ஒளி பிறக்க ஒலி!கிணற்றின் விளிம்பில் அமர்ந்திருந்த அந்தச் சிறு பறவை தன் வாழ்வையே தலைகீழாகப் புரட்டிப்போடும் என்று அந்தப் பன்னிரண்டு வயது பாலகனான  ராம்சுரத்குன்வர் அறியவில்லை. விளையாட்டாகத் துரத்துவது போல கயிற்றை வீச பறவை மீது பட்டு கீழே விழுந்தது. விழுந்ததை எடுத்து கையில்  ஏந்திப் பார்க்க அது இறந்து விட்டிருந்தது. ராம்சுரத்குன்வர் அதிர்ந்தான். அழுதபடி இருந்தான். துக்கம் பலநாட்கள் துரத்தின. எது இறந்தது? இதனுள் எது  இதுவரை பிறந்து வாழ்ந்திருந்தது? தீர்க்கமும் இறுக்கமுமான சிந்தனையோடும் அலைந்தான்.  உத்தரப்பிரதேசத்தில் நர்தாரா என்னும் கிராமத்தினூடே  பாய்ந்தோடும் கங்கை நதியின் கரையருகே அமர்ந்து சாதுக்களைப் பார்த்தபடி இருப்பான்.

ஞான கங்கையின் காற்றுபட்டது. தியானம் எளிதில் சித்தித்து பெரும்பாலும் அகமுகமாகிக் கிடந்தான். தன் பதினாறு வயதில் திடீரென்று வீட்டிலிருந்து  வெளியேறி காசியை அடைந்து விஸ்வநாதர் முன்பு நிற்கும்போது பெரும் ஒளிவெள்ளம் ஒன்று அவனுள் புகுந்து நிறைத்தது. அங்கேயே தன்  சுயநினைவை இழந்து மெல்ல மீண்டான். அங்கிருந்து சாரநாத் சென்றான். புத்தர் உபதேசித்த ஸ்தூபி அருகே நின்றபோது ஆழமான பேரின்ப  அவஸ்தையில் திளைத்து மீண்டான். ராம்சுரத்குன்வர் இறையை அறியும் தாகத்தோடு ஊர் திரும்பினார். ஆம். இனி ‘ன்’ இல்லை. ‘ர்’. பள்ளிப்படிப்பை  முடித்து அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், பாட்னாவில் பி.டி.யும் முடித்தார்.

கப்பாடியா பாபா எனும் மகானின் அண்மை கிடைத்தது. இவர் கையைப் பிடித்து, ‘இந்தக் கையில் என்னைவிட சக்தி கூடப் போகிறது...’ என்றார்.  வட  இந்திய வழக்கப்படி இருபத்தோரு வயதில் ராம்ரஞ்சனி தேவியோடு திருமணமும் ஆனது. குழந்தைகளும் பிறந்தனர். இல்லறத்தில் இருந்தாலும்  மிகத்தீவிரமாக இறைத் தேடலோடே எப்போதும் இருந்தார். 1947ம் வருடம் பாண்டிச்சேரி சென்று அரவிந்தரை தரிசித்தார். உள்ளே நுழைந்தவுடன்   பேரமைதியும் சக்தி பேரலையும் தன்னைச் சூழ்வதை உணர்ந்தார். அங்கிருந்து திருவண்ணாமலையிலுள்ள ரமண மகரிஷியை தரிசித்தார்.  கேரளாவிலுள்ள கஞ்சன்காடு பப்பா ராமதாஸ் குறித்து கேள்வியுற்று அவரையும் தரிசித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார்.

இறையை அறியும் தணியாத தாகம் துரத்தியபடி இருந்தது. மீண்டும் 1948ல் ரமணாஸ்ரமத்துக்கு வந்தார். அங்குள்ள மாத்ருபூதேஸ்வரர் சந்நதியில்  ரமண பகவானின் கைபட்ட குங்குமத்தைத் தொட்டவுடன் அவர் உள்ளம் அதிர்ந்தது. ரமண பகவானின் திருக்கண்கள் அவர்மீது பதிந்தது.  ராம்சுரத்குன்வர் மீண்டும் ஊருக்குச் சென்றார். அது 1950ம் வருடம். ரமண மகரிஷியும், அரவிந்தரும் மகா சமாதி அடைந்த செய்தி கேட்டு துயருற்றார்.  இம்முறை இறையை அறிந்தே தீருவது என்ற வைராக்கியம் கொழுந்துவிட்டு எரிந்தது. 1952ம் வருடம் சுவாமி பப்பா ராமதாஸ் அவர்களைச் சந்தித்தார்.  பல வருட ஏக்கங்கள், சாதனைகள் என்று சகல முயற்சிகளும் கனிந்து வருவதுபோல் தோன்றியது.

சுவாமி ராமதாஸ் அவர்களிடம் மந்திரோபதேசம் பெற எண்ணி சக சீடரான சச்சிதானந்த சுவாமியை அணுகினார். ‘‘உனக்கு உபதேசம் வேண்டுமெனில்  நீதான் கேட்க வேண்டும்...’’ என்ற பதில் கிடைத்தது. ராம்சுரத்குன்வரின் அக ஆழத்தை சுவாமி ராமதாஸ் அறிந்தார். ஞானத்தின் விழைவு திரண்டு  கனிந்திருப்பது கண்டு மகிழ்ந்தார். அமர வைத்து, ‘‘ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்...’’ என உபதேசித்தார். இந்த மந்திரத்தை இருபத்து நான்கு மணி  நேரமும் இடைவிடாமல் ஜபிக்க வேண்டுமென்று பணித்தார். குருநாதனின் பெருஞ்சக்தி இப்போது மந்திரத்தோடு கலந்து சீடனுக்குள் வெகு ஆழத்தில்  நிலைகொண்டது. அம்மந்திரத்தை சொல்லச் சொல்ல வெளி உலக நினைவை முற்றிலும் ராம்சுரத்குன்வர் இழந்தார்.

அதுவரை அலைக்கழித்து வந்த மனமெனும் மாயையை அந்த நாமம் எரித்தது. ராமன் எனும் மகத்தான சக்தி அவரை ஆட்கொண்டது.  ஆனந்தப்படுத்தியது. பப்பா ராமதாஸ் காலடியில் ராம்சுரத்குன்வர் இறந்தார். யோகிராம் சுரத்குமார் என்ற யோகியார் பிறந்தார். சீடனைப் பார்த்து  மலர்ந்தபடி ‘‘இங்கிருந்து எங்கு செல்வாய்?’’ என்று சுவாமி ராமதாஸ் கேட்டார். தன்னிச்சையாக ‘‘அருணாசலம்...’’ என யோகியார் பதிலளித்தார்.  ஆனால், திருவண்ணாமலைக்கு அவர் வந்து சேர ஏழு வருடங்களாகின. உள்ளிருக்கும் சக்தி எங்கெங்கு செலுத்துகிறதோ அங்கெல்லாம் யோகியார்  சென்றபடி இருந்தார். குமரி முதல் இமயம் வரை பயணித்தார். எல்லா நேரங்களிலும் தன்னை பிச்சைக்காரன் என்றே சொல்லிக் கொண்டார்.

விதவிதமான சோதனைகள். உணவின்றி அலைந்த நாட்கள். இவரைப் புரிந்து கொள்ளாமல் துன்புறுத்திய மனிதர்கள். எல்லாவற்றையும் ராம  நாமத்துடன் எதிர்கொண்டு 1959ம் வருடம் திருவண்ணாமலைக்கு வந்தார். வீதி வீதியாக சுற்றித் திரிந்தார். ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள புன்னை  மரத்தடியில் அமர்வார். பிச்சைக்காரன் என்று யோகியாரை நினைத்தவர்கள் மெல்ல மெல்ல தங்கள் தவறை உணர்ந்தார்கள். ஞானமெனும் பெருஞ்  செல்வத்தோடு திரியும் ஞானி என உணர்ந்தார்கள். பகவான் யோகிராம் சுரத்குமார் என அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள். தங்கள்  பிரச்னைகளுக்கு அவரிடம் தீர்வு கிடைக்கும் என உளமார நம்பி வரத் தொடங்கினார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் அவரது சீடர்களாக மாறினார்கள். பகவான் யோகிராம்சுரத்குமார் அவர்களின் முக்கிய உபதேசமே எப்போதும் இறைவனுடைய  நாமத்தை ஜபியுங்கள் என்பதுதான். அனைத்துக்கும் மேலாக ‘‘எப்போதெல்லாம் நீங்கள் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார்  ஜெயகுருராயா என்கிற திருநாமத்தைச் சொல்கிறீர்களோ அப்போதெல்லாம் என் தந்தை உங்கள் உதவிக்கு வருவார். யோகிராம்சுரத்குமார் என்பது  நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த உருவம் அல்ல. வெறும் பெயரும் அல்ல. அது பேரனுபவம். பேருணர்வு. அது என் தந்தையின் நாமம்...’’  என்றார்.  ‘‘இந்த ஆஸ்ரமத்தில் நுழைந்தவர்கள் யாரும் ஒருபோதும் வெறும் கையோடு திரும்ப மாட்டார்கள்.

அவர்கள் மேல் என் தந்தையின் அருள் மழையாகப் பொழிகிறது. அதை அவர்கள் உணர்ந்தாலும் சரி, உணராவிட்டாலும் சரி. இது சத்தியம்...’’ என்று  அடிக்கடி கூறுவார். திருவண்ணாமலையிலேயே பகவான் யோகிராம்சுரத்குமார் பிப்ரவரி 20, 2001 அன்று தன் தேகத்தை விடுத்து விதேக கைவல்ய  நிலையை எய்தினார். திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் மா தேவகி அவர்களும், அன்னை விஜயலட்சுமி அவர்களும் பகவானின்  திவ்ய சரித்திரத்தை நுட்பமாகவும்; உயர்ந்த உபதேசங்களையும், அவர்தம் திருநாமத்தின் பெரும் பிரபாவத்தையும் வரும் பக்தர்களிடம் சதாசர்வ  காலமும் கூறியபடி இருக்கின்றனர்.

பிரார்த்தனைப் பெட்டிக்கு வரும் பக்தர்களின்  கடிதங்களை பகவானின் திருவுருவச் சிலையருகேயும், ஜீவசமாதியான லிங்க மூர்த்தத்தின் அருகே  அமர்ந்தும் படித்தபடி உள்ளனர். இந்த ஆஸ்ரமத்துக்கு அருகேயே ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளியொன்றை நிறுவியுள்ளனர். ஏழைகளுக்கு  அவ்வப்போது மருத்துவ முகாமையும் நடத்தி வருகிறார்கள். வேதங்களின் மீது மிகுந்த பக்தியும் பிரேமையும் கொண்டிருந்த பகவானின்  அருளாணைப்படி வேதபாடசாலை ஒன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அருணையில் வாழும் சாதுக்களுக்கும் ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கும் அன்ன அமுதப் பிரசாதம் வழங்கப்படுகிறது. பகவான்  யோகிராம்சுரத்குமாரின் 100வது ஜெயந்தி மகோத்ஸவத்தை பரவசத்துடன் வரவேற்கும் விதமாக இந்த வருடம் முழுக்க ஆன்மிக விழாக்களால்  ஆஸ்ரமம் நிறையப் போகிறது. பக்தர்களை ஆற்றுப்படுத்தி அரவணைக்க யோகிராம்சுரத்குமார் அவர்களின் பேரருள் பொங்கித் ததும்பிக்  கொண்டிருக்கிறது. அருளமுதம் பருக திருவண்ணாமலைக்கு வாருங்கள்.

கிருஷ்ணா