சாரி.. இவை போட்டோஸ் அல்ல!



இங்கிருப்பவை அனைத்தும் ஓவியங்கள் என்றால் நம்ப முடிகிறதா? யெஸ். எல்லாமே டிராயிங்ஸ்தான்! இணையத்தில் அதிகம் இருப்பவர் என்றால் இந்த ஓவியங்களை பார்த்திருப்பீர்கள். வியந்திருப்பீர்கள். ஏனெனில் ஒவ்வொரு நொடியும் யார் யாரோ இதை ஷேர் செய்தபடியே இருக்கிறார்கள். இதை ஹைப்பர் ரியலிஸம் (hyper realism) என்பார்கள். இதன் ஸ்பெஷலே வரையப்பட்ட ஓவியம், டிராயிங்கா அல்லது புகைப்படமா என குழம்ப வைப்பதுதான். இத்தாலியைச் சேர்ந்த ஓவியர் மார்கோ கிரேஸ்ஸி, இந்த வகை ஹைப்பர் ரியலிஸத்தில் கில்லாடி.

கை நகங்கள், முடி, கழுத்து சுருக்கங்கள், முகத்தில் விழும் வரிகள்... ஏன்-தோலின் தன்மை என அத்தனையும் தத்ரூபமாக புகைப்படங்கள் போலவே இருப்பதுதான் இவரது சிறப்பு! இணையதளம் வழியே மார்கோ கிரேஸ்ஸியை தொடர்பு கொண்டோம். “சின்ன வயசுலேந்தே ஓவியத்துல ஆர்வம் அதிகம். அதனாலேயே ஓவியம் சார்ந்த படிப்பை கல்லூரியில் எடுத்தேன். உண்மைத்தன்மை மாறாம அப்படியே வரையணும்னு நினைப்பேன். அதனாலதான் ஹைப்பர் ரியலிசம் பக்கம் வந்தேன். ஒவ்வொரு பெயின்டிங்கையும் வரைய சில மாதங்கள் ஆகும். வரைய ஆரம்பிச்சதும் எப்ப சாப்பிடுறேன், எப்ப தூங்குவேன்னு தெரியாது.

என் குடும்பமே என்னை என் உலகத்துல மிதக்க விட்டுட்டாங்க...’’ என்று சாட்டில் தன்னைப் பற்றி இன்ட்ரோ கொடுத்தவர், தனது ஓவியங்கள் குறித்து விளக்க ஆரம்பித்தார்.‘‘எமோஷன்ஸை தூண்டணும். இதுதான் என் குறிக்கோள். வரைஞ்ச படங்கள் அதைப் பார்த்து ரசிக்கிறவங்களுக்கு ஏதோ ஓர் உணர்வை கடத்தணும். இதுக்காகத்தான் அதிகம் மெனக்கெடறேன். எல்லாமே ஆயில் பெயிண்டிங்ஸ்தான். ஆனா, யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. வேற ஏதோ கலர் டெக்னிக்கை நான் பயன்படுத்தறேன்னு சொல்றாங்க. ஒருவகைல இது எனக்கு பெருமைதான்.

ஆக்சுவலா குவாலிட்டியை கொண்டு வர்றதுதான் பெரிய சவால். சமூக வலைத்தளங்கள்ல என் ஓவியங்களைப் பகிர்ந்து கொள்றேன். அப்ப அதை யார் ஜூம் செஞ்சு பார்த்தாலும் அந்த ஸ்கின் டோன் போட்டோஸ்ல இருக்கிற மாதிரியே இருக்கும். உடைகளும் அப்படித்தான். அச்சு அசல் ரியலா இருக்கும். ஓர் ஓவியத்தை வரையறதுக்கு முன்னாடி, தோல் சுருக்கங்கள், டிரெஸ், ஆக்ஸசரிஸ்... எல்லாம் முடிவு செஞ்சுட்டுதான் வரையவே ஆரம்பிப்பேன். எல்லாமே கற்பனை உருவங்கள்தான். மாடல்களை நிறுத்தி ஓவியம் வரையறதுல எனக்கு உடன்பாடில்லை...’’ என்கிறார் மார்கோ கிரேஸ்ஸி.

- ஷாலினி நியூட்டன்