5 அக்கா மாமன்களுக்கு மத்தியில் கார்த்தி வாழ்ந்திருக்கார்!



இத்தனைக்கும் முதல் படம்தான் ‘பசங்க’. சிறுவர்களின் மிகையில் நுழைந்து விடாமல், அவர்களின் சில நல்ல கணங்களை எடுத்துக்காட்டியதில் டைரக்டர் பாண்டிராஜ் எழுதியது புதுக்கவிதை. அடுத்தடுத்து அமோகமான பயணங்கள். இப்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ ரிலீஸுக்கு ரெடி. அப்படியே ரசனையும், சினிமாவின் மீதான காதலும், வாழ்க்கையின் மீதான பரிவுமாக நடந்தது உரையாடல்.

‘‘உணர்ச்சியாக, சந்தோஷமாக சிரிக்கக்கூடிய படமாக ‘கடைக்குட்டி சிங்கத்’தை செய்திருக்கேன். ஸ்கிரிப்ட் எழுதும்போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமா பண்ணும்போதும் அனுபவிச்சேன். அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கேன். மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும். நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கேன். என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகிறது. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை...’’ புன்னகைக்கிறார் பாண்டிராஜ்.

எப்படியிருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’?
அக்காவுக்கும், தம்பிக்குமான அற்புத உறவு பதிவாகியிருக்கு. அதற்கும் முன்னாடி நாம் விவசாயத்தை மறந்து நிற்கிறோம். தினமும் காலையில் வயலில் போய் இறங்கிப் பார்த்திருந்தால் புரியும். ஒரு பூ மலர்ந்து கிடக்கும். நிறைமாத சூலி மாதிரி சாய்ந்து படுத்துக் கிடக்கிற நெற்கதிர்களை பார்ப்பது கொள்ளை அழகு. இதுவரை பார்க்காத ஒரு பூ கண்ணில் படும். பெயர் தெரியாமல் ஒரு பறவை மாதிரி இதுவரை பார்த்தறியாத அழகில் வண்ணத்துப்பூச்சி ஊடாகத் திரியும்.

விவசாயத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் உலகம் மறந்து போகிற உண்மையை எப்படி மறக்க? இப்ப பாருங்க, விவசாயம் நலிவடைந்து போயிருக்கு. இருக்குற ஒரே உண்மை அதுதான். இதில் வருகிற ஹீரோ கார்த்தி கூட விவசாயிதான். இதில் விவசாயம் பின்னணியில்தான் வருது. இது உறவுகளை முன்னிறுத்துகிற கதை. நான் உங்ககிட்டே அன்பு செலுத்துறேன்னா, அதற்குப் பதிலாக வருகிற அன்பு இன்னும் நேர்த்தியாக இருந்தால்தான் மனதை அள்ளும். எழுதித் தீராத உறவுகளின் அருமைகளை இயக்கியிருக்கோம்னு சந்தோஷமாக இருக்கு.

எதுவும் சரியாக வளர்ந்து வெளியே வர ஒரு நேரம் பிடிக்குமில்லையா, அந்த இடத்தில் இருக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’. கிராமத்து மனசும், மணமும் மறக்காத படம். விஞ்ஞானம் வளர்ந்திருக்கலாம். அலைபேசி வந்து நம்மை வேற இடத்திற்கு கொண்டு போயிருக்கலாம். ஆனால், உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேரணும். இந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ உங்களோட இணைஞ்சு மனசைப் பிடிப்பான். நீரின்றி அமையாது உலகுன்னு சொல்வாங்க. அதே மாதிரியான நிஜம், உறவின்றி அமையாது உலகு!

முதல் தடவையாய் கார்த்தியோட...
நாம் பெரிதாக இழந்தது கூட்டுக்குடும்பம். இரண்டு மூணு பேரோட சுருங்கி, வேற முகம் பார்க்க ஆளில்லாமல் கிடக்கிறோம். இந்தக் கதையைச் சொன்னதும் சிவகுமார், சூர்யா, கார்த்தினு இணைந்து வாழ்கிற அழகு அவங்களுக்கு ஞாபகத்திற்கு வந்திருக்கலாம். என்னதான் கார்த்தி சிட்டி பையனாக இருந்தாலும், அமெரிக்காவில் படிச்சிருந்தாலும் அவங்க ஊர் பையன்தானே? கொஞ்சம் நேரம் கிடைத்தால் கார்த்தி கிராமத்துக்குப் போயிடறாரு. இதில் வருகிற மச்சான், மாமனை நாமும் பார்த்திருக்கலாம்.

இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், சரவணன்னு ஏகப்பட்ட மச்சான்கள். பொண்ணு எடுத்துக்கிட்ட காரணத்திற்காக சதா விடைச்சுக்கிட்டே திரிகிற மாமன்களையும் கண்ணுக்கு நெறைஞ்சி பார்க்கலாம். கிராமங்களில் பார்த்து ரசித்து உணர்ந்த கேரக்டர்களையெல்லாம் கொண்டு வந்து இங்கே வைச்சிட்டேன். நான் பார்த்த அப்பத்தா, அத்தையை ரத்தமும் சதையுமா கொண்டு வந்து பொருத்தியிருக்கேன். இதைச் சொல்லச் சொல்ல கார்த்தியால் உணர முடிஞ்சது. இதுவரை அறியப்படாத, சொல்லப்படாத கதையெல்லாம் கிடையாது. பார்த்து பழகிய உறவுகளை கேள்விப்பட்ட விஷயங்களோடு கதை தொடுத்திருக்கேன். கார்த்தி 5 அக்காக்களுக்கு மத்தியில், மாமன்களுக்கு மத்தியில் இருந்து பார்க்க ஆசைப்பட்டார். அது நடந்திருக்கிறது.

பெரிய நடிகர் பட்டாளத்தோட அனுபவம் எப்படியிருந்தது..?
படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு மாதிரி. நடிக்கிற நடிகர்களும் ஒவ்வொரு விதம். பல முகங்களை ஒன்று கூட்டி ஒரு முகமாகக் கொண்டு வரணும். சத்யராஜ் சார் ஒரு விதம். கார்த்தி வேறு வடிவம். சூரி ஒரு மூடு. மாமா, மச்சான், வில்லன்னு முப்பது பேருக்கு மேல் இருக்காங்க. இவங்க கேரக்டர்களை எல்லாம் சேர்த்து இருத்தி, நிறுத்தி, பொருத்தி கொண்டு வர்றது சாதாரண வேலையில்லை. ஒரு வாரம் படாத பாடு பட்டோம். ஒரு கட்டத்தில் அம்மா கேரக்டரை அம்மான்னே கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. கேரக்டர் பெயரைச் சொல்லி பேச ஆரம்பிச்சாச்சு.

சத்யராஜ் சார் எனக்குத் தெரிஞ்சு ஆறு மணிக்கு மேலே நடிக்க மாட்டார். அப்படி ஒரு விதிமுறையோட வாழ்ற மனிதர். இந்தக் கதையை உள்வாங்கி நடிச்சபிறகு ‘பரவாயில்லை தலைவரே... போகட்டும், எனர்ஜி இருக்கு... தாங்கும்...’னு சொல்லி தொடர்ந்து நடிச்சார். இதெல்லாம் அவர் விஷயத்தில் பெரும் ஆச்சர்யம். இப்படி மறக்க வைச்சது இந்த ஸ்கிரிப்ட். எல்லோரையும் அத்தான், மாமா, யக்கா, மச்சான்னு கூப்பிட ஆரம்பிச்சார் கார்த்தி. அதுதான் அழகு.

சாயிஷா எப்படி..?
அருமை. இத்தனைக்கும் அவங்களுக்கு கிராமம் தெரியாது. பிரியா பவானி சங்கர், அர்த்தனாவோட சரிக்கு சமமா இருந்தாங்க. அதே கிராமத்து அழகும், சிரிப்புமா... லைட்டா இன்னும் மெருகேத்தி அழகு கூடி வந்திருக்காங்க. யாரும் இதில் ஹீரோ, ஹீரோயின்னு கிடையாது. மாரத்தான் ஓட்டம் மாதிரிதான் படம். ஒரு சமயம் சத்யராஜ் கையில் கதை இருக்கும். பிறகு அதை கார்த்தி ஏந்திக்கிட்டு போவார்.

ஒரு கட்டத்தில் கார்த்தி பயங்கரமாக நடிச்சுக்கிட்டு இருப்பார். அந்த நேரம் சத்யராஜ் சார் கையைக் கட்டிக்கிட்டுத்தான் நிற்பார். இப்படி ஒவ்வொருத்தரும் கதையை ஏந்தி கொண்டு போகிற விதம்தான் பலம். கேமரா வேல்ராஜ். அவரே ஒரு விவசாயி. கலையை கவனிச்ச வீரசமர் கூட விவசாயிதான். இப்படி எல்லோரும் விவசாயத்தின் விசிறிகளாக கூடியிருந்தோம்.

உங்களோட முதல் தடவையாக இமான் பணிபுரிகிறார்...
என் மனைவி ‘எப்போ இமான் மியூசிக் உங்க படத்தில் கேட்கும்...’னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. சொன்ன தேதிக்கு ட்யூன் போட்டு பாட்டு கொடுப்பார். எல்லா நேரத்திலும் கிடைப்பார். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக சூர்யா அமைந்தது சந்தோஷம். மனசை அறிஞ்சவங்க. புரிஞ்சு படம் நல்லா வரணும்னு கவனம் செலுத்துறாங்க. இதுவும் படம் நல்லா அமைஞ்சதுக்கு ஒரு முக்கிய காரணம். உறவுகளின் நல் கூடலுக்கு ரெடியாக இருங்க!

- நா.கதிர்வேலன்