கோடைகால பயிற்சிகள்“இது கூட கற்றுக் கொடுக்காம உங்க வீட்ல உங்களை வளர்த்திருக்காங்களே...’’ என்ற இகழ்ச்சியை மனைவியிடம் இருந்து கேட்காத கணவர்களே  இல்லை! இதைத் தவிர்க்க இந்தக் கோடையில் என்னென்ன விஷயங்களை கணவர்கள் கற்கலாம்?

பால் காய்ச்சுவது

மனைவி எழுந்திருப்பதற்கு முன் பால் பாக்கெட்டை கட் செய்து சிந்தாமல் சிதறாமல் பாத்திரத்தில் கொட்டும் வித்தையை இதுவரை எந்த ஆணும்  கற்கவில்லை. வேறுவழியில்லாமல் பாத்திர ஏரியாவைத் தவிர்த்து நான்குபுறமும் சிந்தும் பாலைத் துடைக்க அணிந்திருக்கும் அழுக்கு பனியனைக்  கழற்றி சுத்தப்படுத்தி மனைவி பார்ப்பதற்கு முன் அதை துவைத்து காயப்போட்டு... ஒரு துளி பால் குறைந்தாலும் தன் மோப்ப சக்தியால் மனைவி  உணர்ந்து ‘இதைக் கூட உங்கம்மா சொல்லித் தரலையா...’ என வானத்துக்கும் பூமிக்கும் குதித்து... போதும்.

இந்தத் தவறு இனி வாழ்நாளில் நிகழாமல் இருக்க ‘பாலை சிந்தாமல் பாத்திரத்தில் கொட்டுவது எப்படி’ என்ற இரு வார பயிற்சி வகுப்புக்குச் செல்வதே  நல்லது. இந்த கோர்ஸை ஆவின் நிறுவனமே நடத்தி சான்றிதழ் வழங்கலாம். கூடவே மாட்டின் மடியிலிருந்து நேரடியாக பால் கறக்கும்  பயிற்சியையும் அளித்தால் எட்டி உதைப்பதிலிருந்து காயம் ஏற்படாமல் எப்படி தப்பிப்பது என்பதையும் கணவர்கள் கற்றுக்கொள்வார்கள்!

சார்ஜ் போடுவது

மனைவி பிஸியாக(!) இருக்கும்போது தன் செல்போனைக் கொடுத்து சார்ஜ் போடச் சொல்வார்.  அந்த சமயத்தில்தான் பல குரூப்புகளிலிருந்து ‘குட்  மார்னிங்’ வாட்ஸ் அப்புகள் நமக்கு வந்து விழும் ‘டொய்ங்’ சத்தம் தொடர்ச்சியாகக் கேட்கும்! இதை க்ளியர் செய்தபடியே மனைவியின் செல்லில் சார்ஜ்  ஒயர் சொருகுவோம். அரைமணி நேரம் கழித்து மனைவியின் தோழியிடமிருந்து கால் வரும்.

அப்போதுதான் சார்ஜரின் ஸ்விட்ச் ஆன் செய்யப்படவில்லை என்பதும் பேட்டரி டவுன் ஆகும் ஆபத்தில் இருக்கிறது என்பதும் புரியும். ‘சார்ஜ் போடக்  கூட உங்கம்மா கத்துக் கொடுக்கலையா..?’ என்ற ஏச்சு கிள்ம்பும். இதைத் தவிர்க்க செல்போன் விற்பனைக் கடைகள் சம்மர் கோர்ஸ் நடத்தலாம்.  தினமும் 25 செல்போன்களுக்கு முழுமையாக சார்ஜ் ஏற்ற வேண்டும் என விதிமுறை வகுக்கலாம்.

துணி துவைப்பது

போதாத காலம்... துணி துவைக்கும்போது குடும்பத்தினரின் டிரஸ் பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும் துண்டு சீட்டுகள், சினிமா டிக்கெட்டுகள்  முதல் பழைய ரூபாய் நோட்டுகள் வரை தண்ணீரில் நனைந்து கூழாகி காட்சி அளிப்பது மனைவியின் மேற்பார்வையில் வாஷிங் மெஷினில் இருந்து  துணியை எடுத்து உதறும்போதுதான் வெளிப்படும்! அந்த நொடியில் மனைவியின் உக்கிரப் பார்வையில் வெந்து சாம்பலாவோம்.

இதைத் தவிர்க்க அரசாங்கமே ஆண்களுக்கு கோடை கால ‘தொழில் முறை’ பயிற்சியை லாண்டரிகளில் கொடுக்கலாம்!  தகுதித் தேர்வில் ஒவ்வொரு  ஆண்மகனும் பாக்கெட் வைத்த நூறு ஆடைகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறைந்த பட்சம் நாற்பது ஆடைகளிலிருந்து துண்டு சீட்டுகளை உருவ  வேண்டும் என ஆர்டர் போடலாம்!

ஹோம் ஒர்க் செய்வது

ஈசியான கணக்குகளை வகுப்பில் போட்டுவிட்டு கடினமான கணக்குகளை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடமாகக் கொடுக்கும் ஆசிரியர்கள் இருக்கத்தான்  செய்கிறார்கள். ‘தெரியாது’ என்று சொல்வதற்கு கூச்சப்பட்டு ‘அப்பாவுக்கு ஆபீஸ் வேலை இருக்கு...’ என்று நழுவ ஆரம்பித்தால், ‘அப்பாவுக்கு இந்த  சிம்பிள் கணக்கு கூட தெரியலை...’ என்று குழந்தையும் அம்மாவுடன் சேர்ந்து கிண்டல் அடிக்கும் தருணம் எதிரிக்குக் கூட வரக் கூடாது.

இம்மாதிரி அவமானங்களைத் தவிர்க்க குழந்தையின் அடுத்த வருட வகுப்புக்கான கணக்கு பாடங்களை முன்கூட்டியே கற்கும் பொருட்டு கோடை கால  ட்யூஷன் வகுப்புகளுக்கு ஆண்கள் செல்வது நல்லது. இதிலும் குழந்தை படிக்கும் ஸ்கூலின் கணக்கு ஆசிரியர் பயிற்சி கொடுக்கும் சென்ட்டரையே  தேர்வு செய்வது புத்திசாலித்தனம். கூடவே கடந்த ஆண்டு அந்த வகுப்பில் படித்த மாணவர்களின் ஹோம் ஓர்க் நோட்டை கணிசமான விலையில்  வாங்கி வைத்துக் கொள்வது மனைவி மெச்சிய கணவராகும் நிகழ்வை சாத்தியப்படுத்தும்!

எஸ்.ராமன்