சீரியல் ரைட்டரான தயாரிப்பாளரின் மகன்!



‘வாணி ராணி’, ‘கல்யாணப் பரிசு’ திரைக்கதையாசிரியர் எஸ்.குமரேசனின் சக்சஸ் ஸ்டோரி

‘‘சன் டிவில இதுக்கு முன்னாடி ‘கோலங்கள்’ நெடுந்தொடர் மட்டும்தான் 1533 எபிசோடுகள் வந்திருக்கு. ஆனா, எங்க ‘வாணி ராணி’ 1600 எபிசோடையும் தாண்டி கிட்டத்தட்ட ஆறு வருடங்களா விறுவிறுப்பா போயிட்டிருக்கு. இரு வேடங்கள்ல நடிச்சு இந்த சீரியலை தயாரிக்கிற ராதிகா மேடமே ஒரு முறை சமூக வலைத்தளத்துல, ‘நாங்க இந்தத் தொடரை முடிக்கப் போறோம்’னு சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னாங்க. உடனே, ‘இப்பவே முடிச்சுடாதீங்க... தொடருங்க’னு சொல்லி வைச்ச மாதிரி எல்லாரும் வேண்டுகோள் வைச்சாங்க!’’ முகமெல்லாம் சந்தோஷம் பூக்க புன்னகைக்கிறார் ‘வாணி ராணி’, ‘கல்யாணப் பரிசு’ சீரியல்களுக்கு திரைக்கதை எழுதி வரும் எஸ்.குமரேசன். சாதாரண ஸ்டூடியோ போட்டோகிராபராக இருந்து சின்னத்திரை ரைட்டராக மாறியவர் இவர்!  

‘‘உண்மைல ராதிகா மேடம் எங்களுக்கு கொடுக்கிற சுதந்திரம்தான் ‘வாணி ராணி’ வெற்றிக்குக் காரணம். சீரியலுக்காக இதுவரை யாரும் ஆஸ்திரேலியா போனதில்ல. நாங்க போயிருக்கோம்! நடுக்கடல்ல யாரும் ஃபைட் எடுத்ததில்ல. நாங்க எடுத்தோம்! அண்டர் வாட்டர் கேமரா, ஹெலி கேம்னு நவீன டெக்னாலஜியை சீரியல்ல யூஸ் பண்ணினோம்! இதெல்லாமே ராதிகா மேடத்தாலதான் சாத்தியமாச்சு. முழுச் சுதந்திரம் கொடுத்து புதுசு புதுசா யோசிக்கச் சொல்வாங்க. வழக்கமா பெண்களோட பிரச்னையை எடுத்துக்கிட்டு அதுல ஒரு சிம்பதியை உருவாக்கி இதையே டெவலப் பண்ணி சீரியலைக் கொண்டு போவாங்க.

என் குருநாதர் கே.பாலசந்தர் சார் அடிக்கடி சொல்வார், ‘பெண் எப்பவும் அழக்கூடாதுடா; அவங்க ரொம்ப போல்டா இருக்கணும்’னு. இதைத்தான் தாரக மந்திரமா ஃபாலோ பண்றேன். நான் திரைக்கதை எழுதற சீரியல்களோட ஹீரோயின்ஸ் யாரையும் அழ வைச்சுப் பார்க்க விரும்பலை. எந்தவொரு பிரச்னை வந்தாலும் அவங்க கலங்கமாட்டாங்க. தைரியமா அதை ஃபேஸ் பண்ணுவாங்க.

பொதுவா எல்லா கேரக்டர்ஸையும் நல்லவங்களா வடிவமைக்கத்தான் பிடிக்கும். சந்தர்ப்பங்களும், சூழல்களும் எப்படி அவங்களை வேற மாதிரியா மாத்துதுனுதான் சீன்ஸ் எழுதுவேன். ‘வாணி ராணி’யும் அப்படித்தான்...’’ சுருக்கமாகத் தன் தொழில் ரகசியத்தை விவரித்தவர் தன் பயோடேட்டாவுக்குத் தாவினார். ‘‘பூர்வீகம் சின்னமனூர். அப்பா சங்கரேஸ்வரன், ரைஸ் மில் வைச்சிருந்தாங்க. ஒரு காலத்துல சினிமாவும் தயாரிச்சிருக்கார்! அம்மா கனகேஸ்வரி, ஹவுஸ்வொய்ஃப். ஒரே தம்பி, தாமோதரன்.

உத்தமபாளையத்துல பி.எஸ்சி.யும், மதுரை காமராஜர்ல எம்.ஏ. பொது நிர்வாகமும் படிச்சேன். பழைய கறுப்பு வெள்ளைப் படங்களான ‘அக்கரைப் பச்சை’, ‘பொன் வண்டு’னு சில படங்களை நண்பர்களோடு சேர்ந்து அப்பா தயாரிச்சார். அவரைப் பார்த்துத்தான் சினிமா ஆசை வந்தது. ‘பணத்தை முதலீடு பண்றதை விட டெக்னீஷியனா இருக்கறதுதான் பாதுகாப்பு. சினிமாவுல ஏதாவது ஒரு தொழிலைக் கத்துக்கோ’னு அப்பா அட்வைஸ் பண்ணினார்.

எனக்கு போட்டோகிராபில ஆர்வம் வர அந்த அறிவுரைதான் காரணம். ப்ளஸ் 2 படிக்கிறப்பவே சொந்தமா கேமரா வாங்கிட்டேன். டிகிரி முடிச்சதும் கேமராமேன் ஆகிடணும்னு சென்னை வந்தேன். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர முயற்சி பண்ணினேன். கிடைக்கல. ஊருக்குத் திரும்பிட்டேன். சினிமா ஆசை விடலை. யார்கிட்டயாவது உதவியாளரா சேரலாம்னு திரும்பவும் சென்னை வந்தேன். டிரை பண்ணினேன். கிடைக்கலை. மறுபடியும் ஊருக்கு ரிட்டர்ன்.

இப்படி பலமுறை படையெடுப்பு நடந்திருக்கு! அப்புறம் தேனில ‘குமார் விஷுவல்ஸ்’னு ஒரு போட்டோ ஸ்டூடியோ ஆரம்பிச்சேன். கொஞ்ச நாட்கள்ல ஒரு டிவி சேனல்ல போட்டோகிராபரா வேலை கிடைச்சது. ஸ்டூடியோவை தம்பிகிட்ட ஒப்படைச்சுட்டு இங்க வந்தேன்...’’ என்று சிரிக்கும் எஸ்.குமரேசனின் சென்னை அனுபவம் சுவாரஸ்யமானது. ‘‘‘அந்திமந்தாரை’ ஒளிப்பதிவாளர் தனபால் சார் நட்பு கிடைச்சது. நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்தார். சேனல்ல என் வேலையை கவனிச்சுக்கிட்டே ‘கணையாழி’, ‘செம்மலர்’ மாதிரியான சிறுபத்திரிகைகள்ல ‘யாத்ரா’ என்கிற பேர்ல கதை, கவிதைகள் எழுதினேன்.

இதைப் பார்த்துட்டு முரளிராமன் சார் திடீர்னு ஒருநாள் கூப்பிட்டு சின்னச் சின்ன பைட்ஸ் எழுதச் சொல்லி ஊக்குவிச்சார். அப்புறம் மார்னிங் ஷோவை இயக்கற வாய்ப்பையும் கொடுத்தார். எனக்குதான் தத்தளிப்பா இருந்தது. தொடர்ந்து ஒரே மாதிரியா வேலை செய்யப் பிடிக்கலை. உதறிட்டு ‘குங்குமம்’ வார இதழ்ல அப்ப தலைமை சினிமா நிருபரா இருந்த எங்க குடும்ப நண்பர் வி.கே.சுந்தரைப் போய்ப் பார்த்தேன்.  

அவர் மூலமா எழுத்தாளர் இந்துமதி அறிமுகம் கிடைச்சது. ‘யாத்ரா’ங்கற பெயர்ல நான் எழுதினதை அவங்க படிச்சிருந்தாங்க. அதனால அறிமுகம் சுமுகமா சுலபமா இருந்தது. சன் டிவில அப்ப வந்துட்டு இருந்த ‘கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம்’ சீரியலுக்கு என்னை எழுதச் சொல்லி அனுப்பினாங்க. அந்த சீரியல் குழுல சேர்ந்து வசனம் எழுத ஆரம்பிச்சேன். ‘நீ நான் அவள்’ சீரியல் வழியா ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆனேன்.

‘மின்பிம்பங்கள்’லதான் பட்டை தீட்டப்பட்டேன். நிறைய மைக்ரோ தொடர்களை பண்ற வாய்ப்பு கிடைச்சது. கே.பாலசந்தர் சார், வஸந்த், பாம்பே சாணக்யா, அப்ப ‘ராடன்’ கிரியேட்டிவ் ஹெட் ஆக இருந்த சுபா வெங்கட், ‘விஷன் டைம்’ ராமமூர்த்தி சார்னு நிறைய பேர்களோட நட்பு அங்க கிடைச்சது. இந்த நேரத்துல உதயநிதி ஸ்டாலின் சார் கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டு ‘San Media’ நிறுவனத்தைத் தொடங்கினார். நண்பர் குருபரன் மூலமா உதய்சார் அறிமுகம் கிடைச்சது.

சான் மீடியா தயாரிச்ச ‘அகல்யா’ சீரியல் சன் டிவில ஒளிபரப்பாச்சு. அதுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினேன். பரவலா பேசப்பட்ட இந்தத் தொடருக்காக கலைஞர் ஐயா கையால ‘சிறந்த சின்னத்திரை உரையாடல் ஆசிரியர்’ விருதை வாங்கினேன்! அப்புறம் ‘பந்தம்’, ‘உறவுகள்’னு தொடர்ந்து அங்க எழுதினேன். பிறகு ‘விஷன் டைம்’ ராமமூர்த்தி சார் தயாரிப்புல வெளியான ‘வசந்தம்’, ‘பொன்னூஞ்சல்’, ‘தியாகம்’ தொடர்களுக்கும் திரைக்கதை எழுதினேன். இப்ப சக்கைப்போடு போடற ‘கல்யாணப்பரிசு’ம் அவங்க தயாரிப்புதான்...’’ என்று அசைபோடும் எஸ்.குமரேசன், எம்.ஏ.வில் ஸ்டேஜ் ஆர்ட்ஸும் முடித்திருக்கிறார்.

சாந்தோம் தேவாலயத்தில் இப்போதும் இடம்பெறும் சவுண்ட் அண்ட் லைட்டிங் டெக்னாலஜியில் பைபிள் பற்றி மேடையில் சொல்லும் நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்து வைத்தவர் இவர்தான். இதைப் பார்த்த திமுகவினர் திருநெல்வேலியில் நடந்த இளைஞரணி மாநாட்டில் ‘கலைஞர் 85’ என்று சவுண்ட் அண்ட் லைட்டில் கலைஞரது வாழ்க்கையை பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். அதையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி பாராட்டு வாங்கியிருக்கிறார்!

‘‘திடீர்னு தோணின ஐடியாதான் ‘வாணி ராணி’. சுபா வெங்கட் மேம் மூலமா ‘ராடன்’ல ஒர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. ‘தல்லி பிரேமா’ தெலுங்கு சீரியலுக்கு திரைக்கதை அமைச்சேன். ராதிகா மேடத்தை அங்கதான் முதல்ல பார்த்துப் பேசினேன். தொடர்ந்து ‘மகாலட்சுமி நிவாஸ்’, ‘சுவாதி’னு தெலுங்கில் ராடன் தயாரிச்ச சீரியல்களுக்கு எழுதினேன். ‘மகாலட்சுமி நிவாஸ்’ல ராதிகா மேம் இல்லத்தரசியா நடிச்சிருந்தாங்க. அந்த கேரக்டர் ஸ்கெட்ச் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. புது சீரியலுக்கு எழுதச் சொன்னாங்க.

அவங்க, சுபா வெங்கட் மேம், முரளிராமன் சார்னு எல்லாருமா உட்கார்ந்து பேசறப்ப ‘ராணி’ கேரக்டர் பிடிபட்டது. அப்புறம் ‘வாணி’ கேரக்டரைக் கொண்டு வந்தோம். கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணப் பண்ண அந்த வாரத்துலயே ஷூட்டிங் கிளம்பற அளவுக்கு கதை, திரைக்கதை ரெடியாகிடுச்சு! கே.பாலசந்தர் சார் ஒரு விஷயம் சொல்வார். ‘கதையா யோசிச்சா பழைய கதைகள்தான் தோணும். அதனால புதுப் புது கேரக்டர்ஸை டிசைன் பண்ணு. இந்த கேரக்டர்ஸ் சந்திக்கிற பிரச்னைகளை அலசறப்ப தன்னால கதை ஃபார்ம் ஆகும்...’

இப்ப வரை ‘வாணி ராணி’ சக்சஸ்ஃபுல்லா போக விதவிதமான கேரக்டர்ஸ்தான் காரணம்...’’ என்றவர் சிங்கப்பூர் சேனல்களுக்கும் எழுதி வருகிறார். ‘‘நண்பர் வீரேந்திரா மூலமா சிங்கப்பூர்ல இருக்கிற ‘வசந்தம்’ டிவிக்கு சீரியல்கள் பண்ண ஆரம்பிச்சேன். கதை, திரைக்கதை, வசனம்னு பேக்கேஜா எழுதிடுவேன். அங்க மெகா தொடர்கள்னா அதிகபட்சம் 60 / 70 எபிசோடுகள்தான். இதுவரை ‘ரியா’, ‘நாசி பிரியாணி’, ‘சுந்தரம் குடும்பத்தினர்’, ‘நல்லதோர் வீணை செய்தேன்’னு கிட்டத்தட்ட ஏழு சீரியல்கள் பண்ணிட்டேன். ‘நம்ம வீடு’, ‘தா’னு ரெண்டு டெலிஃபிலிம்சும் செய்தாச்சு.

அங்க ‘குமரேசனின்’னு மெயினா குறிப்பிட்டே ப்ரொமோ பண்றாங்க. அந்தளவுக்கு சிங்கப்பூர்ல பெயர் வாங்கினது சந்தோஷமா இருக்கு...’’ என்ற எஸ்.குமரேசன் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆதி நடிப்பில் வெளிவந்த ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்தில் வசனம் எழுதியதோடு அசோசியேட் டைரக்டராகவும் பணிபுரிந்திருக்கிறார். ரகுமான் நடிப்பில் வெளியான ‘ஒரு முகத்திரை’ படத்துக்கும் வசனம் இவர்தான்.

இவரது திருமணம் காதல் திருமணம்! ‘‘ஆமா. நிறைய பிரச்னைகளைச் சந்திச்சிருக்கோம்...’’ சிரித்தபடி அந்த எபிசோடை விவரித்தார் எஸ்.குமரேசனின் காதல் மனைவியான ஞானம் தங்கம். ‘‘நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். ஆனா, வேற வேற சாதி. எங்கண்ணன் ஹரி குமாரோட ஃப்ரெண்ட் இவர். அப்ப நான் ப்ளஸ் 2 படிச்சுட்டு இருந்தேன். இவர், காலேஜ். எங்க காதல் ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு பெரிய பிரச்னையாகிடுச்சு. போராட்டத்துக்கு அப்புறம் கல்யாணம் செஞ்சுகிட்டோம்.

மகள் கண்மணி ஸ்ரீ கௌரி பிறந்த பிறகுதான் ரெண்டு பேர் வீட்லயும் சமாதானம் ஆனாங்க. எனக்கு அப்பா கிடையாது.  அந்தக் குறையே தெரியாத அளவுக்கு இவர் பார்த்துக்கறார். முதல்ல இவர் எனக்கு நண்பர். அப்புறம்தான் காதலர், கணவர் எல்லாம்..!’’
நெகிழ்ந்தார். நெகிழ்ந்தார்கள்.

- மை.பாரதிராஜா
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்