சீனாவும் இப்போது இந்தியப் படங்களுக்கு ஓர் ஏரியாதான்!



நம் காலத்தில்தான் இந்த அதிசயம் அரங்கேறியிருக்கிறது. அதுவும் இந்தியாவில் அல்ல. சீனாவில்! பெய்ஜிங் நகரிலுள்ள புகழ்பெற்ற சினிமா தியேட்டர் அது. கண்ணிமைக்கக்கூட மறந்து திரையில் ஓடிய படத்தை சீன இளைஞர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். காம்போ ஆஃபரில் வாங்கிய பாப்கார்னைக் கூட அவர்கள் மறந்தார்கள். இத்தனைக்கும் அதிசய விலங்குகளால் உலகுக்கு ஆபத்து, ரேஸ் கார்கள், சூப்பர் கதாநாயகர்கள், ரத்தம் தெறிக்கும் வரலாற்றுப் படம்... என இந்த ஜானரில் அடங்கும் படமல்ல அது. பிரமாண்டத்துக்கும் தொழில்நுட்ப சாத்தியங்களுக்கும் பெயர் போன ஹாலிவுட் காவியமும் அல்ல அது. அவ்வளவு ஏன், சீன மொழியில் தயாரான சினிமாவும் இல்லை.

மாறாக, டப்பிங் படம். அதுவும் சாதாரணக் கதை. ஒரு தந்தை தன் இரு மகள்களை மல்யுத்த வீரர்களாக்குகிறார். அவ்வளவுதான் கதை. இதைத்தான் சீனர்கள் விழிவிரிய ரசித்தார்கள்; ரசிக்கிறார்கள். யெஸ். 2016ம் ஆண்டு நிதிஷ் திவாரியின் இயக்கத்தில் அமீர்கானின் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி உலகமெங்கும் பாராட்டுகளையும் கரன்சியையும் குவித்த ‘தங்கல்’ படத்தின் சீன டப்பிங்தான் அது. நம்புங்கள். சீனாவில் மட்டும் (தைவான், ஹாங்காங் பகுதிகளையும் உள்ளடக்கி) ‘தங்கல்’ ஆயிரம் ப்ளஸ் கோடிகளை வசூலித்திருக்கிறது! ‘‘பலருக்கும் நம்பமுடியாத ஆச்சரியம்தான். இது, 9 ஆயிரம் திரையரங்கங்கள் இருக்கும் சீனாவில் டிரெண்ட்செட்டர் படம் என்பதே நிஜம்!’’ என்கிறார் ‘வெரைட்டி’ இதழின் ஆசிய வணிக ஆசிரியரான பேட்ரிக் ஃபிராடர்.

காது புடைப்பாக, ஆள் கட்டையாக தங்களைப் போலவே இருக்கிறார் என்பதால் அமீர்கானை சீனர்கள் ஆதரிக்கிறார்களா?
இல்லை. சல்மான் கானின் ‘பைரங்கி பாய்ஜான்’ படமும் அங்கு செம டப்பு பார்த்திருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து இப்போது இந்தி தயாரிப்பாளர்கள் சீன மார்க்கெட்டையும் குறி வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் ஒருபகுதியாக ‘ஈரோஸ்’ நிறுவனம் சீன திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களோடு படங்களைத் தயாரிக்க அக்ரிமென்ட் போட்டுள்ளது. முதன்முதலில் சீனாவில் டப் ஆகி வெற்றி கண்ட இந்தியத் திரைப்படம் அமீர்கானின் ‘த்ரீ இடியட்ஸ்’. பின்னர் ‘பிகே’ தொடங்கி ‘பாகுபலி 2’ வரை எல்லாமே அந்நாட்டில் மட்டும் பலநூறு கோடிகளை அள்ளியிருக்கின்றன.

இந்தியப் படங்களுக்கு இப்படி ஒரு புதிய சந்தை உருவாக என்ன காரணம்?
‘‘சீனப் படங்களின் தயாரிப்பை தீர்மானிப்பது பணம் படைத்த சிலர்தான். ஜாக்கி சான் மாதிரி பெரிய நடிகர்கள், கிராஃபிக்ஸ் என்பதைக் கடந்து அழுத்தமான கதையை அவர்கள் யோசிப்பதேயில்லை. இப்படியிருந்தால் சீன சினிமாத்துறை எப்படி வளரும்?’’ என்று கேட்கும் ‘பீகாக் மௌன்டன்’ சினிமா நிறுவனத்தின் துணைத்தலைவரான கு வாங்சங், இப்போது இந்திய - சீன கூட்டுத்தயாரிப்பில் படங்களை உருவாக்க முயற்சித்து வருகிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, தெற்காசியா என விரிவடைந்த பாலிவுட் படங்களுக்கான இன்றைய சந்தை மதிப்பு ரூ.15 ஆயிரத்து 600 கோடி! டப் செய்து வெளியிடப்பட்ட ‘த்ரீ இடியட்ஸ்’, ‘பிகே’, ’தங்கல்’ என பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் இந்திய சினிமாக்களின் தனித்த முகமாக அமீர்கான் சீனாவில் அறிமுகமாகியுள்ளார்.

ஒரு சோறு பதமாக ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ இந்திப் படத்தை சொல்லலாம். அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்த இப்படம், இந்தியாவில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதாவது, நூறு ப்ளஸ் கோடி வசூலை ஈட்டவில்லை. சுமார் அல்லது சுமாருக்குக் கீழே என முகத்தில் அறைகிறது வசூல் நிலவரம். ஆனால், இதே ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ சீன மொழியில் டப் ஆகி ரூ.117 கோடி வசூலித்திருக்கிறது! இந்தியப் படங்கள் என்றில்லை... தாய்லாந்து படமான ‘Bad Genius’, ஸ்பானிய படமான ‘Contratiempo’ ஆகியவையும் சீன பாக்ஸ் ஆபீசை அதிர வைத்திருக்கின்றன. கலாச்சார ரீதியிலான உறவு, நெஞ்சுக்கு நெருக்கமான கதை சொல்லும் முறை... என இதற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

மொத்தத்தில் இந்தியப் படங்களுக்கான மார்க்கெட் சீனாவில் அதிகரித்திருப்பது உண்மை. இந்திப் படங்களுக்கு சமமாக தென்னிந்தியப் படமான ‘பாகுபலி’யும் அங்கு வெற்றிபெற்றிருப்பது நிஜம். இந்த உண்மையைத் தமிழ்ப் பட இயக்குநர்கள் புரிந்து கொண்டால் நம் படங்களின் எல்லையும் விரியும்.               

-ச.அன்பரசு