இதுவா பேச்சு சுதந்திரம்?



நியூஸ் வியூஸ்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரையாட முடிகிறது. சமீபத்தில் இதில் இருக்கும் வீடியோ சாட்டிங் வசதியில் தன் கட்சியினரிடம் அவர், “கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வரம்பு மீறிப் பேசாதீர்கள்...” என்று வருத்தத்தோடு கண்டிப்பு காட்டியிருக்கிறார்.

“நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அள்ளித் தெளிக்கும் தான்தோன்றித்தனமான கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது...” என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தை, பாஜக தொடர்புடைய சிலரால் கசக்கியெறியப்பட்டதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளிலும் பாஜகவினர் நாடு முழுக்க தெரிவித்து வரும் கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.

தமிழக அளவில் பார்க்கப் போனால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சமீபகாலமாக தெரிவித்து வரும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகளும்கூட, அக்கட்சியின் மாநிலத் தலைமைக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் தமிழ் மாநிலச் செயலர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இவர்களுக்காக தினமும் மன்னிப்பு கேட்பதற்கே அவருக்கு நேரம் சரியாகப் போகிறது.

“திரிபுரா மாநிலத்தில் ரஷ்யத் தலைவர் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதைப் போல தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலைகள் உடைக்கப்படும்...” என்று டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார். மாநிலத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் இட்டிருந்த இந்த கருத்து கட்சிகள் தாண்டி கடுமையான கண்டனங்களை பாஜகவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது.

இதையடுத்து, அது தன் கருத்து அல்ல... தன் ‘அட்மின்’ தனக்குத் தெரியாமல் பதிவிட்ட கருத்து என்றுகூறி சமாளித்தார். இந்த சர்ச்சையின் வீச்சு அடங்குவதற்குள்ளாகவே எதிர்க்கட்சி பெண் தலைவர் ஒருவர் குறித்து மிகவும் கீழ்த்தரமான, ஆபாசமான கருத்து ஒன்றை உதிர்த்து பல்வேறு தரப்பினர்களின் கண்டனங்களைப் பெற்று வருகிறார். பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டதாலேயே பெண் ஒருவரின் பிறப்பை சிறுமைப்படுத்தும் ராஜாவின் மனப்போக்குக்கு பாஜகவினர் மத்தியிலேயே கூட கடுமையான அதிருப்தியும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

முதல் சம்பவத்திலேயே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அவர் தொடர்ந்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவாரா என்று வேதனையோடு கேட்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள். இந்நிலையில் எஸ்.வி.சேகரும் தன் பங்குக்கு பாஜகவின் இமேஜை காலி செய்யும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவர் ஆபாசமாகத் தெரிவித்திருந்த கருத்து, நாடு முழுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுக்க பத்திரிகையாளர் சங்கங்கள் எஸ்.வி.சேகரின் இந்த ஆபாசமான எண்ணத்துக்கு வன்மையான கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு எதிராகப் போராடிய தமிழகப் பத்திரிகையாளர்களைக் கைது செய்து, அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. தரக்குறைவான நடவடிக்கையில் ஈடுபட்டவரை விட்டுவிட்டு எங்கள் மீது வழக்கா என்று பத்திரிகையாளர்கள் நியாயம் கேட்கவே, இப்போது பதிலுக்கு எஸ்.வி.சேகர் மீதும் சில பிரிவுகளில் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

பிரதமரின் பேச்சை அவரது கட்சியினர் கூட மதிக்காத நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்கள் மீது கட்சியே கூட ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, குடிமக்களுக்கு தந்திருக்கும் 6 உரிமைகளில் கருத்துச் சுதந்திரமும் ஒன்று.

கருத்துச் சுதந்திரம் என்றால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதல்ல. சில வரையறைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவதூறாகப் பேசுதல், நாகரிகமில்லாத கருத்துகளை பொதுவெளியில் முன்வைத்தல் போன்றவை சட்டத்தை மீறக்கூடிய செயல்கள்; அவற்றுக்காக நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் சட்டம். மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களே அவற்றையெல்லாம் மீறக்கூடிய காட்சிகளைத்தான் தமிழகத்தில் இப்போது காண்கிறோம்.

அவற்றுக்கெல்லாம் ‘அட்மின் தவறு’, ‘வன்மையான கண்டனங்கள்’ என்றெல்லாம் அக்கட்சியின் மாநிலத் தலைமை சப்பைக்கட்டு கட்டுகிறதே தவிர, மக்கள் எதிர்பார்க்கும் உரிய நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கே முன்பே திருவள்ளுவர் மக்களுக்கான பேச்சு நாகரிகத்தைக் கற்பித்திருக்கிறார்.

மேலும் புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் என்று ஒருவரது உள்ளத் தூய்மையை அவருடைய பேச்சுதான் வெளிப்படுத்தும் என்றும் சொல்லியிருக்கிறார். இதையேதான் பிரதமரும் வருத்தத்துடன் வலியுறுத்துகிறார். இன்னும் ஒரு படி சென்று குறைந்தபட்ச நடவடிக்கையையாவது தலைமை எடுத்தால், பிரதமர் கட்சியினரிடம் காட்டும் வாய்மை கண்டிப்புக்கு ஓர் அர்த்தமாவது இருக்கும்.

- யுவகிருஷ்ணா