கலகலப்பு-2



ஆளாளுக்கு ஒரு வேலையுடன் காசிக்குக் கிளம்புபவர்கள் அங்கே சேர்ந்து செய்யும் கலாட்டாக்களே ‘கலகலப்பு-2’.தன் பூர்வீகச் சொத்தை மீட்க காசிக்குப் புறப்படுகிறார் ஜெய். அங்கே காலாவதி ஆகிப்போன லாட்ஜ் ஒப்பந்தத்தை மறைத்து தொழில் நடத்துகிறார் ஜீவா. தனது ரகசியங்களை மீட்க ஆள் அனுப்பும் அரசியல்வாதி மதுசூதன், அங்கேயே இருந்து போலி சாமியாராக கொடி கட்டும் யோகிபாபு அண்ட் கோ, காசியில் கவர்ச்சி தாசில்தாரராக இருக்கும் நிக்கி கல்ரானி, துறவு தேடும் தன் அண்ணனுக்கு பெண் தேடும் கேத்தரின் தெரஸா, ஏமாற்றுவது மட்டுமே தனது குலத்தொழிலாகக் கொண்ட சிவா...

இவர்களுக்கு இடையில் ஏற்படும் தொடர்பு, வரும் பிரச்னைகள், எப்படி அவர்கள் மீண்டார்கள்? காசிக்கு வந்து வேண்டியது கிடைத்ததா? இதை காமெடி கலந்து கொடுத்திருப்பதே சுந்தர்.சி ஸ்டைல் கதை. அதையே இம்முறையும் முன் மொழிந்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கான ட்ரெண்ட், ஏதாவது ஒரு கருத்தை சொல்வது... என்றெல்லாம் மெனக்கெடாமல் சீனுக்கு சீன் இறங்கி அடித்து சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். சுந்தர்.சியின் ஹீரோக்களில் கார்த்திக்கில் ஆரம்பித்து அனைத்து நாயகர்களும் சம்பிரதாயமாக நடிக்கும் காதல் கலாட்டா கதையில் இது ஜீவாவின் கோட்டா! ஆரம்பத்திலிருந்தே மனுஷன் வெளுத்துக்கட்டியிருக்கிறார்.

தங்கைக்கு கல்யாணம் ஆகிற கவலையில் உஷாராக இருப்பதாகட்டும், தன் காதல் தோல்வி அடைந்து விடுமோ என சோகம் அடைவதிலாகட்டும், கேத்தரினை அடைய தீட்டும் திட்டங்களிலாகட்டும், ஜீவா  அட்டகாசம். ஜீவா மாதிரியே பார்த்தவுடன் காதலில் விழுகிறார் ஜெய். நிக்கி கல்ரானி மாதிரி ஒரு கவர்ச்சியான தாசில்தார் எந்த ஆபீசில் இருக்கிறார் என தேடித்தான் பார்க்க வேண்டும். சுந்தர்.சியே என் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என சிவா வாயில் சொல்லி விடுவதால் அதைத் தள்ளி வைத்துவிடலாம். கேத்தரினும், நிக்கியும் காதல் கலாட்டாக்களில் வெகுவாக இதம் சேர்க்கிறார்கள். சதீஷ், ரோபோ சங்கர், மனோபாலா, யோகி பாபு, சிங்கமுத்து, ஜார்ஜ் என ஏகப்பட்ட வரிசையில் காமெடியன்கள் குதித்திருந்தாலும் யோகிபாபுவும், ஜார்ஜும் மனதில் நிற்கிறார்கள். வழக்கம்போல பதறாமல் பின்னுகிறார் சிவா.

காசி பேக்ரவுண்டில் முதல் பாதி அழகு. பழகிய திரைக்கதை தரைதட்டி நிற்கும்போதெல்லாம் காமெடி பன்ச்களைத் தூவி கரை சேர்க்கிறது பத்ரியின் வசனம். ஒவ்வொருத்தரின் ‘முன்கதைச் சுருக்கமும்’ சுவாரஸ்யம்தான். ஆனால் அதற்காக கடைசி வரை அவற்றை அடுக்கிக்கொண்டே இருக்க வேண்டுமா? காசி முதற்கொண்டு, காரைக்குடி வரை ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் குமார் பெட்டர் ஸ்கோர்! சேஸிங் சற்றே நீளம். பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. சூட்கேஸ் மாற்றுதல், பணத்திற்குப் பதிலாக செங்கல், காகிதக் குப்பை... என ஏகப்பட்ட க்ளிஷே! பார்த்தமாதிரி இருந்தாலும் பார்க்கும்படி இருப்பதுதான் இப்படத்தின் ஸ்பெஷல்! தலைப்புக்கு நியாயம் செய்கிறது மொத்தப்படமும்.

- குங்குமம் விமர்சனக்குழு