COFFEE TABLE



ரகுல் டயர் சிங்!

நடிகைகளின் ஃபிட்னஸ் என்றாலே, ட்ரெட் மில்லில் சொகுசாக ஓடுவார்கள், கொஞ்சம் எடைப் பயிற்சி, கொஞ்சம் யோகா பண்ணுவார்கள். அவ்வளவுதான் அவர்களது ஒர்க் அவுட் என நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறார் ரகுல் ப்ரீத் சிங். ஜிம்மில் அவர் பிரமாண்டமான (ட்ராக்டர்) டயர் ஒன்றைப் புரட்டிப் புரட்டி அசத்துவதும், பின்னர் நீளமான ரப்பர் கயிற்றுடன் கைகளுக்குப் பயிற்சி கொடுப்பதும் என பின்னியெடுக்கிறார். தனது ஃபிட்னஸ் ரகசியத்தை வீடியோவாக்கி சமூக வலைத்தள பக்கங்களில் ரகுல் தட்டிவிட, லட்சக்கணக்கில் லைக்ஸ்களை அள்ளுகிறது அந்த வீடியோ.

நம்பர் டூ-வுக்கு முடிவு!

‘‘இந்தியாவில் வீடுகள் கட்டுவதை விட கழிப்பிடங்கள் கட்டுவதன் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்திருக்கிறது...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ‘‘குறிப்பாக நவம்பர் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும் கிராமப்புறங்களில் உள்ள 75%  வீடுகள் கழிப்பிடம் கட்டுவதில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன...’’ என்கிற அந்த ஆய்வு, ‘‘பல வீடுகளில் கழிப்பிடங்கள் இருந்தாலும் அதை பராமரிக்க போதுமான தண்ணீர் வசதி இல்லை...’’ என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ‘‘2021-ல் இந்தியாவில் உள்ள 80% வீடுகள் கழிப்பிட வசதியுடன் இருக்கும்...’’ என்கின்றனர் ஆர்வலர்கள்.

காரைத் திருடிய காற்று!

சீனாவில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கிங்டாவ் நகரம். மக்கள் கூட்டம் அலைமோதும் ஒரு ஷாப்பிங் மால். ஹுவாங் என்ற இளைஞர் தனது காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, அரை மணி நேரம் அந்த மாலுக்குள் ஒரு ரவுண்ட் அடித்திருக்கிறார். வீட்டுக்கு கிளம்பலாம் என்று பார்க்கிங் ஏரியாவுக்குள்  நுழைந்தபோது பேரதிர்ச்சி ஒன்று அவருக்காக காத்திருந்தது. ஆம்; அவரது காரைக் காணவில்லை!

திடுக்கிட்டவர் உடனே காவல்துறைக்குத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். ஹுவாங் மாலுக்குள் இருந்த நேரத்தில் வீசிய பலமான காற்று, அவரது காரை 100 மீட்டர் துரத்துக்கு இழுத்துச் சென்றிருக்கிற விஷயத்தை சி.சி.டி.வி கேமரா காவல்துறைக்குக் காட்டியிருக்கிறது. காருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுதான் இதில் ஹைலைட். காரைப் பெற்றுக்கொண்ட ஹுவாங், ‘‘மன்னிக்கவும்... பார்க்கிங் பிரேக்கை போடாமல் விட்டுட்டேன்...’’ என்று கூலாக காவல்துறையிடம் சொல்லியிருக்கிறார்!

சட்டைப் பையில் ஸ்பீக்கர்

புதுப்புது ஸ்டைல்களில், விதவிதமான மாடல்களில் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்வது எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த ‘JVC’ நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ப்ளூடூத் ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டைப்பையில் வைக்கும் அளவுக்கு சிறிய அளவில் கச்சிதமாக இதை வடிவமைத்துள்ளனர். ஒயர்லெஸ் வசதியுடன் இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் இதை எடுத்துச் செல்லலாம். 1000mAh பேட்டரியுடன் கூடிய இந்த ஸ்பீக்கரின் விலை ரூ.2 ஆயிரம்.

யோகா எக்ஸ்பர்ட்

‘லிங்கா’ ஹீரோயின் சோனாக்‌ஷி சின்ஹாவை நினைவிருக்கிறதா? பாலிவுட்டில் சில படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர், இப்போது யோகாவில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார். எந்தவித பிடிப்புமின்றி கைகள் இரண்டையும் தலைக்கு முட்டுக் கொடுத்தபடி, ‘சிரசாசனம்’ போல நிதானமாக நின்று யோகாவில் புகுந்து கலக்குகிறார் சோனா. அதை அப்படியே வீடியோவாக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட, மூன்றே நாளில் 11 லட்சம் பேர் பார்த்து ரசித்து வைரலாக்கியுள்ளனர்.

-குங்குமம் டீம்