விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 26

‘‘நகருங்கள்...’’ குரலை உயர்த்தவில்லை. ஏன், கட்டளையும் பிறப்பிக்கவில்லை. சாதாரணமாகத்தான் உலூபி தாயார் உச்சரித்தார். ஆனால், அதில் தெரிந்த அழுத்தம் மூவரையும் கட்டுப்பட வைத்தது.

எதுவும் பேசாமல் ஆதியும், கிருஷ்ணனும், ஐஸ்வர்யாவும் வலது பக்கம் நகர்ந்தார்கள். தங்கள் அருகில் கூட எந்தவொரு ஹாபிட்ஸும் நெருங்கவில்லை என்பதை கிருஷ்ணன் கவனித்தான். கீழ்ப்படிவோம் என்று தெரிந்திருக்கிறது... ஆறாவது அடி எடுத்து வைப்பதற்குள் - ‘‘உம்ம்ம்...’’ கொட்டினாள் உலூபி.

நின்றார்கள். அதன் பிறகு அவர்கள் பக்கம் அவள் திரும்பவில்லை. மாறாக தன் முன்னால் குழுமி நின்ற ஹாபிட்ஸை நோக்கினாள். ‘‘அவனை இழுத்து வாருங்கள்...’’ நொடி கரைவதற்குள் நான்கு சித்திரக்குள்ளர்கள் குண்டுக் கட்டாக ஒரு வயதானவரைத் தூக்கி வந்து தாயாரின் காலடியில் வீசினார்கள்.

‘‘கார்க்கோடகரே...’’ தன்னையும் அறியாமல் வாயைத் திறந்த ஆதியின் உதடு சுண்டி விட்டதுபோல் மூடியது. காரணம், உலூபியின் பார்வை. உதட்டைக் கடித்தபடி கேவலைக் கட்டுப்படுத்தினான். நேர் கோட்டில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. ‘சங்கேத மொழியில் தாராவுக்கு செய்திகளைக் கடத்தியவர் இவர்தான்...

ஸ்ரீரங்கம் கோயிலின் ப்ளூ ப்ரிண்ட்டை அவள் கையில் சேர்த்ததும் இவரேதான்... தாரா வேக வைத்த முட்டையில் ‘KVQJUFS’ என்ற எழுத்துக்கள் பிறக்க காரணமாக இருந்தவர் என நாம் சந்தேகப்படும் மனிதரும் சாட்சாத் இவர்தான்...’ ‘‘எழுந்திரு...’’ உலூபி கர்ஜித்ததும் மந்திரம் போட்டது போல் கார்க்கோடகரை கட்டியிருந்த கயிறுகள் அறுந்தன. தடுமாறி எழுந்து நின்றார்.

‘‘தன்னிலை விளக்கங்களை உன்னிடம் கேட்க விரும்பவில்லை. அதற்கு அவசியமும் இல்லை...’’ சொன்ன உலூபி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவரை நெருங்கினாள். ‘‘ஏன் தெரியுமா? துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. உனக்கான தண்டனை பிறகு அறிவிக்கப்படும். அதுவரை இவனை சிறையில் அடையுங்கள்...’’

ஹாபிட்ஸ்களிடம் கட்டளையிட்ட உலூபி, வலப்பக்கம் திரும்பினாள். ‘‘இவர்களும் இந்த துரோகியுடனேயே தங்கட்டும்...’’ சொல்லிவிட்டு பாதுகாவலர் சூழ அந்த வெட்டவெளியை விட்டு அகன்றாள். உலூபி மறையும் வரை காத்திருந்த ஹாபிட்ஸ், பிறகு அந்த நால்வரையும் இழுத்துச் சென்று ஓர் அறையில் தள்ளினார்கள்.

எங்கிருந்தோ வந்த சிறு வெளிச்சம் நான்கு புறமும் கருங்கல்லால் சூழப்பட்டிருப்பதை உணர்த்தியது. கதவு வழியாகத்தான் வந்தார்கள். ஆனால், எந்தப் பக்க சுவரிலும் கதவுகள் ஏதும் தென்படவில்லை. ஒருவேளை கற்களே சமயத்துக்கு ஏற்ப திறந்து மூடலாம். திறவுகோல் உள்ளே இருக்கிறதா அல்லது வெளியிலா?

‘‘கார்க்கோடகரே...’’ ஆதி பாய்ந்து சென்று அவர் கைகளைப் பற்றினான். ‘‘நீங்க எப்ப தாயாருக்கு துரோகியா மாறினீங்க..?’’ சட்டென்று அவன் கைகளைத் தட்டிவிட்டார். ‘‘கார்க்கோடகரே...’’ ‘‘பெயர் சொல்லி கூப்பிடாத...’’ சீறினார். ‘‘என்ன நடந்ததுனு கேட்காம உலூபிதான் அந்த முடிவுக்கு வந்தாங்கன்னா... நீயுமா..?’’

‘‘சரி. என்ன நடந்ததுனு சொல்லுங்க...’’ கிருஷ்ணன் முன்னால் வந்தான். ‘‘வாப்பா NRI... அர்ஜுனன் வில்லை எடுக்க வந்தவன்தான நீ..?’’ இகழ்ச்சியாகக் கேட்ட கார்க்கோடகர் சட்டென்று நின்றார். அவரது செவிகள் ஏறி இறங்கின. ‘‘அதில்ல பெரியவரே...’’ ஏதோ சொல்ல முற்பட்ட ஐஸ்வர்யாவை நோக்கி ‘பேசாம இரு...’ என்பது போல் தன் கரத்தை உயர்த்தினார்.

மூவரும் அமைதியாக நின்றார்கள். அவரது கண்கள் சுருங்கி விரிந்தன. திடீரென்று ஓடி கருங்கல் சுவரில் தன் காதை வைத்து எதையோ கேட்டார். குறுக்கும் நெடுக்குமாக அறையில் நடந்தார். கைகளைப் பிசைந்தார். நின்றார். செவியை கூர்மைப்படுத்தினார். கணங்கள் உதிர்ந்து பூப்பதற்குள் - அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. அவிச்ச முட்டை ஒன்று கார்க்கோடகரின் கையில் விழுந்தது. எடுத்துப் பார்த்தார். விளக்கொளியில் ‘KVQJUFS’ பளிச்சிட்டது. ‘‘வந்துட்டாங்க...’’ முணுமுணுத்தார். ‘‘யாரு..?’’ ஆதி கேட்டான். ‘‘அனந்தன், குளிகன், பத்மன்!’’

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்

ஊறுகாய் சோடா!

அமெரிக்காவின் ஓஹியோவிலுள்ள மியாமிஸ்பர்க் நகரில் கிராண்ட்பா மிட்டாய் கடைதான் ஊறுகாய் சோடாவின் பிரம்மா. நெட்டில் புதிய சோடா பற்றி நியூஸ் பரவ... ஊறுகாய் சோடா செம சேல்ஸ். இந்தியாவுக்கு எப்ப இது வரும்?!

மூன்று சக்கர ஸ்கார்பியோ!

கேரளாவில் வசிக்கும் சுனில் ஓட்டுவது ஆட்டோதான். ஆனால், அவரது லட்சியம் ஸ்கார்பியோ. அதை வாங்கும் அளவுக்கு வசதியில்லை. எனவே தன் ஆட்டோவின் பின்புறத்தை அச்சு அசலாக ஸ்கார்பியோ போல மாற்றி ஓட்ட ஆரம்பித்தார். அந்த ஸ்கார்பியோ ஆட்டோவில் ஏறிய வாடிக்கையாளர் ஒருவர் அதை போட்டோ எடுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்ற... அது வைரலாக பரவ... மகிந்திரா ஓனர் ஆனந்த் கண்களில் அது பட்டிருக்கிறது. இம்ப்ரஸ் ஆனவர் புது ஸ்கார்பியோவை சுனிலுக்கு பரிசாகக் கொடுத்து விட்டார்!

பெரிய கிண்ணம்!

பெரிதினும் பெரிதுதானே ஆல்டைம் சாதனை! அமெரிக்காவின் சிபிஎஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது ‘லெட்ஸ் மேக் எ டீல்’ என்ற கேம் ஷோ. அதில் உருவாக்கிய தானிய கிண்ணத்துக்கு உலகின் மிகப்பெரிய கிண்ணம் என்ற கின்னஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஷோ முடிந்ததும் அந்தக் கிண்ணம் முழுக்க உணவுகளை நிரப்பி ஆதரவற்றோருக்கு வழங்கியதுதான் ஹைலைட்.