கருப்புதான் அழகு



செக்கச்செவேல் கலருக்கு இந்தியாவிலிருக்கும் மவுசே தனி. மாம்பழம் டூ கல்யாணப்பெண் வரை மஞ்சள் கலரில் இருந்தால்தான் போணி செய்வேன் என வம்பு செய்வது, நம் மனவாடுகளின் மாறாத வழக்கம். இப்போது ஃபேஸ்புக்கில் ஹாட் கேக்காக பலராலும் ஷேர் செய்யப்பட்டு வலம் வரும் இந்த மூன்று கன்னிகளின் செல்ஃபீயும் மறைமுகமாக சொல்ல வருவதும் அதேதான்.

‘தி அன்கேனி ட்ரூத் டெல்லர்’ என்ற ஐடியில் வெளியாகியுள்ள செல்ஃபீ படத்தில், கருப்பு நிறத்திலுள்ள மூன்று பெண்கள், தங்க நகைகளை அணிந்துகொண்டு நிற்கிறார்கள். அதன் கீழே ‘இதுவரை இந்தியாவில் காட்டப்படாத முகங்கள்’ என குத்தல் சொற்கள் இடம்பெற்றுள்ளன. உண்மையில் இவர்கள் இந்தியர்களா என்று தெரியவில்லை.

ஆனால், டக்கென விஷயத்தின் வீரியத்தை புரிந்துகொண்ட ஜென் இஸட் இளசுகள், இன்ஸ்டன்டாக படத்தை ஊர் முழுக்க ஷேர் செய்துவிட்டார்கள். ‘முக அழகு க்ரீம் விளம்பரங்களில் நடிக்கும் சோனம் கபூர், ஷாரூக்கான், யாமி குப்தா, ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டோர் இந்திய மனங்களில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு இது சாம்பிள்’ என பாலிவுட் நடிகரான அபய் தியோல் இப்படத்தை சுட்டிக்காட்டியிருப்பது நெகிழ்ச்சி.