சுதந்திரத்துக்குப்பின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிபதி இவர்தான்!
தமிழ்நாட்டு நீதிமான்கள் - 28
கோமல் அன்பரசன்
பி.வி.ராஜமன்னார் ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் விக்கித்துப் போனது. திரையுலகில் கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பட அதிபர் பட்சிராஜா ஸ்டுடியோ ஸ்ரீராமுலு நாயுடு என மூன்று பெரும் புள்ளிகள் கைது செய்யப்பட்ட செய்தியை யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியவில்லை.
 அதிலும் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான, லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பாகவதர் கைதானதைப் பலரால் ஜீரணிக்கவே இயலவில்லை. இண்டு இடுக்கெல்லாம் அதைப்பற்றித்தான் மக்கள் மாய்ந்து மாய்ந்து பேசினார்கள். ‘சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் பற்றி பச்சையாக எழுதி மஞ்சள் பத்திரிகை நடத்திவந்த லட்சுமிகாந்தன் என்பவரை கொலை செய்து விட்டார்கள்...’ என்பதுதான் இவர்கள் மீதான வழக்கு.
இதில் போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பி.வி.ராஜமன்னார், அதுவரை கிரிமினல் வழக்குகளை நடத்தி பழக்கமில்லாதவர். சொத்து தகராறு போன்ற சிவில் வழக்குகளை மட்டுமே நடத்தி வந்தவர். மிகப் பெரிய நட்சத்திரங்களுக்கு எதிரான வழக்கில் இவரை ஏன் நியமித்தார்கள் என்ற சர்ச்சை வெடித்தது. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அந்த அரசு வழக்கறிஞர் தொடக்கத்திலே யாரும் எதிர்பார்க்காத ஒரு வேலையைச் செய்தார்.
 ‘படஅதிபர் ஸ்ரீராமுலு நாயுடுவுக்கு எதிரான சாட்சியங்கள் போதுமானதாக இல்லை; அதனால் அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்’ என்று சிறப்பு மனு ஒன்றை அளித்தார். நீதிமன்றம் மட்டுமல்ல; குற்றம்சாட்டப் பட்டிருந்தவர்களும் ஒரு கணம் அதிர்ந்தார்கள். ஏனெனில் கிரிமினல் வழக்குகளில் இப்படிச் செய்வது அரிதிலும் அரிதானது.
அது வழக்கை தொடக்கத்திலேயே பலவீனப்படுத்திவிடும் என்று போலீஸ்காரர்கள் பயப்படுவார்கள். அதுவரை கிரிமினல் வழக்கையே தொட்டிராத அந்த அரசு வழக்கறிஞர் துணிந்து இதனைச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கினை’ திறம்பட நடத்தி, குற்றஞ்சாட்டப்பட்டோருக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.
அரசு வழக்கறிஞரின் ஆரம்பமே படங்களில் கதாநாயகனை அறிமுகப்படுத்துவது போல அசத்தலாக அமைந்துவிட்ட ராஜமன்னார் இயல்பில் அத்தகைய அதிரடியான மனிதர் கிடையாது. சென்னையின் புகழ் வாய்ந்த வக்கீல்களில் ஒருவராகத் திகழ்ந்த பி.வெங்கட்ரமண ராவின் மகனாக 1901, மே மாதம் முதல் தேதி பிறந்தவர் ராஜமன்னார். தங்கசாலையிலுள்ள பழமையான தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாள பள்ளியிலும், பிறகு சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் படித்தார்.
பி.ஏ.படிப்பில் ஆங்கிலத்திலும், தத்துவ இயலிலும் மெட்ராஸ் மாகாணத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். சட்டக்கல்லூரியில் பெருமை மிகுந்த ‘ஜூரிஸ் ப்ரூடன்ஸ்’ பதக்கம் அவருக்கு கிடைத்தது. 1924ல் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய ராஜமன்னார், தன் தந்தையிடமே ஜூனியராகச் சேர்ந்தார். ‘தந்தை பெரிய வக்கீல்’ என்ற பந்தா இல்லாமல் எல்லோரிடமும் எளிமையாகவும் இனிமையாகவும் பழகினார்.
எப்போதும் சிரித்த முகமாக நகைச்சுவை இழையோட அவர் பேசியது நட்பு வட்டத்திற்குள் நிறைய பேரைக் கொண்டு வந்து சேர்த்தது. வழி வழியாக வந்த சட்ட அறிவு, அழுத்தந்திருத்தமான ஆங்கிலப் பேச்சுத்திறன் போன்றவையும் அமைந்ததால், தந்தையின் நிழலைத் தாண்டியும் வக்கீல் தொழிலில் ராஜமன்னார் ஆழமாகக் காலூன்றினார்.
சிவில் வழக்குகளை மட்டுமே அவர் கையிலெடுத்துக் கொண்டார். புன்னகை தவழும் முகத்தோடு, அதே நேரத்தில் தயக்கமோ, குழப்பமோ இல்லாமல் பொறுமையான குரலில் நீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைப்பதைத் தமக்கான தனித்துவமாக்கினார். இதன் மூலம் நீதிபதிகளை மட்டுமின்றி, கட்சிக் காரர்களையும் ஈர்த்தார். பரந்து விரிந்து கிடந்த பழைய மெட்ராஸ் மாகாணம் முழுதிலிருந்தும் பெரிய நிறுவனங்களும், ஜமீன்களும், பண்ணையார்களும் ராஜமன்னாரைத் தேடி வந்தனர்.
சட்ட மேதையான அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர் 1944ல் ஓய்வு பெற்ற பிறகு, மெட்ராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 43. இத்தனை இளம் வயதில் உயர் பதவிக்கு தேர்வாகும் அளவுக்கு சட்டத்தொழிலில் அவர் முத்திரை பதித்திருந்தார். அந்தப் பொறுப்புக்குத் தாம் எவ்வளவு பொருத்தமானவர் என்பதையும் பணிக்காலத்தில் நிரூபித்தார். அதற்கு லட்சுமிகாந்தன் கொலை வழக்கே சிறந்த உதாரணமாக அமைந்தது.
அடுத்த இரண்டாண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பதவி ராஜமன்னாரைத் தேடி வந்தது. வழக்கறிஞர் தொழிலில் சேகரித்த அனுபவத்தைக் கொண்டு நீதிபதி பதவியில் மிளிர்ந்தார். மிகச் சிக்கலான வழக்குகளைக் கூட எளிதில் புரிந்து கொள்வார். வக்கீல்கள் வளவளவென வாதம் செய்தால் அலுத்துக்கொள்ளாமல் காது கொடுத்துக் கேட்பார்.
மூத்த வக்கீல்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பார். இளையவர்களைத் தட்டிக்கொடுத்து பேச வைப்பார். சிரித்த முகம் மாறாமல் வாதங்களைக் குறித்துக்கொள்வார். அரையும் குறையுமாக வழக்கை படித்துவிட்டு, மேம்போக்காக யாராவது வாதம் செய்தால், அன்பும் கனிவும் குழைத்து அவர்கள் நோகாதபடி சுட்டிக்காட்டுவார். அதே நேரத்தில் தீர்ப்புகளைத் தெளிவாக எழுதினார்.
இதெல்லாம் ராஜமன்னார் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது. அனைத்துத் தரப்பையும் கவர்ந்த நீதிபதியாக உருவெடுத்தார். பெருமையின் தொடர்ச்சியாக 1948ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தேர்வானார். நாடு விடுதலை அடைந்த பிறகு அந்தப் பதவிக்கு வந்த முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.
1961ல் ஓய்வு பெறும் வரை 13 ஆண்டுகளுக்கு மேலாக தலைமை நீதிபதி பதவிக்கு அழகு சேர்த்தார். ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளிலேயே மிகச்சிறந்தவர் பி.வி.ராஜமன்னார்’ என்று மூத்த வழக்கறிஞர்கள் பலரும் வாய்விட்டு பாராட்டினார்கள். பரப்பரப்பான வக்கீலாகவும், நீதிபதியாகவும் இருந்தாலும் ராஜமன்னாருக்குள் எப்போதும் கலை ஆர்வம் கனன்று கொண்டேயிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே இலக்கிய ஆர்வம் மிகுந்தவராகத் திகழ்ந்தார்.
ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற மொழி படைப்புகளை விரும்பி வாசித்தார். கவிதைகள், நாடகங்கள் என்றால் பிரியம் அதிகம். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் பக்கத்திலுள்ள விக்டோரியா அரங்கத்தில் நடக்கும் தெலுங்கு நாடகங்களைத் தவறாமல் பார்ப்பார். இந்த ஆர்வமே பிற்காலத்தில் நாடகங்களை எழுதும் அளவுக்கு அவரைத் தூண்டியது.
இவரது ஓரங்க நாடகங்கள், ‘ராஜமன்னார் நாடகாலு’ என்று தெலுங்கில் நூலாக வெளிவந்துள்ளது. டெல்லியிலுள்ள தேசிய சங்கீத நாடக அகாடமியின் நியமிக்கப்பட்ட முதல் தலைவராக இருந்தார். சாகித்ய அகாடமி, சௌத் இண்டியன் லாங்குவேஜஸ் டிரஸ்ட் போன்றவற்றில் பொறுப்புகளை வகித்துள்ளார். நகைச்சுவையோடு பேசுபவர் என்பதால் வானொலியிலும் பொது மேடைகளிலும் ராஜமன்னாரின் பேச்சுக்கு ரசிகர் கூட்டம் இருந்தது.
ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து இயங்கி வந்தவரின் அறிவாற்றலை அரசாங்கங்கள் பல்வேறு இடங்களில் பயன்படுத்திக் கொண்டன. கலைஞர் கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சரான போது மாநில சுயாட்சி மற்றும் மத்திய - மாநில உறவு குறித்து ஆராய்வதற்கு ராஜமன்னாரின் தலைமையில் குழு அமைத்தார். ஆர்க்காடு லட்சுமணசுவாமி முதலியார், பி.சந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய அக்குழுவின் பரிந்துரைகள் இன்றைய சூழலுக்கும் விவாதிக்க வேண்டியவையாக இருக்கின்றன.
‘மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளை மத்திய அரசின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற ராஜமன்னார் குழு அளித்த பரிந்துரை பரவலாக கவனம் பெற்றது. இந்திய அரசின் நான்காவது நிதி ஆணையம், தேசிய சட்ட ஆணையம் மற்றும் வங்கி விதிகள் குழு ஆகியவற்றின் தலைவராக சிறந்த பணிகளைச் செய்தார்.
ஆந்திரா மற்றும் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகங்களில் சட்டப் படிப்புகள் மற்றும் நாடகக் கலைத்துறைகளில் பங்களிப்புகளைச் செலுத்திய அவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்தார். தமிழக சட்டமேலவையின் உறுப்பினராக இருமுறை பணியாற்றிய ராஜமன்னார், 1957 முதல் 58 வரை தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்ட பெருமைக்குரியவர்.
சென்னை, ஆந்திரா மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள் ராஜமன்னாருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளன. சென்னை கே.கே. நகரில் ஒரு சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டில் மறைந்த பி.வி.ராஜமன்னார் என்ற ஆளுமை சட்டத்தொழில் உலகிலும் நிதி மற்றும் நிர்வாகத்துறையிலும் ஆற்றிய பங்களிப்புகள் அத்தனை எளிதில் மறையக்கூடியதல்ல.
(சரித்திரம் தொடரும்...)
ஓவியம்: குணசேகர்
அப்பாவும் மகனும்!
ராஜமன்னார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றபோது அவரது அப்பாவும், மைசூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான வெங்கட்ரமண ராவ் பார்வையாளராக அமர்ந்து பார்த்தார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் வெங்கட்ரமண ராவ் இருந்தார். மகன் நீதிபதியாவதை மற்றொரு மாநிலத்தில் தலைமை நீதிபதியாக இருக்கும் தந்தை பார்த்தது வரலாற்றில் அரிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.
‘என்ன ஆண்கள்!’
ராஜமன்னார் எழுதிய ‘என்ன ஆண்கள்..!’ என்ற நாடகம் அந்தக் காலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமுதாயத்தில் கீழ் நிலையிலுள்ள பெண்களின் முன்னேற்றம் பற்றி மேடைகளில் வாய்கிழியப் பேசும் சமூக சேவகர்களும், அரசியல்வாதிகளும் அவர்களைப் பாலியல் ரீதியாக எப்படிச் சுரண்டுகிறார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டியது அந்த நாடகம். போலவே, ‘நீடலேனி ஆடதி’ (நிழலில்லாமல் தவிக்கும் பெண்) என்ற அவரது மற்றொரு நாடகம் தெலுங்கில் படமாக எடுக்கப்பட்டு வெற்றி கண்டது.
ராஜாவைக் காப்பாற்றிய யோசனை!
ராஜமன்னாரிடம் வழக்காடுவதற்கு வரும் கட்சிக்காரராகவும் நண்பராகவும் திகழ்ந்தவர் வெங்கடகிரி சமஸ்தானத்தின் ராஜா. 1939ல் வெளியான தெலுங்குப் படம் ஒன்றில் அவரைக் கிண்டலடிக்கும் வகையில் நகைச்சுவை கதாபாத்திரம் வைக்கப்பட்டிருந்தது. கூடவல்லி ராமப்ரஹ்மம் என்ற துணிச்சலான இயக்குநர், வெங்கடகிரி ராஜாவின் பேச்சு, நடை, உடை போன்றே அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார்.
படத்தைத் தடை செய்துவிடவேண்டுமென்று ராஜாவின் குடும்பத்தார் துடித்தார்கள். இதற்காக வழக்கறிஞராக இருந்த ராஜமன்னாரை நெல்லூருக்கு வரவழைத்து படம் பார்க்க வைத்தார்கள். ராஜமன்னாருடன் அவருடைய சகோதரி கணவரும் பின்னாளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானவருமான கே.சுப்பாராவ் சென்றிருந்தார்.
சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து படத்திற்குத் தடை வாங்கிவிட முடியும் என்று ராஜமன்னார் நம்பினார். ஆனால், வழக்கு போடுவதற்கான யோசனையை ராஜா குடும்பத்திற்கு அவர் கொடுக்கவில்லை. ‘படத்தின் கதை குப்பையாக இருப்பதால், அப்படியே விட்டுவிடலாம்.
வழக்கு போட்டால் தேவையில்லாமல் நாமே விளம்பரம் கொடுத்து பார்க்க நினைக்காதவர்களையும் படம் பார்க்க வைத்தது போலாகிவிடும்’ என்று ராஜமன்னார் கூறிவிட்டார். அவர் சொன்னது போன்றே படம் படுதோல்வி அடைந்தது. ராஜமன்னாருக்குள் இருந்த கலை ஞானம் சட்டத்தொழிலுக்கும் உதவியது.
|