொன்ன சிவகாமி, கடைசி வாக்கியத்தை உச்சரிக்கும்போது கரிகாலனை நோக்கினாள். இது தனக்காகச் சொல்லப்பட்டது என்பதை அவனும்  உணர்ந்தான். ‘என்னைக் குறித்து யார் என்ன சொன்னாலும் நம்ப வேண்டாம். பல்லவ நாட்டுக்கு ஒருபோதும் நான் துரோகம் இழைக்க  மாட்டேன்...’

‘‘அளிக்கும் மரியாதையை ஏற்று நீங்கள் அமைதியாக இருப்பீர்கள் என நம்புகிறோம். மாறாக ஏதேனும் செய்ய முற்பட்டால் நாக விஷம்  தோய்ந்த இந்த வாள்...’’ வாக்கியத்தை முடிக்காமல் ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் தொண்டைக் குழியைத் தடவினாள்.அங்கிருந்த  அனைவருக்குமே நிலைமை புரிந்தது. குறிப்பாக சாளுக்கிய போர் அமைச்சருக்கு. உடன் வந்த வீரர்களில் ஒருவர் கூட தன்னைக்  காப்பாற்றும் நிலையில் இல்லை என்பதை உணர அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. என்றாலும் ஒரு நம்பிக்கை இருந்தது. அது  புன்முறுவலாகவும் வெளிப்பட்டது.

கரிகாலனின் கருவிழிகளில் மிதந்த அக்காட்சியை ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் பின்னால் நின்றிருந்த சிவகாமி கண்டாள். ஏளனச் சிரிப்பு  அவள் முகத்தில் பூத்தது. இதன்பிறகு நடந்தது சாளுக்கிய போர் அமைச்சர் கனவிலும் நினைத்துப் பார்க்காதது.சிவகாமியின் ஒரு கரத்தில்  இருந்த வாள், அவரது கழுத்தைத் தடவிக் கொண்டிருக்க... மறுகரத்தை இமைக்கும் பொழுதில் சாளுக்கிய போர் அமைச்சரின் இடுப்புக்கு  கொண்டு வந்தாள். வேட்டியின் மடிப்பில் பதுங்கியிருந்த மூங்கில் குழலை லாவகமாக எடுத்து ஊதினாள்.மறுகணம் நூறுக்கும் மேற்பட்ட  வராகங்கள் ஒருசேர குரல் கொடுப்பது போன்ற ஒலி பிறந்தது.

இதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட சாளுக்கிய வீரர்கள் ஈட்டிகளுடன் சுரங்கத்துக்குள் இறங்கினார்கள். கண் முன் விரிந்த  காட்சியைக் கண்டு திகைத்து நின்றார்கள்!மாகாளியாக வாய்விட்டுச் சிரித்தாள் சிவகாமி. ‘‘நிச்சயம் வெளியில் கொஞ்சம் ஆட்களை  நிறுத்தி வைத்திருப்பீர்கள் என்பதை ஊகித்தேன். எந்த போர் அமைச்சரும், தான் அழைத்து வரும் வீரர்களை பகுதி பகுதியாகப் பிரித்தே  எதிரிகளைச் சுற்றி வளைக்க முற்படுவார் என்பது யுத்த தந்திரத்தின் பால பாடம். நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?!பதுங்கி இருக்கும்  வீரர்களை நீங்கள் அழைக்கும் விதம் என்னவாக இருக்கும் என்பதை அறியவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் ஒரு மூங்கில்  குழாயை எடுத்து ஊதுவதுதான் சாளுக்கிய வீரர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் என்பதை புலவர் தண்டி ஏற்கனவே  சொல்லியிருக்கிறார்!’’

அலட்சியத்துடன் முன்னால் நின்ற சாளுக்கிய வீரர்களைப் பார்த்தாள். ‘‘கட்டளையிட்டால்தான் செய்வீர்களா? கையிலிருக்கும் ஈட்டிகளைத்  தரையில் போடுங்கள். சிறிய தந்தையே... சுரங்கத்தின் ஈசான்ய மூலையில் கொடிகள் படர்ந்திருக்கின்றன. அக்கொடிகளை வெட்டி இந்த  ஈட்டிகளை ஒன்றாகக் கட்டுங்கள். மீதிக் கொடியைக் கொண்டு இந்த வீரர்களின் கால்களைப் பிணையுங்கள்...’’கரிகாலனின் பார்வை  சமிக்ஞையை ஏற்று சிவகாமியின் கட்டளையை ஹிரண்ய வர்மர் நிறைவேற்றினார்.இதற்குள் ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் தோளில் இருந்த  அங்கவஸ்திரத்தை எடுத்து சிவகாமி அவரது கைகளைப் பின்புறமாகக் கட்டினாள். இடுப்பு வேட்டி அவிழாமல் இருக்க அவர் கட்டியிருந்த  சிறிய வஸ்திரத்தை அவிழ்த்து அவர் வாயில் அடைத்தவள், எல்லாவற்றையும் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனை  நெருங்கினாள். அவளும் எதுவும் பேசவில்லை. அவனும் உரையாடலைத் தொடங்கவில்லை. இருவரது கண்களும் பல்வேறு விஷயங்களை  அலசின; ஆராய்ந்தன.

கனைப்புச் சத்தம் கேட்டு இருவரும் திரும்பினார்கள். ஹிரண்ய வர்மர் தன் பணியை முடித்திருந்தார்.அதுவரை அமைதியாக இருந்த  கரிகாலன் இம்முறை அதைக் கலைத்தான். ‘‘பல்லவ நாட்டுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறீர்கள். இதற்காக ஒவ்வொரு பல்லவ  வீரனும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். இந்த ஆயுதங்களைப் பெற்று உரிய இடத்துக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை புலவர்  தண்டி எங்களிடம் ஒப்படைக்கவில்லை. உங்களிடம் அவர் அப்படிக் கூறியிருந்தாலும் எங்களுக்கு இடப்பட்ட கட்டளை வேறு. அதை  நிறைவேற்ற நாங்கள் புறப்படுகிறோம். எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் புலவரால் அனுப்பப்பட்டவர்கள் இங்கு வருவார்கள்.  அவர்களிடம் ஆயுதங்களை நீங்கள் ஒப்படைக்கலாம்...’’‘‘நல்லது கரிகாலா! இவர்களை என்ன செய்வது?’’

‘‘எதுவும் செய்ய வேண்டாம் மன்னா! ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்பட்டதும் சுரங்கத்தை மூடாமல் சென்று விடுங்கள். எப்படியும் சாளுக்கிய  போர் அமைச்சரைத் தேடி வீரர்கள் வருவார்கள். அவர்கள் இவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்வார்கள்...’’சொன்ன கரிகாலன் ஹிரண்ய  வர்மரை நெருங்கி வணங்கினான்.அவனை அள்ளி அணைத்தவர், சிவகாமியைப் பார்த்தபடி அவனிடம் சொன்னார். ‘‘வெற்றி மங்கை  எப்போதும் உன் பக்கத்தில் இருக்கிறாள். செல்லும் காரியம் மட்டுமல்ல... செய்யப் போகும் காரியங்களிலும் ஜெயம் உனக்கே..!’’
தலையசைத்துவிட்டு கரிகாலன் தள்ளி நின்றான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தன் சிறிய தந்தையின் காலைத் தொட்டு சிவகாமி  நமஸ்கரித்தாள்.அவளது தோள்களைத் தொட்டு ஹிரண்ய வர்மர் எழுப்பினார். ‘‘ஸ்ரீ சக்கர நாயகியை உன் உருவில் காண்கிறேன் சிவகாமி!  ஆண்கள் கூட துணிந்து செய்யத் தயங்கும் விஷயங்களை அநாவசியமாகச் செய்கிறாய். உன்னைப் போன்ற வீராங்கனைகள் இருக்கும் வரை  பல்லவ நாடு யாரிடமும் அடிமைப்பட்டு விடாது. சென்று வென்று வா...’’

இருவருக்கும் விடைகொடுத்தபோது அவரையும் அறியாமல் அவர் கண்கள் கலங்கின.கட்டப்பட்ட நிலையில் இருந்த சாளுக்கிய போர்  அமைச்சரிடம் கரிகாலன் சென்றான். ‘‘உங்கள் வீரர்களை அழித்ததும், உங்களுக்குப் பாதுகாப்பாக வந்தவர்களை இப்படிக் கட்டி உருட்டியதும்  நானல்ல. வீரர் கூட்டமும் அல்ல. மாறாக, ‘ஆண்களுக்கு இன்பம் அளிக்கத்தானே பெண்களைப் படைத்திருக்கிறான்..?’ என உங்களால்  ஏளனமாகச் சுட்டப்பட்ட ஒரு பெண்தான் மகத்தான் இந்தச் செயலை தன்னந்தனியாகச் செய்திருக்கிறாள்! இதுதான் பல்லவ வீரம். இதுதான்  தமிழகப் பெண்களின் உரம். மீண்டும் நாம் யுத்தகளத்தில் சந்திப்போம்!’’ சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியேறினான்.

சிவகாமி எதுவும் சொல்லாமல் இரு வாட்களை எடுத்துக் கொண்டு ஸ்ரீ ராமபுண்ய வல்லபருக்கு ஒரு புன்னகையை மட்டும் பரிசாக  வழங்கிவிட்டு கரிகாலனைத் தொடர்ந்தாள்.இருவரும் சுரங்கத்தை விட்டு வெளியே வந்தார்கள். ஒரு வாளை அவனிடம் கொடுத்தாள்.  பெற்று தன் இடுப்பில் அதைக் கட்டிக் கொண்ட கரிகாலன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு தன் உதட்டைக் குவித்து விநோதமான ஒலி  ஒன்றை எழுப்பினான். இரு புரவிகள் புதர்களை விலக்கிவிட்டு அவர்கள் அருகில் வந்தன.இருவருமே தத்தம் குதிரைகளை  நெருங்கினார்கள். ஏறவில்லை. மாறாக அதன் நெற்றியை முத்தமிட்டார்கள். இடுப்பைத் தடவிக் கொடுத்தார்கள். கால்களைப்  பிடித்துவிட்டார்கள்.

புரவிகள் இரண்டும் கூச்சத்தில் நெளிந்து அவர்களது கன்னங்களைத் தடவி தங்கள் அன்பை வெளிப்படுத்தின.அதன்பிறகு இருவரும்  தாமதிக்கவில்லை. தாவி தத்தம் புரவிகளில் ஏறினார்கள்.‘‘வட திசையா?’’ சிவகாமி கேட்டாள்.கரிகாலன் பதிலொன்றும் சொல்லவில்லை.‘‘நம்பிக்கை இல்லையென்றால் சொல்ல வேண்டாம். முன்னால் செல்லுங்கள். பின்னால் வருகிறேன்!’’‘‘வடமேற்குத் திசை!’’ சட்டென்று  கரிகாலன் பதிலளித்தான்.‘‘நல்லது! முன்னால் செல்கிறேன். பின்தொடர்ந்து வாருங்கள். என்னைக் கண்காணிக்கவும் வசதியாக இருக்கும்!’’  சொன்ன சிவகாமி குனிந்து அசுவத்தின் செவியில் எதையோ முணுமுணுத்தாள். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அதுவும் தன்  பிடரியைக் குலுக்கியது.நிதானமான வேகத்துடன் இரு அசுவசாஸ்திரிகளும் ஒருவர் பின் ஒருவராகப் பறந்தார்கள்.

புரவியிடம் தென்பட்ட நிதானம் சிவகாமியின் உள்ளத்தில் இல்லை. மனமென்னும் அக்னிக் குஞ்சில் அவள் தேகம் தகித்துக்  கொண்டிருந்தது. கரிகாலன் இன்னமும் தன்னை நம்பவில்லை என்ற உண்மை அவளை எரித்து எரித்துச் சாம்பலாக்கியது. எந்தவொரு  பெண்ணும் நம்பிக்கைக்குரிய ஆணிடம்தான் தன்னையே ஒப்படைப்பாள். வாழ்க்கைச் சூழல் காரணமாக பரத்தைத் தொழிலை  மேற்கொள்பவளாக அவள் இருந்தாலும் அவளது நேசத்துக்கு உரியவன் என ஒருவன் இருப்பான். அவனிடம் மட்டுமே அவளால் பூரணமாக  ஒன்ற முடியும்.அப்படியொரு தருணம் தங்கள் இருவரது வாழ்க்கையிலும் வந்து போயிருக்கிறது. ஹிரண்ய வர்மர் மட்டும் வராமல்  இருந்திருந்தால் கரை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்திருக்கும்.

இதை கரிகாலன் உணரவில்லை என்றாலும் அவன் தேகம் புரிந்து கொண்டிருக்கும். பூரணத்தை உணரும் சக்தியற்றதா அவன் உடல்..?  அப்படியிருந்தும் சந்தேகத்தின் மேகம் அவனைச் சூழ்ந்திருக்கிறதே...நினைக்க நினைக்க பிரளயகாலத்தின் அலைகளாக அவள் மனம்  சீறியது. இந்த ஆவேசம்தான் சற்று முன் சுரங்கத்தில் ருத்ர தாண்டவம் நடத்தியது. அப்படியும் அடங்காமல் இப்போதும் பொங்குகிறது. ஓர்  அணைப்பு... ‘பரிபூரணமாக உன்னை நம்புகிறேன்...’ என்பதை வெளிக்காட்டும் பார்வை... போதும். பிரளயம் அடங்கிவிடும். ஆனால்,  நடக்குமா..?சிவகாமி நினைத்து முடிப்பதற்குள் கரிகாலனின் புரவி அவளை அணைத்தாற்போல் மறித்து நின்றது.பரவசத்துடன் அவனை  ஏறிட்டாள். எதிர்பார்த்தது எதிரில் இருந்த நயனங்களில் வழியவில்லை. ஏமாற்றம் மூர்க்கத்தை அதிகரித்தது. தன் கால்களால் குதிரையைத்  தட்டி முன்செல்ல கட்டளையிட்டாள்.

‘‘பொறு...’’ அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் முணுமுணுத்த கரிகாலன், அவள் புரவியின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான்.‘என்ன..?’’பதில் சொல்லாமல் அண்ணாந்து பார்த்தான்.சிவகாமியின் பார்வையும் மேல்நோக்கிச் சென்றது.பறவைகள் படபடப்புடன்  கிறீச்சிட்டபடி அங்கும் இங்கும் பறந்தன.சட்டென சிவகாமிக்கு விபரீதம் புரிந்தது. இடுப்பிலிருந்து வாளை உருவினாள்.ஜாடை மூலம்  அவளை முன்னால் செல்லும்படி கரிகாலன் செய்கை செய்தான்.முன்பு போலவே அதே நிதானத்துடன் தன் குதிரையைச் செலுத்தினாள்.  கருவிழிகளில் எச்சரிக்கை குடிகொண்டது. சருகுகளை மிதித்தபடி கரிகாலன் அமர்ந்திருக்கும் புரவியின் குளம்போசையைக் கேட்டாள்.  மெல்ல மெல்ல குளம்புகளின் ஒலி அதிகரித்தது. எனில், நான்குக்கும் மேற்பட்ட புரவிகள் தங்களைப் பின்தொடர்கின்றன. கணக்கிட்ட  சிவகாமி, தான் அமர்ந்திருக்கும் புரவியின் பிடரி ரோமம் கொஞ்சம் கொஞ்சமாகக் குத்திட்டு நிற்பதைக் கண்டாள்.அடுத்த கணம், தன்  வாளை வலதும் இடதுமாகச் சுழற்றினாள்.சாளுக்கிய வீரன் ஒருவன் வெட்டுப்பட்ட தலையுடன் அந்தரத்தில் பறந்தான்!

(தொடரும்)
- கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்