ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 24

தன் வாழ்நாள் முழுவதையும் கலை இலக்கிய ரசனைக்கு ஒப்புக்கொடுத்தவர் தேனுகா. ஆனால், அவரைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இலக்கிய விமர்சனத்தைவிட கலை விமர்சனமே தகுதிவாய்ந்த ஒன்றென்பது என் எண்ணம். காரணம், காகிதத்தில் எழுதப்படும் இலக்கியத்தை, ஓரளவு எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள்கூட கொஞ்சம் முயன்றால் உணர்ந்து கொள்ளலாம்.

கலை விமர்சனம் என்பது அப்படியல்ல. கலை என்றால் சிற்பம், ஓவியம், இசை. சிற்பத்தையோ ஓவியத்தையோ பார்க்கக்கூடிய ஒருவர், அதன் உட்பொருளை போதிய பயிற்சியில்லாமல் கிரகித்துக் கொள்ள முடிவதில்லை. கண்ணிருப்பதால் பார்க்கிறோம் என்பதோடு ஓவியத்தையும் சிற்பத்தையும் நாம் கடந்துவிடுகிறோம். உண்மையில், அதன் வரையறைகள் பற்றியோ, வார்ப்புமுறைகள் பற்றியோ யாரும் நமக்குச் சொல்லித் தரவில்லை.

அல்லது நாமுமே அப்படியான அக்கறைகளை அக்கலைகளின் மீது கொண்டிருக்கவில்லை. ஓவியம் என்றால் வரையப்படுவது, சிற்பம் என்றால் செதுக்கப்படுவது என்பதோடு நிறுத்திக்கொள்கிறோம். எது சிறந்த ஓவியம்? எது சிறந்த சிற்பம்? என்பதை அறிந்துகொள்ளவும் அறிவுறுத்தவும் முனைந்தவர்களில் தேனுகா முக்கியமானவர். எதன் அடிப்படையில் ஒரு சிற்பம் வடிக்கப்படுகிறது என்பதையும், எந்த வரையறைக்குள் ஓர் ஓவியம் தீட்டப்படுகிறது என்பதையும் அவர் போல இன்னொருவர் சொல்ல நான் கேட்டதில்லை.

தமிழ்ச் சூழலில் நிலவிவந்த கலை இலக்கிய விமர்சன வெறுமையைப் போக்கியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. இன்றைக்குக் கலை இலக்கியப் பாரம்பரியமிக்கவர்களாகத் தமிழர்கள் தங்களைக் காட்டிக்கொள்ள போதிய தரவுகளை ஏற்படுத்திக்கொடுத்தவர் அவரே. தேனுகா, கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

‘வண்ணங்கள் வடிவங்கள்’ என்னும் நூல் வாயிலாக கலை இலக்கிய விமர்சனத்துறைக்கு அறிமுகமானவர். தன்னுடைய செயற்கரிய ஆய்வுகளால் தமிழ்க் கலைகளுக்கும் முதுகெலும்பு உண்டென்று நிரூபித்தவர். சோழர் காலத்திலேயே அதிக அளவு சிற்பிகள் வாழ்ந்த ஊராக கருதப்படும் சுவாமிமலை, முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.

அங்கிருந்துதான் நடராஜர், விநாயகர், ரிஷபதேவர், அர்த்தநாரீஸ்வரர், மாரியம்மன் என விதவிதமான விக்கிரகங்கள் ஏனைய ஊர்களுக்கு வருவிக்கப்பட்டன. சிற்பக்கலையில் புகழ்வாய்ந்த அண்ணாசாமி ஸ்தபதி, தேவசேனா ஸ்தபதி, மூர்த்தி ஸ்தபதி, வைத்தியநாத ஸ்தபதி என தேசிய விருது பெற்ற எத்தனையோ ஸ்தபதிகள் அவ்வூரிலிருந்துதான் தங்கள் ஆளுமைமிக்க படைப்புகளை உலகுக்கு ஆக்கியளித்தார்கள்.

அவர்கள் வாழ்ந்துவந்த அதே ராஜவீதியில்தான் தேனுகாவின் பூர்வீக வீடும் அமைந்திருந்தது. எனவே, சதா விக்கிரகங்களை வார்ப்பதும் செதுக்குவதுமான ஒலிகள் அவர் காதில் கேட்டுக்கொண்டே இருந்திருக்கின்றன. அதன்மூலம் அவர் தெய்வச் சிலைகளை வடிப்பதற்கான இலக்கணங்களை மிக இளவயதிலேயே கற்றிருக்கிறார்.

உத்தம தாளம், மத்திம தாளம் என்ற அளவுகளோடு வடிக்கப்பட்ட கோயில் சிற்பங்களை நாள்தோறும் பார்த்துப் பழகிய அவர், அது குறித்துப் பேசவும், எழுதவும் தொடங்கியிருக்கிறார். சிவபெருமானை தச தாளத்திலும் அம்பாளை நவ தாளத்திலும் விநாயகரைப் பஞ்ச தாளத்திலும் வடிப்பார்கள் என்னும் தகவலே அவர் எழுதும்வரை என் போன்றோருக்குத் தெரியாது.

சீனிவாசன் என்னும் இயற்பெயரை உடைய தேனுகா, ‘வித்யாஷங்கரின் சிற்பமொழி’, ‘மைக்கேலேஞ்சலோ’, ‘லியனார்டோ டாவின்சி’, ‘பியாத் மோந்திரியானின் நியோபிளாஸ்டிசம், ‘ஓவியர் வான்கோ’, ‘பழகத் தெரியவேணும்’, ‘ஆல்பர் காம்யூவிற்கு என் அஞ்சலி’ ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.

விமர்சனத்துறையில் மிகத் தீவிரமாக இயங்கிய அவருடைய படைப்புகள் அவருடைய பெயரைப் போலவே தனித்த கவனத்தைப் பெறுபவை. கும்பகோணத்தில் வங்கி ஊழியராக இருந்துவந்த அவர், அவ்வப்போது எழுத்தாளர் ப்ரகாஷைப் பார்க்க தஞ்சாவூருக்கு வருவார். அவர் தஞ்சைக்கு விஜயம் செய்யும் போதெல்லாம், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாகக் கலை இலக்கியத் தோழர்கள் அவரை முன்வைத்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.

மேடையோ ஒலிபெருக்கியோ இல்லாமல் அக்கூட்டம் சோழன் சிலைக்கு அருகே அமைந்துள்ள அகலமான நடைபாதையில் நடைபெறும். நாங்கள் எல்லோரும் வட்டமாக அமர்ந்துகொண்டு அவரை நடுநாயகமாக இருத்தி, அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்போம். மெல்லிய குரலில் அவர் பேசத் தொடங்குவார். முதல் கால்மணிநேரம் மிதமாகவும் அடுத்த அரைமணி நேரம் அடர்த்தியாகவும் அவருடைய பேச்சுகள் அமையும்.

உலகத்தின் பல பகுதிகளிலும் நிலவி வந்த கலை இலக்கியப் போக்குகளை விரல்நுனியில் வைத்திருப்பார். அலெக்சாண்டர் கால்டரின் நகரும் சிற்பங்கள் பற்றியும், ஓவியர் தியோவான் தஸ்பர்க்கின் எளிமெண்டரிசம் பற்றியும் அப்படித்தான் எங்களுக்குத் தெரிய வந்தன. நடைபாதையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் உலகளாவிய விஷயங்களை வெகு சாதாரணமாகச் சொல்லிச் செல்வார்.

அவருடைய ஒவ்வொரு பேச்சின் இறுதியிலும் அதுவரை திறக்கப்படாதிருந்த கலை இலக்கியக் கதவுகள் தங்களைத் தாங்களே திறந்து கொள்ளும். ஓர் அதிசயத்தைக் கண்ணுற்றதைப்போல அவரை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். ஒரே தாளத்தில் இசைக்கப்படும் மெல்லிய இசையைப் போல அவர் பேச்சின் அடவுகள் அமைந்திருக்கும். எதிரே அமர்ந்திருப்பவர்களின் முகபாவத்திற்கு ஏற்ப அவருடைய உடல்மொழிகள் உணர்ச்சிகளைக் கொப்பளிக்கும்.

தத்துவ விசாரங்களில் அவருக்கிருந்த ஈடுபாட்டில் சற்றும் குறைவில்லாத ஈடுபாட்டை இசையிலும் அவர் கொண்டிருந்தார். அதிலும் எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றியோ நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினத்தைப் பற்றியோ கேட்டுவிட்டால் அவ்வளவுதான். அன்றைய பொழுது முழுக்க அவர்களின் சிறப்புகளைப் பாடிப்பாடி உற்சாகப்படுத்துவார்.

சுப்ரபாதம் ரெக்கார்டுகள் மூலம் கிடைத்த அளப்பரிய செல்வத்தையெல்லாம் திருப்பதி தேவஸ்தானத்துக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கிய எம். எஸ். எஸ்.ஸை தபஸ்வி என்றுதான் குறிப்பிடுவார். நான் சொல்வது சற்றேறக் குறைய இருபது ஆண்டுகளுக்கு முன். அப்போது இசங்கள் குறித்தும் இசை குறித்தும் கலை இலக்கிய விமர்சனம் குறித்தும் இப்போது போல யாருமே எழுதியிருக்கவில்லை.

அன்றைக்கு யாருமே இல்லாத அல்லது யாருமே முன்வராத விமர்சனக் காட்டுக்குள் ஒற்றைச் சிங்கமாக அவர் உலவி வந்த கம்பீரம் அசாத்தியமானது. க.நா.சு., வெங்கட்சாமிநாதன் ஆகியோருக்குப்பிறகு தேனுகாவின் பங்களிப்புகளே ஸ்திரமானவை. உதிரிகளாக ஒருசிலர் அத்துறையில் இயங்கியிருந்தாலும் தேனுகா அளவுக்குத் தொடர்ச்சியாக அத்துறையில் யாருமே பங்களிப்புச் செய்யவில்லை.

மேற்கில் மட்டுமே இருந்துவந்த கலை இலக்கியக் கோட்பாடுகளையெல்லாம் தமிழில் பிரபல்யப்படுத்த அவர் இடையறாமல் உழைத்துக் கொண்டிருந்தார். என்னுடைய பதின்ம வயதில்தான் தேனுகா என்னும் பெயரை முதன்முதலில் கேட்டேன். பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அப்பெயருக்கு உரிய நபர் பெண்ணாக இருக்கக்கூடும் என்றே நானும் எண்ணினேன்.

ரேணுகா மாதிரி தேனுகா என எண்ணி அவர்மீது காதல் மீதூறிய காலம் அது. என்போலவே தேனுகாவை பெண்ணென்று நம்பிப் பிரியம் வைத்த இன்னொருவர் கவிஞர் புத்தகன். அவ்வப்போது நானும் புத்தகனும் “இந்த தேனுகா பெரிய அறிவாளியா இருப்பா போலிருக்கே” என பேசிக்கொள்வதை எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் நமட்டுச் சிரிப்போடு கேட்டுக் கொண்டிருப்பார்.

சுஜாதா மாதிரியே தேனுகாவும் பெண் பெயரில் எழுதிவரும் ஆண்தான் என்று அவர் சொல்லவே இல்லை. பல நாட்களாக இந்தக் கூத்து நடந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் தேனுகாவுக்கு என்ன வயதிருக்கும் என்று நானும், கல்யாணமானவளா? கல்யாணமாகாதவளா? என்று புத்தகனும் விவாதிக்கும் அளவுக்குப் போனோம்.

அப்போதுதான் தஞ்சை ப்ரகாஷ், “அவ நாளைக்கி சாயந்தரம் வர்றா...மறக்காம வந்திடுங்க, அறிமுகப்படுத்துறேன்” என்றார். “தனியாவே கும்பகோணத்திலிருந்து வந்திடுவாங்களா..இல்ல கூட யாராச்சும் வருவாங்களா?’’ என்று புத்தகன் கேட்கும்வரைகூட அவர் அந்தப் புதிர்மூட்டையை அவிழ்க்கவில்லை. தேனுகா கும்பகோணத்துக்காரி என்பதுவரை விசாரித்த நாங்கள் அந்த பெயருக்குரிய நபர் ஆணா, பெண்ணா என விசாரித்திருக்கவில்லை என்பதுதான் அதிலுள்ள விநோதம்.

தஞ்சை ப்ரகாஷ் சொன்ன அந்த சாயந்திரமும் வந்தது. ஒருநாளுமில்லாத திருநாளாக அன்று ஏனோ முகத்தில் தூக்கலாகப் பவுடரைப் பூசிக்கொண்டு நானும் புத்தகனும் தேனுகாவுக்காகக் காத்திருந்தோம். எங்களைப் பொறுத்தவரை அவள் தேனுகா அல்ல, தேவதை. வாராதிருந்த அந்த தேவதைக்காக தஞ்சை ப்ரகாஷ் வைத்திருந்த ரப்பர் ஸ்டாம்ப் கடை வாசலிலேயே நின்றிருந்தோம்.

வெகுநேரமாக எங்கள் கற்பனைகளில் அந்த தேவதை வெண்சாமர சிறகுகொண்டு எங்களைப் பறக்கவைத்தாள். அப்போதுதான் அந்தப் பெரியவர் கடைக்கு உள்ளே வந்தார். “வாங்க தேனுகா, எப்படியிருக்கீங்க” என்று ப்ரகாஷ் அந்தப் பெரியவரை ஆரத் தழுவினார். எனக்கும் புத்தகனுக்கும் முகத்தில் ஈயாடவில்லை.

உங்களைச் சந்திக்கத்தான் இவர்களும் வெகுநேரமாகக் காத்திருக்கிறார்கள் என்று எங்களை நையாண்டியாக அறிமுகப்படுத்தினார். அவரும் வழக்கத்திற்கு மாறான புன்னகையோடு எங்களை எதிர்கொண்டார். தேவதை ஆணாக இருந்ததையும் அதைவிட அது வயதான தேவதையாக இருந்ததையும் எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

என்ன செய்ய? அன்றிலிருந்து பெண் பெயரிலுள்ள போதையிலிருந்து வெளியேறி, பெண்ணே ஆயினும் அன்பு செலுத்த முடியாத அவலத்திற்கு ஆளானோம். இப்போது நினைத்தாலும் நானும் புத்தகனும் சேர்ந்து செலவழித்த ஐம்பது கிராம் கோகுல் சாண்டலில் தேனுகாவின் வாசனைதான் வீசுகிறது. இதன் தொடர்ச்சியாக தேனுகாவிடமே, “நீங்கள் ஏன் சார் இப்படியொரு பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்றேன்.

ஓ...அதுவா, அது ஒருராகத்தின் பெயர். அந்த ராகத்தில் எனக்கொரு மயக்கமுண்டு. முடியுமானால் நீங்களும் ‘தெளியலேது ராமா’ என்று ஆரம்பிக்கும் தியாகராஜர் கீர்த்தனையைக் கேட்டுப்பாருங்கள். அக்கீர்த்தனை அமைந்திருக்கும் ராகத்தின் பெயர்தான் என்னுடையது” எனவும் பெருமிதப்பட்டுக்கொண்டார்.

“உங்களுக்கு ஏற்பட்ட அதே மயக்கம் இங்கேயும் சிலருக்கு ஏற்பட்டு, பவுடரைக் காலி செய்தவர்கள்தான் இந்த இருவரும்” என்று கொணஷ்டையாக ஒரு சந்தர்ப்பத்தில் தேனுகாவிடம் தஞ்சை ப்ரகாஷ் எங்களைப் போட்டுக்கொடுத்தார். கர்நாடக இசையின் ஒன்பதாவது மேளகர்த்தா ராகமே தேனுகாஎன்பது.

இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் நாற்பத்தி ஐந்தாவது மேளகர்த்தா ராகமான சுபபந்துவராளி வரும் என கவிஞரும் நண்பருமான ரவிசுப்ரமணியன் ‘ஆளுமைகள் தருணங்கள்’ நூலில் எழுதியிருக்கிறார். ராகங்களைப் பற்றி தெரியாதவர்களுக்கும் தேனுகாவைப் பிடிக்கும். புன்னகை நிரம்பிய அந்த முகத்திலிருந்து ராகங்கள் தங்களை ஆலாபனை செய்து கொண்டன.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்