விவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்!‘‘சரியான சூழல் அமைஞ்சு சின்சியரா படிச்சா யார் வேணாலும் ஐஏஎஸ் ஆகலாம். ஆனா, இங்க லட்ச லட்சமாக செலவு செஞ்சு கோச்சிங் சென்டர்ல  போய் படிச்சாதான் கலெக்டர் ஆக முடியும்னு ஒரு மாயை இருக்கு. இதை தகர்ப்பதுதான் எங்க முதன்மையான நோக்கம்...’’ குணசேகரனின் குரலில்  ஆக்ரோஷம் தெறிக்கிறது. எஞ்சினியர், சென்னையின் பிரபல ஐஏஎஸ் அகாடமி ஒன்றில் பகுதி நேரப் பயிற்சியாளர் என்று பன்முகங்களுடன் இயங்கும்  கல்வி சேவகர். ‘‘சொந்த ஊர் செய்யாறு. ஈரோடு ஐஆர்டிடில எஞ்சினியரிங் படிச்சேன். காலேஜுக்குப் பக்கத்துல ஒரு முதியோர் இல்லம் இருந்துச்சு.  நண்பர்களுடன் அடிக்கடி அங்க போவேன்.

அந்த இடம் வயதானவங்களுக்கு ஏத்த மாதிரி வசதியா இல்ல. ‘பணமில்லாமத்தான் வேற இடத்துக்குப் போக முடியாம இங்கயே கிடக்கறோம்’னு  தாத்தாக்களும் பாட்டிகளும் வருத்தத்தோட சொல்வாங்க. எங்ககிட்ட ‘ஏதாவது உதவி செய்ய முடியுமா’னு கேட்டாங்க. ‘நம்ம காலேஜ்ல 1500 பேர்  படிக்கிறாங்க. ஆளுக்கு 10 ரூபா போட்டாலே 15,000 ரூபா வருமே’னு நண்பன் ஒருவன் சொன்னான். உடனே பிரின்சிபலிடம் விஷயத்தைச்  சொன்னோம். ஆரம்பத்துல அவர் சம்மதிக்கல. விடாப்பிடியா பேசி அவரை சம்மதிக்க வச்சோம். பணம் கலெக்ட் பண்ண ஒரு கல்ச்சுரல் ஷோவை ரெடி  பண்ணினோம். ஷோ பாக்க 10 ரூபா டிக்கெட். ஆனா, எவ்வளவு வேணா கொடுக்கலாம்.

ரூ.50 ஆயிரம் கலெக்ட் ஆச்சு. அந்த தாத்தா பாட்டிகளை வரவழைச்சு ஷோ நடந்த மேடைலயே அந்தப் பணத்தை கொடுத்தோம். பிரின்சிபல்  எங்களைக் கூப்பிட்டு, ‘நல்லது பண்றீங்க... அதை ஏன் நமக்குள்ள உதவி தேவைப் படுறவங்களுக்கு பண்ணக்கூடாது. நம்ம பசங்களுக்காக ஏதாவது  யோசிங்க’னு சொன்னார். உடனே ‘ஸ்டூடண்ட்ஸ் வெல்ஃபேர் பவுண்டேஷன்’னு ஓர் அமைப்பைத் தொடங்கினோம். அடுத்த வருஷமே 75,000 ரூபா  கலெக்ட் ஆச்சு. பீஸ் கட்ட முடியாத எங்க பசங்களுக்கு அந்தப் பணத்தைப் பிரிச்சுக் கொடுத்தோம். இதெல்லாம் நடந்து 15 வருஷங்களாச்சு. இப்பவும்  ஐஆர்டிடில இத்திட்டம் இயங்கிட்டு இருக்கு.

இந்த கான்செப்ட்டை எல்லா காலேஜுக்கும் கொண்டு போனா கல்விக்கடன் வாங்க வேண்டிய அவசியமே யாருக்கும் இருக்காது...’’ கல்லூரிக் கால  நிகழ்வுகளை அசைபோட்ட குணசேகரன், சமீபத்தில் செம்மண் மணம் வீசும் செய்யாறில் ‘சபர்மதி ஆஃப் சவுத்’ என்ற பயிற்சி மையத்தை  நிறுவியிருக்கிறார். யூ.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., வங்கித் தேர்வு உட்பட பல அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் இங்கு புதுமையான  முறையில் வழங்கப்படுகின்றன. ‘‘படிப்பை முடிச்சு வேலைக்குப் போன பிறகு ‘ஸ்மைல் வெல்ஃபேர் பவுண்டேஷன்’ அமைப்பை ஆரம்பிச்சோம்.

அனாதை இல்லங்களுக்குப் போய் பாடம் நடத்துவது, அவங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்வது, காலேஜ் ஸ்டூடண்ட்ஸை படிக்க வைப்பது,  ஸ்கூல் பசங்களுக்காக ஆளுமைத் திறன் பயிற்சிகள் வழங்குவதுனு இப்பவும் இயங்கிட்டு இருக்கோம். இதுவரைக்கும் 500 பசங்களைப் படிக்க  வச்சிருக்கோம். கஷ்டப்பட்டு பசங்களைப் படிக்க வைக்கறோம். ஆனா, அவங்களுக்குச் சரியான வேலை கிடைக்கறது இல்ல. படிக்க வைக்கறது  பிரச்னையில்ல. வேலையை செட் பண்றதுதான் ரொம்ப முக்கியம்னு புரிஞ்சுது. உண்மையைச் சொன்னா வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குற  திறன் இப்ப இருக்குற கல்லூரிகள்ல சுத்தமா இல்ல.

அதனால அரசுப் போட்டித் தேர்வுகள் சார்ந்து வேலை செஞ்சா நல்ல மாற்றம் ஏற்படும்னு நம்பினோம். இப்படி உருவானதுதான் ‘சபர்மதி’’’ என்றவர்  இன்றைக்கு அரசுப் போட்டித் தேர்வுகளை எழுதுகிறவர்கள் சந்திக்கிற சிக்கல்களையும் பகிர்ந்தார். ‘‘பத்து லட்சம் பேர் தேர்வு எழுதுனா ஆயிரம்  பேர்தான் செலக்ட் ஆவாங்க. அஞ்சு வருஷம், ஆறு வருஷம்னு பல பேர் தொடர்ந்து எழுதிட்டே இருப்பாங்க. ஒரு கட்டத்துல தங்களால முடியாதுனு  வேற வேலைக்குப் போயிடுவாங்க. அவ்வளவு வருஷம் அவங்க பட்ட கஷ்டம் எல்லாம் வீணாப்போகும்.

இன்னைக்கு சென்னையில மட்டும் ஒரு லட்சம் பேர் அரசுப் போட்டித் தேர்வுகளுக்காகப் படிக்கறாங்க. உணவு, தங்க இடம், கட்டணம்னு  ஓவ்வொருத்தரும் குறைந்தபட்சம் மாசம் 10,000 ரூபா செலவழிக்கிறாங்க. ஆனா, நிம்மதியா உக்கார்ந்து படிக்கறதுக்கு இடம் இருக்கானு கேட்டா  இல்லை. உண்மைல ஸ்டடிக்கான இடமே சென்னையில இல்ல. இதுல பல பேருக்கு வீட்ல இருந்து சரியான ஆதரவு கிடைக்காது. அதனால  அவங்களால முழு ஈடுபாட்டோட படிக்க முடியாது...’’ வருந்துகிற குணசேகரன் இதற்கு மாற்றாக உருவாக்கியிருக்கும் ‘சபர்மதி’யைப் பற்றி விவரித்தார்.  ‘‘முதல்ல படிக்க அமைதியான சூழல். அதுக்கு இயற்கை வெளில இடம் வேணும்.

அடுத்து சாப்பாடு. அப்புறம் நல்ல நூலகம். இதையெல்லாம் சபர்மதி  நிறைவு செய்யுது. எங்க மையம் அஞ்சு ஏக்கர் பரப்பளவுல விரிஞ்சு கிடக்கு.  படிக்க வர்றவங்க எங்க வேணா குடிசை போட்டுத் தங்கிக்கலாம். எங்க வேணா உக்கார்ந்து படிக்கலாம். நல்ல இயற்கை உணவும் கிடைக்கும்.  இதுக்கான எல்லா வசதிகளையும் செய்திருக்கோம். போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய ஒரு நூலகம் இருக்கு. அதையும் இலவசமா  பயன்படுத்திக்கலாம். கல்வி வியாபாரம் ஆகிடக்கூடாது, பெற்றோர்களுக்கு பாரமா இருக்கக்கூடாது. அதே நேரத்துல இலவசமாவும் கொடுக்கக்கூடாது.

இதுக்கு சரியான தீர்வு நம் முன்னோர்கள் கிட்டதான் இருக்கு. ஆமா; குருகுல முறையைத்தான் இங்க கடைப்பிடிக்கிறோம். ஒரு பானை வச்சிடுவோம்.  குருதட்சணையா பணம், பொருள்னு என்ன வேணாலும் அதுக்குள்ள போடலாம்...’’ என்றவர் மற்ற பயிற்சி மையங்களிலிருந்து ‘சபர்மதி’ எப்படி  வேறுபடுகிறது என்பதைப் பட்டியலிட்டார். ‘‘எங்க மையத்துல தங்கிப் படிக்க விரும்புறவங்க உணவு, தங்குமிடத்துக்கு மட்டும் மாசம் 2,000 ரூபாயை  கட்டணமா செலுத்தணும். பணமா கொடுக்க முடியாதவங்களுக்கு ரெண்டு வழிகளை அறிமுகப்படுத்தி இருக்கோம்.

ஒண்ணு இயற்கை விவசாயம். ஒவ்வொரு அஞ்சு மாணவர்களுக்கும் ஒரு ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்துக் கொடுத்திருக்கோம். அவங்க தினமும்  அந்த நிலத்துல ரெண்டு மணி நேரம் விவசாயம் செய்யணும். சாணி அள்ளணும். கோழி, மாடு, வாத்துகளை பராமரிக்கணும். இதுக்கான பயிற்சியை  தம்பி ராஜவேந்தன் அளிக்கிறார். இப்ப 30 மாணவர்கள் விவசாயம் செஞ்சிட்டே படிக்கறாங்க. ரெண்டாவது வழி பக்கத்துல இருக்குற கிராமத்துக்குப்  போய்  ஒண்ணு முதல் பிளஸ் டூ வரை படிக்கிற மாணவர்களுக்கு மாசத்துக்கு 25 நாட்கள் டியூஷன் எடுக்கணும்.

அந்த மாணவர்கள் எல்லோரும் ‘ஸ்மைல் வெல்ஃபேர்’ மூலமா படிக்கறவங்க. போட்டித் தேர்வுகள்ல வெற்றி பெறணும்னா ஆறு முதல் பிளஸ் டூ  வரையிலான பாடங்கள்ல அத்துப்படியா இருக்கணும். டியூஷன் எடுக்கறது அதுக்கு உதவியா இருக்கும். பெண்களுக்கும் இதே ரூல்தான். ஆனா,  அவங்க தங்கறதுக்கு மட்டும் பக்கத்து கிராமத்துல வீடு எடுத்து தந்திருக்கோம். இப்ப ‘சபர்மதி’யில 120 பேர் போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகிட்டு  வர்றாங்க. எங்க மையத்திலிருந்து வெளியே வர்ற மாணவன் கலெக்டரா மட்டுமல்லாமல் நல்ல விவசாயியாகவும் இருப்பான்...’’ பெருமிதத்தோடு  முடித்தார் குணசேகரன்.

த.சக்திவேல்