பெரும்பாலான குழந்தைகளுக்கு இயற்கை குறைபாட்டு கோளாறு இருக்கு!



‘‘‘துணி தொவைக்கற வரைக்கும் அம்மாவைத் தொந்தரவு செய்யாம வெளிய போய் விளையாடு...’னு கொழந்தைகளிடம் சொல்ற அம்மாக்கள் அருகிட்டாங்க. இன்னைக்கு கொழந்தைங்க எதுக்கெடுத்தாலும் காரணமே இல்லாம பயப்படுறாங்க. தங்களுக்குள்ளயே ஒடுங்கிப் போறாங்க. இயல்பும், வியப்புணர்வும், பேரார்வமும், சுட்டித்தனமும் இல்லாத கொழந்தைகளைத்தான் இப்ப அதிகமா பாக்க முடியுது. கொழந்தைமை இல்லாத ஒரு தலைமுறை வேகமா வளர்ந்துட்டு வருது. யாராச்சும் தன் கையைப்பிடிச்சு காட்டுக்குள்ள அழைச்சிட்டுப் போவாங்களானு ஒவ்வொரு கொழந்தையும் ஏங்கிக் கிடக்குது...’’ நிதானம் கலந்த ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார் ஸ்ரீபொன் கோதை.

தன்னுடைய ‘இனிது’ அமைப்பின் மூலம் களிமண்ணில் பொம்மை செய்வது, இயற்கையாகக் கிடைக்கும் இலை, குச்சிகளைக் கொண்டு கலைப் பொருட்களை உருவாக்குவது, ‘வேண்டாம்’ என்று தூக்கியெறியும் குப்பைகள், பாட்டில்களிலிருந்து அழகு சாதனப் பொருட்களைத் தயாரிப்பது, முட்டை ஓடுகளில் ஓவியம் வரைவது... போன்ற கலைப் பயிற்சிகளை இவர் குழந்தைகளுக்கு இலவசமாக அளித்து வருகிறார். மட்டுமல்ல. குழந்தைகளை காடு, மலைகளுக்கு அழைத்துச்சென்று இயற்கையோடு உறவாடவும் வைக்கிறார்.‘பொறந்தது திருப்பத்தூர்ல. படிச்சது, வளர்ந்தது எல்லாமே சென்னைல. எஞ்சினியரிங் படிச்சிருந்தாலும் அது சம்பந்தமான வேலைக்குப் போக இஷ்டமில்ல.

கைச்செலவுக்கு பார்ட் டைம்மா கிடைக்கற வேலையை செஞ்சிட்டு கொழந்தைகளோடு இயங்கிட்டு வர்றேன். சின்ன வயசில ஊர்ல இருந்தப்ப குச்சிகளை வச்சு வீடு கட்டறது, காடு, மலைகள்ல சுத்தித் திரிவது, களிமண்ல பொம்மைகள் செய்றதுன்னு ஏதாவது செஞ்சுட்டே இருப்பேன். மனசுக்கு சந்தோஷமா, புத்துணர்வா இருக்கும். சென்னைக்கு வந்தபிறகு என்னால எதுவுமே செய்யமுடியல. அப்படி செய்றதுக்கான வாய்ப்பும் கிடைக்கல. என்ன மாதிரிதான் மத்த கொழந்தைகளும் வாய்ப்பு கிடைக்காம ஏங்கிக் கிடப்பாங்கன்னு மனசுக்குத் தோணுச்சு. உடனே ‘இனிது’ அமைப்பை தொடங்கிட்டேன்.கொழந்தைகள் நலன்ல அக்கறையாயிருக்கிற நண்பர்களை ஒருங்கிணைச்சேன். ஏதாவது ஒரு வழியில கொழந்தைகளையும், இயற்கையையும் இணைக்கணும்.

அதுக்கான சிறுமுயற்சிதான் இது...’’ என்கிற பொன் கோதை ஒரிகாமியிலும் வல்லவர். பேப்பர் ஹெலிகாப்டர், வண்ணத்துப்பூச்சி, தொப்பி, கோபுரம், பொருட்கள் வைக்கும் பேப்பர் பாக்ஸ் என்று விதவிதமாக செய்து அசத்துபவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஒரிகாமி கலையையும் கற்றுக்கொடுக்கிறார்.‘‘கொழந்தைகள் இயல்பிலேயே மரம், செடிகளோட நல்லுறவு கொண்டவங்க. தங்க நண்பர்கள்ல ஒருத்தரா அதை பார்க்கறாங்க. அதனால அவங்க எதை மனசுல நினைக்கறாங்களோ அதை இயற்கையா கிடைக்கிற மண், இலை, காய், பூக்கள், கனிகளை வைச்சு செய்யறதுக்கான பயிற்சிகளைக் கொடுக்கறேன். ஒருவகை ஓவியம் மாதிரி. இதுக்காக ஸ்கெட்ச், கலர் பென்சில்னு எதையும் பயன்படுத்தறது இல்ல.

இலை, குச்சி, பூக்களைத்தான் கொழந்தைங்க தேடி எடுத்து வருவாங்க. இப்படிச் செய்யறப்ப அவங்களுக்கு இயற்கையோட ஒரு நல்ல தொடர்பு உண்டாகுது. இயற்கையைப் பற்றிய புரிதலும் கிடைக்குது. உதாரணமா கலர் பென்சில்ல ஒரு செடியை வரையறப்ப தொட்டில இருக்கற மாதிரி வரைஞ்சவங்க, இலை, குச்சியை வச்சு செடியை ஓவியமா உருவாக்கறப்ப காட்டுல இருக்கறா மாதிரி வடிவமைக்கிறாங்க! இன்னும் சில கொழந்தைங்க வானத்துல மரம் இருக்கறா மாதிரி பண்றாங்க. ‘ஏம்ப்பா மரம் வானத்துல இருக்கு’னு கேட்டா, ‘பூமியில வச்சா எல்லோரும் வெட்டி எறிஞ்சிடுறாங்க’னு பதில் சொல்றாங்க!

முக்கியமா இயற்கையோடு இணைஞ்சு ஒரு விஷயத்தை செய்யறப்ப தயக்கத்தை உதறிட்டு வெளில வர்றாங்க. படைப்பூக்கம் அதிகமாகுது. கற்பனை மலருது. தனியா இல்லாம குழுவா சேர்ந்துதான் ஓவியத்தை உருவாக்கச் சொல்லுவேன். குழுஉணர்வு நல்ல நட்பை ஏற்படுத்திக் கொடுக்குது. களிமண்ல பொம்மைகளைச் செய்யறப்ப மண்ணோடு உறவாடுறாங்க. மனசுக்குள்ள என்ன இருக்கோ அதைத்தான் பொம்மையா செய்றாங்க...’’ என்கிற பொன்கோதை குழந்தைகளின் படைப்புகளைக் காட்டினார். அதில் பிஞ்சுகளின் கைவண்ணத்தில் நெல்லிக்கனிகள் தென்னைமரக் காய்களாக பரிணமித்திருந்தன. சின்னச் சின்ன மலர்கள் பெரும்தோட்டமாக உருமாறியிருந்தது. குச்சிகள் அழகழகான வீடுகளாக உருவம் பெற்றிருந்தன.

முட்டை ஓடுகள் கண்காட்சிக்கு வைக்கும் ஓவியங்களாக ஒளிர்ந்தன. ‘‘காடும், மலைகளும் முழுசா அழியாம கொஞ்சமாவது மிச்சமிருப்பதுதான் இப்போதைய குழந்தைகளுக்கு ஒரே ஆறுதல். ஃப்ளாட்ல குடியிருக்கற கொழந்தைக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைல தனியா பூத்திருக்கிற மலருக்கும் இடைல நட்பை ஏற்படுத்திக் கொடுக்கணும். இதுதான் என் கனவு...’’ என்கிறார் பொன் கோதை. இயற்கை குறைபாட்டுக் கோளாறு (Nature Deficit Disorder‘‘நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு எலெக்ட்ரானிக் சாதனங்களுடன் வாழ்கின்ற குழந்தைகள் இயற்கையிலிருந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகின்றனர். அதனால் இயற்கையின் மீதான ஆர்வமும், விருப்பமும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது.

இயற்கையின் அருகாமையும், அதன் ஸ்பரிசமும் கிடைக்காத குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். சமூக உணர்வே இல்லாமல் அந்நியப்படுகின்றனர். தங்களுக்குள் சுருங்கிப் போகின்றனர். இதை ‘இயற்கை குறைபாட்டுக் கோளாறு (Nature Deficit Disorder)’ என்று சொல்லலாம்...’’ என்கிறார்கள் குழந்தைகள் நல நிபுணர்கள்.  ‘‘காட்டு வாழ்க்கையைப்பற்றி அறிந்துகொள்ள காடு, மலைகளுக்கு நடுவில் நடந்து செல்லாமல், டேவிட் அட்டன்பரோவின் இயற்கை சார்ந்த படங்களைத் தான் அதிகமாக பார்க்க விரும்புகிறோம். எவ்வளவு நகைமுரண் இது! நவீன வாழ்க்கைமுறையின் நோய்க்குறியாக ‘இயற்கை குறைபாட்டுக் கோளாறு’ இருக்கலாம் என்பது என் அனுமானம்...’’ என்கிறார் சூழலியல் அறிஞர் ராஸ் கேமரோன்.

- த.சக்திவேல்