‘முப்பது கோடி முகமுடையாள்’ என மகாகவி பாரதி பாடிய பாடலை, இனி ‘நூற்றி இருபத்தோரு கோடி முகமுடையாள்’ என்று மாற்றிப் பாட வேண்டும். தலைநகர் டெல்லியில் 2000&மாவது ஆண்டில் 100-வது கோடி குழந்தை பிறந்தது. அடுத்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 21 கோடி அதிகரித்து 121 கோடியை எட்டிவிட்டது. விர் என மக்கள்தொகை எகிறியிருப்பது போல தெரிந்தாலும், உண்மையில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. இந்திய மக்கள்தொகை பற்றிய சூடான புள்ளிவிவரங்கள் இதோ...
நூறாண்டுக்கு முன் (1911ல்) இந்தியாவின் மக்கள்தொகை 25.20 கோடி. இப்போது 121 கோடி. ஒரு நூற்றாண்டில் இந்தியாவின் மக்கள்தொகை ஏறக்குறைய 5 மடங்கு அதிகரித்திருக்கிறது.
2001 நிலவரப்படி இந்திய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம், 21.34 சதவிகிதம். இந்த பத்து ஆண்டுகளில் அது 17.64 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. கடந்த 90 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பது இப்போதுதான்!

1911 கணக் கெடுப்பில் 25.20 கோடியாக இருந்த மக்கள் தொகை, 1921ல் 25.13 கோடியாக குறைந்தது. இப்படி, மக்கள் தொகை மைனஸில் சென்ற கணக்கெடுப்பு அது மட்டுமே!
இன்னும் 20 ஆண்டுகள்தான்... நாம் சீனாவை பின்தள்ளிவிடுவோம். இப்போது சீன மக்கள்தொகை 134 கோடி. 2030&ல் இந்தியா முதலிடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம் என்றாலும், 1 சதுர கி.மீ. பரப்பில் வாழும் மக்கள்தொகை நெருக்கத்தில் இந்தியாவுக்கு 30வது இடம்.
அமெரிக்கா (31 கோடி), இந்தோனேஷியா (23 கோடி), பிரேசில் (19 கோடி), வங்கதேசம் (15 கோடி), பாகிஸ்தான் (17 கோடி) ஆகிய நாடுகளின் மக்கள்தொகையை முழுவதும் கூட்டினால்கூட இந்தியாவின் மக்கள்தொகையை எட்ட முடியாது!
உத்தரப்பிரதேசம் (19.9 கோடி), மகாராஷ்டிரா (11 கோடி) இவ்விரு மாநிலங்களின் மக்கள்தொகை மட்டுமே அமெரிக்காவை விட அதிகம்.
இந்திய நகர்ப் புறங்களில் ஒரு வினாடிக்கு இரண்டு பேர் என்ற விகிதத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது மக்கள்தொகை. இந்தியாவில் சென்னை உள்பட 12 நகரங்களில் 95 சதவிகித அளவுக்கு இப்படி மக்கள் தொகை வளர்ச்சியடைந்திருக்கிறது. இது ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய ஆய்வு முடிவு.
இந்தியாவில் குழந்தைப்பிறப்பு விகிதத்தில் ஆண்களே முந்துகிறார்கள். 2001&ல் ஆயிரம் ஆண்குழந்தைகளுக்கு 927 பெண்குழந்தைகள் பிறந்தார்கள். இப்போதோ 914 பெண்குழந்தைகள்தான் பிறக்கிறார்கள். 1961க்கு பிறகு இப்போது பெண்குழந்தை பிறப்பு விகிதம் சறுக்கியிருக்கிறது. பெண் சிசுக்கொலை விதம்விதமான வடிவங்களை எடுத்திருக்கிறது என்ற உண்மை இதன்மூலம் உறைக்கிறது.

பெண் குழந்தை பிறப்பு விகிதம் காஷ்மீர் (ஆயிரத்துக்கு 859 பெண்குழந்தைகள்), ஹரியானா (830), பஞ்சாப் (846) ஆகிய மாநிலங்களில் குறைவாக இருந்தது. பெண்குழந்தை பிறப்பு விகிதம் அதிகமுள்ள முதல் மாநிலம் சட்டீஸ்கர் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 964 பெண் குழந்தைகள்). அடுத்த இடம் கேரளாவுக்கு. இங்கு 959 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக ஆண்&பெண் விகிதம் உயர்ந்திருக்கிறது. 2001ல் ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண்கள் இருந்தனர். இப்போது 940. இந்த விகிதத்தில் முதலிடம் வகிப்பது கேரளா. இங்கு ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள். அடுத்த இடமான புதுச்சேரியில் 1034 பேர். தமிழகம் 955 பெண்களுடன் நான்காவது இடம். பல துறைகளில் முன்னேறிய குஜராத், காஷ்மீர், பீகார் ஆகிய மாநிலங்கள் இதில் பின்தங்கியுள்ளன.
நாட்டிலேயே மிகக்குறைவாக மக்கள்தொகை உள்ள இடம் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசம். இங்கு 64,429 பேர் வசிக்கிறார்கள். இந்த பத்தாண்டில் இங்கு 4 ஆயிரம் பேர் மட்டுமே கூடியிருக்கிறார்கள்.
2001ல் இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 64.83 சதவிகிதம். இப்போது 74 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது. வழக்கம்போல முதலிடம் கேரளா (93.3 சதவிகிதம்). பெரிய மாநிலங்களில் எழுத்தறிவில் பின்தங்கியுள்ளது ராஜஸ்தான் (64 சதவிகிதம்).
திருச்சி கார்த்தி