உள்ளூர் போலீஸோட மூணு ராணுவ அதிகாரிகள் என்னை விசாரிக்க வந்துட்டாங்க!



- ப்ரியா

‘‘பொழுதுபோக்காதான் ஆரம்பிச்சேன். இப்ப அதுவே லிம்கா சாதனைப் பட்டியல்ல இடம் பிடிச்சிருக்கு. அடுத்து கின்னஸ்தான்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் குமரி மாவட்டம் திருவட்டாரைச் சேர்ந்த 63 வயதான மதிமயக்கும்பெருமாள். இப்படி நீளமாக இவர் பெயரை உச்சரித்தால் உலகிலுள்ள எந்த தலைவருக்கும் தெரியாது. மாறாக சுருக்கமாக மதி என்று சொன்னால் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து தலைவர்களும், ‘யா... யா...’ என ஃப்ரெண்ட்லியாக புன்னகைப்பார்கள். காரணம், தன் 19 வயதிலிருந்து உலகின் பல துறைகளில் சாதனை புரிந்த / புரியும் / புரியப் போகும் முக்கிய பிரபலங்களின் கையெழுத்திட்ட புகைப்படங்களைச் சேகரித்து வருகிறார். அந்தவகையில் இதுவரை 4500க்கும் மேற்பட்ட புகைப்படங்களைச் சேகரித்துள்ளார்!

‘‘பள்ளில படிக்கிறப்ப எதிர்வீட்டுப் பையன் ஸ்டாம்ப்ஸ் சேகரிச்சுட்டு இருந்தான். ஸ்கூல்ல அவனுக்கு நல்ல மதிப்பிருந்தது. ஆசிரியர்கள் அவனைப் பாராட்டுவாங்க. ‘அட, தபால்தலை சேகரிப்புக்கு இவ்வளவு மதிப்பா’னு ஆச்சர்யப்பட்டேன். அப்பதான் நாமளும் ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு ஸ்பார்க் விழுந்தது. என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான் இந்தப் பழக்கம் நினைவுக்கு வந்தது. பொதுவா பண்டிகை அல்லது தலைவர்களோட பிறந்தநாள் அப்ப அவங்களுக்கு வாழ்த்து மடல் அனுப்புவேன். அவங்களும் தேங்க்ஸ் சொல்லி பதில் அனுப்புவாங்க.

இதையே கொஞ்சம் மாத்தி அவங்க கையெழுத்திட்ட போட்டோவை ஏன் கேட்கக் கூடாதுனு தோணிச்சு. அந்த சூட்டோட பெருந்தலைவர் காமராஜருக்கு, ‘இதுமாதிரி தலைவர்கள் கையெழுத்தோட புகைப்படங்கள் சேகரிக்கறேன். உங்க போட்டோ வேணும்’னு கடிதம் எழுதினேன். இதை மதிச்சு பதில் தருவாரானு சந்தேகம் இருந்துச்சு. ஆனா, சில நாட்கள்ல அவரோட கறுப்பு வெள்ளை புகைப்படத்துல சைன் பண்ணி அனுப்பினாரு. எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை இது கொடுத்துச்சு. அடுத்ததா கக்கனுக்கு கடிதம் எழுதினேன். அவரும் அனுப்பினார். இப்படித்தான் தமிழகத் தலைவர்களோட கையெழுத்திட்ட புகைப்படங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்துல படிப்புல கவனம் செலுத்தாம நேரத்தை வீணாக்கறேன்னு வீட்ல நினைச்சாங்க. திட்டவும் செஞ்சாங்க. கஷ்டமா இருந்தாலும் சேகரிப்பை நிறுத்த விரும்பலை. ஆறு வயசுலயே ஒரு விபத்துல பெற்றோரை இழந்துட்டேன். அண்ணன் பராமரிப்புலதான் வளர்ந்தேன். அதனாலயே எங்க தவறான பாதைல போயிடுவேனோனு அண்ணன் பயந்தார். அவர் பள்ளி ஆசிரியர். கண்டிப்புக்கு கேட்கவா வேணும்? ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தார். அதனால வீட்டுக்குத் தெரியாம கடிதம் எழுதினேன்...’’ கண்சிமிட்டியபடி சிரிக்கும் மதி, தலைவர்களைத் தவிர சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், காவல்துறை அதிகாரிகள், ராணுவ தளபதிகள் ஆகியோருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.

‘‘அரசியல்வாதிகள் மட்டும்தான் பிரபலமா? மத்த துறைகள்ல சாதிக்கிறவங்களும் முக்கியமானவங்கதானே? அவங்களுக்கும் கடிதம் எழுதினேன். அதாவது தினமும் 20 கடிதங்கள் என்ற விகிதத்துல. இதுல குறைஞ்சது மூணு லெட்டர்ஸுக்காவது பதில் வரும். இதுவரை போஸ்ட்டுலதான் லெட்டர்ஸ் அனுப்பியிருக்கேன். அவங்களும் தபால்லதான் கையெழுத்திட்டு புகைப்படங்கள் அனுப்பியிருக்காங்க. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தபால் துறைதான் எனக்கு கைகொடுக்குது. போன மாசம்தான் அமெரிக்க ஆளுநருக்கு இமெயில் அனுப்பினேன். அவரும் பதில் மெயில் அனுப்பினதோட போஸ்ட்டுல போட்டோவும் அனுப்பினார்...’’ என்று வியந்த மதி, பிரபலங்களிடம் இருந்து புகைப்படம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்கிறார்.

‘‘கடிதம் எழுதினதாலேயே போட்டோ வந்துடாது. பதில் எழுதவும் சைன் பண்ணி போட்டோ அனுப்பவும் பலரும் யோசிப்பாங்க. நரசிம்மராவ் நம்ம நாட்டு பிரதமரா இருந்தப்ப அவருக்கு 15 முறை கடிதம் எழுதினேன். அஞ்சு வருஷங்கள் அவர் ஆட்சில இருந்தப்ப ஒருமுறை கூட பதில் அனுப்பலை. தன் பதவிக்காலம் முடியறப்பதான் பதில் எழுதி, கையெழுத்திட்டு புகைப்படம் அனுப்பினார். அதேமாதிரி அத்வானிக்கு பலமுறை லெட்டர் போட்டேன். கடைசியாதான் அனுப்பினார். அவ்வளவு ஏன்... பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு 20 வருடங்கள் தொடர்ந்து கடிதம் எழுதினேன். கடைசியா போன வருஷம்தான் சைன் பண்ணி போட்டோ அனுப்பினாங்க.

பொறுமை இல்லைனா எந்த சேகரிப்பும் சாத்தியமில்லை...’’ என்று சொல்லும் மதி, கையெழுத்துடன் புகைப்படம் கேட்டு கடிதம் எழுதிய வகையில் இதுவரை கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார். ‘‘இந்தியா முழுக்க தபால் அனுப்ப குறைந்தபட்சம் ஒரு கடிதத்துக்கு ரூ.5 செலவாகும். வெளிநாடுகள்னா, ரூ.25. இதெல்லாம் மினிமம் தொகை. ஆனா, இப்ப வரைக்கும் இப்படி செலவழிச்சதுக்காக / செலவழிக்கறதுக்காக நான் வருத்தப்பட்டதேயில்லை. ரொம்ப வருஷங்களா இந்தியாவுக்குள்ளதான் கடிதம் எழுதி, போட்டோ வாங்கிட்டிருந்தேன். சர்வதேச அளவுல என்னை கடிதம் எழுதச் சொல்லி தூண்டினது என் மனைவிதான்.  கல்யாணத்துக்குப் பிறகும் என் ஹாபியை நிறுத்தலை.

வீட்ல பிரச்னை வரும்னு பலரும் பயமுறுத்தினாங்க. ஆனா, என் மனைவி என்னை புரிஞ்சுகிட்டு ஆதரவு தெரிவிச்சாங்க. அப்படிதான் ஒருமுறை, ‘உலகளவுலயும் தலைவர்களுக்கு கடிதம் எழுதி கேளுங்க’னு சொன்னாங்க. அதுநாள் வரை அப்படியொரு யோசனை எனக்கு வரவேயில்ல. உடனே துள்ளிக் குதிச்சு லெட்டர் போடத் தொடங்கினேன். ஜார்ஜ் புஷ், ரீகன், கிளிண்டன், பெனாசிர் பூட்டோ, நவாஸ் ஷெரிப், மைக்கேல் ஜாக்சன், ஜாக்கிசான், மடோனா, மார்கரெட் தாட்சர், எலிசபெத் மகாராணி, யாசர் அராஃபத், போப்பாண்டவர், அன்னை தெரசா, தலாய் லாமா, ஒபாமா, கோஃபி அண்ணன், சதாம் ஹுசேன், நேபாள மன்னர் மகேந்திரா, டயானா, நெல்சன் மண்டேலா, இலங்கை அதிபர் குமாரதுங்கா, புதின், சிங்கப்பூர் அதிபர் நாதன்... ஏன்... இப்போதைய அமெரிக்க அதிபரான டிரம்புக்குக் கூட கடிதம் எழுதியிருக்கேன். இன்னும் பதில் வரலை.

பதில் வர வரைக்கும் ஓயவும் மாட்டேன்! இந்திய அளவுல எடுத்துக்கிட்டா நம்ம பிரதமர்களான மன்மோகன் சிங், நரசிம்மராவ், வாஜ்பாய், இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், தேவகவுடா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கே.ஆர்.நாராயணன், பிரதிபா பாட்டீல், வெங்கட்ராமன்... எல்லார்கிட்டேந்தும் கையெழுத்திட்ட புகைப்படம் வாங்கியிருக்கேன். சோனியா காந்திக்கு கடிதம் எழுதினப்ப அவரும் ராஜீவ் காந்தியும் இருக்கிற படத்துல சைன் பண்ணி அனுப்பினார். ராகுல் காந்தி தன் கையெழுத்திட்டு கொடுத்தார்...’’ என்று பட்டியலிடும் மதியிடம் பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைன், எழுத்தாளர் அருந்ததி ராய், நோபல் பரிசு பெற்ற அமிர்த்யா சென், முன்னாள் சிறைத்துறை அதிகாரியான கிரண் பேடி, விண்வெளி ஆராய்ச்சியாளர் மாதவன் நாயர்,

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவரான தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கிரிஸ்டியான் பர்னார்ட், கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநர் அர்னால்டு, தமிழக சினிமா பிரபலங்களான சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி, சாவித்திரி, மனோரமா, கமல், ரஜினி, மீனா, ரோஜா, குஷ்பு... பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன், மாதுரி தீக்‌ஷித், மலையாள நடிகர் மோகன்ரால், ஜெயராம், கன்னட நடிகர் ராஜ்குமார், தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய், உலக செஸ் சாம்பியன் விஸ்வநாத் ஆனந்த், கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், டோனி... என பலரது கையெழுத்திட்ட புகைப்படங்கள் உள்ளன.

இல்லாதது திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் கையெழுத்திட்ட புகைப்படங்கள்! ‘‘ரெண்டு பேருக்கும் கடிதம் எழுதினேன். என்னை மதிச்சு பதில் எழுதி தங்களோட புகைப்படத்தை அனுப்பினாங்க. ஆனா, அதுல அவங்க கையெழுத்து மட்டும் இல்ல. இந்த குறை இப்ப வரைக்கும் எனக்கு இருக்கு...’’ என்று வருத்தப்படும் மதியின் வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.‘‘பத்து வருஷங்களுக்கு முன்னாடி இந்திய ராணுவ தலைமை தளபதியா இருந்த ஜெனரல் என்.சி.விஜ்ஜுக்கு கடிதம் எழுதினேன். அவர் என்னை தீவிரவாதினு நினைச்சிட்டார் போல.

உள்ளூர் போலீஸோட மூணு ராணுவ அதிகாரிங்க என் வீட்டுக்கு வந்துட்டாங்க. அக்குவேறு ஆணி வேறா விசாரிச்சாங்க. என் புகைப்பட சேகரிப்பை முழுமையா பார்த்தாங்க. அதுக்கு அப்புறம்தான் என்.சி.விஜ்ஜு தன் கையெழுத்திட்ட போட்டோவை கொடுத்தார். அதேமாதிரி தமிழக டி.ஜி.பி.யா இருந்த ராஜசேகர நாயரும் என்னை விசாரணை செய்துட்டுதான் போட்டோ கொடுத்தார். 6 மாதங்களுக்கு முன்னாடி விமானப்படை தளபதியான டி.எஸ்.தனோவாவுக்கு கடிதம் எழுதினப்பவும் இதே மாதிரி நடந்தது. சில பிரபலங்கள் நேர்ல வந்து வாங்கச் சொல்வாங்க.

அப்படி பாலமுரளி கிருஷ்ணா, டி.கே.பட்டம்மாள், பி.சுசிலா, கவிஞர் வாலி, இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜாவை எல்லாம் நேர்ல பார்த்து போட்டோல சைன் பண்ணி வாங்கியிருக்கேன்...’’ என்ற மதி, பின்லேடன், சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோருக்கும் புகைப்படம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்!‘‘விலாசம் சரியா தெரியாததுனால நான் எழுதின கடிதம் எனக்கே திரும்ப வந்துடுச்சு! நீங்க என்னை பேட்டி கேட்கிற அளவுக்கு நான் வளர்ந்திருக்கேன்னா அதுக்கு என் மனைவிதான் காரணம். எனக்காக முழு பீரோவையே கொடுத்திருக்காங்க. மூணு மாதங்களுக்கு ஒருமுறை எல்லா போட்டோஸையும் எடுத்து தூசி தட்டி வைப்பேன்...’’ என்கிறார் மதி மயக்கும்பெருமாள் என்கிற மதி.

படங்கள்: மதன்