நான் அப்படியில்லை!



பார்த்திபன் புதிதாக அரசுப்பணியில் சேர்ந்திருப்பவன். வேலையில் பாரபட்சம் காட்ட மாட்டான். ஃபைல்கள் தேங்கி இருக்கக்கூடாது; அவ்வளவுதான்... அப்படித்தான் அந்த வேலையையும் முடித்து, சான்றிதழை தயார் செய்தான்.

‘‘சார், இத வச்சிக்குங்க...’’ - உள்ளங்கைக்குள் ஐம்பது ரூபாய் தாளை கசக்கித் திணித்தான் வாங்க வந்தவன். வெகுண்டான் பார்த்திபன்.

‘‘வேலை செய்றதுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்குது... எல்லாரையும் போல என்னை நினைக்கக்கூடாது’’ & சீறலாகச் சொன்னான். வந்தவன் மிரண்டு, இவனை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி போய்விட்டான்!

‘ம்ம்... எல்லாரும் எப்படியோ இருக்கலாம். நான் அப்படியில்லை’ - நேற்றைய நினைவை அசை போட்டபடி, காலை உணவுக்காக ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

அன்று அவனுக்குப் பரிமாறிய சர்வர், புதிதாக இருந்தான். சாப்பிட்டு முடித்ததும், பில் கொண்டு வந்தான் சர்வர். வழக்கமாக பில் வந்ததும், பணம் கொடுத்தனுப்பி மீதியில் டிப்ஸ் கொடுப்பது பார்த்திபன் பழக்கம்.

வழக்கம்போல ரூபாயைக் கொடுத்தான் அந்த சர்வரிடம்.‘‘பணத்தை அங்கேயே கொடுத்திடுங்க சார்’’ என்றான் அவன் புன்னகையுடன். ‘நான் அப்படியில்லை...’ என்று சொல்வதுபோல இருந்தது அவன் புன்னகை!

- டேவி.சாம் ஆசீர்