தர்மபுரி சுமதி குழிப்பணியாரக் கடை



லன்ச் மேப்

பலகார பட்சணங்களில் குழிப்பணியாரத்துக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. தர்மபுரி சன்னதி தெருவில் இருக்கும் சுமதி குழிப்பணியாரக் கடை அந்த வகையில் தனி ரகம். அருணாச்சல சத்திரத்தின் திண்ணையுடன் சேர்ந்த தள்ளுவண்டி கடைதான். ஒரு தட்டு குழிப்பணியாரம் ரூ.10தான். ஆனால் குறைந்தது ஒரு மணி நேரமாவது காத்திருந்தால்தான் சாப்பிடக் கிடைக்கும்!

அந்தளவுக்கு பிசியாக இருக்கிறார் சுமதி அக்கா. ஒரு நாளைக்கு குறைந்தது 2700 குழிப்பணியாரங்கள் செய்கிறார்! அதுவும் 20 வருடங்களாக அதே ருசியில், அதே பக்குவத்தில். ‘‘இத்தனை தரமாக, சுவையாக வேறெங்கும் குழிப்பணியாரம் கிடைப்பதில்லை...’’ என்கிறார்கள் தர்மபுரி டவுன் மக்கள். இக்கடையைப் பார்த்து அதே தெருவில் 20க்கும் மேற்பட்ட கடைகள் முளைத்துள்ளன. ஆனால், சுமதி அக்கா கடையின் ருசியை ஒருவராலும் தொட முடியவில்லை.  

‘‘1995ல சின்னதா டீக் கடை ஆரம்பிச்சோம். நானும் என் கணவர் ஏழுமலையும் மாத்தி மாத்தி டீ ஸ்டால்ல நின்னு டீ போடுவோம். கூடவே வடை, பஜ்ஜி எல்லாம் செய்வோம். எண்ணெய் பலகாரமா இருக்கறதால டீ குடிக்க வர்றவங்க குறைவாதான் சாப்பிடுவாங்க. ஒரு நாள் வீட்டுக்கு செஞ்சகுழிப்பணியாரத்தை விற்பனைக்கு வச்சேன். கடைக்கு வந்த பலரும் சாப்பிட்டு ‘ரொம்ப நல்லா இருக்கு’னு பாராட்டிட்டு ‘ரெகுலரா செய்ங்க’னு சொன்னாங்க...’’ என்கிறார் சுமதி அக்கா.  

‘‘அருணாச்சல சத்திரத்தை பராமரிச்சு பாதுகாத்துட்டு இருந்தோம். அப்படியே அந்த இடத்துக்கு வெளிய கடையை ஆரம்பிச்சோம். ராசியான இடம். அதனாலயே வேற இடத்துக்கு மாத்தலை...’’ என்கிறார் அக்காவின் கணவர் ஏழுமலை. ‘‘சாப்பிட வர்ற சிலர் பணம் தராம ஓடுவாங்க. ரெட்டை அர்த்தத்துல பேசுவாங்க. இதை எல்லாம் கடந்துதான் கணவரை இழந்த பெண்கள், பிள்ளைகளால கைவிடப்பட்டவங்க கடைகளை நடத்தறாங்க.

நாங்களும் அப்படியான சூழலைச் சந்திச்சிருக்கோம். தரமா, ருசியா தர்றப்ப ‘இங்க சாப்பாடு நல்லா இருக்கு’னு வெளிய பேச ஆரம்பிப்பாங்க. அதுதான் நம்ம கடையை ஃபேமஸாக்கும்...’’ என்று சொல்லும் சுமதி அக்கா, அதே ஊரில் விளையும் புழுங்கல் அரிசியைத்தான் பயன்படுத்துகிறார். ‘‘முதல்ல சோளக் குழிப்பணியாரம் செஞ்சேன். சுவையா இருக்கும். உடம்புக்கும் உறுதி தரும். இப்ப சோளம் கிடைக்கறதில்ல.

அதனால அரிசில செய்யறேன். குழிப்பணியாரத்துக்கு முக்கியமே வார்த்து எடுக்கற கல்லுதான். ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் மலை கரும்பாறைகள்ல கிடைக்கிற மாவுக் கல்லுல செஞ்ச குழிப்பணியார சட்டியைத்தான் பயன்படுத்தினேன். பொதுவா தோசை, பணியாரம் எல்லாம் மாவுக் கல்லுலதான் சமைக்கணும். அப்பதான் கல்லுல இருக்கிற சத்து பணியாரத்துல சேரும். ஆனா, நீண்ட நாட்கள் இதை பயன்படுத்த முடியாது.

அதிகபட்சம் ஆறு மாசம்தான். ஏன்னா அடுப்பு சூட்டுல விரிசல் விழுந்து உடைஞ்சுடும்...’’ என்கிறார் சுமதி அக்கா. கலித்தொகையின் மருதத் திணையில் உளுந்துப் பணியாரம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. முதுவன் குல பழங்குடியினர் அமாவாசை, ஏகாதசி மற்றும் பண்டிகைக் காலங்களில் பிரதான உணவாக இதைச் செய்து சாப்பிட்டுள்ளனர். ‘‘குழிப்பணியாரத்துக்கு அரைக்கிற பக்குவம்தான் முக்கியம். ஓர் இரவும் அரை பகலும் ஊறவைக்கணும். மாவு நல்லா புளிக்கணும். ஆட்டுக்கல்லுலதான் அரைக்கறேன். அப்பதான் ருசி கிடைக்கும். கிரைண்டர்ல அரைச்சா சூடு கிளம்பும். அது மாவோட இயல்பை கெடுத்துடும்.

ஆட்டுக்கல்லுல அரைக்க முடியாதவங்க அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை கிரைண்டரை நிறுத்திட்டு அப்புறம் ஓடவிட்டா மாவு வாசமா, மென்மையா கிடைக்கும்...’’ என தன் அனுபவத்தை அடுக்குகிறார் சுமதி அக்கா. மிளகாய், மஞ்சள், பருப்பு, சீரகம் என தானிய வகைகளை சேலம் செவ்வாய்ப்பேட்டையில் இருந்து வாங்குகின்றனர். சுற்றிலும் இருக்கும் ஐந்து மாவட்ட மக்களுக்கும் செவ்வாய்ப்பேட்டையில் இருந்தே இவை செல்கின்றன.  

நாள் ஒன்றுக்கு ஒரு மூட்டை அரிசியில் பணியாரம் சுடுகிறார் சுமதி அக்கா. நள்ளிரவு ஒரு மணி வரை கடை நடக்கிறது. அதுவரை வாடிக்கையாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நீதிபதிகள் தொடங்கி இல்லத்தரசிகள் வரை காத்திருந்தே வாங்குகின்றனர். இங்கிருந்து வாங்கிச் சென்று தனியாக விற்பவர்களும் உண்டு!              

- திலீபன் புகழ்
படங்கள் : ஜெகன், செல்வம்


குழிப்பணியாரம்

புழுங்கல் அரிசி - இரண்டு ஆழாக்கு.
பச்சை அரிசி - இரண்டு ஆழாக்கு.
உளுந்து - ஓர் ஆழாக்கு.
வெந்தயம் - பத்து கிராம்.
எண்ணெய் - ஐம்பது மி.லி.
உப்பு - இரண்டு டீ ஸ்பூன்.
வெங்காயம் - ஐந்து.
ப.மிளகாய் - இரண்டு.
கறிவேப்பிலை - இரண்டு கொத்து.

பக்குவம்: பணியாரம் சுடுவதற்கு சற்று முன்பு வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து, அதிகம் தண்ணீர் விடாமல் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, ஓர் இரவு அரை பகல் ஊற வைத்து அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கி மாவுடன் சேர்க்கவும்.

பிறகு அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து, குழிகளில் லேசாக கடலெண்ணெய் தடவி முக்கால் குழி வரை மாவை ஊற்றி வேறொரு குழியான பாத்திரத்தால் மூடவும். இப்படிச் செய்வதால் நீராவியினால் கொஞ்சமும், கல்லின் சூட்டினால் கொஞ்சமும் பணியாரம் வேகும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தை வேக வைக்கவும்.

கலவை சட்னி

சின்ன வெங்காயம் - 100 கிராம்.
தக்காளி - 2.
கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி.
உளுந்து - 1 மேஜைக்கரண்டி.
நிலக்கடலை - 1 மேஜைக்கரண்டி.
காய்ந்த மிளகாய் - 4.
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
நல்லெண்ணெய் - சிறிதளவு.
கடுகு - அரை தேக்கரண்டி.
கறிவேப்பிலை - ஒரு கொத்து.

பக்குவம்: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து, வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுந்து, நிலக்கடலை சேர்த்து நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். ஒன்றன்பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வாசம் வர வதக்கி, ஆற வைத்து மிக்சியில் நைசாக அரைக்கவும். அரைத்த சட்னியை வேறு பாத்திரத்தில் கொட்டி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.