பணியும் பாசமும்



சுகுணா 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியப் பணியாற்றி பணிநிறைவு பெற்றிருந்தாள். 6 மாதங்கள் கழித்து ஓய்வூதியப் பலன்களுக்காக பள்ளி செல்ல வேண்டியிருந்தது.

‘‘சுகுணாம்மா, எப்படி இருக்கீங்க?’’ - வாட்ச்மேன் விசாரித்தான், இருக்கையை விட்டு எழுந்திருக்காமலே. இதற்குமுன் இரு கைகளையும் மார்போடு இறுக்கி, உடலை முன்புறம் வளைக்காமல் அவன் சுகுணா முன் நின்றது கிடையாது!

வழியில் சில ஆசிரியைகள், ‘சுகுணா மேடம்! பிறகு பார்க்கிறேன்’ என்று சொல்லி மின்னலாக மறைந்தார்கள். ‘எப்போது வந்தாலும் தன்னைக் கண்டிப்பாக சந்தித்துச் செல்ல வேண்டும்’ என்று அன்புக்கட்டளை இட்டிருந்த தலைமை ஆசிரியையின் அறைக்குச் சென்றாள் சுகுணா.

‘‘ரொம்ப பிஸி. 10 நிமிடம் கழித்து வரச் சொல்’’ & தலைமை ஆசிரியை, பியூனிடம் சொல்வது கேட்டது.

‘‘என்ன மேடம்? உங்கள் வேலை முடியலையே. அதற்குள் வந்துட்டீங்களே!’’ - அலுவலகக் கண்காணிப்பாளரின் குரலில் ஏளனம்.
இடிந்து போய் வீடு திரும்பிய சுகுணா, வாசலில் கணவரும் மகளும் நிற்பதைப் பார்த்தாள்.

‘‘என்னம்மா... ஏன் இவ்வளவு நேரம்? செல்போனும் கொண்டு போகலை. பதறிப்போய்ட்டோம் தெரியுமா?’’ - மகள் சொன்னாள்.
‘ஓய்வு பணிக்குத்தான்... பாசத்துக்கு அல்ல’ என புரிந்தது சுகுணாவுக்கு!

- கே.சேவியர் அமல்ராஜ்