வரிசையாக வந்தவர்கள்



‘‘பெண்ணை நல்லா பார்த்துக்கோடா, பிடிச்சிருக்கா சொல்லு!’’ - கோமதி சொல்ல, சங்கரன் வனிதாவைப் பார்க்கத் தொடங்கினான். அம்மா காதில் ஏதோ கிசுகிசுத்தான் சங்கர். சுந்தரத்திடம் ஏதோ கிசு கிசுத்துவிட்டு கோமதி குரலைக் கனைக்கத் தொடங்கினாள்.


‘‘அது வந்து... இது வந்து...’’ - கோமதி சொல்ல முயற்சிக்கையில், வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்க, பாஸ்கர் வடிவேலுவிடம் சொன்னான். ‘‘அப்பா, பையன் வீட்டுக்காரங்க வந்துட்டாங்கப்பா...’’

‘‘என்னது... பையன் வீட்டுக்காரங்களா?! அப்ப நாங்க யாரு? என்ன, விளையாடறீங்களா!’’- சுந்தரம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.

‘‘நீங்களும் பையன் வீட்டுக்காரங்கதான். பாருங்க. பெண்ணைப் பிடிச்சிருக்கான்னு கேட்டா ‘இது வந்து அது வந்து’ன்னு இழுக்கறீங்க. இப்படித்தான் 10 பேர் வந்து பார்த்துட்டு இழுத்துட்டுப் போயிட்டாங்க.

அடிக்கடி பர்மிஷன், லீவுன்னு போட்டதால, இவளோட மேனேஜர் இவளுக்குக் கல்யாணம் சிக்கிரம் ஆயிடணும்னு தினமும் கடவுளை வேண்டிட்டு இருக்கார்! அதான் ரெண்டு, மூணு பையன்களை ஒரே நாள்ல வரச் சொல்லிட்டோம். எங்க நிலைமையில இருந்து யோசிச்சுப் பாருங்க சார்!’’ - வெறுப்புடன் சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்று, வந்தவர்களை வரவேற்கத் தாவினார் வடிவேலு!

- சாயம் வெ.ராஜாராமன்