காட் ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா- 53

நதிக்கரைகளில் மனித குலம் நாகரிகம் அடைவதற்கு முன்பு காடுதான் அவனது வீடு. இன்றும்கூட தனக்கு ஆபத்து என்றால் மறைந்து தன் உயிர்  காத்துக்கொள்ள காடுகளுக்குத்தான் ஓடுகிறான். போதை உலகின் பேரரசன் மட்டும் விதிவிலக்கா என்ன? தென்னமெரிக்கா, அடர்ந்த காடுகளுக்கு பேர்  போனது. நாட்டில் பிரச்னை என்றால், காடுகளுக்குள் தஞ்சமடைவதுதான் அங்கே வழக்கம். அரசுக்கு எதிரானவர்கள் அத்தனை பேரும் அதனால்தான்  காடு குறித்த அறிவை முழுமையாக அடைந்திருந்தார்கள். காட்டினைத் தேடி தஞ்சமடைந்தவனைத் தேடிப் போய் வலை வீசுவது என்பது கொல்லன்  பட்டறையில் குண்டூசியைத் தேடுவது போல.

அடர்ந்த காடுகளில் தொழிற்சாலைகள் மட்டுமின்றி சிறியளவிலான பண்ணை வீடுகளையும் ஆங்காங்கே அமைத்திருந்தார் பாப்லோ. ‘பேரட்’ என்று  பெயர் வைத்திருந்த பண்ணை வீடு ஒன்றினில் பாப்லோ எஸ்கோபார், அவருடைய சகோதரர் ராபர்ட்டோ, பாப்லோவின் மைத்துனன் மரியோ  ஹெனாவ், நெருங்கிய சகா ஜார்ஜ் ஓச்சா மற்றும் ஓச்சாவின் மனைவி ஆகியோர் சில காலம் தங்கியிருந்தனர். பேரட் பண்ணையில் எல்லாவிதமான  வசதிகளும் இருந்தன, சுதந்திரத்தைத் தவிர. அதிகபட்சமாக காட்டின் எல்லை வரை இவர்களது நடமாட்டம் இருக்கலாம்.

காட்டை விட்டு வெளியே வந்தால் வேட்டையாட காவல்துறையும், ராணுவமும் இரவும் பகலுமாகத் திரிந்து கொண்டிருந்தன. நாட்டில் என்ன  நடக்கிறது என்பதையே டிவி செய்திகள் வழியாகத்தான் பாப்லோ அறிந்து கொண்டிருந்தார். பாப்லோவின் சகோதரர் ராபர்ட்டோவுக்கு இரவுநேர  பாதுகாப்புப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே, அவர் பிற்பகல் 3 மணிக்கெல்லாம் தூங்கப்போய் விடுவார். நடுநிசியில் அவர் விழித்தெழிந்த பிறகுதான்  பாப்லோ, ஓச்சா, மரியோவெல்லாம் தூங்கப் போவார்கள். பண்ணை வீட்டைச் சுற்றிலும் ஏராளமான பாதுகாவலர்களை மூன்று ஷிப்ட் பணி போட்டு  அமர்த்தியிருந்தாலும், தங்களில் யாராவது அவர்களை மேற்பார்வை செய்ய விழித்துக் கொண்டிருப்பது அவசியம் என்பது பாப்லோவின் ஏற்பாடு.

ஒருநாள் அதுபோல நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு விழித்தெழுந்த ராபர்ட்டோ, சுரத்தில்லாமல் காணப்பட்டார். அண்ணனுடைய அகத்தின் அழகை  முகத்தில் கண்டுவிட்ட பாப்லோ கேட்டார். “என்னாச்சு ராபர்ட்டோ? அண்ணியைப் பிரிஞ்சு பசலை நோய் வந்துடிச்சா?” “அதெல்லாம் ஒண்ணுமில்லை.  எனக்கென்னவோ உடனே இந்த இடத்தை நாம காலி பண்ணணும்னு தோணுது...” “ஏன்? இங்கே நல்லா வசதியாதானே இருக்கோம்? போலீஸோ  மிலிட்டரியோ இந்த இடத்துலே கால் வைக்கவே முடியாத அளவுக்கு பக்காவா செக்யூரிட்டி போட்டிருக்கோமே?” “இல்லை.

இங்கே போலீஸ் வரப்போவுது…” “யார் சொன்னா? உனக்கு ஏதாவது தகவல் வந்ததா?” “இல்லை. உள்ளுணர்வு சொல்லுது…” “உளறாதே…”  “இல்லைடா தம்பி. அம்மா எப்பவுமே சொல்லும். கனவுலே பாதிரியார் வந்து எதை சொன்னாலும், அது நனவுலேயும் நடக்குமாம். என் கனவுலே ஒரு  ஃபாதர் வந்து, ‘தப்பிச்சி ஓடிடுங்க’னு திரும்பத் திரும்பச் சொன்னாரு…” பாப்லோ, வாய்விட்டுச் சிரித்ததோடு இல்லாமல் ஓச்சா மற்றும்  அங்கிருந்தவர்களிடம், “எங்க அண்ணனுக்கு கனவுலே வந்து உம்மாச்சி கண்ணைக் குத்திச்சாம்...” என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தார். ஆனால் -  ராபர்ட்டோ, அங்கிருந்த ஆட்களிடம் சென்று உஷார் செய்தார்.

“அனேகமா இன்னைக்கு நைட்டு நாம இடம் மாற வேண்டியிருக்கலாம். தேவையான அளவு சாப்பாடு, உடையெல்லாம் பேக் பண்ணி ரெடியா வைங்க.  எப்போ வேணும்னாலும் நாம திடீர்னு தப்பிக்க வேண்டியிருக்கும்...” பேரட் பண்ணை, காட்டுக்கு நடுவில் மட்டுமின்றி கோகோர்னா நதியின் ஓரத்திலும்  அமைந்திருந்தது. அவர்கள் தப்பிக்க வேண்டியிருந்தால், அதற்காக படகுகளும் தயார் நிலையில் இருந்தன. காட்டைச் சுற்றியும் ஆங்காங்கே பண்ணை  வீடுகள் இருந்தன. காட்டுக்குள் போலீஸோ அல்லது அடையாளம் தெரியாத யாராவதோ நுழைவதாக இருந்தால், அந்தந்த பண்ணை வீடுகளில் இருந்து  பேரட் பண்ணைக்கு போன் செய்து எச்சரிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அன்று காலை 6 மணிக்கு போன் வந்தது. “போலீஸ் டிரக்குகள் காட்டுக்குள் நுழைகின்றன. நூற்றுக்கணக்கானவர்கள் கையில் ஆயுதங்களோடு  இருக்கிறார்கள். ஹெலிகாப்டர் சப்தமும் கேட்கிறது. உடனடியாக தப்பித்துச் செல்லுங்கள்...” தொலைபேசித் தகவலைக் கேட்ட பாப்லோ  அனைவருக்கும் கேட்கும்படி எச்சரிக்கை அலாரம் அடித்தார். பண்ணை வீட்டுக்கு முன்பாக அங்கிருந்தவர்கள் அனைவரும் கூடினார்கள். “போலீஸ்..  போலீஸ்… எல்லாரும் கிளம்ப வேண்டும். அவசியமானதை மட்டும் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்...” சொல்லிவிட்டு ராபர்ட்டோவை வினோதமாகப்  பார்த்தார். ‘உனக்கு எப்படி முன்னமே தெரியும்? ஒருவேளை நீதான் போலீஸுக்கு தகவல்…’ என்பது மாதிரி இருந்தது அந்தப் பார்வை.

ராபர்ட்டோ சங்கடமாக அவரை நோக்க, அதற்குள்ளாக தலைக்கு மேலே ஹெலிகாப்டர்களின் சப்தம் கேட்டது. “கொசுக்கள் ரீங்கரிக்க ஆரம்பிச்சிடிச்சி...”  என்று முணுமுணுத்தார் பாப்லோ. போலீஸையும், ராணுவத்தையும் அவர் கொசுக்கள் என்றுதான் குறிப்பிடுவார். “ஓடுங்க…” நாலாபக்கமும்  எல்லோரும் சிதறி ஓட, ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டிருந்த மெஷின்கன்கள் இலக்கில்லாமல் தோட்டாக்களைத் துப்ப ஆரம்பித்துவிட்டன.  ஆற்றுக்கு ஓடி, படகில் தப்பிக்க சந்தர்ப்பம் அமையவில்லை. இவ்வளவு விரைவாகத் தங்களை எட்டிவிடுவார்கள் என்று யாருமே கணிக்கவில்லை.  ஓடிக்கொண்டிருந்த பாப்லோவின் ஆட்களும் ஹெலிகாப்டர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.

சிலர் எப்படியோ ஓடி ஆற்றுக்குள் குதித்து நீந்தத் தொடங்கினர். சிலர் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தனர். பாப்லோ, அவரது இரவு உடையில் இருந்தார்.  அவருடைய கால்களில் செருப்புகூட இல்லாமல் இலக்கின்றி ஓடிக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஹெலிகாப்டரை நோக்கி சுடவும் தவறவில்லை.  அடர்ந்த வனம் என்பதால் ஹெலிகாப்டர்களால் அங்கே தரையிறங்க முடியவில்லை. வானத்திலேயே வட்டமிட்டு பொத்தாம் பொதுவாக இலக்கின்றி  சுட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே பாப்லோ தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் இருந்தது. அதே நேரம் காட்டுக்குள் நாலாபுறமும் டிரக்  வண்டிகளில் போலீஸார் இவர்களை முற்றுகையிட ஆரம்பித்தார்கள்.

முன்பு ஒருமுறை தாங்கள் பிடிபடும் வேளை வந்துவிட்டால், அனைவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும்  என்று பாப்லோ சொல்லியிருந்தார். அந்த வேளை வந்துவிட்டது என்று ஓச்சா நினைத்தார். அவர் தன்னுடைய பாயிண்ட் முப்பத்தெட்டு ரிவால்வரை  எடுத்து தலையில் வைக்க, ஓச்சாவின் மனைவி ஓவென்று கதறியழ ஆரம்பித்துவிட்டார். அவ்வளவு நெருக்கடியிலும் இதை கவனித்துவிட்ட பாப்லோ  எஸ்கோபார், பாய்ந்துவந்து ஓச்சாவைத் தடுத்தார். பளாரென்று ஓச்சாவின் கன்னத்தில் ஓர் அறை வைத்தவர், “அதற்கு இது நேரமில்லை.  இம்முறையும் நாம் தப்பிக்கிறோம்...” என்று நம்பிக்கையோடு சொன்னார்.

ஓச்சாவோடு பாப்லோ பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ‘ஆ’வென்ற அலறல் ஆற்றுப் பக்கமிருந்து கேட்டது. “அங்கே என் அண்ணன் ராபர்ட்டோ அல்லவா  ஓடிக் கொண்டிருந்தான்?” என்று கேட்ட பாப்லோ, உடனடியாக சப்தம் வந்த திசையை நோக்கி ஓட ஆரம்பித்தார். வெட்டுண்ட மரம் போல கண் முன்  நெஞ்சு முழுக்க தோட்டாக்களை வாங்கி அவரது மைத்துனன் மரியோ ஹெனாவ் வீழ்ந்தான். ஓடிவந்து அவனைத் தூக்கி தன் மடியில்  கிடத்திக்கொண்டு வாய்விட்டு அழ ஆரம்பித்தார் பாப்லோ. அவர் அழுது அதுவரை யாரும் பார்த்ததில்லை. தங்கள் காட்ஃபாதரே அழுவதைக் கண்ட  அவருடைய பாதுகாவலர்கள் வீறுகொண்டு எழுந்து, மெஷின் கன்னால் தங்களை நோக்கி வந்தவர்கள் மீது துல்லியமான தாக்குதலைத் தொடுத்தார்கள்.

இவர்களது தாக்குதலில் ஒரு ஹெலிகாப்டரே வீழ்ந்தது. பெரும் சப்தத்தோடு வீழ்ந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து, காட்டு மரங்களையும் எரியச் செய்தது.  பாப்லோவின் இன்னொரு முகத்தை அன்றுதான் போலீஸ் கண்டது. ஓர் இராணுவத் தளபதி போல் அந்த நெருக்கடியான முற்றுகையை அவர்  எதிர்கொண்டார். கைக்குண்டுகளை குறிபார்த்து எறியும் லாகவம், துப்பாக்கித் தோட்டாக்களை வீணாக்காமல் எதிரிகளைத் துல்லியமாக போட்டுத்  தள்ளும் வீரமென்று அன்றைய நாள் போரிலும் பாப்லோவுக்குத்தான் வெற்றி. அதற்குக் கொடுத்த விலை, அவருடைய மைத்துனரின் உயிர்.

(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்