12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு!‘அம்மி அம்மி அம்மி மிதிச்சு... அருந்ததி முகம் பார்த்து...’ எனத் தொடங்கும் ‘மெட்டி ஒலி’ சீரியலின் டைட்டில் பாடலை இப்போதும் பாடி, ரசித்துக்  கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். அந்தளவுக்கு மெகா ஹிட் அடித்த சன் டிவி சீரியல் அது. 2002ம் ஆண்டு தொடங்கி, 2005ம் ஆண்டு வரை  பரபரவென ஒளிபரப்பான அச்சீரியல் வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களின் ரீ யூனியன்  போல சமீபத்தில் ‘மெட்டி ஒலி’ குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஜமாய்த்திருக்கிறார்கள்.

‘மெட்டி ஒலி’யின் நாயகன் கோபியாக அசத்திய இயக்குநர் திருமுருகன், போஸ்வெங்கட், டெல்லிகுமார், திருச்செல்வம், விஜயராஜ், அருணாதேவி,  சாந்தி வில்லியம்ஸ், காவேரி, காயத்ரி, வனஜா, உமா, ரேவதி, சேத்தன், விஷ்வா, ராஜ்காந்த், சஞ்சீவ், வசனம் எழுதிய பாஸ்கர் சக்தி, திரைக்கதை  எழுதிய சி.யு.முத்துசெல்வன் உட்பட அனைவரும் இதில் பங்கேற்றதுதான் ஹைலைட்.  ‘‘எனக்கு ‘மெட்டி ஒலி’ ரொம்பவே ஸ்பெஷல் தொடர். நான்  முதன்முதலா இயக்கின மெகா தொடர் அது...’’ பூரிப்புடன் பேச ஆரம்பித்தார் இயக்குநர் திருமுருகன்.

‘‘இந்தத் தொடரை பண்றதுக்கு முன்னாடி அப்ப ஒளிபரப்பாகிட்டிருந்த அத்தனை சீரியல்களையும் கவனிச்சேன். கதைக்கும், காட்சிக்கும்  தேவையில்லாத பிரமாண்ட பேக்ரவுண்ட்ஸ் அதுல இருந்தது. மாசம் அஞ்சாயிரம் சம்பளம் வாங்கற ஒருத்தனோட வீட்டை மாளிகை மாதிரி காட்டினா  லாஜிக் இடிக்காதா? நடுத்தர வர்க்க பெண்களோட பிரச்னைதான் ‘மெட்டி ஒலி’ மையம். நானும் மிடில் க்ளாஸ்தான். அதனால அந்த இயல்பை மாறாம  சொல்லணும்னு முடிவு பண்ணினேன். மேற்கு மாம்பலத்துல பார்த்த ஒரு ஒண்டுக்குடித்தன வீடு கதைக்கு பொருத்தமா இருந்தது.

சின்ன ஹால். அதையொட்டி இன்னும் குட்டியூண்டு கிச்சன். இதே மாதிரி அடுத்தடுத்து வீடுகள்னு லோயர் மிடில் கிளாஸ் சோகத்தை அந்த  லொகேஷனே பாதி உணர்த்திடுச்சு. இதுக்குள்ள லைட்டிங் செட் பண்றது கஷ்டம். ஆனா, கேமராமேன் சேவிலோராஜா இந்த சவால்ல பிரமாதமா  ஜெயிச்சார். இந்தத் தொடர் ஒளிபரப்பானபோதே பல நல்ல விஷயங்கள் நடந்தது. ஆமா... எனக்கு, போஸ் வெங்கட், ஒளிப்பதிவாளர் சேவிலோராஜா  மூணு பேருக்கும் கல்யாணம் நடந்தது. தொடர்ல உதவி, துணை இயக்குநர்களா ஒர்க் பண்ணின திருச்செல்வம், விக்ரமாதித்தன், சுந்தரமூர்த்தி மூணு  பேரும் இப்ப பிசி டைரக்டராகி இருக்காங்க.

டைட்டில் பாடலுக்கு நடனம் அமைச்ச கந்தாஸ், ‘காதல்’ படத்துக்குப் பிறகு ‘காதல்’ கந்தாஸ் ஆனார். அதுல நடனமாடின சாந்தி, டான்ஸ் மாஸ்டர்  ஆனாங்க. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...’’ என்ற திருமுருகனுக்கு அகத்தியா என்ற மகளும், ராமானுஜன் என்ற  மகனும் இருக்கிறார்கள். இவரது  மனைவி ஜோதி, இப்போது அவர்களது  புரொடக்‌ஷன் கம்பெனியான ‘திரு பிக்சர்ஸை’ கவனித்து வருகிறார். சரி... ரீ யூனியன் ஐடியா எப்படி  வந்ததாம்? கேட்டதும் பரவசமானார் திருமுருகன். ‘‘சக்சஸான மெகா தொடர் முடிஞ்சு 12 வருஷங்களான பிறகு அதுல நடிச்சவங்க இப்ப எப்படி  இருப்பாங்கனு தெரிஞ்சுக்க எல்லாருக்கும் ஓர் ஆசை இருக்கும்.

அந்த ஆசை எனக்கும் இருந்தது. ‘மெட்டி ஒலி’ தொடங்கினப்ப அதுல நடிச்ச எல்லாருமே புதுமுகங்கள். அஞ்சு வருஷங்கள் அவங்களோட ட்ராவல்  ஆனதால புதுகுடும்பமே கிடைச்சது. அப்புறம் ‘நாதஸ்வரம்’ வழியா இன்னொரு குடும்பம். இடைல படம் இயக்க முயற்சி பண்றப்ப ‘குலதெய்வம்’  சீரியலை தயாரிச்சேன். அது இன்னொரு குடும்பம். இப்ப ‘கல்யாண வீடு’ சீரியல் களைகட்டப் போகுது. இதுல ஒருசிலர் தவிர மத்த எல்லாரும்  புதுமுகங்கள். இந்த புதுக்குடும்பத்தை பார்க்கிறப்ப முதல் ஃபேமிலியான ‘மெட்டி ஒலி’ நினைவு வந்தது. அந்த குடும்பத்துல போஸ் வெங்கட்டை  மட்டும்தான் அடிக்கடி சந்திச்சுட்டிருந்தேன். ஒருநாள் பேச்சு வாக்குல ரீ யூனியன் ஐடியாவை சொன்னேன். அதாவது நான் கோடு போட்டேன்.

அவர் தங்க நாற்கர சாலையே அமைச்சு எல்லாரையும் அசெம்பிள் பண்ணிட்டார்! என்னை நெகிழ வைச்சது என்ன தெரியுமா? இத்தனை  வருஷங்களாகியும் யாரும் தங்களோட கேரக்டர் பெயரை மறக்கலை! ‘கோபி சார் வி ஆர் ரியலி ஹேப்பி...’, ‘தனம் எப்படியிருக்கே?’, ‘சரோ என்ன  பண்றே?’, ‘சிதம்பரம் அப்பா இன்னும் அப்படியே அசத்துறீங்க?’, ‘லீலா இப்ப எங்க இருக்கீங்க? அதே வீடுதானா?’, ‘போஸ், செல்வம், ரவி, இளங்கோ...  எல்லாருமே படங்கள்ல பிசியாகிட்டீங்க போல..’, ‘ராஜம் அம்மா காஃபி சாப்பிடுங்க...’னு கேரக்டர் பேரைச் சொல்லியே எல்லாரும் நலம் விசாரிச்சாங்க!  டைட்டில் சாங்குக்கு எல்லாரும் சேர்ந்து டான்ஸ் ஆடினோம்.

‘மெட்டி ஒலி’ல அவங்கவங்க பேசின முதல் டயலாக் நினைவுல இருக்கானு போட்டி வைச்சு அப்புறம் அதே வசனத்தை டெலிகாஸ்ட் பண்ணினோம்.  வழக்கம் போல அஞ்சு சகோதரிகளும் (தனம், சரோ, லீலா, விஜி, பவானி) தனியா உட்கார்ந்து ஊர்க்கதை, உலகக்கதைனு மனம்விட்டு பேசினாங்க. 12  வருஷ கதைகளாச்சே! கடைசியா கிளம்பறப்ப ‘மெட்டி ஒலி’ பார்ட் 2 எப்பனு கேட்டாங்க. எனக்குதான் அதுல உடன்பாடு இல்ல.

ஒரிஜினல் இப்பவும் மக்கள் மனசுல இருக்கு.அது அப்படியே இருக்கறதுதான் நல்லது! ஆனா, இதே குடும்பத்தை வைச்சு வேற சீரியல் எடுக்கலாம்னு யோசிக்கறேன். இந்த ரீ யூனியன்ல எமோஷனலா இருந்தது சாந்தி வில்லியம்ஸ் அம்மாவும், டெல்லி குமார் சாரும்தான். ரெண்டு பேருமே ‘உங்கள எல்லாம் பாத்து எவ்ளோ  வருஷங்களாச்சு’னு கண்கலங்கினாங்க...’’ சொல்லும்போதே திருமுருகனின் குரலும் தழுதழுக்கிறது.  மெட்டி ஒலி... மெட்டி ஒலி...

மை.பாரதிராஜா