ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 74

சபையறிந்து பேசக்கூடியவரே தமிழன்பன். எந்த சபையானாலும், பேச்சைத் தயாரிக்காமல் வரமாட்டார். ஆனால், அவருடைய பேச்சுமுறை தயாரித்தது போலிருக்காது. நினைவுகளின் அடுக்கிலிருந்து சொல்வது போல்தான் இருக்கும். வருடங்களைச் சொல்வதானாலும் விஷயங்களை அடுக்குவதிலும்கூட ஒருவித நேர்த்தியைக் கடைப்பிடிப்பார்.

ஒருசில ஆண்டுகளுக்குமுன் திருச்சி லோகநாதன் ஏற்பாடு செய்த விழாவில் பேசிய அவர், “கவிதைகளால் எதையோ செய்துவிட முடியும் என்று நம்புகிற அரசியல்வாதிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி...” என்றிருக்கிறார். முன்னெப்போதோ அவருடைய கவிதை ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த வாழப்பாடி இராமமூர்த்தியை மேடையில் வைத்துக்கொண்டே, “கவிதைகளைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்..?” எனக் கேட்டிருக்கிறார். தன்னிடம் அபிப்ராய பேதமுடையவர்களைக் கூட, தன் பேச்சின் வழியே அரவணைத்துக்கொள்ளும் பண்பு அவருடையது.

இஸ்லாமிய இலக்கியக் கழக விழாவொன்றில் விவேகானந்தரைப் பற்றிப் பேசி, கைதட்டு வாங்க அவரால் முடியும். 1892ல் விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் ஒருவார காலம் சொற்பொழிவாற்றியிருக்கிறார். அவ்விழாவில் நாள் தவறாமல் கலந்துகொண்ட மனோன்மணியம் சுந்தரனார், விவேகானந்தரின் பேச்சில் ஈர்க்கப்பட்டிருக்கிறார். விவேகானந்தரின் சொற்பொழிவில் கட்டுண்ட சுந்தரனார், விவேகானந்தரை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்திருக்கிறார். விருந்தில் கலந்துகொண்ட விவேகானந்தர் என்ன காரணத்தினாலோ சுந்தரனாரைப் பார்த்து ஒரு சர்ச்சைக்குரிய கேள்வியைக் கேட்டுவிடுகிறார்.

சர்ச்சைக்குரிய கேள்வி என்றால் அது, துறவியின் வாயிலிருந்து வரக்கூடாத கேள்வி. சுந்தரனாரைப் பார்த்து விவேகானந்தர், “நீங்கள் என்ன கோத்திரம்..?” என்றதுதான் அக்கேள்வி. சாதி, மத, கோத்திர வேறுபாடுகளைக் கடந்த ஒருவரே துறவி என்னும் நிலையை எய்த முடியும். அதிலும், எல்லாவற்றையும் கடந்த முற்போக்கு மனமுடைய விவேகானந்தரிடமிருந்து அப்படியொரு கேள்வியை சுந்தரனார் எதிர்பார்க்கவில்லை.

எதிர்பார்க்காத இடத்திலிருந்து கேட்கக்கூடாத கேள்வி வந்த பிறகும், நிதானமிழக்காத சுந்தரனார் “தன்மானம் காக்கும் தென்னாட்டு திராவிட கோத்திரம்...” என்று பதிலளித்திருக்கிறார். ஆன்மிக குருவாக அறியப்படும் விவேகானந்தர், “அப்படியெல்லாம் சுந்தரனாரைக் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை...” என்று சிலர் வாதிடலாம். உண்மையில், கோத்திரம் அறியும் புத்தியுடன் விவேகானந்தர் இக்கேள்வியைக் கேட்கவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், அப்போதிருந்த காலச்சூழல் எத்தகையது என்பதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அக்கேள்வி ஏற்படுத்துகிறது.

இரண்டுபேருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மேதைகள். ஒருவருக்கு இன்னொருவரைத் தாழ்த்தும் எண்ணம் அறவே இருந்திருக்க வாய்ப்பில்லை. கால தேச வர்த்தமான இயல்புகளின்படியே அவரும் கேட்டிருக்கிறார், இவரும் பதிலளித்திருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய சுந்தரனாரின் வாழ்க்கைக் குறிப்பில் இச்செய்தி இடம்பெற்றிருக்கிறது. இச்சம்பவத்தை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில் குறிப்பிட்டுப் பேசிய தமிழன்பன், விவேகானந்தரையும் சுந்தரனாரையும் பேதமில்லாமல் பாராட்டி, ஒரு கருத்து எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை விளக்கியிருக்கிறார்.

1913ல் நோபல் பரிசு பெற்ற தாகூர், அப்பரிசைப் பெற்றுக்கொண்டு உரையாற்றியபோது, “இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள், திராவிடர்கள் வாழ்கிறார்கள்...” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மத அடிப்படையில் பலரும் வாழ்வதாகச் சொல்ல விரும்பிய தாகூர், தமிழர்களையும் திராவிடர்களையும் தனித்துக் கூறியதில் உள்ள புரிதலை தமிழன்பனின் வார்த்தையிலிருந்தே நான் தெரிந்துகொண்டேன்.

இத்தனைக்கும் “கவிதையே என்னுடைய சமயம்...” என்றவர்தான் தாகூர். தமிழர்களும் திராவிடர்களும் தனி சமயம் என்று தாகூர் சொல்லியிருப்பாரோ என்னவோ? தமிழன்பன், பாப்லோ நெருடாவை பாரதிதாசனுடன் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை ஒன்றுக்கு, கடும் எதிர்ப்பை ‘இந்தியா டுடே’ பத்திரிகை வெளியிட்டது. உலகக் கவிஞரை உள்ளூர் கவிஞருடன் ஒப்பிட்டுவிட்டதாகவும், பாப்லோ நெருடாவின் உயரத்தில் பாரதிதாசனா? என்பது போலவும் எழுதப்பட்ட அக்கட்டுரையின் இறுதியில், கவிதை குறித்து எதுவுமே தெரியாதவர் தமிழன்பன் என்று எழுதப்பட்டிருந்தது.

தமிழன்பனுக்கு எதுவும் தெரியாது என்பதல்ல கட்டுரையாளரின் பிரச்னை. பாரதிதாசனை பாப்லோ நெருடா அளவுக்கு உயர்த்துகிறாரே என்பதுதான் சம்பந்தப்பட்ட கட்டுரையாளரின் நமைச்சல். பாரதியை ஏற்றுக்கொள்பவர்கள் பாரதிதாசனை மறுப்பதும், பாரதிதாசனைப் பின்பற்றுகிறவர்கள் பாரதியை விமர்சிப்பதும் தொடர்ந்து வருவதைப்போலத்தான் இதுவும். உலகக் கவிஞர்கள் யாரோடும் தமிழ்க் கவிஞர்கள் சமத்து இல்லையென்கிற எண்ணம் ஒருசில பத்திரிகைக்காரர்களிடம் இருந்து வருகிறது. இதுகுறித்து நேரடியாகவே ஒருமுறை தமிழன்பனிடம் கேட்டிருக்கிறேன்.

‘‘பாரதியையும் பாரதிதாசனையும் ஒரே அளவுகோலால் அளப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்..?’’ என்றதற்கு, “ஒவ்வொரு கவிஞனுக்கும் மூன்று நிலைகள் உண்டு. முதல்நிலை, தனக்கு முன்னே இருப்பவரின் பாதிப்பில் எழுதுவது. இரண்டாவது நிலை, தனித்து எழுதுவது. அதாவது, தனித்தன்மையான எழுத்துமுறையை ஏற்படுத்துவது. மூன்றாவது நிலைதான் முக்கியமானது. அது, தனித்தன்மையுடன் எழுதும் தன்னைப்போல தனக்குப் பின்னால் வருபவர்களை எழுதத் தூண்டுவது. இந்த மூன்று நிலைகளையும் எவரெல்லாம் எட்டிப் பிடிக்கிறார்களோ, அவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்...” என்றார்.

“அளவுகோல்களை ஒரே மாதிரியாக வைத்துக்கொண்டால் எவரையும் சரியாக அளவிட முடியாது. காலமும் சூழலும் அரசியலும் என்ன அளவுகோல்களைத் தருகின்றனவோ அதை வைத்தே படைப்பாளிகள் அளக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, குழு வாதத்தை, குறுங்குழு வாதத்தை வைத்துக்கொண்டு அளந்தால், தமிழ்ப் படைப்பாளர்களில் ஒருவர்கூட தேறமாட்டார்கள்...” எனவும் தெளிவுபடுத்தினார்.

“முதல் நிலையில் பாரதிதாசன், பாரதியைப் போலவே எழுதிப் பழகினார். அடுத்தடுத்த நிலைகளில் கொள்கை சார்ந்தும் கோட்பாடு சார்ந்தும் அரசியல் சார்ந்தும் மாறுபடுகிறார். இந்த மாறுபாட்டை உள்வாங்கிக் கொள்ளாமல் பாரதியையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டு விமர்சிப்பது ஏற்புடையதல்ல...” என்பதே அவர் எப்போதும் சொல்வது. “ஒருவரை இன்னொருவருடன் பொருத்திப் பார்க்கலாம். ஆனால், அந்தப் பொருத்தப்பாட்டில் குறைகாண்பது முறையல்ல. ஒருவருக்கு ஒன்று வாய்த்திருக்கிறது என்றால் அது, அவருடைய ஆற்றலால் மட்டுமே விளைந்ததல்ல. காலத்தாலும் சூழலாலும் கிடைத்ததென்று எண்ணினால்தான் கணக்கு நேராகும்...” என்பதை பல மேடைகளில் வலியுறுத்தியிருக்கிறார்.

(அடுத்த இதழில் முடியும்)
 
ஓவியங்கள்: மனோகர்