கீரை வளர்ப்பு
ஹோம் அக்ரி - 3
உடல், உள்ளம் - இவை இரண்டும் நன்றாக இருப்பதைத்தான் ‘நலம்’ என்கிறோம். இதில் ஏதேனும் ஒன்று பழுதடைந்தால், நோய் வந்ததாகக் கொள்கிறோம். இவற்றை நலமுடன் காக்க நம் முன்னோர்கள் பலவிதமான பயிற்சி முறைகளையும் பழக்க வழக்கங்களையும் வழங்கியிருக்கிறார்கள். உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சிகள், தியானம் போன்ற மனப்பயிற்சிகள்... இந்த இரண்டையும் நலமாக வைத்திருக்க உதவுகின்றன.
நலக்குறைபாடு வாதம், பித்தம், கபம் (வளி, தீ, நீர்) என்ற குற்றங்களின் அதிகரிப்பாலும், குறைபாட்டாலும் ஏற்படுகிறது. இவற்றை வெயிலில் காய்தல், எண்ணெய் குளித்தல், பட்டினி (விரதம்) இருத்தல் போன்றவற்றால் முன்னோர்கள் கட்டுப்படுத்தினார்கள். இதற்கும் அடுத்த வழிமுறைதான் உணவு முறைகளால் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது. இன்று ‘Functional Food’ என்று சொல்லப்படும் முறையைத்தான் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் அன்றே செய்திருக்கின்றன.
இன்றைய நவீன உலகில் உணவுகளை கீழ்க்கண்டவாறு வழங்குகிறார்கள்: உயிர் கொடுக்கும் உணவுகள் (biogenic foods): முளைவிடும் பயிர்களும், இளங் கீரைகளும், நாம் இதற்கு முன் பகுதியில் பார்த்த நுண் பசுந்தழைகளும் இந்த வகையில் வரும். இந்த உணவு வகைகள் ஒருவித உயிரூட்டும் சக்தியைக் கொண்டிருக்கின்றன; அதை வெளிப்படுத்தவும் செய்கின்றன. நம் உடலிலுள்ள, உடலுக்கு மிகவும் உன்னதமான உணவாக இவை அமைகின்றன.
நம் மொத்த உணவில் நாம் 25% அளவு இந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்களும், உடல் நல ஆலோசகர்களும் அறிவுறுத்துகிறார்கள். உயிர் வளர்க்கும் உணவுகள் (bioactive foods): பச்சைக் காய்கறி களும், பழங்களும் இந்த வகையைச் சார்ந்தவை. இவை வளர்ந்து முதிர்ந்தவையானாலும், உயிர் உள்ளவையாகவே இருக்கின்றன. இவையும் உயிரூட்டும் சக்தி கொண்டவையாக இருக்கின்றன, ஆனால், ‘biogenic’ உணவைக் காட்டிலும் குறைந்த அளவிலான சக்தியைக் கொண்டிருக்கின்றன. இதை நாம் 50% (சமைக்காமல்) உட்கொள்வது நல்லது.
உயிர் குறைக்கும் உணவுகள் (Biostatic foods): நாம் சமைத்து உண்ணக்கூடிய காய்கறிகள், தானியங்கள், கிழங்கு வகைகள், முட்டை, பால் பொருட்கள், பருப்பு மற்றும் கொட்டைகள் (nuts) இந்த வகையைச் சார்ந்தவை. இவை உடலுக்கு ஊட்டத்தைக் கொடுத்தாலும், வயதாகும் காரணிகளை (process of ageing) துரிதப்படுத்துகின்றன.
உயிர் அழிக்கும் உணவுகள் (Biocidic foods): ரசாயன முறையில் சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், உணவு பதப்படுத்தும், உணவு கெடாமல் இருக்க உதவும் ரசாயனப் பொருட்கள், காபி, டீ போன்ற உற்சாக பானங்கள், மதுபானங்கள் இந்த வகையைச் சார்ந்தவை. உயிர் கொடுக்கும் மற்றும் உயிர் வளர்க்கும் உணவுகள், தாமாகவே ஒருசில பிரத்தியேகமான ஊட்டங்களையும் பொருட்களையும் நம் உடலில் உற்பத்தி செய்து கொள்கின்றன.
மற்ற உணவுகளால் உடலில் உற்பத்தியாகும் மாசுக்களையும், கழிவுகளையும் அழிக்கின்றன. தேங்கியுள்ள கழிவுகளையும் வெளியேற்றி, மேலும் கழிவுகள் தங்காமல் இருக்க உதவுகின்றன. மேலும் ஆக்ஸிஜன் போக்குவரத்து, திசுக்களின் சுவாசம் (cell respiration) இவற்றை மேம்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு மற்றும் தானாக குணப்படுத்திக் கொள்ளும் (self healing) திறனை உயர்த்துகின்றன. சென்ற அத்தியாயத்தில் உயிர் வளர்க்கும் உணவுகளில் பிரதானமான நுண் பசுந்தழைகளை எப்படி வளர்ப்பது என்று பார்த்தோம்.
இந்த அத்தியாயத்தில் உயிர் வளர்க்கும் உணவுகளில் முக்கியமான கீரைகள் வளர்ப்பதைப் பற்றிப் பார்ப்போம். முதலில் கீரை வளர்ப்பைப் பழகுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில நேர்மறையானவை; சில எதிர் மறையானவை. நேர்மறை காரணங்கள்: இது மிகவும் எளிதானது. மிகக் குறுகிய காலத்தில் அறுவடை செய்யலாம். தேவையான பொருட்கள் மிகவும் குறைவு. மிகவும் ஆரோக்கியமானது. கிடைக்காததாலும், வேறு காரணங்களாலும், நாம் நல்லது என்று தெரிந்தும், உணவில் தவிர்ப்பது. பல வகையான கீரைகளை சிறிய இடத்தில் பயிரிடலாம்.
எதிர்மறையான காரணங்களைப் பிறகு பார்க்கலாம். என்னென்ன கீரைகளை நாம் வீட்டில் (பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ) பயிரிடலாம்? தண்டுக் கீரை, சிவப்புத் தண்டுக் கீரை, அரைக்கீரை, முளைக்கீரை, பசலை, கொடிப்பசலை, பாலக், தவசிக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை, மணத்தக்காளி, கோதுமைப் புல் (wheat grass), வல்லாரை, புளிச்சக் கீரை (கொங்குரா), புதினா, கொத்தமல்லி, மற்றும் சில.
கீரை பயிரிட என்னென்ன தேவை? முதலில், தினசரி உணவில் கீரை சேர்த்துக்கொள்ளக் கூடிய ஆர்வமும், எண்ணமும், அதற்கான திட்டமும் வேண்டும். பின்னர் கீரை சமைப்பதற்கான சூழலும், குடும்பத்தினருக்கு சுவைத்து உண்ணக்கூடிய மனப் பக்குவமும் வேண்டும். ஏனெனில் பயிரிடுவதே நாம் பயன்படுத்தத்தான். உபயோகிக்காவிட்டால் பயிரிடுவதில் ஆர்வம் போய்விடும். அதனால், நம் தேவைக்கும், ஆர்வத்துக்கும், குடும்பத்தினரின் ஈடுபாட்டுக்கும் ஏற்றாற்போல் நாம் பயிரிடுவதைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
தேவைக்கு ஏற்ப எல்லாவற்றையும் ஒன்றாகவோ அல்லது ஒன்றன் பின் ஒன்றாகவோ பயிரிடலாம். இதுதவிர தேவைப்படும் பொருட்கள்: விதைகள், சரியான மண் - எரு கலவை, தொட்டி அல்லது மண் பரப்பி வைக்கக் கூடிய ஏதாவது ஒரு கலயம். Plastic Tray, சிமெண்ட் பை, அரிசிக் கோணி, ப்ளாஸ்டிக் பைகள் (இவற்றில் ஏதாவது ஒன்று) மற்றும் தண்ணீர் தெளிக்க ஏதுவான ஏதாவது ஒரு உபகரணம்.
இதில், அகத்தி, முருங்கை, தவசிக் கீரைகள் மட்டும் மரம் போல் வளரக் கூடியவை; ஒரு முறை நட்டால், பல மாதங்கள் பலன் தரக்கூடியவை. ஒரு சில கீரைகள் சிறிய செடிகளாக இருந்தாலும், பல முறை அறுவடை செய்யக் கூடியவை. சில கீரைகளை விதைத்து ஒரு முறை மட்டுமே அறுவடை செய்ய முடியும். அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஒவ்வொரு கீரையையும் பயிரிடும் முறையை தனித் தனியாகப் பார்க்கலாம். நாமே வீட்டில் கீரை வளர்ப்பதற்கான எதிர்மறை காரணங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியன. எங்கிருந்து கீரை வருகிறது என்று தெரியாமல் வாங்கி உண்பதும், ஏன்- உணவகங்களில் கீரை உண்பதும் மிகவும் ஆபத்தாக அமைய வாய்ப்பிருக்கிறது. எப்படி? அடுத்த வாரம் பார்ப்போம்!
(வளரும்)
- மன்னர் மன்னன்
முதல் வார கேள்வி பதிலில் ஒருவருடைய மனநிறைவுக்கும், நிம்மதிக்கும் ஒருசில உணவுகள் உதவுவதாக சொல்லியிருந்தீர்கள். அதுபோல ஒருசிலர் குரூரமான, கொடூரமான, அசாதாரணமான, மனிதத் தன்மையற்ற சிந்தனைகளுடன் இருப்பது அவர்கள் உண்ணும் உணவுகளால் இருக்குமா? சமீப காலங்களில் சமூக செயலிகளில் குழந்தைகளையும் இயலாதவர்களையும் தாக்கும் அசாதாரணமான காணொளிகளைக் காணும்போது, இந்தப் போக்கு இயற்கைக்கு அப்பாற்பட்டதாகத் தெரிகிறது. - ரோஷ்னி சந்திரன், காந்தி நகர், வேலூர்.
நிச்சயமாக. ஒரு பொருளைப் பற்றி மட்டும் பார்ப்போம். கார்பரில் என்ற ஒரு பூச்சிக்கொல்லி இந்தவிதமான பாதிப்பை தரக்கூடியது. இது எறும்பு மருந்தாகவும், குப்பைப் புழுக்களை கட்டுப்படுத்தவும், பயிர் பாதுகாப்புக்காகவும் பயன்படுகிறது. பரவலாக கிடைக்கக்கூடிய, அனைத்து தரப்பு மக்களாலும் வீட்டிலும், விவசாயத்திலும் பயன்படுத்தப்பட்ட மருந்து. இதை இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தியாவில் தடை செய்திருக்கிறார்கள். இதனால் பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகள் சுவாசம் மூலமாகவோ, உணவு மூலமாகவோ பாதிக்கப்பட்டால், மிகக் கொடூரமான செயல்களில் வெறித்தனமாக ஈடுபடுகின்றன.
வீட்டுப் பூனை காட்டுத்தனமாக வேட்டையாடி, மிகக்கொடூரமாக நடப்பதைப் பார்க்கலாம். எறும்பு மருந்தாக உபயோகிக்கும்போது நமக்கும் இந்த மருந்து உட்செல்ல வாய்ப்பு இருக்கிறது. மனிதனுக்கும் இதுபோன்று வெறித்தனம் வருவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நமது உணவு முறைகள் அதனாலேயே ராஜஸ, தாமஸ, சாத்விக குணம் கொண்டவைகளாக பகுக்கப்பட்டிருக்கின்றன. விரிவாக இதுகுறித்து அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.
மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க ‘green house’ அவசியமா? காங்கிரீட் தரையிலிருந்து வரும் வெப்பம் செடிகளை பாதிக்குமா? - மேகலா சந்திரன், சென்னை.
நாம் வசிக்கும் பகுதியைப் பொறுத்து பயிரை அதிகபட்ச சூரியக் கதிர்களிலிருந்தும், வேகமான காற்றிலிருந்தும் காப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கும்போது, முழு நாளும் வெயில் படாமல் இருக்குமாறு அமைப்பது பொதுவாக நல்லது. முறையான ‘green house’ இல்லாவிட்டாலும் நேரடி கதிர்களிலிருந்து பாதுகாக்க பந்தல் போல அமைப்பது உதவும். காங்கிரீட் தரையிலிருந்து வரும் வெப்பம் செடிகளை நிச்சயம் பாதிக்கும். அதனால் தொட்டிக்கும் தரைக்கும் இடையில் ஏதாவது ஒன்றை காற்றோட்டம் தரும்படி வைப்பது நல்லது.
இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்கிறார்களே..? - ஆதிலட்சுமி, பெங்களூர்
பெரும்பாலான கீரைகள் எளிதில் செரிக்காதவை. கீரைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதே அதற்குக் காரணம். அதனால் இரவில் கீரை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
காயகல்ப உணவு என்றால் என்ன? நாம் வீட்டிலேயே எப்படி காயகல்பம் செய்யலாம்? - சிவகுமார், காந்தி மார்க்கெட், திருச்சி
இன்று ‘Anti-ageing’ மற்றும் ‘rejuvenation’ என்றெல்லாம் நாம் சொல்வதைத்தான் அன்று காயகல்பம் என்று சொன்னார்கள். உயிரை நீட்டிப்பதற்கும், நீண்ட நாள் இளமையாக வாழ்வதற்கும் காயகல்ப பொருட்களை உண்டார்கள். சித்தர்கள் முக்கியமாக கற்றாழை, கரிசாலை, நெல்லி, சீந்தில், ஆவாரை போன்ற 18 மூலிகைகளை காயகல்ப உணவாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
|