ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி- 72

ஈரோட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சா.கணேசன் பேசியதைக் கொண்டே தமிழன்பன், ‘பாரதிதாசனுக்கு ஏன் ஞானபீடம் வழங்கப்படவில்லை’  என்னும் கட்டுரையை எழுதினார். என்றாலும், மேடையில் பேசிய சா.கணேசன், திராவிட இயக்கத்தவர்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே  இதுவொரு பிரச்சனையாகி விடுமோ... என்றெண்ணி பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அரசியல் இல்லாமல் எழுத்தில்லை. எழுத்துகளில் உள்ள அரசியலைக் காட்டிலும், எழுத்தாளர்கள், கவிஞர்கள் நேரடி அரசியலை எதிர்கொள்ளும்  சிக்கல் இருக்கிறதே, அதுதான் ஒருவருக்கு விருதையும் இன்னொருவருக்கு ஆதங்கத்தையும் தருகிறது. நடந்த நிகழ்வுகளை எழுதும்போதுகூட  நாகரீகத்தைக் கடைப்பிடிக்கும் தமிழன்பனை அந்நூலில் அறியலாம். சா.கணேசன் கருத்தை மாற்றிக்கொண்டார் என்பதைச் சொல்லும்போது, “சமூகச்  சூழல்களை அறிபவர்கள் எளிதாக இதைப் புரிந்துகொள்ளலாம்...” எனத் தாண்டியிருக்கிறார். பாரதிதாசனுக்கு ‘ஞானபீடம்’ வழங்கப்படாமல் போனதற்கு  இராஜாஜியே காரணம் என்று அவர் எங்கேயும் எழுதவில்லை.

காங்கிரஸை திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திராவிட இயக்கத்தை காங்கிரஸைச் சார்ந்தவர்களும் எவ்விதத்தில் எதிர்கொண்டனர் என்பதை  இரண்டே வாக்கியத்தில் முடித்திருப்பார். கொள்கைக்கோலை வைத்தே இலக்கியங்கள் அளக்கப்படுகின்றன. இல்லையென்று ஒப்புக்குத்  தெரிவித்தாலும், ‘சாகித்ய அகாடமி’ விருது விஷயத்தில் தமிழன்பனுக்கும் அதுவே நடந்தது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்திற்கு  அதீத பங்களிப்பு செய்திருக்கும் அவருடைய ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் நூலுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது அறிவிக்கப்பட்டது.

விருது அறிவிக்கப்பட்ட உடனேயே ‘சோ கால்டு’ விமர்சனக் கும்பல்கள், காழ்ப்புணர்வுடன் கருத்துகளை தத்தமது சிற்றிதழ்களில் வெளியிட்டன.  மாற்றுக்கருத்துகளை மட்டையடியாகத் தருவதில் அப்படி என்னதான் சிற்றிதழ் சிகாமணிகளுக்கு விருப்பமோ தெரியவில்லை. பாரதியின் கவிதைப்  போக்கிற்கு மாற்றாக எழுதத் தொடங்கிய அவர்கள், ஒரு கட்டத்தில் பாரதியே ஆகச் சிறந்த கவியென்று ஒப்புக்கொண்டார்கள். சமூக அரசியல்  கருத்தாக்கங்களை எழுதுபவர்கள், படைப்பாளர்களே இல்லை என்னும் போக்கு, தற்போது தமிழில் குறைந்திருக்கிறது.

அல்லது குறைந்தது போன்ற தோற்றம் தெரிகிறது. சமூக ஊடகங்களின் வளர்ச்சியினால் சிற்றிதழ்களுக்கு மவுசு குறைந்திருப்பது  வரவேற்கத்தக்கதல்ல. தமிழன்பனுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தவுடன், அவரையும் அவருடைய ‘வணக்கம் வள்ளுவ’ நூலையும்  வாசித்தறியாத பலபேருடைய வயிற்றெரிச்சலை நானறிவேன். தமிழின் தொடர்ச்சியை இடையறாமல் காப்பாற்றிவரும் அவருக்கு நவீனமாக சிந்திக்கத்  தெரியவில்லை என்பது அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று. வள்ளுவரை எழுதினால் நவீனமில்லை என்பதுதான் அவர்கள் கண்டுபிடித்த  புதுமை. வடிவங்களிலும் இலக்கிய வகைமைகளிலும் பல புதுமைகளை உருவாக்க அவர் உழைத்திருக்கிறார்.

திராவிட இயக்கச் சார்பை  ஆரம்ப நாளில் இருந்தே கொண்டுள்ள அவர், தமிழ்ச் சமூகத்தின் நில மற்றும் குண வரையறைகளை நன்கு உணர்ந்தவர்.  சங்க காலம் தொட்டு இன்று வரை மருவிவரும் கவிதைப் போக்குகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்தும் வந்திருக்கிறார். இருந்தபோதிலும்,  எழுதியுள்ள எத்தனையோ நூல்களில் ஒன்றைக்கூட படிக்காத அவர்கள், விருதோடு அவரையும் விமர்சித்தது வியப்பில்லை. அவர்கள் எழுப்பிய  கேள்விகளில் ஒன்றுகூட நியாயமான கேள்வி இல்லை. பழமைக்கும் புதுமைக்குமான இணைப்புப் பாலமே அவரென்பதை அறியாத அவர்கள்,  அழுக்கேறும் கறைகளை அவர்மீது பூசினார்கள்.

ஒருவர் பேராசிரியராகவும், பொது வெளியில் அறியப்பட்டவராகவும் இருப்பதே விருது பெறுவதற்குரிய தகுதியின்மை என்று கருதினால், அதற்குமேல்  சொல்வதற்கு ஒன்றுமில்லை. ‘பாரதிதாசனுடன் பத்து ஆண்டுகள்’ என்னும் நூலில், பாரதியைத் திரைப்படமாக எடுக்க பாரதிதாசன் பட்ட பாடுகளைப்  பட்டியலிட்டிருக்கிறார். பல பேரிடம் நன்கொடை பெற்றேனும், பாரதியின் வாழ்வை திரைப்படமாக எடுத்துவிடும் ஆர்வம் பாரதிதாசனுக்கு  இருந்திருக்கிறது. பாரதிதாசனின் ஆர்வத்தை ஈடேற்ற தமிழன்பனும் பல பேரைச் சந்தித்து, அம்முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.  இரவு பகலாக பாரதி தாசன், பாரதி குறித்து எழுதிய திரையாக்கத்தின் அருமை பெருமைகளை அவர் சொல்லக் கேட்பது தனி அனுபவம்.

தமிழன்பனுக்கு பாரதிதாசன் எழுதிய கடிதங்களில், பெரியார் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தம் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  பெரியாரின் நிழலாக இருந்துவந்த பாரதிதாசன், ‘‘பெண் விடுதலையையும் சாதி மறுப்பையும் பாரதியிடமிருந்தே கற்றேன்...’’ எனத் தமிழன்பனிடமும்  தெரிவித்திருக்கிறார். பாரதி, பாரதிதாசன் என்னும் வரிசையில் அடுத்து வரக்கூடிய பெயர் தமிழன்பன் என்பதை அவரை முழுமையாக வாசிக்காதவர்கள்  ஏற்றுக்கொள்ளத் தயங்குவர். தமிழன்பனே ஒரு கூட்டத்தில், “பாரதிதாசனைத் தொடர்ந்து சுரதாவும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்  வருகிறார்கள்...” என்றிருக்கிறார்.

பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் என்பதாக ஒரு பட்டியலைத் தயாரித்து, அதற்குப் பின் யாரென்னும் சர்ச்சை இன்னொருபுறத்தில் ஓடிக்  கொண்டிருக்கிறது. “பாரதிக்குப் பிறகு தமிழ்க் கவிதை அவ்வளவாக வளர்ந்துவிடவில்லை என்று நான் கருதிக்கொண்டிருந்தேன். தமிழன்பனைப்  படித்தபிறகு என் கருத்தை மாற்றிக்கொண்டேன்...” என எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியிருக்கிறார். “பாரதிதாசனுக்குப் பிறகு தமிழ்ஒளியை அல்லவா  ஜெயகாந்தன் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லாமல், தமிழன்பனைச் சொல்லியிருக்கிறார் என்றால், அதிலே ஏதோ அரசியல் இருக்கிறது...” எனச்  சொல்கிறவர்களும் உண்டுதான்.

தமிழ்ஒளியைத் தவிர்ப்பதற்காக தமிழன்பனைச் சொல்வதோ, தமிழன்பனைப் புகழ்வதால் தமிழ்ஒளி தவிர்க்கப்படுவார் என்பதோ குறுகிய வாதம்.  யாராலும் யாரும் தவிர்க்கப்படுவதில்லை. ஒருவர் மீது நமக்குள்ள பற்றை வெளிப்படுத்திக்கொள்ள இன்னொருவரைத் தவிர்க்கிறோம். அல்லது அந்த  இன்னொருவர் நம்முடைய யோசனைக்கே வராததால் இப்படி வெளிப்படுத்திவிடுகிறோம் எனவும் வைத்துக்கொள்ளலாம். தமிழன்பனைப்  பொறுத்தவரையில், தெளிந்த நீரோடையைப்போல் பயணித்துக்கொண்டிருப்பவர். விமர்சனக் கற்களால் சலனத்திற்கோ சஞ்சலத்திற்கோ உட்படாதவாறு,  ஒரு துறவு மனநிலையில் எழுதி வருபவர்.

அவருடைய ஆக்கங்களை ஆய்வுசெய்து பலபேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பரிசுகள், பாராட்டுகள், விருதுகள் என்பதைத் தாண்டிய  அவருடைய பாய்ச்சலில் அறுபது கவிதை நூல்கள், இருபத்தைந்து உரைநடை நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழுக்குக்  கிடைத்திருக்கின்றன. இத்தனை நூல்களிலிருந்தும் அவர் தனக்கான இடத்தைக் கோரிப் பெறக்கூடிய செயலில் ஈடுபட்டதே இல்லை. சிறிய  அளவிலான கூட்டத்தில் தன் நூலை வெளியிட்டுவிட்டு, அடுத்த நூலுக்கான ஆயத்தங்களில் ஈடுபடப்போய்விடுகிறார்.

ஓரிரு நூல்கள் வெளிவந்த உடனேயே, “தமிழுக்குச் சோறும் குழம்பும் தானே போடுகிறேன்...” என்று முஷ்டி உயர்த்தும் முழக்கங்களை சிலர்போல்  அவர் எழுப்பியதில்லை. தமிழன்பனே அசலான தமிழ் கஜல்களை எழுதிக் காட்டியவர். கஜலை தமிழுக்கு அறிமுகம் செய்த அப்துல்ரகுமான், அதன்  புறக்கட்டமைப்பைவிட அகப் பரிமாணத்தையே அதிகமும் கவனத்தில் எடுத்துக்கொண்டார். கஜலின் தன்மையை உணர்ந்துகொள்ள அப்துல்ரகுமான்  உதவினார் என்றால், அதை இலக்கண சுத்தத்துடன் எழுதிப்பழக தமிழன்பனே உதவியிருக்கிறார்.

“கஜலின் தொனி மாறுபடாமல், புறக்கட்டமைப்பையும் அகப்பரிமாணத்தையும் உருவாக்கிக் கொடுத்ததில் தமிழன்பனுக்குப் பெரும் பங்குண்டு...”  என்கிறார் ஏ.எஸ்.சஜ்ஜாத் புகாரி. பாரசீகக் கவிதை வடிவங்களே உருதுக் கவிதைகளுக்கு அடிப்படைகளாக அமைந்தன. கஜலின் மூலம்  பாரசீகமென்றாலும், அதை அரவணைத்துக்கொண்ட மொழியே உருது. கஜலில் மிக முக்கியமாகக் கருதப்படுவது, ‘காஃபியா’ என்னும் இயைபுத்  தொடையும் அதைத் தொடர்ந்துவரும் ‘ரதீஃப்’ எனும் சொற்றொடரோ அல்லது சொல்லோதான்.

(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்