காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 55

லூயிஸ் கார்லோஸ் கேலன். பாப்லோ எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல்லின் முதல் எதிரி என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவர். இவர் ஒரு பத்திரிகையாளரும்கூட. மாணவப் பருவத்திலிருந்தே அரசியல் ஆர்வம் கொண்டிருந்தவர். சர்வாதிகார அரசுக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கெல்லாம் சென்றிருக்கிறார். கொலம்பியாவின் தூதராக இத்தாலியில் பணி புரிந்திருக்கிறார்.

எண்பதுகளில் போதை கார்டெல்கள் கொலம்பியாவை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்த நிலையில் அந்த போக்கை கடுமையாக எதிர்த்தார். அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போதை கார்டெல் உரிமையாளர்களோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்ததை கேலனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. நாட்டின் பொருளாதாரமே போதைத் தொழிலைச் சார்ந்திருக்கிறது என்பதைவிட கேடுகெட்ட அவலம் வேறு கிடையாது என்று மக்களிடம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வந்தார்.

குறிப்பாக மெதிலின் கார்டெல், ஒரு ராணுவத்துக்கு இணையாக கொலம்பியாவை எதிர்த்து நின்ற காலகட்டத்தில் பாப்லோ எஸ்கோபாரை தன்னுடைய பரம வைரியாக இவர் கருதினார். கொலம்பியாவின் அதிபராகி, போதைத் தொழிலை முற்றிலுமாக ஒழிப்பேன் என்று சவால் விட்டுக் கொண்டிருந்தார். இவர் வேண்டுமானால் எஸ்கோபாரை எதிரியாகக் கருதியிருக்கலாம். ஆனால், எஸ்கோபார், கேலனை அணுஅணுவாக ரசித்தார்.

வெளியில் பெயருக்காக எஸ்கோபாரை எதிர்த்துக் கொண்டே, திரைமறைவில் காசு வாங்கிக் கொண்டு வாலைச் சுருட்டிக்கொண்டு போகும் அரசியல்வாதிகளை ஒப்பிடுகையில் நேருக்கு நேராக நேர்மையாக தன்னோடு மல்லுக்கட்ட நிற்கும் கேலனே மிகச்சிறந்த மனிதர் என்று அவர் மதிப்பிட்டிருந்தார். எனவேதான் 1982 வாக்கில் கேலனுடைய நியூ லிபரல் கட்சியில் சேருவதற்கு எஸ்கோபார் விருப்பம் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் ஒன்றில், “ஒரு போதைத் தொழிலதிபர் அரசியலில் ஈடுபடுவதும், அதன் வாயிலாக ஆட்சியைக் கைப்பற்றுவதுமான நிலை ஏற்பட ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்...” என்று கர்ஜித்தார் கேலன். போதைக் கடத்தல்காரர்களைப் பிடித்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் சட்டத்துக்கு கேலன் ஆதரவாக இருந்தார். எனவே, அமெரிக்க அரசும் கேலன் அதிபராவதை விரும்பியது. அவருக்காக மறைமுகமாக கொலம்பியாவில் பல்வேறு வேலைகளை அமெரிக்கா திறம்பட செய்து, கேலனுக்கான செல்வாக்கு உயர காரணமாக இருந்தது. 89ம் ஆண்டு அதிபர் தேர்தல் சமயம்.

அரசியல் மேடைகளில் பேசிக்கொண்டிருப்பவர்கள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்வது சகஜமாக இருந்தது. காலி கார்டெல் மற்றும் எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல்களுக்கான மோதல்களில் சிக்கி உயிரிழந்த அரசியல்வாதிகள் அனேகம். எர்னஸ்டோ சாம்பர் என்கிற அதிபர் வேட்பாளர் ஒருவர் மீது ஏர்போர்ட்டில் வைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காலி கார்டெல்லுக்கு வேண்டியவர் என்பதால் இவரைக் கொல்வதற்காக எஸ்கோபார்தான் ஏற்பாடு செய்தார் என்று அரசாங்கமே தகவல்களைக் கசியவிட்டது.

உண்மையில் இந்த துப்பாக்கிச்சூட்டுக்கும் பாப்லோவுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. யார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்கிற விசாரணையை துவக்காமலேயே மெதிலின் கார்டெல்லை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார்கள். இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த சாம்பர், சில வருடங்களுக்குப் பின்னர் அதிபராகவே உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லூயிஸ் கார்லோஸ் கேலனை கொல்லுவதற்காகவும் முயற்சிகள் நடந்தன.

ஒவ்வொரு முறையும் கேலன் தப்பிக்கொள்ள, அவருடன் இருந்தவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள். இதைத் தொடர்ந்து கேலனும், அவரது குடும்பத்தாரும் தேர்தல் பிரசாரத்துக்காக பயணம் செல்வதையேகூட குறைத்துக் கொண்டார்கள். சோச்சா என்கிற நகரில் பெரிய பொதுக்கூட்டம். இதில் பேசியே ஆகவேண்டும் என்கிற நெருக்கடி கேலனுக்கு. உளவுத்துறை மூலமாக முன்கூட்டியே தகவல் வந்திருந்தது,  நவீனமான மெஷின்கன்களோடு ஹிட்மேன்கள் கேலனைக் கொல்ல அங்கே காத்திருக்கிறார்கள் என்று.

அந்தத் தகவல்களை மீறி சோச்சாவுக்குச் சென்றார் கேலன். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பொதுக்கூட்டத்தில் முழங்கிக் கொண்டிருந்தார். “கொலம்பியாவைப் பொறுத்தவரை இனிமேல் முன்னேற்றம்தான். என்ன தேவை ஏற்பட்டாலும் சரி, நாம் ஓர் அடி கூட யாருக்காகவும் எந்த சூழலுக்காகவும் பின்னே வைக்கப் போவதில்லை...” மைக்கில் உணர்ச்சிபூர்வமாக கேலன் முழங்கிக் கொண்டிருந்தபோதே, திடீரென அவர் முன்பாகத் தோன்றிய ஆயுதம் ஏந்திய ஹிட்மேன்கள் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார்கள்.

கேலனின் நெஞ்சில் பாய்ந்த குண்டு, அங்கேயே அவரது உயிரைக் குடித்தது. மேடையிலிருந்தவர்களில் பெரும்பாலானோர் காயமுற்றார்கள். வழக்கம்போல கொலை செய்த கொலைபாதகர்கள், எவ்வித சேதாரமுமின்றி தப்பினார்கள். அடுத்த அதிபர் என்று மக்கள் நம்பியிருந்த தலைவரான கேலன் படுகொலை செய்யப்பட்டது கொலம்பியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் கென்னடியின் கொலைக்கு நிகராக இந்தச் சம்பவம் பேசப்பட்டது.

இந்தக் கொலையிலும் பாப்லோவின் தலையைத்தான் வழக்கம்போல உருட்டினார்கள். பாப்லோவின் நெருங்கிய சகா காச்சாதான் இந்தக் கொலையின் சூத்ரதாரி என்று அரசாங்கமே குற்றம் சாட்டியது. இந்தச் சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குப் பின்புதான் காச்சா சுட்டுக் கொல்லப்பட்டார். உண்மையைச் சொல்லப் போனால், பாப்லோவுக்கு மட்டுமல்ல, காலி உள்ளிட்ட அத்தனை கார்டெல்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் கேலன்.

அமெரிக்காவின் வலதுசாரி சிந்தனைகளுக்கு ஆதரவாக இருந்த அவர், தான் ஆட்சிக்கு வந்ததுமே போதைக் கடத்தல்காரர்களை மட்டுமின்றி, கொலம்பியாவில் சிறு சிறு குழுக்களாகச் செயல்பட்டுவந்த இடதுசாரிகளை ஒட்டுமொத்தமாக ஒழிப்பேன் என்று சபதம் பூண்டிருந்தார்.

எனவே, கேலனை கொல்லுவதற்கான எண்ணம் எத்தனையோ தரப்புக்கு உண்டு. உண்மையைச் சொல்லப்போனால் பாப்லோவுக்கு, கேலன் குறித்த உயர்வான எண்ணம்தான் இருந்தது. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாயிற்றே? கேலனின் கொலைக்கும் பாப்லோவையே சம்பந்தப்படுத்தினார்கள். இதனால் மக்கள் மத்தியில் பாப்லோவுக்கு இருந்த செல்வாக்கும், அனுதாபமும் கணிசமாக சேதாரமுற்றது.

அன்றைய இரவே தன்னுடைய, தன் சகாக்களுடைய குடும்பங்களை எல்லாம் நாட்டை விட்டு வெளியேற்றும் ஏற்பாடுகளைச் செய்தார் பாப்லோ. பெரிய ஆபத்து ஒன்றை தாங்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை யூகித்தே இத்தகைய ஏற்பாடுகளைச் செய்தார். அதற்கேற்ப நாடு முழுக்க அவசரநிலை ஏற்பாடு செய்யப்பட்டு ராணுவமும், போலீஸும் வேட்டையாடத் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கானோர் கணக்கு வழக்கின்றி கைது செய்யப்பட்டனர்.

அரசு அதிகாரிகளுக்கும், ஆளும் தரப்பு அரசியல்வாதிகளுக்கும் பழைய கணக்குகளை பைசல் செய்துகொள்ள இந்தச் சூழல் உதவியது. கார்டெல்காரர்களுக்கு உரிமையானவை என்று கூறி நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் டிரக்குகளைப் பறிமுதல் செய்தார்கள். சுமார் 350 சிறியவகை விமானங்கள், மற்றும் நூற்றுக்கணக்கான படகுகளுக்கும் இதே நிலைமைதான். ஐந்து டன்கள் அளவிலான கோகெயின் இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்டன. கிட்டத்தட்ட பாப்லோ எஸ்கோபாரின் கோட்டைக்குள் ஓட்டை போட்டுவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

(மிரட்டுவோம்)

ஓவியம் : அரஸ்