தனுசு லக்னம்- குரு-கேது சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 90

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

பவ்யம், பவித்திரம் என்று வாழ்க்கையை வாழச் செய்யும் குருவோடு கேது சேருகிறார். இதனால் மனித உணர்வுகளையும் புரியாத மனதிற்கு அப்பாற்பட்ட சக்தியையும் அறிய ஆவல் காட்டுவார்கள். சூட்சும சக்திக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். வேத மந்திரங்களுக்கும், மதக் கருத்துகளுக்கும் தனக்கென்று தனித்துவமிக்க சொந்த அர்த்தம் கண்டுபிடிப்பார்கள்.

நேர்மையோடும் நாணயத்தோடும் இருப்பார்கள். இதனாலேயே பொருளாதார விஷயத்தில் அவ்வப்போது அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஆன்மிகத்தில் புரட்சி செய்பவராக இருப்பார்கள். ஜோதிடம், குறி சொல்லுதல், சித்த வைத்தியம் என்றெல்லாம் கால்பதிப்பார்கள். மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் குருவும் கேதுவும் சேர்ந்திருக்கும் பலன்களையும் பார்ப்போமா!

தனுசு லக்னத்திலேயே- அதாவது ஒன்றாம் இடத்திலேயே அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்கிற லக்னாதிபதி கிரகமான குருவோடு, நிழல் கிரகமான கேது அமர்கிறார் எனில், எல்லாவற்றிலும் ஒரு தயக்கம் இருந்து கொண்டேயிருக்கும். ‘எந்த கெட்டபழக்கமும் இல்லைன்னா அதுவொன்றும் பெரிய பெருமை இல்லை’என்று பேசுவார்கள். இவர்களின் மிக நேர்மையான மற்றும் துடுக்குத்தனமான கருத்தால் எளிதாக எதிரிகளைச் சம்பாதிப்பார்கள்.

கவுன்சலிங் செய்வது மிகவும் பிடித்தமான செயலாக இவர்களுக்கு இருக்கும். இரண்டாம் இடமான மகரத்தில் குரு, கேதுவோடு சேர்ந்தால் பணப் பற்றாக்குறை, படிப்பில் தடை, நீடித்த மறதி, கண்களில் நீர் வடிதல் என்றெல்லாம் வந்து நீங்கும். சரஸ்வதி கடாட்சம் இருந்தால் லட்சுமி கடாட்சம் இருக்காது என்பார்களே அதற்கு உதாரணமாக இவர்களைச் சொல்லலாம்.

இவர்களின் இயல்பே அறிவாற்றல் சேர்ப்பதில்தான் இருக்கும். நெருக்கடி நேரத்தில் மட்டும்தான் பணத்தைப் பற்றிய சிந்தனையே வரும். அபாரமான மன ஆற்றலைப் பெற்றவர்களாக இருப்பார்கள். நன்கு வாதிடக் கூடியவராக இருப்பதால் வழக்கறிஞராகச் செயல்படுவார்கள். மூன்றாம் இடமான கும்பத்தில் குருவும், கேதுவும் இருந்தால் எதிலுமே வித்தியாசமான அணுகுமுறை இருக்கும்.

சரியான விவகாரம் பிடிச்சவங்க என்றும் பெயரெடுப்பார்கள். தான் புடிச்ச முயலுக்கு மூணுகால் என்று பிடிவாதம் பிடிப்பவர்களாக இருப்பார்கள். கேள்விஞானம் அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள். ஏதேனும் கற்றுக்கொண்டே இருப்பார்கள். சிறிய வயதிலேயே சித்தர்கள், கோயில்கள், மகான்கள் என்று தேடலோடு இருப்பார்கள். இளைய சகோதர, சகோதரிகள் மிகவும் அனுகூலமாக இருப்பார்கள். தாத்தாவின் கட்டில், பாட்டியின் கண்ணாடி என்று அவர்கள் உபயோகித்த பொருட்களையெல்லாம் சேமித்து வைத்திருப்பார்கள்.

நான்காம் இடமான மீன ராசியில் குருவும் கேதுவும் சேர்க்கை பெற்றால் தாய் வழிப் பாட்டனின் பெருமையைப் பேசுதல் பிடிக்கும். தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்யத்தில் பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். குருட்டு நம்பிக்கைகள் நிறைய இருக்கும். ‘எங்கம்மா சொன்னாங்க...’ என்று அவ்வப்போது தாயாரைக் குறித்து பேசியபடி இருப்பார்கள்.

முயற்சியைத் தவிர தெய்வத்தின் அருளும் வேண்டும் என்று பல இடங்களில் உணர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். புதிய வாகனத்தை வாங்கும்போது வேறொருவர் பேரில் பதிவு செய்து கொஞ்ச நாட்கள் வைத்திருந்துவிட்டு பிறகு இவர்கள் பேரில் மாற்றிக் கொண்டால் நல்லது. ஐந்தாமிடமான மேஷத்தில் குருவோடு கேது அமரும்போது பூர்வீகச் சொத்து இவர்களிடம் தங்காது. தாமதமாக குழந்தை பாக்கியம் கிட்டும்.

புராணங்களை மீள் ஆய்வு செய்வார்கள். சிலருக்கு எங்கு சென்றாலும் எங்கேயோ இதையெல்லாம் பார்த்த ஞாபகமாகவே உள்ளதே என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். மூதாதையர்கள் மீது மிகுந்த பிரியத்தோடு இருப்பார்கள். படித்து பட்டம் பெற்று வேலையில் அமர்ந்த பின்னரும் கூட தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். முற்பிறவி பற்றிய எண்ணங்கள், அது குறித்த நம்பிக்கைகள் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

ஆறாம் இடமான ரிஷபத்தில் குருவும் கேதுவும் சேர்ந்திருக்கும்போது சாஸ்திரத்திற்கு எதிராகப் பேசுவார்கள். ஆறு, மலைப் பகுதிகளில் வசிப்பதற்கு பெரிதும் விரும்புவார்கள். கடன் என்றாலே தூரமாக ஓடுபவர்களாக இருப்பார்கள். விவாதம் செய்வது என்பது இவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்போல இனிக்கும். கடுஞ்சொற்கள் பேசி இவர்களே இவர்களை பகையாளியாக சமூகத்தில் காட்டிக் கொள்வார்கள். எதிராளி எல்லா நல்ல விஷயத்தையும் மறந்து விட்டு இதை மட்டுமே மனதில் வைத்திருப்பார்.

ஏழாம் இடமான மிதுனத்தில் குருவும் கேதுவும் சேரும்போது திருமண விஷயத்தில் தோஷமில்லாது சுத்த ஜாதகமாகப் பார்த்துச் சேர்க்க வேண்டும். சிறியதாக ஏதேனும் குறையுள்ளவராக வாழ்க்கைத் துணைவர் இருந்தால்கூட நல்லதே. வாழ்க்கைத் துணைவர் பொருளாதாரத்திலோ, கல்வி அறிவிலோ ஏதேனும் ஒருவிதத்தில் இவரை விட குறைவான அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும் நல்லது.

கூட்டுத் தொழிலைச் செய்யும்போது எச்சரிக்கை உணர்வு அவசியம். கணவன் மனைவிக்குள் திருப்தியற்ற போக்கு நிலவிக் கொண்டேயிருக்கும். மத்திம வயதுக்குப் பிறகு ஆசார, அனுஷ்டானத்தோடு இருக்கவே விரும்புவார்கள். எட்டாமிடமான கடகத்தில் குரு உச்சமாகிறார். கேது உடன் அமரும்போது அருள்வாக்கு சொல்வார்கள்.

உடல்நிலையில் ஏதேனும் தொந்தரவு இருந்தபடியே இருக்கும். பணத்தை தண்ணீர் போன்று செலவழிப்பார்கள். எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடன் வாங்குவதை இவர்கள் குறைக்கவில்லையெனில் மாபெரும் அவஸ்தையில் சிக்கிக் கொள்வார்கள். எளிமையானவராக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். நிறைய நண்பர்கள் இருந்தாலும் யாரேனும் ஓரிருவரே நெருக்கமாக இருக்க முடியும்.

ஒன்பதாம் இடமான சிம்மத்தில் குருவும் கேதுவும் சேர்வதால் தந்தையை விஞ்சுவார்கள். திடீர் பயணம், கொஞ்சம் ஊதாரித்தனம் போன்றவை இருக்கும். காடு, மலை என்று தொடர்ந்து பயணம் செய்தபடியே இருப்பார்கள். அதேசமயம் எப்போதும் அலுப்பும் சலிப்புணர்வுமே இவர்களிடத்தில் மேலோங்கியிருக்கும். ஏதேனுமொரு ஆரோக்ய குறைபாடு இருந்தபடி இருக்கும்.

தன்னைத்தானே மிகைப்படுத்திக் கொள்பவர்களாக இருப்பார்கள். சவால்களை வரவேற்று கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்த முயற்சியில் வெற்றி பெறும் வரை போராடுவார்கள். புதைபொருள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பழைய பொருட்களை சேர்த்தபடி இருப்பார்கள். பத்தாம் இடமான கன்னியில் குருவும், கேதுவும் சேர்ந்திருந்தால் ஹோமியோபதி, சித்த மருத்துவராக விளங்குவார்கள். கூடவே மருந்துக் கடை வைத்தும் நடத்துவார்கள்.

பப்ளிகேஷன்ஸ், வழக்கறிஞர், பத்திரிகை ஆசிரியராகவும் இருப்பார்கள். அறுவை சிகிச்சை நிபுணராகவும், குறிப்பாக, எலும்பு, மூட்டுப் பிரிவு மருத்துவத்தில் தலைசிறந்தவர்களாகவும் சாதிப்பார்கள். பதினோராம் இடமான துலா ராசியில், பாதக ஸ்தானத்தில் கேதுவும் குருவும் இருந்தால் மூத்த சகோதரரோடு இணக்கமாக இருப்பார்கள். ஏஜென்சி, புரோக்கரேஜ் போன்ற தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.

பலவிதங்களில் வருமானம் ஈட்டும் தந்திரத்தை தெரிந்து வைத்திருப்பார்கள். பூமியினடியில் ஓடும் நீரோட்டம் அறிதல், புதையல் கண்டுபிடித்தல் என்று இறங்குவார்கள். பன்னிரெண்டாம் இடமான விருச்சிகத்தில் குருவும், கேதுவும் சேர்ந்திருந்தால் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை பார்ப்பார்கள்.

இவர்களில் பலருக்கு சமஸ்கிருதத்தில் ஆர்வம் வந்து படிக்கத் தொடங்குவார்கள். இவர்கள் மத்திம வயதுக்கு மேல் தீவிரமான ஆன்மிக வாழ்க்கையில் இறங்குவார்கள். வித்தியாசமான மத சிந்தனைகளை உடையவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்பானது இகலோக வாழ்க்கையை விட, அகலோக வாழ்க்கைக்கே முக்கியத்துவம் அளிக்கும்.

சிறியதாக துறவற மனப்பான்மை இருந்து கொண்டிருக்கும். இதனால், இல்லற வாழ்வில் அதிருப்தியும், மனச்சோர்வும், குழப்பமும் சூழும். இம்மாதிரி நேரங்களில் சித்தர்களின் ஜீவ சமாதிக்குச் செல்வது நல்லது. எனவே, மருதமலையில் அமைந்துள்ள பாம்பாட்டிச் சித்தர் ஜீவசமாதிக்குச் சென்று வாருங்கள். மேலும், மலைமேலுள்ள முருகனையும் தரிசியுங்கள்.

பழனி முருகனைப்போல வலது திருக்கரத்தில் ஞானத்தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார் முருகன். பதினெண் சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டிச் சித்தர் 5 தலை நாகம் ஒன்று மருதமலையில் இருப்பதாக கேள்விப்பட்டு இங்கே வந்தார். ஒருநாள் பாம்பு புற்றுக்குள் கைவிட அங்கு சட்டை முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.

முனிவர் அறிவுரைப்படி, அன்றிலிருந்து சித்தர் பாம்புகளை பிடிக்கவில்லை. மலைமேலுள்ள ஆதி முருகனை தினமும் வழிபட்டு, வலப்பக்கம் கீழே உள்ள குகையில் அமர்ந்து தவம் செய்து, அட்டமா சித்திகளையும் அடைந்தார் என்கிறது கோயில் தலவரலாறு. அவர்தான் மருதமலையானின் மூலவர் சிலையையும் வடிவமைத்தார்.

இவருடைய குகை, இன்று பக்தர்களின் தோஷம் நீக்கும் சந்நதியாக விளங்குகிறது. கோயிலின் வலப்பக்கம் உள்ள மலைப்பாதை வழியாக இறங்கி இந்த குகையை அடையலாம். வலது கையில் மகுடி, இடது கையில் தடியுடன் சித்தர் அருள்பாலிக்கிறார். அருகில் சிவலிங்கம், நாகர் திருவுருவங்கள் உள்ளன.

இவர் சந்நதியில் ஒரு பாறையில் 5 தலை நாக வடிவம் உள்ளது. இந்த வடிவிலேயே முருகப் பெருமான் சித்தருக்கு தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது. இந்த நாகத்தை முருகனாக வழிபடுகிறார்கள். கோவை ரயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது இக்கோயில். காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்