காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 5

‘அமரேந்திர பாகுபலியாகிய நான்...’ என்று பிரபாஸ், கைநீட்டி சத்தியப் பிரமாணம் செய்யும்போது மகிழ்மதி நாடே அலறியது இல்லையா? அப்படி ஓர் ஆரவாரம் நம் காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபாருக்கும் அவனுடைய இளம் வயதிலேயே கிடைத்து விட்டது. பள்ளிப் பருவத்திலேயே அடிதடி என்று பாப்லோ இறங்கிவிட்டதாலோ அல்லது மெதிலின் புறநகரான ரியோநெக்ரோவில் இனி பண்ணை வைத்து, பணம் சம்பாதித்து வாழ முடியாது என்கிற இக்கட்டு தோன்றியதாலோ என்னவோ தெரியவில்லை.

பாப்லோவின் அப்பா, ஏபெல் எஸ்கோபார் தன்னுடைய நிலபுலங்களை கணிசமான விலைக்கு விற்றுவிட்டார். பாப்லோ பிறக்கும்போது அவனது அப்பாவுக்கு சொந்தமாக பன்னிரெண்டு ஏக்கர் நிலம், பெரிய பண்ணை வீடு, லிட்டர் கணக்கில் பால் கறக்கும் ஆறு மாடுகள் என்று அமோகமாகத்தான் இருந்தார்கள். பலரும் கருதுவதைப் போல பாப்லோவின் இளமைக்காலம் வறுமையானது அல்ல.

ரியோநெக்ரோவில் அனைத்தையும் விற்றபின் என்விகாதோ என்கிற குக்கிராமத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். அம்மா ஹெர்மில்தா, இங்கே சொந்தமாகவே ஒரு ஸ்கூலை தொடங்கிவிட்டாள். அப்பா, பேருக்கு பண்ணை நடத்தினார். கணிசமாக கையில் காசு இருந்தது. “பசங்களா, புது ஊருக்கு வந்திருக்கோம். உங்க வாலையெல்லாம் சுருட்டி வெச்சுக்கிட்டு அம்மா அப்பா பேச்சை கேட்டுக்கிட்டு சமத்தா நடக்கணும்.

முக்கியமா பாப்லோ, உனக்குத்தான்…” ஆரம்பத்திலேயே எச்சரித்து விட்டார்கள். பாப்லோவுக்கு மீசை அரும்பும் பருவம். ஆருயிர் சகாவும், அத்தனை அராத்துத் தனங்களுக்கும் பார்ட்னருமான குஸ்டோவா இப்போது கூட இல்லாததால் திடீரென்று திருந்திவிட்டான். இல்லை... இல்லை... திருந்தியதைப் போல நடித்துக் கொண்டிருந்தான். அவன் உண்டு, அவன் படிப்பு உண்டு, மாலைவேளைகளில் கால்பந்து என்று சராசரி கொலம்பியனாக வளர்ந்து கொண்டிருந்தான்.

உயரம் சற்றே குறைவுதான் என்றாலும் குறும்பு கொப்பளிக்கும் கண்கள், அசத்தலான ஹேர்ஸ்டைல் என்று ஊரில் இருக்கும் கன்னிப் பெண்களின் நெஞ்சங்களில் அவனை அறியாமலேயே கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான். அறுபதுகளின் இளைஞன் அவன். உலகம் முழுவதையும் அப்போது உலுக்கிப் போட்ட பாப் இசை, பன்னாட்டு உணவு வகைகள், ஹாலிவுட் திரைப்படங்கள் என்று பாப்லோ ரசனையாக உருமாறினான்.

இவற்றை அனுபவிக்க அடிக்கடி மெதிலின் நகருக்கு செல்லத் தொடங்கினான். மெதிலினுக்கு இவனுடைய சகா குஸ்டோவாவும்  வருவான். இருவரும் சேர்ந்து பழையபடி சுற்ற ஆரம்பித்தார்கள். கொலம்பியாவில் பத்தாண்டு களுக்கு மேலாக நாற்பதுகளின் இறுதியில் தொடங்கி ஐம்பதுகளின் இறுதிவரை நீடித்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் தாக்கம் ஆங்காங்கே நீடித்தது.

அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடித்ததால், கொலம்பிய இளைஞர்களை வழிகாட்டி நல்வழிப்படுத்த ஆட்கள் யாருமில்லை. தங்கள் நாட்டுக்குள் அமெரிக்காவின் மூக்கு அளவுக்கதிகமாகவே நீண்டிருந்ததை, அந்த இளைஞர்கள் விரும்பவில்லை. கொதிப்பான மனநிலையில் இருந்த கொலம்பிய இளைஞர்களுக்கு இருவேறு பாதை இருந்தது.

ஒன்று, புரட்சிகரமான கொரில்லா இயக்கங்களில் இணைந்து அரசுக்கு எதிராக கலகம் செய்வது. இரண்டாவது, அத்தனை கவலைகளையும் மறக்க உல்லாசங்களில் ஊறித் திளைப்பது. பாப்லோ எதைத் தேர்ந்தெடுத்திருப்பான் என்பதை தனியாக உங்களுக்கு சொல்லவும் வேண்டுமோ? அப்போது ‘Nadaismo’ என்கிற இயக்கம் கொலம்பியாவில் எழுச்சி பெற்றிருந்தது.

‘Nadaism’ என்றால் ‘Nothing-ism’. ‘எதுவுமே இல்லை’ என்று எல்லா பொறுப்புகளையும் துறந்து, ஜாலியாக தான்தோன்றித்தனமாக வாழ்வதே ‘Nadaism’. அக்கால அமெரிக்காவையே உலுக்கிப் பார்த்த ஹிப்பி கலாசாரத்தின் இன்னொரு வடிவம்தான் இது. இரண்டாம் உலகப் போர் முடிந்து உலகமே ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தபோது பலருக்கும் சிந்திக்க நிறைய நேரம் கிடைத்தது.

அப்போது ஏகப்பட்ட ‘இஸம்’களாக சிந்தித்துத் தொலைத்தார்கள். ஓவர்நைட்டில் சிந்தனையாளர்களாக ஆகிவிட்டார்கள். அவ்வகையில் ‘Existentialism’ என்கிற ‘இருத்தலியம்’ மற்றும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை மறுத்து சிந்திக்க வகை செய்யும் ‘Nihilism’ இரண்டையும் உல்டா அடித்து உருவாக்கப்பட்டதே ‘Nadaism’. இந்த இஸங்களை எல்லாம் நோண்டிப் பார்த்தால் நம்முடைய பதினெண் சித்தர்கள் சொன்னவையாகத்தான் இருக்கும்.

அதை விடுங்கள். நம்முடைய ‘காட்ஃபாதர்’ பாப்லோவுக்கு ‘Nadaism’ மீது ஈர்ப்பு ஏற்பட்டு, ‘நதாய்ஸ்மோ’ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அந்த இயக்கத்தின் பொறுப்புத் துறப்பு என்கிற சிந்தனை, எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாப்லோ போன்ற இளைஞர்களை தேன் என ஈர்த்தது.

பாப்லோ குடியிருந்த என்விகாதோ பகுதியில்தான் இந்த இயக்கத்தின் மையம் இயங்கியது. ‘The Right to Disobey’ (மறுத்தலுக்கான உரிமை) என்கிற அந்த இயக்கத்தின் ஆவணம் மொத்தமும் பாப்லோவுக்கு மனப்பாடம். கண்டிப்பான கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாப்லோவுக்கு மறுக்கும் சுதந்திரம் அவசியமாகப் பட்டதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?

கொள்கை, கோட்பாடு, கந்தாயத்தை எல்லாம் விடுங்கள். ‘நதாய்ஸ்மோ’ இயக்கம் ‘டோப்’ அடிப்பதை - அதான் கஞ்சா - ஊக்குவித்தது. முரட்டு போதையில்தான் மூளை தெளிவாகும். மூளை தெளிவாகும்போதுதான் பழைய பஞ்சாங்க மதிப்பீடுகளையெல்லாம் உடைத்தெறிவதற்கான சிந்தனைகள் உருப்பெறும் என்று அந்த இயக்கத்தின் முன்னோடிகள் சிந்தித்தார்கள்.

இந்த ஐடியா, பாப்லோவுக்கு ஏற்புடையதாக இருந்தது. ‘டோப்’ அடித்தான். அவனுடைய மூளையில் குழப்பமான சித்திரங்கள் தோன்றின. அந்த குழப்பங்கள் மறைந்து, மனசு தெளிவான போதுதான், தான் ஏன் காட்ஃபாதர் ஆகி கொலம்பியாவை ஆளக்கூடாது என்று தோன்றியது. அதன் பின் நடந்ததெல்லாம் வரலாறு.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்

‘ஒண்ணுமே இல்லை’ இஸம்!

‘Nadaism’ என்கிற ‘Nothing-ism’ கொலம்பியாவில் ஐம்பதுகளின் இறுதியிலும், அறுபதுகளின் தொடக்கத்திலும் கோலோச்சிய கலை மற்றும் சிந்தனை ரீதியிலான மரபு மறுப்பு இயக்கம். La Violencia என்று சொல்லப்படும் கொலம்பிய உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் விரக்திக்கு வடிகாலாக இந்த இயக்கம் வெகுஜன மக்கள் மத்தியில் வேகமாக பரவியது.

பற்றிக்கொள்ள ஒரு கொம்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த கொலம்பிய இளைஞர்கள், கொம்பு வலுவானதா, தங்களை காப்பாற்றுமா என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. இவர்கள் தங்களது இயக்கத்தை ‘Nadaismo’ என்று சொல்லிக் கொண்டார்கள். ‘கொலம்பியன் தாதாயிஸம்’, ‘கொலம்பியன் பீட் ஜெனரேஷன்’, ‘கொலம்பியன் ப்யூச்சரிஸம்’ என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுவது இந்த சிந்தனையே.

கோன்ஸாலோ அராங்கோ அரியாஸ் (1931 - 1976) என்கிற கவிஞர்தான் இந்த இயக்கம் மற்றும் சிந்தனைகளின் சூத்ரதாரி. இவரோடு கொலம்பிய கலை, இலக்கியம் தொடர்பான பலரும் இணைந்து 1958ல் ‘நதாயிஸம் அறிக்கை’யை மெதிலின் நகரில் வெளியிட்டு தங்கள் இயக்கத்தைத் தொடங்கினர்.

இயக்கத்தின் தொடக்கத்துக்கு குறியீடாக அதுநாள் வரை கிளாசிக்குகளாக கொண்டாடப்பட்ட கொலம்பிய இலக்கியங்களை மேடையிலேயே எரித்தார்கள். அனைத்தையும் மறுத்த இவர்களது இயக்கத்துக்கு கொலம்பிய இளைஞர்களிடம் ஆரம்பத்தில் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. ஆனால், இயக்கத்தை நடத்தியவர்களுக்கு உள்ளேயே நிறைய முரண்பாடுகள் இருந்தன.

நிறுவனரான கோன்ஸாலோவே சில நேரங்களில் தீவிர கடவுள் மறுப்பு பேசுவார், திடீரென ஆழமான ஆன்மீகத்தில் மூழ்கி முத்தெடுப்பார். “மேதமைக்கும், முட்டாள்தனத்துக்கும் இடையில் பெண்டுலம் போல இயங்குபவன்தான் கலைஞன்!” என்று தன்னுடைய சலனத்துக்கு முட்டுக் கொடுப்பார் கோன்ஸாலோ.

“என்னை இழப்பதின் மூலம் கொலம்பியர்கள் என்னை வெல்வார்கள்...” என்று ஆரவாரமாக அறிவித்து விட்டு நாட்டைவிட்டு கிளம்ப ஆயத்தமான கோன்ஸாலோ, ஒரு கார் விபத்தில் காலமானார். அவரை நிஜமாகவே இழந்துவிட்ட கொலம்பியர்கள், அவர் ஏற்படுத்திய இயக்கத்தை வெகுவிரைவாகவே கைகழுவி விட்டார்கள். முரண்பாடுகளின் மூட்டையாகத் திகழ்ந்த தலைவர்களைக் கொண்ட இவ்வியக்கம், எழுபதுகளின் மத்தியில் மவுசு குறைந்து மண்ணோடு மண்ணானது.