தேர்தல்களம் உச்சபட்ச பிரசார சூட்டில் திணறுகிறது. பிரியாணி பார்சலைக்கூட விட்டுவைக்காத சோதனை, தெருவுக்குத் தெரு வீடியோ கண்காணிப்பு என தேர்தல் கமிஷன் ஒருபக்கம் களமிறங்க, தொகுதிகளின் இண்டு இடுக்குகளைக்கூட விடாமல் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள். இந்த அனல் கக்கும் பிரசார யுத்தத்தில் சில சுயேச்சை வேட்பாளர்கள் அறிவிக்கிற வாக்குறுதிகள் ‘அடேங்கப்பா’ ரகம்! இவை எல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்ற சீரியஸ் கேள்வியை எழுப்பாமல், வாய்விட்டு ஜாலியாகச் சிரித்து வைக்கலாம்.
வீட்டுமனை, தங்கத்தாலி!
முசிறி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கண்ணையன், தனக்கு வாக்கு சேகரித்துத் தரும் 9 ஆயிரம் பேருக்கு, ‘சொந்த நிதியில் இருந்து’ தலா 3 சென்ட் வீட்டுமனை வழங்கப்படும் என்று அறிவித்து தேர்தல் கமிஷனையே கலங்கடித்திருக்கிறார். வாக்காளர்களுக்கு இதைவிட பெரிய ட்ரீட். 1 லட்சம் வாக்காளருக்கு தங்கத்தால் செய்யப்பட்ட தாலிக்காசு வழங்கப்படுமாம். அதுவும் சொந்த நிதியில் இருந்துதான்! வேட்புமனுவோடு இவர் தாக்கல் செய்திருந்த சொத்துக்கணக்கை வைத்து கணக்குப் போட்டுப் பார்த்த காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகரன், ‘தம்மாத்தூண்டு சொத்து வைத்துக்கொண்டு இவ்வளவு பரிசுகளை சொந்த நிதியில் இருந்து இவர் எவ்வாறு வழங்கமுடியும்? இது ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற விஷயம்’ என்று கோர்ட்டுக்கு போய்விட்டார். தேர்தல் கமிஷன், ‘உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’ என வாக்குறுதி கொடுத்ததால், வழக்கு இப்போது தள்ளுபடி ஆகியிருக்கிறது.
வீட்டுக்கு ஒரு நானோ!
சேலம் வடக்கு, தெற்கு தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் வழக்கறிஞர் ஷாஜகான் கொடுத்திருக்கும் வாக்குறுதி பயங்கர அதிரடியானது. உலக தேர்தல் களத்தில் இதுவரை யாரும் சொல்லாதது. ‘‘நான் வெற்றிபெற்றால், வீட்டுக்கு ஒரு நானோ கார் வழங்குவேன்’’ என்று அறிவித்துள்ளார் ஷாஜகான். அதோடு சேர்த்து, வீட்டுக்கு ஒரு உரலும், அம்மியும் குழவிக்கல்லோடு வழங்குவாராம். நகரெங்கும் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சேலத்தைப் பசுமையாக்குவேன் என்றும் அறிவித்திருக்கிறார்.
தலைவர் புறக்கணிப்பு! 
கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பதும், வேட்பாளர்கள் சென்று சமரசம் செய்வதும் தேர்தல் காலத்தில் சாதாரண சம்பவங்கள்தான். ஒரு கட்சியின் தலைவரே கடந்த 10 ஆண்டாக ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணித்திருக்கிறார். உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் வசிக்கும் செல்லப்பன்தான் அவர். 1977&ல் ‘நாத்திக திராவிட முன்னேற்றக் கழகம்’ கட்சியைத் தொடங்கி, கட்சிக்கென தனிக்கொடி, கொள்கைத்திட்டங்களையும் வகுத்தார். உடல்தானம், கண் தானம் ஆகியவை இவர் கட்சியின் முக்கிய கொள்கைகளாம். இவர் தேர்தலைப் புறக்கணிப்பதற்குச் சொல்லும் காரணம், ‘தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் பலரும் கடமையைச் செய்யாமல் சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் சண்டை போடுகிறார்கள். இதனால் நாட்டுக்கு பெரும் இழப்பு. அதனால்தான் புறக்கணிக்கிறேன்..!’
திருவாரூர் டூ திருப்பூர்!
திருப்பூர் வடக்குத் தொகுதியில் கடைசிநேர வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த தருணத்தில் வேகவேகமாக வந்தார் அந்த 81 வயது முதியவர். பரபரப்பாக இருந்த அதிகாரிகள் மத்தியில் சில துண்டுப் பிரசுரங்களை வினியோகித்த அவர், ‘திருவாரூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்றார். அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். ‘திருவாரூரில் போட்டியிட திருவாரூரில்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். திருப்பூரில் செய்ய முடியாது’ என்று எடுத்துச் சொன்னார்கள். அப்போதுதான் அந்த முதியவருக்கே தெரிந்துள்ளது, திருவாரூர் செல்வதற்குப் பதில் திருப்பூருக்கு வந்தது! அதன்பிறகு இன்னொரு உண்மையும் தெரியவந்தது... அது, அவர் வேட்புமனுவையும் வீட்டிலேயே மறந்துவிட்டு வந்தது!
திடீர் தொண்டர் படை!
ஃபிளக்ஸ், கட் அவுட், சுவர் விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால் வேறு தொழில்நுட்பத்தைக் கையாள வேண்டிய நெருக்கடி. சேலம் வட்டாரத்தில் சில வேட்பாளர்கள், கல்குவாரி, செங்கற்சூளை போன்ற இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம், அங்கு வாங்குவதைவிட அதிகக் கூலி தருவதாகக்கூறி தொண்டர் படைகளை உருவாக்குகிறார்கள். இந்த திடீர் ‘தொண்டர் படை’யோடு அலப்பறையாக வாக்குக்கேட்டு செல்கிறார்கள். நல்ல சாப்பாட்டோடு கைநிறைய கூலியும் கிடைப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீர் தொண்டர் படையில் ஐக்கியமாகி விட்டார்கள். மூன்று வேளை காபி, இரண்டு வேளை டிபன், ஒருவேளை சாப்பாடு. வேலை முடிந்து செல்லும்போது கையில் 200 ரூபாய் கூலி. காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரைதான் வேலை. இதைவிட வேறென்ன வேண்டும்!
ஒரு ரூபாய் வசூல்! 
கோவை கிணத்துக்கடவு தொகுதி பி.ஜே.பி வேட்பாளர் தர்மலிங்கம் கையில் எடுத்திருக்கும் டெக்னிக் வித்தியாசமானது. ஓட்டுக்கேட்டுப் போகும் பகுதிகளில் கூடியிருக்கும் மக்களைப் பார்த்து, ‘எனக்கு ஓட்டுப் போடுவீர்களா’ என்று கேட்கிறார். மக்களும் வஞ்சனை இல்லாமல், ‘கண்டிப்பாக எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான்’ என்று சொல்லி வைக்கிறார்கள். ‘இதை வார்த்தையாகச் சொன்னால் போதாது. ஒரு ரூபாய் காணிக்கை கொடுத்து நீங்கள் சொன்னதை உறுதி செய்ய வேண்டும்’ என்கிறார். இதென்னடா வம்பு என்று கூட்டம் மெல்ல கலையத் தொடங்க, ‘நான் என்ன ஆயிரம் ரூபாயா கேக்குறேன், ஒத்தை ரூபாதானே? அதைக்கூட கொடுக்க மாட்டீங்களா...’ என்று உருக, மக்களும் நெகிழ்ந்துபோய் ஒரு ரூபாய் கொடுக்கிறார்கள். இப்படி ஒருநாளைக்கு 600 ரூபாய் வரை வசூலாவதாகச் சொல்கிறார் தர்மலிங்கம்.